இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, April 18, 2017

பள்ளிக் கல்வித்துறையில் 6,390 இடங்கள் காலி: ஆண்டு திட்ட அறிக்கை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை


பள்ளிக் கல்வித் துறையில் காலியாகவுள்ள 6,390 இடங்களை நிரப்புவதற்கான தேர்வு கால அட்டவணையை துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். வருங்காலத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை இணைய வழி மூலமே விண்ணப்பிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை கூறியது: ஆசிரியர் பிரிவில்: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பிரிவில் 2,119 காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்ப மே 2-வது வாரத்தில் தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும். தேர்வு ஜூலை 2-ஆம் தேதியும், தேர்வு முடிவு ஆகஸ்ட்டிலும் வெளியிடப்படும்.

விரிவுரையாளர் பிரிவில்...பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 1,137 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்வு அறிவிக்கை ஜூன் 2-வது வாரத்தில் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 13-இல் தேர்வு நடத்தப்படும். தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியாகும்.

சிறப்பு ஆசிரியர்கள் பிரிவில்: சிறப்பு ஆசிரியர்கள் பணியிடங்களில் 1,188 காலியாக உள்ளன. இதற்கான அறிவிக்கை ஜூலை 3-வது வாரத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு ஆகஸ்ட் 19-இல் நடத்தப்படும். தேர்வு முடிவுகள் நவம்பரில் வெளியாகும். வேளாண் பிரிவில்: வேளாண் கல்வி கற்பிப்போர் பிரிவில் 25 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றுக்கு ஜூலை 3-வது வாரத்தில் அறிவிக்கையும், ஆகஸ்ட் 20-இல் எழுத்துத் தேர்வும் நடத்தப்படும். தேர்வு முடிவுகள் நவம்பரில் வெளியாகும்.

உதவிப் பேராசிரியர் பிரிவில்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பிரிவில் 1,883 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றுக்கு ஜூலை 4-வது வாரத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டு செப்டம்பரில் தேர்வும், அக்டோபரில் தேர்வு முடிவுகளும் வெளியாகும்.

கல்வி அலுவலர் பிரிவில்: உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பிரிவில் காலியாகவுள்ள 38 இடங்களுக்குத் தேர்வு அறிவிக்கை ஆகஸ்ட் 2-வது வாரத்தில் வெளியிடப்பட்டு, எழுத்துத் தேர்வு செப்டம்பர் 30-லிலும், தேர்வு முடிவுகள் டிசம்பரிலும் வெளியாகும். இணையவழி விண்ணப்பம்: வருங்காலங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணைய வழி மூலமே விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில தேர்வுகளுக்கு மட்டும் கணினி வழித்தேர்வினை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் கே.ஏ.செங்கோட்டையன். பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் த.உதயச்சந்திரன், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் காகர்லா உஷா ஆகியோர் உடனிருந்தனர்.

நீட் தேர்வு: விலக்கு கோரி இன்று ஆர்ப்பாட்டம்


'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்த விலக்கு அளிக்கக் கோரி கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் புதன்கிழமை (ஏப்.19) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கல்வி உரிமைகளுக்காக போராடும் 40 அமைப்புகளை உள்ளடக்கிய இந்த அமைப்பின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்திலும், பிற மாவட்டங்களின் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக, இந்தக் கூட்டமைப்பின் உறுப்பினர் பிரின்ஸ் கஜேந்திரபாபு செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியபோது, '

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ஏப்ரல் 25 -ஆம் தேதி அரசியல் கட்சிகளின் சார்பில் நடைபெறும் போராட்டத்திலும் இந்தக் கூட்டமைப்பு பங்கேற்கும்' என்றார். முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் கூறியபோது, 'தமிழக அரசின் நீட் தேர்வு விலக்குக் கோரி சட்டப்பூர்வமாக நடைபெறும் போராட்டங்கள் முடிவடைய நீண்ட நாள்கள் ஆகும். எனவே, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதே உடனடித் தீர்வாக அமையும்' என்றார்.

டி.ஆர்.பி செய்தி

டி.ஆர்.பி., தேர்வு மூலம் 6,390 பேருக்கு வேலை


ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம், இந்த ஆண்டு, 6,390 பேர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். டி.ஆர்.பி.,யின் ஆண்டு தேர்வு திட்டத்தை, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், நேற்று வெளியிட்டார். அதன்படி, இந்த ஆண்டு, 'டெட்' தேர்வு போக, ஆறு போட்டி தேர்வுகள் நடக்க உள்ளன. அதன் விபரம்

ஆசிரியர் சங்க போராட்டம்: பின்னணியில் ஆளுங்கட்சி


மத்திய அரசுக்கு எதிராக, ஆசிரியர் சங்கத்தினர், இன்று போராட்டம் நடத்துகின்றனர். ஆளுங்கட்சி பின்னணியில், இந்த போராட்டம் நடப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு எதிராக, ஆசிரியர் சங்கத்தினர், இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துகின்றனர்.

இந்த போராட்டத்தில், 40 ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்கின்றன. அண்ணா பல்கலை, திறந்தநிலை பல்கலை, காந்தி கிராம பல்கலை என, சில பல்கலை சங்கத்தினரும் பங்கேற்கின்றனர். இந்த போராட்டம், ஆளுங்கட்சியின் பின்னணியில், மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்படுவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, கல்வித்துறையினர் கூறியதாவது: கடும் நெருக்கடி :

வழக்கமாக போராட்டம் நடத்த, ஆசிரியர் சங்கத்தினருக்கு அனுமதி கிடைக்காது. தற்போது, சசிகலா தரப்பினருக்கு, தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை மூலம், மத்திய அரசு கடும் நெருக்கடி கொடுக்கிறது. இந்நிலையில், 'நீட்' தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், போராட்ட ஏற்பாடுகள் நடந்தன. அதை, ஆளுங்கட்சி கையில் எடுத்துள்ளது. மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை, ஆசிரியர், மாணவ சமுதாய போராட்டமாக மாற்ற, ஆளுங்கட்சி தரப்பில், சில ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் பேசப்பட்டது.

அதன்படி, அனைத்து ஆசிரியர் சங்கத்தினரும் கட்டாயமாக பங்கேற்க வேண்டும்; மத்திய அரசுக்கு எதிராக, கடும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என, ஆளுங்கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. ரகசிய உத்தரவு : அதற்கு தேவையான செலவுகளையும், ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர், மறைமுகமாக செய்வதாக தகவல். இந்த போராட்டத்தில் பங்கேற்க, ஆசிரியர்களுக்கு எந்த தடையும் விதிக்க கூடாது என, முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, ரகசிய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பெட்ரோல் பங்க் : ஞாயிறு விடுமுறை


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பெட்ரோல் பங்க்குகள், மே, 14 முதல், ஞாயிற்று கிழமைகளில் செயல்படாது' என, தமிழக பெட்ரோலியம் டீலர்ஸ் கூட்டமைப்பின் தலைவர், கே.பி.முரளி கூறினார். அவர் கூறியதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 4,850 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இவற்றில் தினமும் சராசரியாக, 153 கோடி ரூபாய் மதிப்பிலான, 5,000 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையாகிறது. பிரதமர் நரேந்திர மோடி, 'பெட்ரோல், டீசல் சிக்கனத்தில், மக்கள் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்; வாரத்தில் ஒரு நாள், அவற்றை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது' என்றார். அதை ஏற்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மே, 14 முதல், ஞாயிற்று கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள் இயங்காது. எங்கள் முடிவுக்கு, வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சி.பி.எஸ்.இ. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி கட்டாயம்!


சி.பி.எஸ்.இ பள்ளிகளில், 10-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்படுவதற்கான பரிந்துரைக்கு, குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 10-ம் வகுப்பு வரை இந்தி மொழியைக் கட்டாயமாக்க, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைசெய்திருந்தது. இதையடுத்து, இந்தப் பரிந்துரைக்கு தற்போது, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்தக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து, மாநில அரசுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு, குடியரசுத்தலைவரின் ஆணையில் கூறப்பட்டுள்ளது. "இந்தியை கட்டாயமாக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும்.

முதல்கட்டமாக சி.பி.எஸ்.இ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 10-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும்" என்று குடியரசுத் தலைவர் ஆணையில் கூறப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ பள்ளிகளில், கடந்த ஆண்டு மும்மொழிப் பாடத்திட்டத்தை 10-ம் வகுப்பு வரை கட்டாயமாக்க முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடக்கக் கல்வி - ஏப்ரல் 22 முதல் கோடை விடுமுறை - பள்ளி வேலை நாட்கள் குறைத்து வழங்கியது - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

ஏப்ரல் 21 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை


வெப்பக்காற்று வீசுவதால் ஏப்ரல் 21 முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னதாக, ஏப்ரல் 30-ம் தேதிக்குப் பிறகு பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஏப்ரல் 21 முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.  இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,

''தமிழகத்தில் வெப்பக்காற்று வீசுவதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்படுகிறது. ஏப்ரல் 21 முதல் 29-ம் தேதி வரை தொடக்கப் பள்ளிகளுக்கு தேர்வுகள் நடைபெற இருந்தன. இந்தத் தேர்வுகளுக்கு மாற்றுத் தேதி அறிவிக்கப்படும். தனியார் பள்ளிகள் சிறப்புப் பயிற்சி வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

Monday, April 17, 2017

ஆளுநர் மாளிகையைச் சுற்றிப் பார்க்க அனுமதி: நாளை முதல் பதிவு தொடக்கம்


தமிழக ஆளுநர் மாளிகையை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கு ஆன்-லைனில் முன்பதிவு செய்யவேண்டும். இந்த சிறப்பு வசதியை தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் புதன்கிழமை (ஏப்.19) தொடங்கி வைக்க உள்ளார். தமிழக ஆளுநர் மாளிகைக்குள் பொதுமக்கள் இதுவரை அனுமதிக்கப்படுவதில்லை.

ஆளுநர் மாளிகையில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, விருது வழங்கும் விழா உள்ளிட்ட விழாக்கள் நடைபெறும்போது, அழைப்புக் கடிதம் உள்ளவர்கள் மட்டுமே தீவிர சோதனைக்குப் பின் அனுமதிக்கப்படுவர். ஆளுநர் மாளிகையில் ஏராளமான புள்ளி மான்கள், அரிய வகை 'பிளாக் பக்' வெளி மான் வகைகள் உள்ளன. இவை, ஆளுநர் மாளிகை சாலைகளில் இயல்பாக நடந்து செல்லும். பல்வேறு தரப்பட்ட மரங்களும் அழகிய தோட்டமும் இங்கு இடம்பெற்றுள்ளன. அதுதவிர ஆளுநர் மாளிகையில் 'தர்பார் ஹால்' என்ற அழகிய அரங்கமும் உள்ளது. இவற்றைக் கண்டுகளிக்கும் அரிய வாய்ப்பு பொதுமக்களுக்கு இப்போது கிடைக்க உள்ளது.

இதற்கான ஆன்-லைன் முன்பதிவு வசதியை சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் தொடங்கி வைக்க உள்ளார். அதன் பிறகு, ஆளுநர் மாளிகையைச் சுற்றிப் பார்க்க விரும்புவோர் ஆன்-லைனில் முன்பதிவு செய்து தனி நபராகவோ அல்லது குழுவாகவோ சுற்றிப் பார்க்க முடியும். இதற்கு குறைந்தபட்ச பதிவுக் கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனத் தெரிகிறது.

ஏற்கெனவே மஹாராஷ்டிரம், ஒடிஸா மாநில ஆளுநர் மாளிகைகள் பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

தமிழகம் முழுவதும் குளறுபடி 10 லட்சம் ஸ்மார்ட் கார்டுகளில் செல்போன் எண் தவறாக பதிவு: பொதுமக்கள் அவதி


தமிழகம் முழுவதும் உள்ள 1 கோடியே 65 லட்சம் குடும்ப அட்டைகளுக்கும் இந்த ஆண்டு முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணியை துவங்கி வைத்தார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் அன்று முதலே ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ரேஷன் கடையில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்டு அனுப்பப்படும் எனவும், அந்த பாஸ்வேர்டு கிடைக்கப்பெற்றவர்கள் சம்பந்தப்பட்டரேஷன் கடைக்கு சென்று தங்களுடைய ஸ்மார்ட் கார்டை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. மேலும் அந்த பாஸ்வேர்டு 15 நாள் வரை பயன்பாட்டில் இருக்கும் எனவும் அதற்குள் ஸ்மார்ட் கார்டை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக ஒரு சிலருடைய செல்போனுக்கு ஒன் டைம் பாஸ்வேர்டும் அனுப்பப்பட்டது. ஆனால் பெரும்பாலானவர்கள் செல்போனுக்கு ஒன்டைம் பாஸ்வேர்டு கிடைக்கவில்லை. அதே போன்று வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டுகளிலும் குடும்பத்தலைவர், குடும்ப உறுப்பினர்கள் விபரம் போன்றவை பிழைகளுடன் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பிழைகளுடன் அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து வட்டவழங்கல்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, சென்னையில் ஸ்மார்ட் கார்டுக்கான டேட்டா தயார் செய்யும்போது சுமார் 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண் தவறுதலாக பதிவாகி உள்ளது. இதனால் ஸ்மார்ட் கார்டு தயார் செய்தும் உரியவர்களிடம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றனர். செல்போன் எண் தவறாக பதிவு செய்யப்பட்டிருந்தால் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்று மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூன்றாம் நபருக்கான விபத்து காப்பீட்டு கட்டணம் குறைப்பு

வாகனங்களுக்கான மூன்றாம் நபர் விபத்து காப்பீடு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து அவர்களின் கோரிக்கையை ஏற்று வாகனங்களுக்கான மூன்றாம் நபர் விபத்து காப்பீடு கட்டணம் குறைக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் புதிய கட்டணங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய கட்டணங்கள் இந்த மாதம் முதல் அமலாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆயிரம் முதல் ஆயிரத்து 500 சிசி வரையிலான கார்களுக்கு 2 ஆயிரத்து 863 ரூபாயாக காப்பீடு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 500 சிசி-க்கு மேல் திறன் உள்ள கார்களுக்கு 7 ஆயிரத்து 890 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

150 சிசி திறன் உள்ள இரு சக்கர வாகனங்களுக்கான காப்பீடு கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், சரக்கு வாகனங்களுக்கான காப்பீடு கட்டணமும் 33 ஆயிரத்து 24 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் சிசி-க்கு குறைவான திறன் உள்ள கார்களுக்கான கட்டணத்தில் மாற்றமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, April 16, 2017

மதிப்பெண் மட்டுமா தனியார் பள்ளிகளின் மதிப்பீடு?


தனியார் பள்ளிகள் மீதான மோகம் பெற்றோரிடம் அதிகரித்துள்ள நிலையில், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்பது குறித்து யாரும் கேள்வி எழுப்புவதில்லை. தமிழகத்தில் 2016-17 ஆம் கல்வி ஆண்டு முடிவடைந்துவிட்ட நிலையில், 2017-18 ஆம் கல்வி ஆண்டுக்கான சேர்க்கைக்காக மெட்ரிக். பள்ளிகளை நோக்கி பெற்றோர்கள் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர்.

20 ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில், அந்தந்தப் பகுதியில் முன்னணியில் இருக்கும் பள்ளிகளில் இடம் பெறுவதற்காக மக்கள் பிரதிநிதிகள் முதல் அரசு அதிகாரிகள் வரையிலான சிபாரிசுக்காக காத்திருக்கும் சூழலும் ஆண்டுதோறும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அரசுப் பள்ளிகளின் கற்பித்தல் திறனை மட்டுமே குறை கூறிக்கொண்டு தனியார் பள்ளிகளை எதிர்நோக்கும் பெற்றோர்கள், அங்குள்ள சுகாதார வசதி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் குறித்து சிந்திப்பதில்லை. அனைத்தும் இலவசமாக கிடைக்கும் அரசுப் பள்ளிகள் மீது ஆயிரம் குறை சொல்லும் சமூகம், மெட்ரிக். பள்ளியில் மழலையர் வகுப்புகளுக்கு ரூ. 30 ஆயிரம் வரை செலவு செய்தாலும், எவ்வித கேள்வியும் கேட்க முடியாமல் தயங்கி நிற்கிறது.

பள்ளிக் கட்டடங்களுக்கான விதிமுறைகளில் சில: வகுப்பறைகள் 400 சதுர அடியில் அமைத்தல். 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு தரைத் தளத்தில் மட்டுமே வகுப்பறைகள். 20 மாணவர்களுக்கு 1 குழாய் வீதம் குடிநீர் குழாய்கள். அதேபோல் கை, கால் கழுவுவதற்கும் 20 மாணவர்களுக்கு 1 குழாய் வசதி. 20 மாணவர்களுக்கு 1 சிறுநீர் கழிப்பறை. 50 மாணவர்களுக்கு 1 மலக் கழிப்பறை. மாணவர்கள் அமரும் இருக்கைகள் (நாற்காலிகள்) முதுகு சாய்வகம் உள்ளதாக இருத்தல். கிராமப்புறங்களில் அமைந்துள்ள பள்ளிகளில் 3 ஏக்கர், பேரூராட்சிகளில் 1 ஏக்கர், நகராட்சியில் 10 கிரவுண்ட், மாநகராட்சியில் 6 கிரவுண்ட், மாவட்டத் தலைநகரங்களில் 8 கிரவுண்ட் வீதம் விளையாட்டு மைதானம் என பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை பெரும்பாலான மெட்ரிக். பள்ளி நிர்வாகங்கள் பின்பற்றுவதில்லை.

குறிப்பாக, பல பள்ளிகளில் கழிப்பறைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுவதில்லை. கழிப்பறைகளை பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில், சில பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்கும் கட்டுப்பாடுகள் வைத்துள்ளனர். இதனால், மாணவர்களுக்கு சிறுநீரக நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மெட்ரிக். பள்ளிகளைப் பொருத்தவரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும். அப்போது, சுகாதாரச் சான்று, தீ தடுப்புச் சான்று, கட்டட உரிமச் சான்று, கட்டட உறுதிச் சான்று உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் வழங்குகிறது. இந்த சான்றுகள், சம்பந்தப்பட்ட துறையினர் முறையான ஆய்வு மேற்கொள்ளாமலே வழங்குவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

செயல்படாத அன்னையர் பள்ளி பார்வைக் குழு: அதிகாரிகளை விட தங்கள் குழந்தைகளின் நலனில் பெற்றோருக்கு அக்கறை உள்ளது என்பதால், அன்னையர் பள்ளி பார்வைக் குழு உருவாக்கவும் அரசு விதிமுறைகளை உருவாக்கியது. அதன்படி, மாணவ, மாணவிகளின் தாய்மார்கள் வாரத்தில் ஒருநாள் 5 பேர் கொண்ட குழுவாகச் சென்று, பள்ளியில் உள்ள அனைத்து வசதிகளையும் பார்வையிட அனுமதிக்க வேண்டும். ஒருமுறை பார்வையிட்ட குழுவைச் சேர்ந்தவர்கள், மீண்டும் பார்வையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், சமூக ஆய்வில் கண்டறியப்படும் குறைபாடுகளை நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுசென்று சரிசெய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர் நுழைவுவாயிலோடு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

பார்வையாளர் புத்தகத்தில் இடம் பெறவேண்டிய சமூக ஆய்வு குறிப்புகள் பற்றியும் யாரும் கேள்வி எழுப்புவதில்லை. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியது: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு மட்டுமே தனி மெட்ரிக். பள்ளி ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பிற மாவட்ட மெட்ரிக். பள்ளி ஆய்வாளர்கள், கூடுதல் பொறுப்பாக 1 அல்லது 2 மாவட்டங்களை நிர்வகித்து வருகின்றனர். அரசுக்கு அனுப்ப வேண்டிய புள்ளி விவரப் பட்டியலை சேகரித்து வழங்குவதே இவர்களின் முக்கியப் பணியாக மாறிவிட்டது. மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கும் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

இந்தப் பணிகளுக்கிடையே, பள்ளிகளுக்கு ஆய்வுக்கு செல்ல முடியாது. இதில், அன்னையர் பள்ளிப் பார்வைக் குழு செயல்படுவது குறித்தெல்லாம் ஆய்வு நடத்தி கேள்வி எழுப்ப வேண்டுமெனில் மெட்ரிக். பள்ளி ஆய்வாளர் அலுவலகங்களில் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்படுவதோடு, மாவட்ட வாரியான அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.

நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் ஆதாரில் இன்று முதல் திருத்தம் செய்யலாம் : தமிழக அரசு அறிவிப்பு


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் 303 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. ஏற்கனவே ஆதார் எண் பெற்றுள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை திருத்தம் செய்யும் வசதி இன்று (ஏப்ரல் 17) முதல் வழங்கப்படவுள்ளது.

எனவே, பொதுமக்கள் கைரேகை அல்லது கருவிழியினை பதிவு செய்து தங்களது பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைப்பேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும், புகைப்படம், கைவிரல் ரேகை, மற்றும் கருவிழி ஆகியவற்றையும் புதுப்பித்து கொள்ளலாம்.

ஆதார் அட்டையை பதிவு செய்யவும், 5 முதல் 15 வயது முடிந்தவர்களுக்கான கட்டாய கை விரல் ரேகை மறு பதிவு செய்வதற்கு கட்டணம் இல்லை. அதே நேரத்தில் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட நிலைப்புள்ளி விவரங்களை திருத்தம் செய்வதற்கும் மற்றும் புகைப்படம், கை விரல் ரேகை, கருவிழி புதுப்பிக்க ரூ.25 சேவை கட்டணமாகவும், ஆதார் விவரங்களை தாளில் அச்சிட்டு பெற்று கொள்வதற்கு ₹10ம் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் படிவங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இது தொடர்பாக 18004252911 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.