தேர்தல் கமிஷன் குளறுபடியால், நடப்பு ஆண்டும், தபால் ஓட்டுகளில், செல்லாத ஓட்டுகள் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.தமிழகம் முழுவதும், சட்டசபை தேர்தல் பணிகளுக்காக, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள், தங்கள் ஓட்டை, தபால் ஓட்டு மூலம் செலுத்துகின்றனர். கடந்த தேர்தல்களில், தாமதமாக படிவங்கள் வழங்கப்பட்டதால், பலர், தபால் ஓட்டு போட முடியாத நிலை உருவானது. இதனால், அதற்கான படிவங்களை முன்னதாகவே வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கேற்ப, ஏப்., 24ம் தேதி நடந்த முதல் தேர்தல் பயிற்சியின் போதே, ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு படிவங்கள் வழங்கப்பட்டன. அதில், வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண் உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டன. ஏற்கனவே, அந்த விவரங்களை தயார் நிலையில் வைத்திருந்த ஆசிரியர்கள் பலரும், படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.
மற்றவர்கள், மே, 7ம் தேதி நடக்கும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின்போது, சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், புதிய வேட்பாளர் பட்டியலில், பலரின் வாக்காளர் வரிசை எண் மாறியுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு, இணைய தளத்தில் பரிசோதிக்கும்போது, பழைய வாக்காளர் வரிசை எண்ணே காட்டுகிறது. இதனால், எந்த வரிசை எண்ணை படிவத்தில் எழுதுவது என குழப்பம் நிலவுகிறது. அப்படி மாற்றி எழுதும்பட்சத்தில், செல்லாத ஓட்டாக கணக்கிடப்படும் என்பதால், பலரும் கவலையில் உள்ளனர். தவறான வரிசை எண் எழுதப்படும் பட்சத்தில், தபால் ஓட்டு கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. மே, 7ம் தேதி படிவம் ஒப்படைத்து, அதன்பின் தேர்தல் கமிஷன், அந்த படிவங்களை ஆய்வு செய்து, தபால் ஓட்டுகளை அனுப்புவதற்குள், தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் கிளம்ப வேண்டியிருக்கும்;
இதனால், இந்த ஆண்டும் ஆசிரியர்கள் பலரும், ஓட்டு போட முடியாத நிலை ஏற்படும் என, ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேர்தல் நடத்த உதவும் ஆசிரியர்கள், தங்கள் ஓட்டுகளை முன்னதாகவே பதிவு செய்ய வசதியாக, முன்கூட்டியே தபால் ஓட்டுகளை வழங்க, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
No comments:
Post a Comment