சட்டசபை தேர்தல் தொடர்பாக, ஆசிரியர்களுக்கான, முதல் கட்ட பயிற்சி வகுப்பு, தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இதில், தேர்தல் அதிகாரிகள், எந்த அடிப்படை வசதியையும் செய்யாததால், ஆசிரியர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
சட்டசபை தேர்தல் அன்று, ஓட்டுச்சாவடி மையத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டுப் பதிவு இயந்திரங்களை ஒருங்கிணைத்து, ஓட்டு எண்ணும் மையத்துக்கு அனுப்புதல்; ஓட்டு எண்ணிக்கை போன்ற பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காக, ஒவ்வொரு தேர்தலிலும், ஆசிரியர்களுக்கு, நான்கு கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்படும். முதல் கட்ட பயிற்சி வகுப்பு, நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது; இதில், 1.5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைத்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் விதிமுறைகள் மற்றும் பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர். நாள் முழுவதும் நடந்த இந்த பயிற்சி வகுப்பில், பயிற்சி மையங்களில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. பல இடங்களில், மைக் மற்றும் ஒலிபெருக்கி வசதி செய்யப்படவில்லை. அதனால், தேர்தல் அதிகாரி கூறிய விஷயங்கள் ஆசிரியர்களுக்கு தெளிவாக விளங்கவில்லை. ஆசிரியர்கள் அமர சரியான இட வசதி செய்யப்படவில்லை. கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசியது. மதிய உணவு வழங்கியதில் பற்றாக்குறை ஏற்பட்டது; குடிநீர் வசதியும் சரிவர செய்யப்படவில்லை. இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, 'பயிற்சி வகுப்பை திட்டமிட்டு செய்யவில்லை. பயிற்சி வகுப்பை நடத்திய வருவாய்த்துறை அலுவலர்கள், அடிப்படை வசதிகளை செய்யாமல், ஆசிரியர்களை மரியாதையின்றி தரக்குறைவாக நடத்தினர். இதே நிலை நீடித்தால், தேர்தல் பணிகளை புறக்கணிப்போம்' என்றனர்
No comments:
Post a Comment