இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, December 28, 2014

புதிய சேவை அறிமுகம் பிஎப் ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் லைப் சர்டிபிகேட்

பிஎப் ஓய்வூதியம் பெற்றுவருபவர்களுக்கு, ‘டிஜிட்டல் லைப் சர்டிபிகேட்’ என்ற புதிய சேவையை பிஎப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக வடக்கு டெல்லி மற்றும் சண்டிகரில் சோதனை அடிப்படையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் (இபிஎப்ஓ) அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தற்போது, ஓய்வூதியம் பெற்றுவருபவர்கள் ஒவ்வொரு ஆண்டு நவம்பர் மாதம், ‘உயிர் சான்று’ கொடுக்க வேண்டும். இந்த நடைமுறைக்கு மாற்றாக, ‘டிஜிட்டல் லைப் சர்டிபிக்கேட்’ என்ற சேவை கொண்டு வரப்படவுள்ளது. அதன்படி, ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுக்கான பென்ஷன் ஆர்டர், ஆதார் எண், வங்கி கணக்கு எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை பிஎப் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இப்படி பதிவு செய்த பிறகு ஓய்வூதியதாரர்கள் தங்களது செல்போன் மூலம் டிஜிட்டல் லைப் சர்பிடிக்கேட்டை சமர்ப்பிக்க முடியும். இந்த சேவை சோதனை அடிப்படையில் வடக்கு டெல்லி மற்றும் சண்டிகரில் கடந்த 26ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. அங்குள்ள இரண்டு பிஎப் மண்டல அலுவலகத்திலும் ஓய்வூதியதாரர்களிடம் இருந்து மேற்படி ஆவணங்களை பெற்று பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இந்த சேவையை ஆய்வு செய்த பிறகு நாடுமுழுவதும் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 47 லட்சத்திற்கும் மேற்பட்ட பிஎப் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்’ என்றார்.

Saturday, December 27, 2014

அடுத்த கல்வியாண்டில் 10ம் வகுப்புக்கு முப்பருவ கல்வி: பொதுத்தேர்வு முறையில் மாற்றம் வர வாய்ப்பு?

வரும், 2015 - 16ம் கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.சி., எனப்படும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, முப்பருவ கல்வி முறையை அமல்படுத்த, மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த திட்டம் அமலுக்கு வந்தால், பொதுத்தேர்வு முறையில் மாற்றம் உட்பட பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி, கல்வி அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

கிரேடு முறை: கடந்த, 2012 - 13ம் கல்வி ஆண்டில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை நடைமுறைக்கு வந்தது. இத்திட்டப்படி, சமச்சீர் கல்வித்திட்ட பாடத்தை மூன்றாக பிரித்து, ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும், அக மற்றும் புற மதிப்பீட்டில், மாணவரின் தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அக மதிப்பெண்படி, மாணவரின் தனித்திறனுக்கு, 40 மதிப்பெண், புற மதிப்பீடான எழுத்துத்தேர்வுக்கு, 60 மதிப்பெண்ணும் வழங்கப்படும். மொத்த மதிப்பெண்ணை கணக்கில் எடுத்து, மாணவர்களுக்கு, 'கிரேடு' முறை பின்பற்றப்படுகிறது. முப்பருவ திட்டம் அமலுக்கு வரும் போது படிப்படியாக, 2013 - 14ம் கல்வி ஆண்டில், ஒன்பதாம் வகுப்பு மற்றும், 2014 - 15ம் கல்வி ஆண்டில், எஸ்.எஸ்.எல்.சி.,க்கு நீட்டிப்பு செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டது.

ஆனால், நடப்பு கல்வி ஆண்டில், எஸ்.எஸ்.எல்.சி.,க்கு முப்பருவ கல்வி அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. முக்கிய காரணமாக, பொதுத்தேர்வு முறையை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம், கல்வித்துறைக்கு ஏற்பட்டது. மேலும், மாநில கல்விக்குள் வராத புதிய பாடத்திட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்கள், பொதுத்தேர்வு முறை அமலில் உள்ளதால், உடனடியாக மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், நடப்பு கல்வி ஆண்டில், எஸ்.எஸ்.எல்.சி., மாணவருக்கு, பழைய பாடத்திட்டத்தின் படியே, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணி கழகம் சார்பில், புத்தகங்கள் சப்ளை செய்யப்பட்டு, பழைய முறையிலான பொதுத்தேர்வும் நடத்தப்படும்.

ஆய்வு: இந்நிலையில், வரும், 2015 - 16ம் கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.சி., மாணவருக்கு, முப்பருவ கல்வி முறையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சியில் இயங்கும் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சி துறை அதிகாரிகள், தங்களது ஆய்வு பணியை மேற்கொண்டுள்ளனர். மதிப்பீடு செய்வதில் சிக்கல் தமிழக அரசின், மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை அதிகாரிகள், வரும் கல்வியாண்டில், முப்பருவ கல்வி முறையை அமல்படுத்த, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முப்பருவ கல்வித் திட்டத்தில், பாடத்திட்டத்தை மூன்றாக பிரித்து, தேர்வு நடத்தப்பட்டு, மதிப்பீடு செய்யப்படுகிறது. அந்த முறையை, பொதுத்தேர்வு திட்டத்தில் உள்ள, எஸ்.எஸ்.எல்.சி.,க்கு கொண்டு வந்தால், மாணவர்களை மதிப்பீடு செய்வதில் சிக்கல் ஏற்படும்.

மேலும், மூன்று தேர்வுகளையும் சேர்த்து, பொதுத்தேர்வு நடத்துவது போல் நடத்தி, முடிவு வெளியிட வேண்டும். இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஒன்பதாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' திட்டம் அமலில் இருப்பதால், முக்கிய படிப்பான எஸ்.எஸ்.எல்.சி., படிப்பை, பொதுத்தேர்வாக நடத்தினால் தான், மாணவரை சரியான மதிப்பீடு செய்ய முடியும். இல்லையென்றால், மாணவரின் கல்வித்தகுதி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கட்டடம் இல்லை: இடப்பற்றாக்குறையால் தேர்ச்சி குறையும் அபாயம்

தமிழகத்தில், நான்கு ஆண்டுகளாக தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளுக்கு, கட்டடம் உள்ளிட்ட வசதி வாய்ப்பு ஏற்படுத்தித்தராததால், ஆசிரியர்கள் விரக்தியடைந்துள்ளனர். இதனால், தேர்ச்சி விகிதம் சரியவும் வாய்ப்பிருப்பதாக, அச்சம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின், கடந்த, 2009 - 10ம் ஆண்டில், 200 நடுநிலைப்பள்ளிகளும், 2010 - 11ல், 344 நடுநிலைப்பள்ளிகளும், 2011 - 12ம் ஆண்டில், 710 நடுநிலைப்பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டன. ஒதுக்கீடு: இதில், 2009 - 10ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்ட, 200 பள்ளிகளுக்கும், தலா நான்கு வகுப்பறை, ஒரு சயின்ஸ் லேப், ஒரு நூலக அறை, ஒரு கம்ப்யூட்டர் அறை, ஒரு தலைமை ஆசிரியர் அறை, ஒரு ஆர்ட் அண்டு கிராப்ட் அறை உட்பட, 9 அறைகளும், மாணவ, மாணவியருக்கு தனியாக டாய்லெட் கட்ட, 58.12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதி போதுமானதாக இல்லாததால், இக்கட்டடம் கட்டி முடிப்பதில் சிக்கல் உருவானது. கட்டடங்கள் கட்டாததால், அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட, 344 மற்றும், 710 பள்ளிகளுக்கும், கட்டடத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என, மாநில அரசு வலியுறுத்தியதும், தாமதத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது. இதனால், கடந்த, 2010 - 11ம் கல்வியாண்டிலிருந்து, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்ககத்திலிருந்து தரம் உயர்த்தப்பட்ட, 1,054 பள்ளிகளுக்கும், தமிழக அரசு சார்பில் தரம் உயர்த்தப்பட்ட, 150 பள்ளிகளுக்கும், வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வில்லை.

அவதி: இதனால், மிகக்குறைந்த வகுப்பறைக்குள், மாணவர்களை அடைத்து வைத்தும், மாணவர்கள் சேர்க்கையை கூடுதலாக்க முடியாமலும், ஆசிரியர்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதுகுறித்து அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, செயல்பட்டு வந்த நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும்போது, ஒன்று முதல் ஐந்து வரையிலான துவக்கப்பள்ளி தனியாக பிரிக்கப்படும். மீதமுள்ள வகுப்பறையில், ஆறு முதல், 10ம் வகுப்பு வரையில் நடத்த வேண்டும். மிகக்குறைந்த அளவே, வகுப்பறை இருப்பதால், ஒரு வகுப்புக்கு, ஒரு அறை என்பதே அரிதாக இருக்கும்.

ஒரு சில பள்ளி களில், 6, 7 வகுப்புகளுக்கும் ஒரே அறை என்ற நிலை உள்ளது. ஒரு சில தலைமை ஆசிரியர்கள், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., நிதி உள்ளிட்ட வைகளால், ஒரு சில வகுப்பறை ஏற்படுத்தினாலும், அவை போதுமானதாக இருப்பதில்லை. பிரச்னை: வகுப்பறைக்கும் அதிகமாக, மாணவர்களை சேர்த்தால், பிரச்னை உருவாகும் என்பதால், மாணவர் சேர்க்கை சமயத்திலும், பல மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், அறிவியல் ஆய்வகம் அமைக்க, 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்படுகிறது. ஆனால், அவற்றை வைத்து பயன்படுத்த அறை வசதியில்லாததால், அவை பார்சல் கூட பிரிக்கப்படாமல், வைக்கப்பட்டுள்ளது. போதிய இட வசதியின்மை, லேப் உபகரணம் இருந்தும் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளிட்டவைகளால், புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் சரியும் நிலை உருவாகியுள்ளது.

உடனடியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளி களில், கூடுதல் வகுப்பறைகளை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பள்ளிக்கல்வித்துறை - கல்வித் தகவல் மேலாண்மை முறை - பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களின் தகவல் தொகுப்பு விவரங்களை இணையதளத்தில் 2014-15ம் ஆண்டிற்கு மேம்படுத்துதல் சார்ந்த திட்ட இயக்குனரின் அறிவுரைகள்

Click below

https://drive.google.com/file/d/0B7_wDm1_dk21Mzd1WDE5Y0Vzams/view?usp=sharing

Friday, December 26, 2014

NMMS exam postponed 24-1-2015

"ஸ்மார்ட்' வகுப்பறை உருவாக்க பரிசீலனை

கல்வி திட்டத்தில் புதுமையை ஏற்படுத்தும் வகையில், அரசு பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறை உருவாக்குவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.பள்ளிகளில் கற்றல் - கற்பித்தலில் புதுமையை ஏற்படுத்தவும், மாணவர்கள் படிக்கும் சூழலை மாற்றும் வகையில் தொழில்நுட்பம் நிறைந்த வகுப்பறைகளை உருவாக்கவும் ஆலோசிக்கப்படுகிறது.

அதன்படி, அரசு பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறை உருவாக்க, பரிசீலனை நடந்து வருகிறது.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) சார்பில், இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் துவக்கமாக, ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் மனித வள அமைப்புகளிடம் இருந்து ஆலோசனை பெறப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பெறப்பட்ட 411 ஆய்வுகளில் இருந்து, 211 ஆய்வுகள் தகுதியானதாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இக்கட்டுரைகளை சமர்ப்பித்த கல்வி ஆய்வாளர்களை நேரில் அழைத்து, எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில் சென்னையில் தேசிய அளவிலான கருத்தரங்கம், விரைவில் நடத்தப்பட உள்ளது. அதில் பெறப்படும் முக்கிய ஆலோசனை மற்றும் கருத்துகள், அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அரசின் ஒப்புதலுக்குபின், பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறை உருவாக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நகர பகுதிகளை பொறுத்தவரை, பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதி ஓரளவு உள்ளது; கிராமப்புற பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத அவலம் நீடிக்கிறது. அரசு பள்ளிகளில் போதிய வசதி ஏற்படுத்திய பின்பே, "ஸ்மார்ட்' வகுப்பறை திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்.

பொங்கல் முன்பணம்:ஆசிரியர்கள் கோரிக்கை

அதிக தொகை ஒதுக்கி, அனைவருக்கும் பொங்கல் முன்பணம் வழங்க வேண்டும், என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பூர் வடக்கு வட்டார தலைவர் பாலசுப்ரமணியம், பொருளாளர் மணிகண்டபிரபு அறிக்கை:

திருப்பூர் வடக்கு பகுதியில், 92 பள்ளிகளில் 587 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; ஒரு பிரிவு ஆசிரியர்கள் கல்வித்துறை கட்டுப்பாட்டிலும், ஒரு தரப்பு ஆசிரியர்கள் எஸ்.எஸ்.ஏ., திட்டத்திலும் உள்ளனர். பண்டிகை காலங்களில், ஆசிரியர்களுக்கு முன்பணம் வழங்கி, மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும். கடந்தாண்டு தீபாவளிக்கு, எஸ்.எஸ்.ஏ., சார்பில் பணியாற்றும் 271 ஆசிரியர்களில் 50 பேருக்கு மட்டுமே முன்பணம் ஒதுக்கப்பட்டது.

தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதால், அனைவருக்கும் வழங்கும் வகையில் எஸ்.எஸ்.ஏ., பிரிவுக்கு அதிக தொகை ஒதுக்க வேண்டும். கடந்த முறை விண்ணப்பித்து, முன்பணம் பெறாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: 20 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்

இந்த ஆண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 20 லட்சம் பேர் வரை எழுத உள்ளனர். பத்தாம் வகுப்புத் தேர்வில் 11 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வில் 9 லட்சம் பேரும் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்த முழுமையான விவரங்கள் சில நாள்களில் கிடைக்கும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட மாணவர்களின் விவரங்களில் பிழைகளை நீக்கும் பணிகள் இப்போது நடைபெறுகின்றன. இந்தப் பணிகள் முடிந்ததும் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை இறுதிசெய்யப்படும்.

அதன்பிறகு, விடைத்தாள் முகப்புச் சீட்டு அச்சிடும் பணிகள் தொடங்கப்படும் என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முகப்புச் சீட்டில் மாணவர்களின் பதிவு எண், புகைப்படம் உள்ளிட்ட தகவல்களும், முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள்களில் ரகசிய பார்கோடு எண்ணும் அச்சிடப்படும். விடைத்தாள் முகப்புச் சீட்டில் உள்ள விவரங்களைச் சரிபார்த்து மாணவர்கள் கையெழுத்திட்டால் மட்டும் போதும். முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள்களில் "டம்மி' எண்களுக்கு பதிலாக கம்ப்யூட்டர் மூலம் கண்டறியப்படும் ரகசிய பார்கோடு எண் முறை கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த முறையின் மூலம் முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள்களை வேறு மாவட்டங்களில் மதிப்பீடு செய்வது, விடைத்தாளுக்குரிய மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது, ரகசியத்தன்மையைப் பாதுகாப்பது போன்ற பணிகள் கம்ப்யூட்டர் உதவியுடன் எளிமைப்படுத்தப்பட்டன. அதனால், தவறுகளும் வெகுவாக குறைந்தன. மொழிப்பாடங்களுக்கு பக்கங்கள் குறைப்பு: பிளஸ் 2 தேர்வில் மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள் புத்தகப் பக்கங்களின் எண்ணிக்கை 40-லிருந்து 32 ஆகவும், பத்தாம் வகுப்பு விடைத்தாள் புத்தகப் பக்கங்களின் எண்ணிக்கை 30-லிருந்து 22 ஆகவும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மொழிப்பாடத் தேர்வுகளில் கடந்த ஆண்டு பெரும்பாலான மாணவர்கள் அதிகப் பக்கங்களைப் பயன்படுத்தவில்லை. இதனையடுத்து, பக்கங்களைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்கே செல்கிறது மாணவ சமுதாயம்: தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவன்

பரமக்குடி அருகே நயினார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை, மாணவர் ஒருவர் தாக்கியதாக புகார் செய்யப்பட்டு உள்ளது. பரமக்குடி அருகே பகைவென்றியை சேர்ந்த மணி, 20, நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.

நேற்று காலை 11 மணிக்கு தலைமை ஆசிரியர் முருகன், ஆங்கில பாடத்திற்கு சிறப்பு வகுப்பு நடத்தினார். அப்போது மணி, தனது நோட்டில் இருந்த காகிதத்தை கிழித்து கீழே போட்டுக்கொண்டே இருந்தார். இதை தலைமை ஆசிரியர் கண்டித்தார். இதனால் தலைமை ஆசிரியருடன் மணி வாக்குவாதம் செய்தார்.

சிறிது நேரத்தில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து மணி கூறுகையில். ''எனது நோட்டில் காகிதத்தை கிழித்து கீழே போட்டேன். அப்போது தலைமை ஆசிரியர், 'எதற்கு கிழித்து போடுகிறாய்' என தகாத வார்த்தையில் பேசி, கம்பால் அடித்தார்,'' என்றார். தலைமை ஆசிரியர் முருகன் கூறுகையில்,

“நான் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது தொடர்ந்து காகிதத்தை கிழித்து போட்டதால் கண்டித்தேன். என்னை அவன் தாக்கியதால் நிலை குலைந்து கீழே விழுந்தேன். தொடர்ந்து என்னை தாக்கிவிட்டு ஓடினான்,” என்றார். பரமக்குடி கல்வி அலுவலர் பழனியாண்டி கூறுகையில், “தலைமை ஆசிரியர், மாணவரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

Thursday, December 25, 2014

கற்றல் திறன் வழிமுறை ஆசிரியர்களுக்கு அழைப்பு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை, கல்வித்துறை இணையதளத்தில் பதிவு செய்யலாம் என, ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 முதல், பள்ளிகளில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு, முப்பருவ கல்வி முறை செயல்படுத்தப்படுகிறது. இதில், மாணவர்களை முழுமையாக ஈடுபடுத்தவும், அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், பல்வேறு வழிமுறைகளை, ஆசிரியர்கள் கையாண்டு வருகின்றனர்.

கற்றலில் பின்தங்கிய மாணவர்களை கண்டறிவது, அவர்களின் தனித்திறனை வளர்ப்பது, புதுமையான முறையில் பாடம் நடத்துவது போன்ற வழிமுறைகளை அரசு பள்ளி ஆசிரியர்கள் பின்பற்றுகின்றனர். தமிழ், ஆங்கில பாடங்களில் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணிதம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் முயற்சியில், ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஆசிரியர்கள் பின்பற்றும் வெற்றிகரமான, புதுமையான முயற்சிகளை, அனைத்து பள்ளி ஆசிரியர்களும் தெரிந்து, பயன்படுத்த விரும்பியுள்ள கல்வித்துறை, அவ்வழிமுறைகளை இணையதளத்தில் பதிவு செய்யும்படி, அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, tணண்ஞிஞுணூt.ணிணூஞ்/டிணணணிதிச்tடிணிண என்ற இணையதளத்தில், ஜன., 15க்குள் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 99767 08786 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திருஞானசம்பந்தன் தெரிவித்துள்ளார்.
tnscert.org/innovation

Wednesday, December 24, 2014

குரூப் 2 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு

குரூப்–2 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 29–ந்தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

குரூப்–2 தேர்வுக்கான கலந்தாய்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

டி.என்.பி.எஸ்.சி. (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) குரூப்–2 பிரிவில் காலியாக உள்ள பணியிடத்திற்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு கடந்த ஜூன் மாதம் 29–ந்தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. பின்னர் எழுத்து தேர்வுக்கான தெரிவு முடிவுகள் கடந்த 12–ந்தேதியன்று வெளியிடப்பட்டது.

இந்த தெரிவு தொடர்பான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பஸ் நிலையம் மற்றும் கோட்டை ரெயில் நிலையம்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 29–ந்தேதி முதல் நடைபெறுகிறது.

இணையதளத்தில் வெளியீடு
இதனைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜனவரி மாதம் 27–ந்தேதி முதல் நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தற்காலிக பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணை விரைவஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. மேற்கூறிய விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தினை தேர்வாணைய இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மறுவாய்ப்பு கிடையாது
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, இடஒதுக்கீடு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை மற்றும் நிலவும் காலி பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது.

விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள தகவல்கள், தவறாக இருக்கும்பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்விற்கு வரத்தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாலியல் வன்முறைகளை தடுக்கஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி: மாவட்டங்களில் குழு அமைப்பு

பாலியல் வன்முறைகளை தடுக்க ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பதற்கும், ஆசிரியர்கள், மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் மருத்துவ இணை இயக்குனர், குழந்தைகள் நல அதிகாரிகள், கல்வி அதிகாரிகள், போலீசார் இடம் பெற்றுள்ளனர். இக்குழு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கும். ஆண் ஆசிரியர்கள் பெண் குழந்தைகளை எப்படி கண்காணிக்க வேண்டும். பெண் ஆசிரியர்கள் ஆண் குழந்தைகளை எவ்வாறு கண்காணிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கும்.எல்.கே.ஜி., முதல் கல்லுாரி வரை மாணவர்களை கையாள்வது, மாணவர்களின் மன நிலை வயதிற்கு தகுந்த மாதிரி மாறும் என்பது குறித்தும் பயிற்சி வழங்கப்படும். மேலும் மாணவர்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கு அவர்கள் செல்லும் வாகனங்களின் பதிவு எண், வாகன டிரைவர்கள், பெற்றோரின் மொபைல் எண்களை ஆசிரியர்கள் ஆவணமாக பராமரிக்க வேண்டும்.

தவறு செய்த மாணவர்களின் வாழ்க்கை வீணாகாமல் அவர்களை இக்குழுவினர் தங்கள் கண்காணிப்பில் படிக்க வைப்பர்.பள்ளி்க் குழந்தைகள் பெற்றோர், ஆசிரியர்களின் மொபைல் எண்களை மனப்பாடம் செய்வது, தன்னை கடத்தும் வாகன எண்ணை மனப்பாடம் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி குறித்தும் விளக்கப்பட உள்ளது.மருத்துவ இணை இயக்குனர் ரவிகலா கூறுகையி்ல்,

''அனைத்து மாவட்டங்களிலும் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்முறைகளை தடுக்க ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பர். ஒழுக்கம் சம்பந்தமான, உடல் ரீதியான கவுன்சிலிங்கும் வழங்குவர்,'' என்றார்.