இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, October 24, 2015

தகவல் பெறும் உரிமைச் சட்டம்: மேல்முறையீடு செய்வதில் புதிய நடைமுறை:தகவல் ஆணையம் நடவடிக்கை


தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், இரண்டாவது முறை மேல்முறையீடு செய்வதற்கான புதிய நடைமுறையை தகவல் ஆணையம் வகுத்துள்ளது. அரசுத் துறை சார்ந்த தகவல்கள், விவரங்களை கேட்டுப் பெறுவதற்கான உரிமையை வழங்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், இரண்டு முறை மேல் முறையீடு செய்யலாம்.

இந்த நிலையில், இரண்டாவது முறை மேல்முறையீடு தாக்கல் செய்வது குறித்து எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், புதிய வழிமுறைகளை தகவல் ஆணையம் வகுத்துள்ளது. அதன் விவரம்: 2-ஆவது முறை மேல்முறையீட்டுக்கு கட்டணம் ஏதுமில்லை. விண்ணப்பம் வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்யப்பட்டதாகவோ அல்லது தெளிவாகக் எழுதப்பட்டதாகவோ இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் கையெழுத்திட வேண்டும். இது சட்டப் பூர்வமான நடவடிக்கை என்பதால், தனிநபர் பெயர்களைக் கொண்ட தாளிலோ அல்லது மனுவுக்குத் தொடர்பில்லாத விவரங்களைச் சேர்ப்பதோ கூடாது. மேல்முறையீட்டு விண்ணப்பம் தலைமை தகவல் ஆணையாளர் அல்லது மாநில தகவல் ஆணையர்கள் பெயருக்கு அனுப்பக் கூடாது. திரும்பப் பெறப்படுவது எப்போது? மேல்முறையீட்டு மனுக்கள் சில காரணங்களுக்காக திரும்பப் பெறப்படலாம். அதன்படி, முதல் கட்டமாக பொதுத் தகவல் அலுவலருக்கோ அல்லது மேல்முறையீட்டு அலுவலருக்கோ மனு அனுப்பப்படாமல் ஆணையத்தில் நேரடியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் நிராகரிக்கப்படும். முதல் மேல்முறையீட்டு அலுவலரிடம் இருந்து பதில் வரப் பெற்ற அல்லது வரப் பெற வேண்டிய தேதிக்கு 90 நாள்கள் கழித்துச் செய்யப்படும் மேல்முறையீடு மனுக்கள், தேவையான ஆவணங்கள் இணைக்கப்படாதவை, மாநில தகவல் ஆணைய வரம்புக்குள் வராத அமைப்புகள், கையெழுத்திடாத, மேல்முறையீடு படிக்கக் கூடிய அல்லது புரிந்து கொள்ளக் கூடிய வகையில் இல்லாமல் இருந்தால் நிராகரிக்கப்படும்.

புதிதாக உறுதிமொழி: இரண்டாம் முறையீட்டில் பல புதிய நடைமுறைகள் வகுக்கப்பட்டதுடன், வரையறுக்கப்பட்ட உறுதிமொழிப் படிவத்திலும் கையெழுத்திட வேண்டும் என தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், "விண்ணப்பதாரராகிய நான் அளித்த விவரங்கள், தகவல்கள் அனைத்தும் எனக்கு நேரடியாகத் தெரிந்தவை. அவை அனைத்தும் நான் அறிந்த வகையில் உண்மை. சரியானவை என்றும் நம்புகிறேன் என இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்' எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இதே பொருள் குறித்து ஆணையத்திடம் எந்த மேல்முறையீடும் செய்யவில்லை என்றும் உறுதியளிப்பதாக அந்தப் படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்வலர்கள் எதிர்ப்பு: புதிய நடைமுறைகளுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளளனர். "தகவல்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளவே மேல்முறையீடு செய்யப்படுகிறது, மனுதாரர்கள் தெரிவிக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையென உறுதிமொழி அளிப்பதென்றால் எதற்காக மனு செய்ய வேண்டும்' என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

டிச.,2ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்


எஸ்.பி.ஐ., வங்கியுடன் இணைந்துள்ள துணை வங்கிகளை நீக்கவும், அரசு வழிகாட்டுதல்படி கருணை அடிப்படையில் செய்யப்படும் பணி நியமனங்களை நீடிக்க வலியுறுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச.,2ல் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தம் நடைபெறும் என, அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு ஒழுக்கம் கற்றுத்தர சிறப்பு பயிற்சி


மாணவர்களுடன், ஆசிரியர்களுக்கும் ஒழுக்கத்தை கற்று கொடுக்க, வரும், 27ல், சென்னையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்தவும், மாணவர்களுக்கு பாடத் திட்டத்துடன், நற்பண்புகள் மற்றும் தனித்திறனை வளர்க்கும் வகையில் பாடம் நடத்தவும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஆசிரியர்களுக்கு, முதற்கட்டமாக ஒழுக்கம் மற்றும் நற்பண்பு மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் டி.பி.ஐ., வளாகத்திலுள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், 27, 28ல், பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, அடிப்படை கணினி அறிவை வளர்க்கும் சிறப்பு பயிற்சியை, மூன்று நாட்கள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு மாவட்டத்திலும், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும், 50 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஆசிரியர்களுக்கு தீபாவளி முன்பணம் சந்தேகம்


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை பண்டிகை முன்பணம் என, 5,000 ரூபாய் வழங்கப்படும். தீபாவளியை ஒட்டிதான், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், அதிக அளவில், முன்பணத்துக்கு விண்ணப்பிப்பர். அதேபோல், அனைத்து பள்ளிகளில் இருந்தும், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களுக்கு, விண்ணப்பங்கள் வந்துள்ளன, ஆனால், இதுவரை நிதித் துறை அனுமதி வரவில்லை. அதனால், முன்பணம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:வழக்கமாக, தீபாவளிக்கு, 15 நாள் முன்பே, முன்பணம் வழங்கப்பட்டு விடும். ஆனால், இன்னும் நிதித் துறை ஒதுக்கீடு உத்தரவு வரவில்லை என்கின்றனர். ஏற்கனவே, அகவிலைப்படி உயர்வுக்கான, நான்கு மாத நிலுவை தொகை வழங்க வேண்டியுள்ளதால், பண்டிகை முன்பணம் கேள்விக்குறியாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

Friday, October 23, 2015

தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளில் கட்டடங்கள் கட்டும் பணி தொடக்கம்


தமிழகம் முழுவதும் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளில் ரூ.555 கோடியில் கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், 2010-11, 2011-12 ஆகிய ஆண்டுகளில் முறையே 344, 710 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகளுக்குக் கட்டடம் கட்ட தனது 75 சதவீதப் பங்கான ரூ.518 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு பள்ளிக்குக் கட்டடம் கட்ட அனுமதிக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லாததால், அந்தப் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தன. மத்திய அரசு ஒரு சதுர அடிக்கு ரூ.600 ஒதுக்குகிறது. ஆனால், கட்டடம் கட்டுவதற்கு ஒரு சதுர அடிக்கு ரூ.1,300 வரை செலவாகிறது. இந்தப் பள்ளிகளுக்கான கட்டடங்களைக் கட்டுவதற்காக கூடுதல் நிதியையும் சேர்த்து மாநில அரசு ரூ.1,263 கோடி ஒதுக்கீடு செய்யும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி, முதல் கட்டமாக 344 பள்ளிகளைக் கட்டுவதற்காக இப்போது தமிழக அரசின் பங்காக ரூ.380 கோடி, மத்திய அரசின் பங்காக ரூ.175 கோடி என ரூ.555 கோடி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டது. இந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கட்டடங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குரூப் 2ஏ விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்படுமா?


தமிழக அரசின், 33 துறைகளில், குரூப் - 2 ஏ பதவியில் காலியாக உள்ள, 1,863 இடங்களுக்கு, டிசம்பர், 27ல் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே தேதியில், மத்திய அரசின், 'நெட்' தேர்வு நடக்க உள்ளதால், குழப்பம் ஏற்பட்டது.இதையடுத்து, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி, தேர்வு தேதியை ஜனவரி, 24க்கு தள்ளிவைத்தார். 'கூடுதலாக, மூன்று துறைகளில், 84 காலியிடங்களும் சேர்த்து நிரப்பப்படும்' என, அறிவித்துள்ளார்.ஆனால், விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை, டி.என்.பி.எஸ்.சி., நீட்டிக்கவில்லை. நவம்பர், 11, இரவு, 11:59க்குள் 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நவ.16ம் தேதி முதல் 2ம் பருவ இடைத்தேர்வு துவக்கம்

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, நவ., 16ம் தேதி முதல், இரண்டாம் பருவ இடைத்தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ தேர்வு மற்றும் கற்பித்தல் முறை அமலாகிறது. 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை ஆண்டு தேர்வு நடத்தப்படுகிறது. காலாண்டுத் தேர்வு முடிந்து, பள்ளிகளில் இரண்டாம் பருவ பாடங்கள் நடத்தப்படுகின்றன. எனவே, தீபாவளி விடுமுறைக்கு பின், இரண்டாம் பருவ இடைத்தேர்வை நடத்த, அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

நவ., 16ம் தேதி தேர்வுகளை துவங்கி, 20ம் தேதிக்குள் முடிக்கவும், அதன்பின், அரையாண்டுத் தேர்வுக்கான பாடப்பகுதிகளை முடிக்கவும், முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 'இந்தத் தேர்வுக்கு மாவட்ட அளவில், மாவட்ட தேர்வுக்குழு மூலம், ஒரே வகையான வினாத்தாள்கள் வழங்கப்படும்' என, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை


தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரின் அனுமதியின்றி, ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், பாஸ்போர்ட் பெறுவதிலும், வெளிநாடு செல்வதிலும் பல கட்டுப்பாடுகள் உள்ளன.

இதனடிப்படையில், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பிறப்பித்துள்ள உத்தரவு:

அரசு பள்ளி ஆசிரியர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளிக்கல்வி இயக்குனரிடம் முன் அனுமதி பெற்று, விடுப்பு அனுமதிக்கப்பட்டால் மட்டுமே, வெளிநாடு செல்ல முடியும். இந்த அனுமதியை பெற, தங்கள் விண்ணப்பத்தை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு உத்தர வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், 'பாஸ்போர்ட் பெறவும், புதுப்பிக்கவும், தடையில்லா சான்றுக்காக காத்திருக்க வேண்டாம்' என, கூறப்பட்டுள்ளது. 'பாஸ்போர்ட் பெற விரும்புவோர், விண்ணப்ப படிவ நகலை, பணி நியமன அலுவலருக்கு அனுப்பி விட்டு, பாஸ்போர்ட் அதிகாரிக்கு விண்ணப்பிக்கலாம்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Thursday, October 22, 2015

மாணவர்களுக்கு இலவச சுற்றுலா


அறிவியல் மையம் மற்றும் தோட்டக்கலைப் பண்ணைகளுக்கு, மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல, அரசு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின், புதிய அணுகுமுறை கல்வித் திட்டத்தில், இலவச அறிவியல் சுற்றுலா அழைத்துச் செல்ல, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், எட்டாம் வகுப்பு வரை, 800 பேரை சுற்றுலா அழைத்து செல்ல, மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தில், மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி, 15 ரூபாய்; மதிய உணவு, 50 ரூபாய் வீதம் நிதி ஒதுக்கப்படுகிறது. திறமையான ஆசிரியர்கள் உடன் செல்ல வேண்டும். அரசு பஸ்களில் மட்டுமே பயணிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

Wednesday, October 21, 2015

குழந்தைகள் தினஓவிய போட்டி


ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ல், குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அரசு அருங்காட்சியகத்தில், பள்ளி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள், இம்மாதம், 26 முதல், 30 வரை, நடக்கிறது.ஒவ்வொரு பள்ளியும், இந்த போட்டியில் கலந்து கொள்ள, ஒரு மாணவரைத் தேர்வு செய்து, 23ம் தேதிக்குள் அருங்காட்சியகத்தில் சமர்ப்பிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.

Tuesday, October 20, 2015

CPS update details

Click below

http://218.248.44.123/auto_cps/public/

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்: இணையத்தில் கணக்கு விவரங்கள்: தமிழக அரசு தகவல்


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பான விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கருவூல கணக்குத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் 2003-ஆம் ஆண்டு ஏப்ரலில் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், அரசு ஊழியர்கள் உள்பட 4.20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தில் அடிப்படை ஊதியம், தர ஊதியம், அகவிலைப்படிக்கென மாதம் 10 சதவீதம் பிடிக்கப்படும். அதே அளவு தொகையை, அரசும் தன் பங்காகச் செலுத்தும்.

அரசு பங்குத் தொகைக்கும் பணியாளரின் பங்கு தொகைக்கும் சேர்த்து வட்டி கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த விவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில் விடுபட்ட விவரங்கள்-குறைகள் இருந்தால் சம்பள கணக்கு அலுவலர் அல்லது மாவட்ட கருவூல அலுவலரை அணுகலாம். 2014-15-ஆம் ஆண்டுக்கான கணக்குத்தாள்கள் அடங்கிய விவரங்களை, அதாவது அவரவர் கணக்குத்தாள்களை http://218.248.44.123/auto_cps/public என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கருவூல கணக்குத் துறை தெரிவித்துள்ளது.

"வினா வங்கிகளுக்கு பதிலாக புத்தகங்களைப் படிக்க வேண்டும்'


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வினா வங்கிகளுக்குப் பதிலாக புத்தகங்களை முழுமையாகப் படிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் (பொறுப்பு) தண்.வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகள் வாயிலாக பள்ளிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:- மாணவர்கள், புத்தகத்தில் உள்ள கருத்துகளை முழுமையாகப் படித்து புரிந்து தேர்வுகளுக்கு தயார் செய்வதற்குப் பதிலாக, ஏற்கெனவே கடந்த பருவங்களில் வெளியான வினாக்களின் தொகுப்பை மட்டும் படித்தால் முழு மதிப்பெண் பெற்றுவிடலாம் என்ற தவறான புரிதல் மாணவர்கள் மத்தியில் இருக்கிறது. அதனால், வினாத்தாள் கட்டமைப்புக்கு உட்பட்டு புத்தகத்தில் உள்ள பகுதிகள் தொடர்பாக வினாக்கள் வரும்போது மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்படுகிறது.

இதனை களையும் பொருட்டு, அனைத்து வினாக்களுக்கும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும், முழு புரிதலுடனும் பதிலளிக்க ஏதுவாக புத்தகத்தில் உள்ள கருத்துகளை முழுமையாகப் படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையை அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிப்பதோடு, அதற்கு ஆதாரமாக பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் கையெழுத்தையும் தலைமையாசிரியர்கள் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வு புதிய பாடத்திட்டம் வெளியீடு


ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை உயர் பதவிகளுக்கு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., சார்பில், மூன்று கட்ட 'சிவில் சர்வீசஸ்' தேர்வு நடத்தப்படுகிறது. ஆகஸ்டில் நடந்த முதல்நிலை தகுதித் தேர்வு முடிவுகள், கடந்த வாரம் வெளியாகின. இதில், 4.60 லட்சம் பேர் எழுதியதில், தமிழகத்தை சேர்ந்த, 500 பேர் உட்பட, 15 ஆயிரம் பேர், முதன்மைத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு டிச., 8ல் தேர்வு நடக்கிறது. தேர்வு அட்டவணை, அடுத்த வாரம் வெளியாகலாம். தேர்வுக்கான பாடத்திட்டம், தற்போது வெளியாகி உள்ளது.

மொத்தம், ஒன்பது தாள்களுக்கு, 2,625 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது. மாநில மொழி, ஆங்கிலம் என, இரண்டு தாள்களில், ஒவ்வொரு தாளுக்கும் தலா, 300 மதிப்பெண் வழங்கப்படும். இதில், குறைந்தது, 25 சதவீத மதிப்பெண் கட்டாயம். மாநில மொழியில் தமிழ் உட்பட, 13 மொழிகள் பட்டியல் இடப்பட்டுள்ளன. மற்ற ஏழு தாள்களில், கட்டுரை, பொதுப் பாடம், 4 தாள்கள்; தேர்வுப் பாடங்கள் இரண்டு, தலா 250 மதிப்பெண்களுக்கு எழுத வேண்டும்.

இதுதவிர பெர்சனாலிட்டி தேர்வுக்கு, தனியாக, 275 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. மேலும், இரண்டு சிறப்புப் பாடங்கள் எழுத வேண்டும்; அதற்கு, 26 பாடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய வரலாறு, கலாசாரம், சர்வதேச மற்றும் சமூக வரலாறு மற்றும் புவியியல் ஆகியவை முதல் பொதுப்பாடம்; நிர்வாகம், அரசியல் அமைப்பு, சமூக நீதி மற்றும் சர்வதேச தொடர்புகள் இரண்டாவது பொதுப் பாடம். தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி, உயிரி தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை, 3வது பாடம்; மனித ஒழுக்கம், அரசியல் எண்ணங்கள், சமூக ஒற்றுமை, வாழ்வியல் நெறிகள் போன்றவை நான்காவது பாடமாகவும் வெளியிடப்பட்டு உள்ளது. பாடத்திட்டத்தை, http://www.upsc.gov.in/exams/notifications/2015/CSP_2015/CSP_2015_eng.pdf என்ற இணையதள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்

குரூப் 2ஏ தேர்வு தேதி மாற்றம்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் டிசம்பர் 27ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த குரூப் 2 தேர்வு, ஜனவரி மாதம் 24ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) ஆண்டுக்கு இருமுறை ஜூன், டிசம்பர் மாதங்களில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

வரும் டிசம்பர் மாதத்துக்கான நெட் தேர்வு அறிவிப்பை, கடந்த செப்டம்பர் மாதம் சி.பி.எஸ்.இ. வெளியிட்டது. தேர்வானது டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை தமிழகம் உள்பட நாடு முழுவதும் இருந்து 7 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆண்டுக்கு ஆண்டு எழுதி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டது. அதில், இந்தத் தேர்வு டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு இளநிலை பட்டப் படிப்பு குறைந்தபட்ச கல்வித் தகுதியாகும்.
முதுநிலை பட்டப் படிப்பை முடித்து நெட் தேர்வை எழுதுபவர்களில் பலரும், அரசுப் பணிக்காக டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்-1, குரூப்-2 தேர்வுகளையும் எழுதுவது வழக்கம். ஆனால், இம்முறை நெட் தேர்வும், டி.என்.பி.எஸ்.சி. தேர்வும் ஒரே நாளில் வந்ததால், இரண்டு தேர்வில் எதை எழுதுவது என்ற குழப்பம் இளைஞர்களிடையே ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து டிசம்பர் 27ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த குரூப் 2 தேர்வு, ஜனவரி மாதம் 24ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Monday, October 19, 2015

வங்கிகளுக்கு புதன், வியாழன் மட்டுமே விடுமுறை


சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு பாரத ஸ்டேட் வங்கி,இந்தியன் வங்கி உள்பட அனைத்து வங்கிகளுக்கும் புதன்கிழமை (அக்.21), வியாழக்கிழமை (அக்.22) ஆகிய இரண்டு நாள்கள் மட்டுமே விடுமுறை என வங்கிகளின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை (அக். 23) அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும். அரசு தலைமை ஹாஜியின் தகவலைத் தொடர்ந்து மொஹரம் தினத்தின் விடுமுறையை வெள்ளிக்கிழமையிலிருந்து (அக்.23) சனிக்கிழமைக்கு (அக்.24) மாற்றி தமிழக அரசு திங்கள்கிழமை ஆணை பிறப்பித்துள்ளது.

இதையடுத்து வங்கிகள் அனைத்தும் வரும் வெள்ளிக்கிழமை (அக்.23) செயல்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் சனிக்கிழமை (அக்.24) 4-ஆவது சனிக்கிழமை என்பதால், அன்றைய தினம் வங்கிகள் அனைத்துக்கும் விடுமுறை நாளாகும்.

மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு உறுதிமொழி: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு


அனைத்துப் பள்ளிகளிலும் வழிபாட்டுக் கூட்டத்தில் வாரத்தில் ஒரு நாள் சாலை பாதுகாப்பு உறுதிமொழியை மாணவர்கள் எடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்: இந்திய தேசிய குற்றவியல் அறிக்கையின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழக்கின்றனர்.

சாலை பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தினால், அவர்கள் பெற்றோர், உறவினர் மட்டுமில்லாது சமூகத்திலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். இதற்காக பள்ளிகளில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த பள்ளிக் கல்வித் துறை விரும்புகிறது. அனைத்துப் பள்ளிகளிலும் வாரத்தில் ஒருநாள் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் இந்த உறுதிமொழி எடுப்பதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் ஆவன செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "நான் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவேன்.

ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகே வாகனம் ஓட்டுவேன். எனது பெற்றோரும், ஓட்டுநர்களும் சீட் பெல்ட், ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்துவேன். பேருந்தின் படிக்கட்டில் பயணிக்க மாட்டேன்' உள்ளிட்ட சாலைப் பாதுகாப்பு உறுதிமொழிகள் மாணவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்குஓவிய போட்டி


அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 'புனித நதி' என்ற தலைப்பில், ஓவியப் போட்டி நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, மத்திய நீர்வளம் மற்றும் கங்கை நதி புனரமைப்பு அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு:நீர் வளத்தை பாதுகாத்தல், நதிகளை சுத்தமாக வைத்திருத்தல் குறித்து, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியப் போட்டி நடத்தப்பட வேண்டும். நிலத்தடி நீர் மாசுபடுதல், அதன் அபாயங்கள், தடுத்தல் மற்றும் புனித நதி போன்ற தலைப்புகளில் நடத்தப்படும் போட்டியில், தேசிய அளவில், மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதுகள் வழங்கப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இதன்படி, அரசு, அரசு உதவி பெறும்மற்றும் தனியார் பள்ளிகளில், 6, 7 மற்றும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு,ஓவியப் போட்டிகளை, 25ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.