இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, April 15, 2017

அரசுப் பள்ளிகளில் இட ஒதுக்கீடு: உத்தரவைப் பின்பற்றாவிட்டால் நடவடிக்கை


அரசுப் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். இதைப் பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைப்பள்ளி மாணவர் சேர்க்கையின் போது மாநில அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கை நடைபெற வேண்டும் என அனைத்துத் தலைமை ஆசிரியர்களையும், அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20%, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 18%, பழங்குடியினருக்கு 1%, பொதுப்பிரிவினருக்கு 31% என வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த இட ஒதுக்கீட்டு முறை பல்வேறு பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படுவதில்லை என புகார்கள் வந்துள்ளன. இதைக் கருத்தில் கொண்டு அனைத்துத் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டி, இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். இதை மீறிச் செயல்படும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உத்தரவை மீறிச் செயல்படும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் சுட்டிக்காட்ட வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கெனப் பதிவேடு ஒன்று ஆரம்பித்து அனைத்து விண்ணப்பங்களையும் பதிவு செய்து, தலைமை ஆசிரியர் தலைமையில் குழு அமைத்து, விண்ணப்பங்களைப் பரிசீலித்து அரசு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். மேலும் முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்பம் பெற்றே மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டும்.

இட ஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதா? என்பதை நன்கு ஆராய்ந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் இயக்குநருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

ஆங்கிலம் தெரியாத அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை சரிவதாக புகார்


தொடக்கப் பள்ளிகளில், ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால், மாணவர் சேர்க்கை கடும் சரிவை சந்தித்துள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், 37 ஆயிரம் உள்ளன. இவற்றில், 38 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பல பள்ளிகளில், 20க்கும் குறைவாகவே மாணவர்கள் படிப்பதால், அவற்றில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரட்டை அடிக்கும் நிலை உள்ளது.

மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி ஆசிரியர்கள், சொந்த விஷயங்களுக்கு நேரத்தை செலவழிப்பதாக புகார் உள்ளது. இதை கட்டுப்படுத்த, பள்ளிகளில், 'பயோமெட்ரிக்' வருகை பதிவு முறையை, உடனடியாக அமல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், அரசு தொடக்கப் பள்ளிகளின் ஆசிரியர்கள் பலருக்கு ஆங்கிலம் தெரியாததால், மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் பணி, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையும் கடுமையாக சரிந்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் மோசஸ் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில், ஆங்கில வழி கல்வியை அறிமுகப்படுத்தி, ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், அதற்கென ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழ் வழி ஆசிரியர்களே, ஆங்கில வழி மாணவர்களுக்கு பாடம் எடுக்கின்றனர். அதனால், பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர். அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாததால், அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் என, இருவழி தொடக்க வகுப்புகளுக்கும், குறைந்தபட்சம், 20 மாணவர்களை சேர்ப்பதே, கஷ்டமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இன்றைய நிலையில், நகர்ப்புறங்களில், எல்.கே.ஜி., குழந்தைகளே ஆங்கிலம் பேசும் நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் தெரியாதது, அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. எனவே, தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில், ஆங்கில சிறப்பு வகுப்பு எடுக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

யோகா தினம் கொண்டாட பயிற்சி பள்ளி, கல்லூரிகளுக்கு உத்தரவு


யோகா தினத்தை கொண்டாட, கோடை விடுமுறை முடிந்ததும், பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா., சபையில் ஆற்றிய உரையின்படி, சர்வதேச யோகா தினம் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. 2015 முதல், ஜூன், 21ல், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில், ஜூன், 21ல், சர்வதேச யோகா தினத்தை விமரிசையாக கொண்டாட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

இது குறித்து, பல்கலைக் கழக மானிய குழுவான, யு.ஜி.சி., அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஜூன், 21ல், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், காலை, 7:00 மணி முதல், 8:00 மணி வரை, யோகா தியான நிகழ்ச்சி நடத்த வேண்டும்.

அத்துடன், யோகா தொடர்பான விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும். இதற்காக, கோடை விடுமுறை முடிந்ததும், பள்ளிகள், கல்லுாரிகளில் மாணவர்களுக்கு, யோகா தின பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

ஆதார் எண் தராத 27,534 ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் மே மாதம் முதல் நிறுத்தப்படும்


ஆதார் எண் தராத 27,534 ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் மே மாதம் முதல் நிறுத்தப்படும் என்று ஈபிஎப் தெரிவித்துள்ளது. சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஓய்வூதியதாரர்களின் ஒய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் வாழ்நாள் சான்றிதழை ஓய்வூதியதாரர் சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Friday, April 14, 2017

அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் சம்பளம் நிறுத்தம்


அரசு நிதி ஒதுக்காததால், மார்ச் மாத சம்பளம் இன்னும் கிடைக்காமல், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர். தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான சம்பளம், மாத இறுதி நாளில், அவர்களது வங்கி கணக்கில், வரவு வைக்கப்படும். ஆனால், மார்ச் மாத சம்பளம் மட்டும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: ஆண்டுதோறும் மார்ச் மாதம் முடிந்ததும், பட்ஜெட்டில் அறிவித்தபடி, பள்ளி கல்வித்துறை பணிகளுக்கு, நிதி ஒதுக்கப்படும். அதில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் ஒதுக்கி, அரசாணை பிறப்பிக்க வேண்டும். இந்த பணியானது, நிதித்துறையின் செலவின பிரிவில் மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டுக்கான, சம்பள ஒதுக்கீடு உத்தரவை, அரசு இன்னும் வெளியிடவில்லை.

அதனால், மார்ச் சம்பளம், இன்னும் வழங்கப்படவில்லை. குழந்தைகளின் கல்விக் கட்டணம், தனிநபர் மற்றும் வீட்டுக்கடன்களை கட்ட முடியவில்லை; நகைகளை அடகு வைத்து, அன்றாட செலவுகளை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்

10ம் வகுப்பு சான்றிதழில் நிரந்தர குறியீட்டு எண்


தமிழகத்தில், 10ம் வகுப்பு சான்றிதழில், 14 இலக்க நிரந்தர குறியீட்டு எண்ணைச் சேர்த்து வழங்க, அரசின் தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. தமிழில் பெயர் சேர்ப்பதற்கான பணிகள் துவங்கின. தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான சான்றிதழ்களில், போலி சான்றிதழ்களை தடுக்க, தமிழக அரசின் தேர்வுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு கட்டமாக, 2016ம் ஆண்டு முதல், 14 இலக்க நிரந்தர குறியீட்டு எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, ஹால் டிக்கெட்டில், இந்த எண் இடம் பெற்றது; சான்றிதழிலும் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு, ஆதார் எண் மற்றும் கல்வித்துறையின் மின்னணு மேலாண் தகவல் பிரிவின் சார்பில், 'எமிஸ்' எண் வழங்கப்பட்டது. எனவே, எந்த எண்ணை, சான்றிதழில் பதிவு செய்வது என, தேர்வுத்துறை குழப்பத்தில் இருந்தது.

இந்நிலையில், எமிஸ் எண் மற்றும் ஆதார் எண்களை மறுஆய்வு செய்ய வேண்டியுள்ளதால், மீண்டும், நிரந்தர குறியீட்டு எண்ணைப் பயன்படுத்த, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதேபோல், இந்த ஆண்டு முதல், மாணவரின் பெயர் மற்றும் இன்ஷியல், தமிழிலும் இடம்பெற உள்ளது. பள்ளியின் பெயர் விபரமும், சான்றிதழில் இருக்கும். இதற்காக, தேர்வு முடிந்ததும், மாணவர்களிடம் அவர்களின் பெயரை, இன்ஷியலுடன் தமிழில் எழுதி, கையெழுத்து வாங்கப்பட்டது. இந்த விபரங்கள், ஆன்லைனில் பதிவு செய்யும் பணி, நேற்று துவங்கியது.

உள்ளாட்சி தேர்தல் பயிற்சி


உள்ளாட்சி தேர்தல் குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.2016 அக்டோபரில் நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்தலை, மே, 14க்குள் நடத்தி முடிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.

வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. ஆசிரியர்கள் கோடை விடுமுறையை கழிக்க, வெளியூர்களுக்கு சென்றுவிட்டால் சிக்கல் ஏற்படும். எனவே, ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்த, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு


அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், 2006 முதல், 7,979 ஆசிரியர்கள், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, ஒவ்வொரு நிதியாண்டிலும், பணிக்காலம் நீட்டிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்படும். அதன்பின்னரே, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைக்கும். இதன்படி, ௭,௯௭௯ ஆசிரியர்களுக்கும், ௨௦௧௮ மார்ச் வரை, பணிக்கால நீட்டிப்பு வழங்கி, பள்ளிக்கல்விச் செயலர் உதயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தனியார் பாட புத்தகங்கள்: சி.பி.எஸ்.இ., திடீர் தடை


தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என, தங்களின் இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற்ற பள்ளிகள், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களையே பயன்படுத்த வேண்டும் என்ற, விதிமுறைகள் உள்ளன. ஆனாலும், பெரும்பாலான பள்ளிகள், தனியார் புத்தக நிறுவனங்களின், பாட புத்தகங்களை பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், 'நியூ சரஸ்வதி புக் ஹவுஸ்' என்ற நிறுவனம், பிளஸ் 2 வகுப்புக்கு, உடற்கல்வி மற்றும் சுகாதாரம் என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தது. அதில், பெண்களின் உடல் அழகு எந்த அளவில் இருக்க வேண்டும், என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பாடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து, 'அனைத்து பள்ளிகளும், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பள்ளிகள் இணைப்பு அங்கீகாரம் பெறும் போது, என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை மட்டுமே பயன்படுத்துவோம் என, உறுதி அளிக்க வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., வாரியம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதை மீறி, தனியார் புத்தகங்களையோ, பாடத்திட்டத்தை தாண்டி, வேறு புத்தகங்களையோ பயன்படுத்தினால், பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், சி.பி.எஸ்.இ., வாரியம் திட்டமிட்டுள்ளது.

2,000 பள்ளிகளுக்கு 'நோட்டீஸ்' சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைந்த பள்ளிகள், தங்கள் வளாகத்திலும், வகுப்பறையிலும் என்னென்ன வசதிகளை கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு, விதிகள் உள்ளன. சி.பி.எஸ்.இ., இணைப்பு அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கும் போது, இந்த விதிகளை பின்பற்றுவோம் என, விண்ணப்ப படிவத்தில், பள்ளிகள் உறுதி மொழி அளிக்க வேண்டும். அத்துடன், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக, 150 வகையான விபரங்களை பட்டியலிட வேண்டும். ஆனால், பல பள்ளிகள் இதைப் பின்பற்றவில்லை. அதனால், உள்கட்டமைப்பு தகவல்களை வெளியிடாத, 2,000 பள்ளிகளுக்கு, தலா, 50 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, அந்த தொகையை செலுத்தி விளக்கம் அளிக்கும்படி, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., வாரியம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

Thursday, April 13, 2017

பள்ளி மாணவர்களுக்கான வேலை நாள்கள் குறைக்கப்படுமா?


தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான வேலை நாள்களைக் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடையே ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கும் கல்லூரிகளில் 180 நாள்கள் வகுப்புகள் நடத்த வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 200 நாள்கள். தொடக்கப் பள்ளிகளுக்கு 220 நாள்கள். பெரிய மாணவர்கள் அதிக நாள்கள் வகுப்புகளுக்கு செல்லலாம். ஆனால், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குதான் அதிக வேலை நாள்களில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதன்படி பார்த்தால், ஏப்ரல் மாத இறுதி வரையில் வகுப்புகள் நடக்கின்றன.

தமிழகத்தில் தற்போது வெயில் மிகவும் அதிகமாகவே உள்ளது. 107 டிகிரி வரை வெயில் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், ஏப்ரல் மாத இறுதி வரை தொடக்கப் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், அவர்கள் வெயிலின் தாக்கத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வியர்குரு, அம்மை, கோடை வெயில் கொப்புளம் ஆகியவற்றால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு சூழ்நிலைக்கு ஏற்ப வேலை நாள்களைக் குறைக்க கல்வித் துறை நடவடிக்கை எடுக்கலாம்.

தமிழக அரசும், பள்ளிக் கல்வித் துறையும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு விரைந்து தேர்வுகளை நடத்தி, முன்கூட்டியே விடுமுறை அளிக்க வேண்டும் என்பது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்

ஜூலைக்குள் உள்ளாட்சி தேர்தல்; அவகாசம் கோருகிறது ஆணையம்


உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கை களை, ஜூலைக்குள் முடிக்க அவகாசம் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது. 'உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், 2016 அக்டோபரில், இரண்டு கட்டமாக நடக்கும்' என, மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டது. இதையடுத்து, 'உள்ளாட்சி அமைப்புகளில், பழங்குடியினருக்கான ஒதுக்கீடு முறையாக இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன், 'பழங்குடியினருக்கான ஒதுக்கீடு செல்லும். ஆனால், தேர்தல் அறிவிப்பு முறையாக இல்லை என்பதால், அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது; முறையாக அறிவிப்பு வெளியிட்டு, டிசம்பருக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார். 2016 அக்., 4ல், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் நுாட்டி ராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' மே, 14க்குள், உள்ளாட்சி தேர்தலை நடத்திமுடிக்க உத்தரவிட்டது. இதற்கிடையில், வழக்கில், தன்னையும் இணைத்து கொள்ளும்படி கோரி, 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குனர் நாராயணன் தாக்கல் செய்த மனுவில், 'உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்து, ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதன்படி, தேர்தலை, ஏப்., 24க்குள் நடத்த வேண்டும்' என, கூறப்பட்டது. மனு, தற்காலிக தலைமை நீதிபதி, எச்.ஜி.ரமேஷ், நீதிபதி டீக்காராமன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. ஆர்.எஸ். பாரதி சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ''மே, 14க்குள் தேர்தல் நடத்த வேண்டும் என, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது,'' என்றார். இதையடுத்து,நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர். இந்த வழக்கு, அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.
இதற்கிடையில், நீதிமன்ற அவமதிப்பு மனுவும், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையத்தின் செயலர் ராஜசேகர் தாக்கல் செய்த மனு: புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு நடவடிக்கைகளை, மாநில தேர்தல் ஆணையம் துவக்கி விட்டது. மே மாத இறுதிக்குள் பணிகளை முடிக்கும் நிலையில் இருப்போம். உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை, மாநில தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. பல்வேறு முறையீடுகளை பைசல் செய்யவும், விதிகளில் திருத்தம் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், இதை உரிய அதிகாரிகள் தான் மேற்கொள்ள வேண்டும். மாநில தேர்தல் ஆணையம் அல்ல.

வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளை, மே மாதத்துக்குள் முடிக்கவும், தேர்தல் நடவடிக்கைகளை, ஜூலைக்குள் முடிக்கவும், அவகாசம் அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை...


தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் 21 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2ஆயிரத்து 750 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீதம் தேசிய ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்படும் நிலையில், எஞ்சிய 2,318 இடங்களுக்கு கடந்த ஆண்டு கவுன்சிலிங் நடைபெற்றது.

இந்நிலையில் புதிதாக தொடங்கப்படும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அங்கு 150 எம்.பி.பி.எஸ் இடங்களில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இந்த கல்வி ஆண்டு முதல் தமிழகத்திற்கு கூடுதலாக 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் கிடைக்க உள்ளன.

Wednesday, April 12, 2017

எல்நினோ’ எதிரொலி காரணமாக தமிழகத்தில் வெயில் 110 டிகிரியை தொடும்


பசிபிக் கடல் பகுதியில் நிலவி வரும் வெப்பம் காரணமாக ‘எல்நினோ’ என்கிற கால நிலையில் பருவ மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கத்ரி வெயில் துவங்குவதற்கு முன்பே தமிழகத்தின் பல பாகங்களில் 100 டிகிரி வெப்பம் விளாசுகிறது. இதனால் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வறண்ட வானிலை காரணமாக மேகங்கள் இன்றி சூரியனின் ஒளிக்கதிர் நேரடியாக பூமியின் மீது விழுவதாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக வெயிலின் அளவு அதிகரித்து அதிகபட்சமாக 109 டிகிரியை எட்டியது.

நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக திருச்சி மாவட்டத்தில் 106 டிகிரி வெயில் நிலவியது. வேலூர், திருத்தணி, சேலம், பாளையங் கோட்டை, மதுரை, தர்மபுரி மாவட்டங்களில் 104 டிகிரி வெயில் நிலவியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 99 டிகிரி வெயில் நிலவியது. ஆனால், சராசரியாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் 106 முதல் 109 டிகிரி அளவுக்கு வெயில் மாறி மாறி தகித்து வருகிறது. இந்நிலையில், அது மேலும் அதிகரித்து 110 டிகிரியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதார் அட்டை பெறாத மாணவர்களுக்கு சிறப்பு முகாம் : கோடை விடுமுறையில் கல்வித்துறை ஏற்பாடு


ஆதார் அடையாள அட்டை பெறாத மாணவர்களுக்கு நடப்பு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் பள்ளி கல்வி இயக்ககத்தின்கீழ் 2016-17ம் கல்வியாண்டில் உயர், மேல்நிலை பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆதார் எண் வழங்கும் பணியை 100 சதவீதம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் இதுவரை ஆதார் அட்டை பதிவு செய்யப்படாத மாணவர்களுக்காக 2017 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வட்ட அளவில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது சார்பாக தாலுகா அளவில் நடைபெறும் சிறப்பு முகாமில் அந்தந்த தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இந்த விபரத்தை தெரிவித்து ஆதார் அட்டை பதிவு முகாமை பயன்படுத்திக்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்க வேண்டும்.
100 சதவீத ஆதார் பதிவை உறுதி செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 1-ஆம் தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலை தினசரி நிர்ணயம்: 5 நகரங்களில் அமலாகிறது


சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை வரும் மே மாதம் 1-ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளது. இந்த புதிய நடைமுறை 5 நகரங்களில் முதல்கட்டமாக அமலுக்கு வரவுள்ளது. இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐஓசி) தலைவர் பி. அசோக், தில்லியில் பிடிஐ செய்தியாளரிடம் புதன்கிழமை கூறியதாவது:

நாட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில், 95 சதவீத விற்பனை நிலையங்கள், அதாவது சுமார் 58 ஆயிரம் பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மத்திய அரசுக்குச் சொந்தமான ஐஓசி, பாரத் பெட்ரோலியம் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவைகளுக்குச் சொந்தமானவை ஆகும். தேர்வு செய்யப்பட்ட 5 முக்கிய நகரங்களில் மட்டும் வரும் மே மாதம் 1-ஆம் தேதி முதல், நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலையை நிர்ணயம் செய்யும் நடைமுறையை மேற்கண்ட நிறுவனங்கள் அமல்படுத்தவுள்ளன. இதையடுத்து, நாடு முழுமைக்கும் படிப்படியாக இந்த நடைமுறை விரிவுபடுத்தப்படும்.

முதலில், புதுச்சேரி, ஆந்திரத்தின் விசாகப்பட்டினம், ராஜஸ்தானின் உதய்ப்பூர், ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர், சண்டீகர் ஆகிய 5 நகரங்களில் நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலையை நிர்ணயம் செய்யும் நடைமுறை அமல்படுத்தப்படவுள்ளது. நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலையை நிர்ணயிப்பது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமானதுதான். ஆனால், அதை முதலில் பரிசோதனை ரீதியில் செயல்படுத்த வேண்டியுள்ளது. பரிசோதனை முறையில், இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டதும், அப்போது அதன் தாக்கங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

பிறகு, இந்த நடைமுறை நாடு முழுமைக்கும் எண்ணெய் நிறுவனங்கள் விரிவுபடுத்தும். பரிசோதனை முயற்சி, ஒரு மாதத்தில் தொடங்கி வைக்கப்படும் என்று பி.அசோக் கூறினார். ஆனால், பரிசோதனை முயற்சி எப்போது தொடங்கி வைக்கப்படும் என்பது குறித்து பி.அசோக் தெரிவிக்கவில்லை. ஆனால், எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் கூறியபோது, வரும் மே மாதம் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தன. இந்தியாவில் முன்பு பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், மத்திய அரசிடமே இருந்தது.

இந்நிலையில், பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனத்திடம் மத்திய அரசு கடந்த 2010-ஆம் ஆண்டு ஜுன் மாதம் அளித்தது. இதேபோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் எண்ணெய் நிறுவனங்களிடம் கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்படைத்தது. அதன்படி, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, இந்தியாவில் மாதந்தோறும் 1 மற்றும் 16-ஆம் தேதிகளில் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. ஆனால், விலையை மாற்றியமைப்பதற்கு முன்பு மத்திய அரசிடம் எண்ணெய் நிறுவனங்கள் கலந்தாலோசனை நடத்த வேண்டும்.

இந்நிலையில், நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலையை நிர்ணயிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தால், சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போதைய நிலவரப்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு இடையே பெட்ரோல்-டீசல் விலையில் சில காசுகள் ரீதியிலேயே வித்தியாசம் காணப்படுகிறது. நாள்தோறும் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டால், இனி அதிக அளவுக்கு பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இருக்காது. சில காசுகள் மட்டுமே ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். வாகன ஓட்டிகள் மத்தியிலும் பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது.