புதிய வட்டி விகிதம் முறையால் வீட்டுக்கடனுக்கான வட்டி குறைகிறது
வங்கிகள் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வந்திருப்பதால் வீட்டுக்கடனுக்கான வட்டி குறைகிறது.
வங்கிகள் கொடுக்கும் டெபாசிட் வட்டி விகிதம், வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து அடிப்படை வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்கின்றன. அதாவது சராசரியாக எவ்வளவு வட்டிக்கு வங்கிகள் கடன் வாங்குகின்றன என்பதை பொறுத்து அடிப்படை வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டது. சமீபத்தில் இந்த முறையில் ரிசர்வ் வங்கி மாற்றம் செய்ய அறிவுறுத்தியது.
இதன் அடிப்படையில் குறுகிய காலம் மட்டுமல்லாமல் ஒவ்வொரு கால அளவிலும் எந்த தொகையில் வங்கிகளுக்கு பணம் கிடைக்கிறது அதனை அடிப்படையாக வைத்து அடிப்படை வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்ய வங்கிகள் முடிவெடுத்தது. இதற்கு மார்ஜினல் காஸ்ட் ஆப் லெண்டிங் ரேட் (எம்சிஎல்ஆர்) என்று பெயர்.
முன்பு அடிப்படை வட்டி விகிதத்தில் இருந்து கூடுதலாக கடன்களுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படும் இப்போது எம்.சி.எல்.ஆர். அடிப்படையில் கடன்களுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படும்.
முன்பு எஸ்பிஐ வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் 9.30 சதவீதம். அதிலிருந்து கூடுதலாக 0.25 சதவீதம் வைத்து 9.55 சதவீதமாக வீட்டுக்கடனுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது ஒரு வருட கால எம்.சிஎல்ஆர் விகிதம் 9.20 சதவீதம் என்பதால் வீட்டுக்கடனுக்கான வட்டி 9.45 சதவீதமாக குறைகிறது என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் கூறினார்.
இது இன்று முதல் வழங்கப்படும் கடன்களுக்கு பொருந்தும். ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்களும் இந்த விகிதத்துக்கு மாறிக்கொள்ளலாம்.
ஒரு வருட எம்.சி.எல்.ஆர் விகிதம் போல, இரண்டு வருட கால விகிதம் 9.3 சதவீதமாகவும், மூன்று வருட விகிதம் 9.35 சதவீதமாகவும் எஸ்பிஐ நிர்ணயம் செய்திருக்கிறது. இதேபோல ஒவ்வொரு மாதமும் பல வேறு காலத்துக்கான எம்சிஎல்ஆர் விகிதத்தை வங்கிகள் நிர்ணயம் செய்யும்.
பேங்க் ஆப் பரோடா, ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி உள்ளிட்ட வங்கிகளும் புதிய வட்டி விகித முறையில் மாற்றி அமைத்திருக்கின்றன
No comments:
Post a Comment