Friday, February 24, 2017
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 6 முதல் விண்ணப்ப விநியோகம்
வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 6 -ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. நாடு முழுவதும் ஆசிரியர் பணியிடங்கள் தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே, பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு ஏப்ரல் 29 -ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு ஏப்ரல் 30-ஆம் தேதியும் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை அறிவித்தார். இதையடுத்து வரும் மார்ச் 6 -ஆம் தேதி முதல் மார்ச் 22-ஆம் தேதி தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கபடவுள்ளன.
ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50. விண்ணப்பங்கள் மார்ச் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். இந்த விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகம், தேர்வு செய்யப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விநியோகிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பெறலாம்.
டெட்' தேர்வு விண்ணப்பம் மார்ச் 6 முதல் வினியோகம்
ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, மார்ச், 6 முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்' என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.டி.ஆர்.பி., வெளியிட்டுள்ள அறிவிக்கை: டெட் தேர்வுக்கான விண்ணப்பங்கள், மார்ச், 6 முதல் 22 வரை வினியோகம் செய்யப்படும். மார்ச், 23 மாலை, 5:00 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
ஏப்., 29 மற்றும் 30ம் தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும். விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ள, மாவட்ட மையங்களின் முகவரி, விரைவில் அறிவிக்கப்படும். பி.எட்., - டி.டெட்., முடித்தவர்கள் இந்த தேர்வை எழுத தகுதி பெற்றவர்கள். டெட் குறித்த கூடுதல் தகவல்களை, http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பி.எப்., மூலம் வீடு கட்டும் திட்டம்: மார்ச் முதல் துவக்கம்
பி.எப்., உறுப்பினர்களுக்கு எளிய முறையில், வீடு கட்டும் திட்டத்தை, வருங்கால வைப்பு நிதி அமைப்பு, வரும் மார்ச் மாதம் துவங்குகிறது.
4 கோடி உறுப்பினர்கள்: இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும், அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன; இதில், நான்கு கோடிக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். மார்ச் முதல்.. அதன் உறுப்பினர்களுக்கு, எளிய முறையில், வீடு கட்டும் திட்டத்தை, வருங்கால வைப்பு நிதி அமைப்பு, மார்ச் மாதம் துவங்குகிறது.
இதன்படி, வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், வீடு கட்டும் போது, முன் பணம் மற்றும் மாத தவணை தொகையை, தங்கள் பி.எப்., கணக்கில் இருந்து செலுத்த முடியும். மேலும், மத்திய அரசின் பல்வேறு வீட்டு வசதி திட்டத்திற்கான மானியங்கள் மற்றும் உதவிகள், அவர்களுக்கு வழங்கப்படும்.
காலாவதியானது CPS ஓய்வூதிய திட்ட கமிட்டி
காலாவதியானது CPS ஓய்வூதிய திட்ட கமிட்டி : 5 லட்சம் ஊழியர், ஆசிரியர்கள் தவிப்பு
பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான, தமிழக அரசின் நிபுணர் குழு காலாவதியாகி, இரண்டு மாதமாகிறது. அதனால், ஐந்து லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் கேள்விக்குறி ஆகியுள்ளது. தமிழகத்தில், 2003 ஏப்ரல் முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமல்படுத்தினார்.
இதில், அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், தர ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத் தொகையில், 10 சதவீதத்தை, ஓய்வூதிய திட்டத்திற்கு, அரசு பிடித்தம் செய்கிறது.இதற்கு சமமான தொகையை, அரசு தன் பங்காக செலுத்தும். ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, இந்த தொகையில், 60 சதவீதம் திருப்பி தரப்படும்.
மீதித்தொகை, பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்டு, குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். ஆனால், திட்டம் செயல்பாட்டுக்கு வந்து, 14 ஆண்டுகள் ஆன நிலையில், 90 சதவீதம் பேருக்கு, ஓய்வூதிய சலுகைகள் கிடைக்கவில்லை. எனவே, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த, ஆசிரியர் அமைப்புகள், 2016ல் போராட்டம் நடத்தின.
நிலைமையை சமாளிக்க, 2016, பிப்., 26ல், பழைய ஓய்வூதிய திட்ட ஆய்வுக்கான நிபுணர் குழுவை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். குழு சார்பில், ஊழியர்கள், ஆசிரியர் களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆனால், இதுவரை அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், குழுவின் ஆயுள் காலம், 2016 டிச., 25ல் முடிந்து விட்டது. இரண்டு மாதமாகி விட்ட நிலையில், குழு தலைவர் சாந்தஷீலா நாயரும், சில வாரங்களுக்கு முன் விலகி விட்டார். அதனால், குழுவின் ஓராண்டு செயல்பாடுகள் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், ''பழைய ஓய்வூதிய திட்டம் தான், புதிய திட்டத்தால் பாதிக்கப்பட்ட, ஐந்து லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு. மீண்டும் புதிய குழு அமைப்பதற்கு பதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,'' என்றார்.
Thursday, February 23, 2017
தகுதி தேர்வு விண்ணப்பம்
*TNTET 2017- Official Notification Published.ஆசிரியர் தகுதி தேர்வு 6.3.2017 முதல் 22.3.2017 வரை விண்ணப்பம் விநியோகம்..,,விண்ணப்பிக்க கடைசி தேதி:23/3/17.தேர்வு தாள் 1 :29/4/17 மற்றும் தாள் 2: 30/4/17*
ஆசிரியர் தகுதித் தேர்வு (அரசு வெளியிட்ட உறுதியான தகவல்)
முதல் தாள் (D.T.Ed) இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு : ஏப்ரல் 29 2017
தேர்வு நேரம் 10 மணி முதல் 1 மணி வரை
இரண்டாம் தாள்(B.Ed) பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு : ஏப்ரல் 30 2017
தேர்வு நேரம் 10 மணி முதல் 1 மணி வரை
விண்ணப்பங்கள் வழங்கும் நாள் :
மார்ச் 06 முதல் மார்ச் 22 வரை
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : தேர்ந்தெடுத்த அருகில் உள்ள பள்ளிகள்
விண்ணப்பங்கள் கிடைக்கும் நேரம் :காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
விண்ணப்பங்கள் சமர்பிக்கும் கடைசி நாள் : மார்ச் 23 2017 மாலை 5 மணிக்குள்
விண்ணப்பிக்க தகுதி :
தாள் 1 : D.T.Ed., or D.E.E.E (10 +2)
தாள் 2 : பட்டப்படிப்புடன் B.Ed., or D.T.Ed., + BLit(tamil)
மேலும் B.Ed., D.T.Ed., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் அவர்கள் இத் தேர்வில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக ஆசிரியர் படிப்பை வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியராக தேர்வாக முடியும்.
பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அறிவுரை
முக்கிய விதிமுறைகள்
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தநிலையில் பொதுத்தேர்வில் பணிபுரிய இருக்கும் தேர்வு பணி அலுவலர்களுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தரா தேவி முக்கிய அறிவுரைகள் மற்றும் விதிமுறைகளை வெளியிட்டு உள்ளார்.
68 பக்கங்கள் கொண்ட இந்த முக்கிய விதிமுறை கையேட்டில் இடம்பெற்று உள்ள முக்கிய அறிவிப்புகளின் விவரம் வருமாறு:-
செல்போன் பயன்படுத்த கூடாது
* ‘வார்தா’ புயல் காரணமாக தேர்வு மையங்களாக செயல்பட உள்ள பள்ளிகளின் கட்டிடங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பதை ஆய்வு செய்யவேண்டும்.
* பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் பிற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
* கேள்வித்தாள் அறையில் ஜன்னல்கள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அதனை சிமெண்ட், கம்பி மூலம் அடைக்கவேண்டும்.
* தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் செல்போன் உள்பட எந்தவிதமான தகவல் தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்த கூடாது. செல்போன் இருந்தால் அதை ‘சுவிட்ச்-ஆப்’ செய்து தேர்வு மைய தலைமை கண்காணிப்பாளரிடம் சமர்ப்பித்துவிட வேண்டும். இதனை மீறினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
கண்ணியமாக நடத்த வேண்டும்
* வினாத்தாள் மற்றும் விடைத்தாளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்லவேண்டும். எக்காரணம் கொண்டும் மாற்று வழித்தடத்தில் செல்லக்கூடாது.
* தேர்வு தொடங்குவதற்கு 3 நாட்கள் முன்னர், சம்பந்தப்பட்ட தேர்வு மைய அலுவலர்கள் தேர்வு மையத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.
* தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அது குறித்த தகவல்களை செய்தியாளர்களுக்கு பறக்கும் படை அதிகாரிகள் தெரிவிக்க கூடாது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் மட்டுமே தெரிவிக்க வேண்டும்.
* தேர்வு அறையில் மாணவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும்.
மனநிலை பாதிக்காத வகையில்...
* மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் பறக்கும் படை அதிகாரிகள் செயல்பட கூடாது.
* மாணவர்களின் மனநிலை பாதிக்காத வகையில் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
* சந்தேகப்படும் மாணவர்களை மட்டுமே சோதனை செய்யவேண்டும். அனைத்து மாணவர்களையும் சோதனை செய்யக்கூடாது.
* மாணவிகளை ஆசிரியைகள் மட்டுமே சோதனையிட வேண்டும்.
* விடைத்தாளில் எல்லா விடைகளையும் மாணவர்கள் அடித்திருந்தால் அந்த தேர்வில் இருந்து நீக்கம் செய்வதுடன், அடுத்த 2 பருவ தேர்வுகள் எழுதவும் தடை விதிக்கப்படும்.
மேற்கண்ட அறிவிப்புகள் அந்த உத்தரவில் இடம்பெற்று உள்ளன.
இன்ஜி., பாடத்திட்டம் மாற்றம் : முதலாம் ஆண்டுக்கு புதிய 'சிலபஸ்'
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, இன்ஜி., கல்லுாரிகளில், வரும் கல்வி ஆண்டில், முதலாம் ஆண்டுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில், 550க்கும் மேற்பட்ட, இன்ஜி., கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில், சில கல்லுாரிகள் மட்டும் தன்னாட்சி பெற்று, சுயமாக பாடத்திட்டம் தயாரித்து கொள்கின்றன.
மற்ற கல்லுாரிகள், அண்ணா பல்கலையின் பாடத்திட்டத்தையே பின்பற்றுகின்றன.அறிவியல் வளர்ச்சி, புதிய தொழில்நுட்பம், பொருளாதார நிலை, அரசின் கொள்கைகள் அடிப்படையில், பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படும். இந்த பாடத்திட்டங்கள், நான்குஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படும். அதன்படி, வரும் கல்வி ஆண்டில், இன்ஜி., கல்லுாரிகளின் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. இது குறித்து, கடந்த ஒரு வாரமாக, அண்ணா பல்கலையில், பாடத்திட்ட தயாரிப்புக்கான கல்வி வாரிய கூட்டம் நடந்தது. இதில், வரும் கல்வி ஆண்டில், அனைத்து துறைகளிலும், முதலாம் ஆண்டுக்கு மட்டும் பாடத்திட்டத்தை மாற்றுவதற்கான அம்சங்களை ஆய்வு செய்து, இறுதி செய்தனர்.இதையடுத்து, இறுதி செய்யப்பட்ட பாடத்திட்டம் குறித்து, கல்விக் கவுன்சில் கூடி முடிவு செய்யும். அதன்பின், சிண்டிகேட் மற்றும் அரசு அனுமதியுடன், புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
டி.இ.ஓ., பணி நியமனம் : கவுன்சிலிங் அறிவிப்பு
மாவட்ட கல்வி அதிகாரியான, டி.இ.ஓ., பதவிக்கு, மார்ச், 1ல் கவுன்சிலிங் நடக்கும்' என, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'பள்ளிக்கல்வித் துறையில் காலியாக உள்ள, 11 டி.இ.ஓ., இடங்களை நிரப்ப, ஜனவரியில் நேர்முகத் தேர்வு நடந்தது. இதில், தேர்வு பெற்றவர்களுக்கு, மார்ச், 1ல் கவுன்சிலிங் நடக்கும். அதற்கான பட்டியல், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது' என, குறிப்பிட்டுள்ளார்.
வாட்ஸ் ஆப்' ஆசிரியர்களுக்கு தடை
பிளஸ் 2 தேர்வு நாட்களில், ஆசிரியர்கள், அதிகாரிகள், 'வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது' என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 தேர்வு, மார்ச், 2ல் துவங்குகிறது. இந்த தேர்வை, மாநிலம் முழுவதும், 9.30 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
தேர்வை எந்தவித முறைகேடுகளுக்கும் இடமின்றி நடத்துவதற்கு, தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் மண்டல பொறுப்பு அதிகாரிகள் மூலம், மாவட்ட வாரியாக நடக்கும் கூட்டத்தில், ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.
TNPTF news
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் ச.மோசஸ்,பொதுச்செயலாளர் செ.பாலசந்தர்,பொருளாளர் ச.ஜீவானந்தம் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை
தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழுவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஊதிய மாற்றக்குழுவை அறிவித்துள்ளதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது.அதே நேரத்தில் கடந்த ஊதியக்குழுவில் தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி உடனடியாகக் களையப்பட வேண்டும் என்பதையும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
மத்திய அரசு ஆறாவது ஊதியக்குழுவை 01.01.2006 முதல் அமல்படுத்தியது. அதன்படி தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு ஊதிய மாற்றக்குழுவை அமைத்து அரசாணை எண் : 234 நாள் 01.06 2009ன் மூலம் புதிய ஊதியக் விகிதங்களை அமல்படுத்தியபோது தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மறுக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆசிரியர்கள் 44 ஆண்டுகாலம் போராடிப் பெற்ற மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்டதால் கடந்த எட்டு ஆண்டு காலமாக தமிழக இடைநிலை ஆசிரியர்கள் உள்ளகுமுறலோடும்,கொந்தளிப்போடும்,வேதனையோடும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழக இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பறிக்கப்பட்டதால் அடிப்படை ஊதியத்தில் மட்டும் மாதந்தோறும் 5500 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பைச் சரிசெய்து அதன் பின்பு ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல் படுத்துகிறபோதுதான் இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பது நிறைவேறும் என்பதை தமிழக அரசும் ஊதிய மாற்றக்குழுவும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
பறிக்ககப்பட்ட மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கக்கோரி பல்வேறு கூட்டுப் போராட்டங்களிலும்,தனிச்சங்கப் போராட்டங்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிற இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி. தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல்,தமிழக அரசு எட்டாவது ஊதிய மாற்றக் குழுவை உடனடியாக அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2016 பிப்ரவரி15ம் தேதி முதல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து மறியல் போராட்டம்,காத்திருப்புப் போராட்டம் எனக் கடுமையான போராட்ட நடவடிக்கைகளில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஈடுபட்டது.
மேற்கண்ட கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்;டணி தனிச்சங்க நடவடிக்கையாக உச்சகட்டப் போராட்டமாக கடந்த 03.02.2017 அன்று தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்தியது.
அம்முற்றுகைப் போராட்டத்தின் போது பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திருமதி.சபிதா அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம்,தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்தல் ஆகிய கோரிக்கைகள் தொடர்பாக துறைரீதியாக தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது அமைக்கப்பட்டுள்ள ஊதிய மாற்றக் குழுவில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்களும் இடம் பெற்றிருப்பது என்பது பேச்சுவார்த்தையின் போது தெரிவிக்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக நாம் எதிர்பார்க்கிறோம்
எனவே,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முற்றுகைப்போராட்டமானது தமிழக அரசு ஊதியமாற்றக்குழுவை அமைப்பதற்கு ஒரு உந்துசக்தியாக அமைந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்க அமைக்கப்பட்ட குழுவின் பதவிக்காலம் 3முறை நீட்டிக்கப்பட்டது போல் ஊதியமாற்றக்குழுவின் நிலையும் ஆகிவிடக்கூடாது என்பதையும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சுட்டிக்காட்டுகிறது.
எனவே, தமிழக அரசு காலதாமதமாகவே அமைத்;திருக்கிற ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை நான்கு மாத காலத்திற்குள் பெற்று உடனடியாக அதை அமல்படுத்த வேண்டும். அதற்கு முன்பாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் களையப்படவேண்டும். தமிழக அரசு உடனடியாக தனது ஊழியர்களுக்கு 01.01.2016 முதல் 20 சதவீதம் ஊதியத்தை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும். தமிழக அரசு தனது ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
இவண்
செ.பாலசந்தர்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
ஏப்.29, 30ல் ஆசிரியர் தகுதித் தேர்வு
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் தேதி நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஆசிரியர் பணியிடங்கள் தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே, பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு ஏப்ரல் 29 ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு ஏப்ரல் 30 ஆம் தேதியும் நடைபெறும் என கூறினார்
Wednesday, February 22, 2017
SSA - வங்கி ஆரம்ப இருப்புத்தொகை ₹1000 வரை வைத்துவிட்டு மீதமுள்ள தொகையை வட்டாரவளமைய அலுவலகம்,பள்ளிகள் மார்ச் 10 க்குள் திருப்பி அனுப்ப உத்தரவு SSA - SPD PROCEEDINGS- ந.க .எண் 1589 நாள் 9/2/17 - நிதி மேலாண்மை அறிவுறுத்தலகள் சார்பு- வங்கி ஆரம்ப இருப்புத்தொகை ₹1000 வரை வைத்துவிட்டு மீதமுள்ள தொகையை வட்டாரவளமைய அலுவலகத்துக்கு, மார்ச் 10 க்குள் திருப்பி அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவு
பத்தாம் வகுப்பு: நுழைவுச்சீட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத தத்கல் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டை வியாழக்கிழமை (பிப்.23) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இயக்ககம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தத்கல்) கடந்த பிப்ரவரி 16, 17 தேதிகளில் இணையதளம் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், வியாழக்கிழமை (பிப்.23) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர், ஆசிரியர் சம்பள உயர்வு : பரிந்துரை செய்ய 5 பேர் குழு அமைப்பு
மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றுவதற்காக, ஐந்து பேர் கொண்ட, அலுவல் குழு அமைத்து, முதல்வர் இடைப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். கடந்த ஆண்டு, சட்டசபை தேர்தல் அறிக்கையில், 'மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டதும், தமிழக அரசு பணியாளர்களுக்கும், ஊதிய விகிதங்கள் மாற்றப்படும்' என, ஜெ., அறிவித்தார். அவரது அறிவிப்பை செயல்முறைப்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று, முதல்வர் பழனிசாமி தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், நிதித் துறை செயலர் சண்முகம் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களுக்கு, ஊதிய விகிதங்களை மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்கான பரிந்துரைகள் அளிக்க, அலுவலர் குழு அமைக்க, முதல்வர் உத்தரவிட்டார்.
அதன்படி, நிதித் துறை கூடுதல் தலைமை செயலர், உள்துறை முதன்மை செயலர், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன் உறுப்பினர் செயலராக, உமாநாத் இருப்பார். இக்குழு, மத்திய அரசின் திருத்திய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், திருத்திய ஓய்வு கால பயன்கள் குறித்தும் ஆராய்ந்து, தக்க பரிந்துரைகள் அளிக்கும். மேலும், இதர படிகள் தொடர்பாகவும் ஆராய்ந்து, உரிய பரிந்துரைகளை வழங்கும்.அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் சங்கங்கள், தங்கள் கோரிக்கைகளை, இக்குழுவுக்கு அனுப்பி வைக்கலாம். குழு, தன் அறிக்கையை, ஜூன், 30க்குள் அளிக்க வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.