நீங்கள் வேலை செய்த காலத்தில் உங் களுக்குச் சம்பளம் வழங்கப்பட்டது. ஓய்வுபெற்ற பிறகு இப்போது எந்த வேலையும் செய்வதில்லை. பிறகு ஏன் உங்களுக்கு இப்போதும் சம்பளம் (ஓய்வூதியம்) கொடுக்க வேண்டும்?”இப்படி ஒரு கேள்வி ஒரு சிலரால் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகிறது.முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசும், அதற்குமுந்தைய பாஜக 2 அரசும், தற்போதைய பாஜகஅரசும், ஓய்வூதியத் திட்டத்தைச் சீரழிப்பதற் குச் சொல்லிவரும் புள்ளுகளைக் கேட்டுக்கேட்டுத் தான் ஒரு சிலர் இப்படிப் பேசி வருகிறார்கள்.“ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் அர சுக்கு நிதிச்சுமை அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே, எதிர்காலத்தில் ஓய்வூதியர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்“ என்று முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் நிதியமைச்சர் ப.சிதம்பரம் திருவாய் மலர்ந் தருளினார்.இதே காரணங்களைச் சொல்லி, இதற்கு முந்தைய பாஜக 2 அரசின் நிதியமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹாவும் ஜஸ்வந்த் சிங்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தனர்.
தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பாஜகவின் மோடி அரசு, ஓய்வூதியச் சட்டத்தில் பல்வேறு நாசகரமான திருத்தங்களைச் செய்து முடிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது.தங்களின் செயல்களை நியாயப்படுத்துவதற் காக, இவர்கள் அவிழ்த்துவிடும் பொய்யுரைகளை ஊடகங்கள் வழியாக அறியும் பொதுமக்களுக்கு - ஏன், நமக்கே கூட, ஓய்வூதியம் என்பது அரசின் கருணையால் தரப்படும் சலுகைதானோ என்றுசந்தேகத்தை ஏற்படுத்தி விடுகிறது. அந்த அள வுக்கு, ஓய்வூதியம் என்பது சலுகையாகவே சித்தரிக்கப்பட்டு வருகிறது.ஓய்வூதியம் என்பது உழைப்பாளிகளின் உரி மையே, சலுகையல்ல என்பதுதான் உண்மை.எப்படி? ஓய்வூதியம் பிறந்த கதை ஓய்வூதியம் என்பது போராட்ட நெருப்பில் விளைந்த உழைப்பாளர்களின் உரிமையாகும். 200 ஆண்டுகளுக்கு முன்னால், 1789-99களில் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் போது, அந்நாட்டுத் தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் முதன்மை யானது ஓய்வூதியக் கோரிக்கை. உலகில் ஓய்வூதி யத்திற்காக எழுப்பப்பட்ட முதல் குரல். எனினும், அந்த வேளையில் இந்தக் கோரிக்கை வெற்றி பெறவில்லை.
தொழிற்சங்கங்கள் மீண்டும் இக்கோரிக்கையை 1890ல் முன்வைத்துப் போரா டியதன் விளைவாக 1908ல் ஓய்வூதியக் கோரிக்கை யை வென்றெடுத்தார்கள்.மேலும், ஜெர்மனியில் ரகசியமாகச் செயல்பட்டு வந்த சோஷலிஸ்ட்டுகளின் (கம்யூனிஸ்ட்டு களின்) தொடர்ந்த நிர்ப்பந்தங்களின் விளைவாக, ஓய்வூதியம் வழங்குவதற்கான சட்டத்தை ஜெர்மனி அரசு 1889ல் நிறைவேற்றியது. உலகில் முதன்முதலாக ஓய்வூதியத்திற்கென சட்டம் இயற்றிய நிகழ்ச்சி இதுதான்.இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டனிலும், மெல்ல மெல்ல ஏனைய பிற நாடு களிலும் ஓய்வூதியம் சட்டமாக்கப்பட்டது.நமது இந்தியாவில், பிரிட்டிஸ்ஷார் ஆட்சிக்காலத்தில் 1881ல் முதன்முறையாக அரசு ஊழியர் களுக்கு ஓய்வூதியம் அறிமுகப்படுத்தப்பட்டது.இப்போதைக்கு இந்த வரலாறு போதும். விஷயத்திற்கு வருவோமா! கொடுத்ததைத் திரும்பப் பெறுவதே ஓய்வூதியம் எடுத்துக்காட்டாக, நமது இந்திய நாட்டை எடுத்துக் கொள்வோம். நீர், நிலம், காற்று ஆகியவை தவிர, ஏனைய அனைத்துச் செல்வங்களையும் உருவாக்கியது நமது நாட்டின் அனைத்து உழைப்பாளி மக்கள்தான்.செல்வங்கள் என்றால்...
இதோ, மார்க்ஸ் கூறுகிறார்.“முதலாளித்துவப் பொருள் உற்பத்தி முறை நிலவுகிற சமுதாயங்களின் செல்வம், `சரக்குகளின் பெருந்திரட்டலாகக் காட்சியளிக்கிறது’....”அதாவது, உழைப்பாளி மக்கள் உற்பத்தி செய்து குவித்த சரக்குகள்தான் நமது நாட்டின் செல்வங்கள் ஆகும். விற்பனைக்காக உற்பத்தி செய்யப் படும் பொருட்களே சரக்குகள் எனப்படும். உணவுப் பொருட்கள், ஆடை அணிகலன் உள்ளிட்ட மக்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களுமே சரக்குகள் தான். இவைதான் இந்திய நாட்டின் செல்வங்கள். இவற்றின் பண மதிப்பு, பல லட்சம் கோடி ரூபாய் ஆகும்.இந்தச் செல்வங்களை உற்பத்தி செய்வ தில், உழைப்பாளி மக்கள் நேரடியாகவும், மறைமுக மாகவும் ஈடுபடுகிறார்கள். ஆலைகளில், தொழிற் சாலைகளில், விளைநிலங்களில் உழைப்பாளிகள் நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். சுமைப்பணித் தொழிலாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், அரசு ஊழியர், ஆசிரியர் உள் ளிட்ட ஏனைய உழைப்பாளிகள் மறைமுகமாக ஈடுபடுகிறார்கள்.உற்பத்தியில் ஈடுபடும் இவர்கள், தங்களின் உழைப்புக்காக ஊதியம் பெறுகிறார்கள்.
ஆனால், உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடு படாத - உழைக்க இயலாத ஒரு பகுதியினரும் மக்கள் திரளில் உண்டு. நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகளே அந்தப் பகுதியினர்.உழைக்க இயலாத, ஊதியம் பெற வாய்ப்பு இல்லாத இவர்களைப் பராமரித்து வருவது யார்?உழைக்கும் மக்கள் உருவாக்கித் தந்த ஒட்டு மொத்தச் செல்வத்தின் ஒரு பகுதிதான், உழைக்க இயலாத இந்த மக்களை பராமரித்து வருகிறது. அதாவது, ஒவ்வொரு உழைப்பாளியும் தனக்காக உழைப்பதோடு, உழைக்க இயலாத பகுதி யினரின் பராமரிப்புக்காகவும் அன்றாடம் உழைத்து வருகிறார்.உழைப்பாளிகள் தாங்கள் உழைத்த காலத்தில், உழைக்க இயலாத பகுதியினருக்குக் கொடுத்த பங்கை, தங்களின் வயோதிக காலத்தில், அடுத்ததலைமுறை உழைப்பாளிகளிடமிருந்து (பண மதிப்பாக) திரும்பப் பெறுகிறார்கள். இதுதான் ஓய்வூதியம்.இப்போது சொல்லுங்கள்,கொடுத்ததைத் திரும்பப் பெறுவது சலுகையா, உரிமையா?உரிமைதானே!