வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பரிவர்த்தனையில், உரிய அலுவலர் சான்று வழங்கும் முறை அறிமுகமாகி உள்ளது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, விண்ணப்பத்துடன் முகவரி, வயது போன்றவைகளுக்கான ஆவணங்கள், ஆதார் அடையாள அட்டை போன்றவைகளின் நகல்களும் இணைக்கப்பட வேண்டும். உத்தரவுஅந்த படிவத்தை, உரிய அலுவலர்கள் விசாரித்து பெயர் சேர்க்கப்படும். ஆனால், எவ்வித அறிவிப்பும் இன்றி, பெயர் நீக்கம் செய்யப்படுவதாக, ஆயிரக்கணக்கான புகார்கள் வருகிறது.
கடந்த ஒரு வாரத்துக்கு முன், சேலம் தெற்கு தொகுதி, அ.தி.மு.க.,- - எம்.பி., பன்னீர்செல்வம் பெயர் நீக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், தேர்தல் ஆணையம், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பொறுப்பு வகிப்போர், பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்றவைகளுக்கு சான்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:
வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், முகவரி, வயது, எழுத்துப்பிழை போன்ற மாற்றங்களுக்கு விண்ணப்பத்துடன், உரிய ஆவணங்கள் இணைக்கப்படும். அதை ஒவ்வொரு பகுதிக்கும் ஆசிரியர், வி.ஏ.ஓ., அங்கன்வாடி பணியாளர், கிராம உதவியாளர் என, குறிப்பிட்ட நபர்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டு, அவர்கள் விசாரிப்பர். விசாரணைக்குப்பின், அவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில், பெயர் சேர்த்தல், நீக்கம், மாற்றம் நடக்கிறது. தற்போது, சிறிய கிராமங்களில், ஒரு ஓட்டுச்சாவடி இருந்தால், வி.ஏ.ஓ.,வும், இரண்டு இருந்தால், வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளரும், நகரப்பகுதியில் ஆசிரியர், வி.ஏ.ஓ., அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் போன்றோரும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
புதிதாக வரும் பெயர் சேர்ப்பு, நீக்கம், மாற்றம் போன்றவைகளை, இவர்கள் முழுமையாக விசாரித்து, ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் தனியாக சான்று வழங்க வேண்டும். அச்சான்றில், குறிப்பிட்ட நபரை நீக்கம் செய்யலாம், பெயரை சேர்க்கலாம் என, இவர்கள் குறிப்பிட வேண்டும். தீர்வுஅவர்கள் வழங்கும் சான்று அடிப்படையில்தான், இப்பரிவர்த்தனை நடக்கும். இனி, இந்த அலுவலர்கள் தவறு செய்தாலோ, பதவின்போது தவறு நடந்தாலோ, உரிய அலுவலர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சேலத்தில், எம்.பி., பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பிரச்னையில், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டதால், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனி, இதுபோன்ற நடவடிக்கை தொடர்வதுடன், தேவையின்றி பெயர் சேர்ப்பு, நீக்க பிரச்னைக்கு விடிவு ஏற்படும், இவ்வாறு அவர் கூறினார்.