இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, January 14, 2019

அனைவருக்கும் இனி அரிசி கார்டு: ரேஷனில் வருகிறது மாற்றம்


பொங்கல் பரிசு, 1,000 ரூபாய் வழங்குவதில் ஏற்பட்ட திடீர் குழப்பத்தால், சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காத, 'என்' கார்டுகளையும், அரிசி கார்டுகளாக மாற்ற, உணவு துறை முடிவு செய்துள்ளது. தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டவை, குறைந்த விலையிலும் விற்கப்படுகின்றன.

இவற்றை வாங்க, ரேஷன் கார்டு அவசியம். காகித கார்டு புழக்கத்தில் இருந்த போது, அரிசி, சர்க்கரை, காவலர், எந்த பொருளும் வாங்காதது என, நான்கு வகை, ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. அதில், அரிசி, காவலர் கார்டுகளுக்கு, அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டன. சர்க்கரை கார்டுக்கு, அரிசி தவிர்த்த, மற்ற பொருட்கள் வழங்கப்பட்டன. 'என்' கார்டுக்கு, எந்த பொருட்களும் கிடையாது. தமிழகத்தில், 2017 ஏப்ரல் முதல், 'ஆதார்' விபரத்தின் அடிப்படையில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.

இதையடுத்து, முன்னுரிமை, முன்னுரிமை அல்லாதது, முன்னுரிமை அல்லாத சர்க்கரை, எந்த பொருளும் இல்லாதது என்ற வகைகளில், கார்டுகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், ஏற்கனவே இருந்த அரிசி, சர்க்கரை கார்டுதாரர்களின் அடிப்படையில், ரேஷனில், பொருட்கள் வழங்கப்படுகின்றன. பொங்கலை முன்னிட்டு, 2.02 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு துண்டுடன், 1,000 ரூபாய் அடங்கிய பரிசு தொகுப்பை, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, அவை, வசதியானோருக்கு வழங்க, எதிர்ப்பு எழுந்தது. நீதிமன்ற உத்தரவை அடுத்து, சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காத கார்டுகளுக்கு, 1,000 ரூபாய் வழங்குவது நிறுத்தப்பட்டது.

பின், நீதிமன்ற அனுமதியுடன், சர்க்கரை கார்டுகளுக்கு, 1,000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த பிரச்னை, இனி ஏற்படாமல் இருக்க, சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காத கார்டுகளையும், அரிசி கார்டுகளாக மாற்ற, உணவு துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் மட்டும், மக்களின் விருப்பத்தின் அடிப்படையில், ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதனால், வசதி படைத்தோர், அரிசி கார்டு வைத்துள்ளனர். வசதியாக இருந்த போது, சர்க்கரை, எந்த பொருளும் இல்லாத கார்டு வாங்கியோர், தற்போது, ஏழ்மையில் உள்ளனர். இதனால், அவர்களுக்கு, ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை. பொங்கல் பரிசு உள்ளிட்ட அரசின் இலவச திட்டங்கள், அரிசி கார்டுகளுக்கு மட்டும் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட் கார்டு வழங்குவதால், ரேஷன் முறைகேடு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே, உணவு மானியத்திற்கு, ஆண்டுக்கு, 6,000 கோடி ரூபாய் செலவாகும் நிலையில், சர்க்கரை, எந்த பொருளும் இல்லாத கார்டுகளை, வகை மாற்றம் செய்வதால் கூடுதலாக செலவு ஏற்பட வாய்ப்பில்லை.

இதனால், சர்க்கரை, எந்த பொருளும் இல்லாத கார்டுகளையும், 2017ல், அரிசி கார்டுகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்கு, சில அரசு உயரதிகாரிகள் ஒப்புதல் தரவில்லை. தற்போது, பொங்கல் பரிசு விவகாரத்தில் ஏற்பட்டது போல், மீண்டும் பிரச்னை ஏற்படாமல் இருக்க, 10.50 லட்சம் சர்க்கரை மற்றும், 42 ஆயிரம் எந்த பொருளும் இல்லா கார்டுகள், விரைவில், அரிசி கார்டுகளாக மாற்றப்பட உள்ளன. இதற்கு, அரசிடம் அனுமதி பெற்றதும், அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் செலவு ஏற்படுமா காகித கார்டு இருந்தபோது, ஒருவரே பல முகவரிகளில், மூன்று - நான்கு ரேஷன் கார்டுகள் வைத்திருந்தார். இதனால், 2017 துவக்கத்தில், 2.04 கோடி ரேஷன் கார்டுகளும், அவற்றில், ஏழு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களும் இருந்தனர். அதே ஆண்டு ஏப்ரல் முதல், ஆதார் விபரம் அடிப்படையில், 'ஸ்மார்ட்' கார்டு வழங்கப்படுகிறது. இதனால், ஒரே நபர், வேறு முகவரியில், கூடுதல் ரேஷன் கார்டு வாங்குவது தடுக்கப்பட்டது. ஒரு கார்டில் உறுப்பினராக இருப்பவர், வேறு கார்டில் உறுப்பினராக சேரவும் முடியாது. இதனால் தற்போது, 2.02 கோடி ரேஷன் கார்டுகளில், 6.55 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது, ரேஷன் கடைக்கு பொருட்கள் அனுப்புவது முதல், விற்பனை விபரம் அனைத்தும், கம்ப்யூட்டரில் பதிவாகிறது. விரைவில், கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்து, ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இதனால், வசதி படைத்தோர், வேறு நபர்களிடம், கார்டை கொடுத்து, பொருட்களை வாங்கும்படி கூற முடியாது. மேலும், ரேஷன் பொருட்கள் வாங்க விரும்பாதோர், அதை, அரசுக்கு விட்டுக் கொடுக்கும் வசதியும் துவக்கப்பட்டு உள்ளது. இது போன்ற காரணங்களால், உணவு மானியத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மிச்சமாகும். அந்த நிதியில், சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காத ரேஷன் கார்டுகளுக்கு, அரிசி கார்டாக மாற்றி, பொருட்கள் வழங்குவதில், கூடுதல் செலவு ஏற்படாது. வகை மாற்றம் செய்யக்கூடிய கார்டுதாரர்களில், அனைவரும் பொருட்களை வாங்க வாய்ப்பில்லை.

Thursday, January 10, 2019

அங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு


எல்.கே.ஜி.- யு.கே.ஜி., துவங்கப்படும் அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான உத்தரவை வாங்குவதில்லை என, ஜாக்டோ-ஜியோ ஆசிரியர்கள் முடிவு செய்தனர். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகின்றன.

இதற்காக உபரி பெண் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு பணிநிரவல் செய்ய அரசு உத்தரவிட்டது.இதையடுத்து அந்தந்த ஒன்றியங்களில் இளையோராக இருக்கும் உபரி பெண் ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் பணிமாறுதல் உத்தரவு வழங்கும் பணி நடக்கிறது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அரசு கண்டுகொள்ளாததால், ' அங்கன்வாடி மையத்திற்கு மாற்றும் பணி உத்தரவை கையெழுத்திட்டு வாங்குவதில்லை,' என ஜாக்டோ-ஜியோ அமைப்பு ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.

ஜாக்டோ-ஜியோ நிர்வாகி ஒருவர் கூறியதாவது: எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., குழந்தைகளுக்கு கற்பிக்க மாண்டிச்சோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். இப்பயிற்சி பெற்ற பல ஆயிரம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். அவர்களை நியமிக்காமல் இடைநிலை ஆசிரியர்களை தகுதி இறக்கம் செய்து அங்கன்வாடி மையங்களில் நியமிப்பது கண்டிக்கத் தக்கது. இதனால் அங்கன்வாடிமையத்திற்கு மாற்றும் ஆணையை பெறுவதில்லை என முடிவு செய்தோம், என்றார்.

11-1-19 Morning prayer

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 117

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

உரை:
நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.

பழமொழி:

Good beginning makes a good ending

நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்

பொன்மொழி:

நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை
மேற்கொள்கிறான்.

-ஜான்மில்டன்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) வெண்மைப் புரட்சியின் தந்தை என வருணிக்கப்படுபவர் யார்?
வர்கீஸ் குரியன்

2) ஹாக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தை எது?
1)டியூஸ்
2)எல்.பி.டபிள்யூ
3)பெனால்டி கார்னர்
4)நோ பால்பெனால்டி கார்னர்

நீதிக்கதை :

வண்ணம் மாறிய குள்ள நரி

                ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்தன.அங்கு ஒரு குள்ளநரியும் வசித்து வந்தது. அதற்கு அந்தக் காட்டிலிருக்கும் சிங்கத்தைப் பார்த்து மிகவும் பொறாமையாக இருந்தது.அது அந்தக் காட்டுக்கு அரசனாக இருப்பதைப் பார்த்துத் தானும் அரசனாக ஆகவேண்டும் என்று ஆசைப் பட்டது.
            ஒருநாள் குள்ளநரி ஒரு புலியின் கண்களில் படவே அதற்குப் பயந்து வேகமாக ஓட ஆரம்பித்தது.ஓடும் அந்த நரியைப்பின்தொடர்ந்து வேறு சில மிருகங்களும் புலிக்குப் பயந்து ஓடத தொடங்கின. அதைப் பார்த்த நரி எல்லா மிருகங்களும் தன்னைத் துரத்துவதாக எண்ணி இன்னும் வேகமாக ஓடிற்று.எப்படித் தப்பிப்பது என்று எண்ணிக் கொண்டே ஊரின் எல்லைக்கு வந்து விட்டது.
            அங்கே ஒரு வீட்டின் மதில் சுவர் சற்றுக் குட்டையாய் இருக்கவே அதன் மீது ஏறி உள்ளே குதித்தது.அங்கே இருந்த பெரிய தொட்டி நீருக்குள் விழுந்தது.சிறிது நேரம் தத்தளித்த நரி மெதுவாக மேலே வந்தது.அதற்குள் இருள் விலகி வெளிச்சம் பரவத் தொடங்கியது.தன உடல் முழுவதும் நீல நிறமாக இருப்பது கண்டு ஆச்சரிய பட்டது. தான்விழுந்தது ஒரு சாயம் தோய்க்கும் இடம் என்பதும் நீலநிறச் சாயத தொட்டிக்குள் தான் விழுந்து எழுந்ததும் புரிந்தது.நரிக்கு ஒரு உபாயம் தோன்றியது. 
              வேகமாக அந்த மதில் சுவரைத் தாண்டி காட்டுக்குள் நுழைந்தது.இரவு வரும் வரை மறைந்திருந்தது. திடீரென்று நரிக்கூட்டத்தின் முன் வந்து கம்பீரமாக நின்றது.அதைப் பார்த்த மற்ற விலங்குகள் பயந்து நடுங்கின. புதுமையான விலங்காக இருக்கிறதே என்று அடங்கிப்  பணிவாக நின்றன.
"எல்லாரும் கவனமாகக் கேளுங்கள்.நான் உங்களுக்கெல்லாம் அரசனாக கடவுளால் அனுப்பப் பட்டவன்.நீங்கள் எல்லோரும் எனக்கு கீழ்ப் படிந்து நடக்க வேண்டும்.இல்லையென்றால் உங்களை நான் சபித்து விடுவேன்"
அதிகாரத்துடன்  கூறிய நீல நரியைப் பார்த்துப் பயந்த மற்ற விலங்குகள் பணிந்து அகன்றன.சற்று நேரத்தில் சிங்கம் நீலநரி யிடம் வந்து நின்றது.
"ராஜாவே, இந்த நாட்டுக்குப் பழைய ராஜாவாகிய சிங்கராஜா, வணங்குகிறேன்.நீங்கள் எங்களுக்குக கடவுளால் அனுப்பப்பட்டவர். நாங்கள் எல்லாம் தங்களின் அடிமைகள் கட்டளையிடுங்கள்."என்று பணிவுடன் கூறி வணங்கி நின்றது.
"ஏ சிங்கமே, நீ இந்தக் காட்டில் யார் கண்ணிலும் படாமல் உன் குகைக்குள்ளேயே மறைந்து இருக்க வேண்டும்.நான் கட்டளையிட்டால்தான் வெளியே வரவேண்டும்."என்றது அதிகாரமாக.சிங்கமும் பணிந்து சென்றது.நீலநரிக்குப் படு குஷியாகிவிட்டது.லாலா என்று பாடியபடியே அது சிலநாட்கள் 
காட்டைச் சுற்றி வந்தது.
        ஒருசில நாட்களிலேயே மழைக்காலம் வந்தது.ஒருநாள் மாலைநேரம் நீலநரி கர்வத்துடன் ஒரு வெட்ட வெளியில் நின்று கொண்டிருந்தது. அப்போது சில நரிகள் கூட்டமாக நின்று ஊளையிடத தொடங்கின.அப்போது மழையும் பலமாகப் பெய்யத தொடங்கிற்று நீலநரிக்கு ஓதுங்கக்  கூட இடமில்லை.
        மழையில் நனைந்ததால் நரியின் நீல நிறம் கரைந்து ஓடியது.
இப்போது தன பழைய நிறத்தை அடைந்த நரியும் எல்லாநரிகளுடனும்கூடி ஊளையிடத் தொடங்கிற்று.பலநாட்களாக அடைத்து வைத்திருந்த தன ஆசையெல்லாம் கொட்டி அழகாக ஆனந்தமாக ஊளையிட்டது. 
          இதைப் பார்த்த மற்ற நரிகளுக்கும் பிற விலங்குகளுக்கும் அப்போதுதான் இது ஒரு நரி நம்மையெல்லாம் ஏமாற்றிவிட்டது எனபது தெரிந்தது. எல்லா விலங்குகளும் சீரிக் கொண்டு ஓடிவந்தன 
 சிங்கராஜா கோபமாக கர்ஜித்தது. தன நிலையறிந்து அந்தக் குள்ள நரி  ஒரே ஓட்டமாக ஓடத தொடங்கியது. 
           அந்த நீல மாயிருந்த நரி இப்போது அந்தக் காட்டைவிட்டு வேறு காட்டை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது சரியாயிற்று என்று சொல்லிக் கொண்டே ஓடிற்று.வெகுதூரம் சென்று திரும்பிப் பார்த்தது.
          இப்போது எந்த விலங்கும் தன்னைப் பின்தொடரவில்லை என்பதைத் தெரிந்து கொண்டது  அந்த நரி. சற்று நேரம் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டே சிந்தித்தது.என் ஆசை நிறைவேறிற்று. 
காட்டுராஜாவாகச் சிலநாட்கள் அந்தக் காட்டில் உலாவந்தேன் 
அதுபோதும் . என்று தனக்குள் புன்னகைத்துக்  கொண்டது.

இன்றைய செய்தி துளிகள் : 

1) பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2) கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை வருகின்ற 21 ஆம் தேதி தொடக்க விழா!

3) அரசுப்பள்ளி மாணவர்கள் 50 பேர் பின்லாந்து, சுவீடன் செல்ல பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!

4) பொதுப்பிரிவினருக்கான 10%  இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு 

5) உலகின் நம்பர்.1 குத்துச்சண்டை வீராங்கனை ஆனார் இந்தியாவின் மேரி கோம்!

Wednesday, January 09, 2019

விளக்கம்

புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் எந்த மொழியையும் கட்டாயம் பயில வேண்டும் என்று பரிந்துரை செய்யவில்லை என்று மத்திய மனிதவள மேம்பாடுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கல்விமுறையில் மாற்றம் கொண்டு வருவதற்காக புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் வரைவுக் குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவில், கல்வியியலாளர் வசுதா காமத், மத்திய இணையமைச்சர் அல்போன்ஸ், பல்கலைக்கழக பேராசிரியர் மஞ்சுள் பார்கவா உள்ளிட்ட 8 பேர் இடம் பெற்றிருந்தனர்.

அந்தக் குழவின் பதவிக்காலம் டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதனையடுத்து, டிசம்பர் 31-ம் தேதி, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுக்குழு அறிக்கை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயமாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த பிரகாஷ் ஜவடேகர், ‘புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுக்குழு அறிக்கையில், எந்த மொழியையும் கட்டாயப்படுத்தவேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை.

இந்த அறிக்கை குறித்து தவறான செய்திகள் ஊடகங்களில் வெளியானதால், இதுகுறித்து விளக்கமளிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்

7-1-19 Jactto Court case Copy



LKG,UKG ELEMENTARY DIRECTOR PROCEDINGS



அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு இனி கற்பித்தல் பணி இல்லை


'எல்.கே.ஜி., - யு.கே.ஜி., துவங்கப்படும், 2,382 அங்கன்வாடி மையங்களின் ஊழியர்கள் இனி கற்பித்தல் பணியை மேற்கொள்ள தேவையில்லை' என, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.அங்கன்வாடி மையங்களில், ஆறு மாதம் முதல், 3 வயதுடைய குழந்தைகளுக்கு உரையாடுதல் பயிற்சியும், 3 முதல், 6 வயது குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியும் அளிக்கப்பட்டு, சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, 2,382 அங்கன்வாடி மையங்களில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட்டு, பெண் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால், அங்கன்வாடி மைய ஊழியர்களை முப்பருவ கல்வியை கற்பிக்க வேண்டாம் என்றும், அவர்கள் கலவை சாதம், சத்து மாவு வழங்குதல், வளரிளம் பெண்களுக்கான திட்டத்தை செயல்படுத்துதல் போன்ற பணிகளை மட்டும் மேற்கொண்டால் போதும் என, தெரிவிக்கப் பட்டது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:

எல்.கே.ஜி.,- யு.கே.ஜி., வகுப்புகள், 18ல் துவங்க உள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துவதால் அங்கன்வாடி ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கல்வி கற்பிக்கும் பணி மட்டுமே ஆசிரியர்கள் மேற்கொள்வர். மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் பணி ஆசிரியர்களிடமே ஒப்படைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்

Tuesday, January 08, 2019

பழைய ஓய்வூதிய பரிசீலனைக் குழு பரிந்துரைகள்: அரசு நடவடிக்கை எடுக்கும்


பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சாத்தியக் கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வர் பழனிசாமி செவ்வாய்க்கிழமை பேசியது:

புதிய பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதிலாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆராய ஒருநபர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு அரசிடம் அளித்துள்ள பரிந்துரைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோன்று, ஏழாவது ஊதியக் குழு முரண்பாடுகளைக் களைய அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவின் பரிந்துரைகளையும் அரசு ஆராயும் என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.

9-1-19 Morning prayer

9-1-19

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 115

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

உரை:
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

பழமொழி:

God stays long but strikes at last

அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்

பொன்மொழி:

இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம். ஏனெனில்
உடல் மீதான ஆசை ஒழிந்தாலன்றி ஆத்மானந்தம் கிடையாது.

-ஸ்ரீசாரதாதேவி.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) .இ.பி.எப் என்றால் என்ன?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

2)வி.பி.எப் என்றால் என்ன?

வாலண்டரி புராவிடெண்ட் பண்ட்

நீதிக்கதை :

சூடு பட்ட புரோகிதர்கள்

தெனாலி ராமன் கதைகள் – சூடு பட்ட புரோகிதர்கள்
மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு அவருடைய தாயார் மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தாய் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவரது தாயாருக்கு வயோதிகம் ஆகிவிட்டபடியால் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். வைத்தியரை அழைத்து தன் தாயின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் செய்தார். பரிசோதனை செய்த வைத்தியரும் “தங்கள் தாயார் அதிக நாள் தாங்க மாட்டார்கள். விரைவில் சிவலோகப் பதவி அடைந்து விடுவார்கள்” என்று கூறினார். அது கேட்ட மன்னர் வேதனையுற்றார்.

தன் தாயாரிடம் சென்று “அம்மா, உங்களுக்கு சாபிட எது மிகவும் ஆசையாக இருக்கிறது” என்று கேட்டார்.

அதற்கு அவரது தாயாரும் “மாம்பழம் தான் வேண்டும்” என்றார். அப்போது மாம்பழம் கிடைக்கக் கூடிய காலமல்ல இருப்பினும் தன் ஆட்களை அனுப்பி எங்கிருந்தாவது மாம்பழம் வாங்கி வர ஏற்பாடு செய்தார். ஆட்கள் மாம்பழம்
வாங்கி வர புறப்பட்டனர்.

மாம்பழம் வந்து சேர்வதற்குள் அவரது தாயார் மரணம் அடைந்து விட்டார்.

மாம்பழம் சாப்பிடாமலேயே தன் தாயார் மரணம் அடைந்தது குறித்து மன்னர் மிக வேதனை அடைந்தார்.

அதற்குப் பரிகாரம் காண எண்ணி அரண்மனைப் புரோகிதர்களை அழைத்து ஆலோசனை கேட்டார்.

பேராசைபிடித்த புரோகிதர்களும் “மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவரது ஆன்மா சாந்தியடைய தங்கத்தால் 108 மாங்கனைகளைச் செய்து 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் சரியாகிவிடும்” என்றனர்.

மன்னரும் அதற்குச் சம்மதித்தார். 108 மாம்பழங்கள் தங்கத்தால் செய்ய ஏற்பாடு செய்தார். சில நாட்களில் தங்க மாம்பழம் தயார் ஆனது. அவற்றை 108 புரோகிதர்களுக்கு மன்னர் கொடுத்தார். புரோகிதர்களும் மிக மகிழ்சியுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டனர்.

இச்செய்தியை தெனாலிராமன் அறிந்து வேதனையுற்றான். புரோகிதர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்க எண்ணினான். அதன்படியும் செயலாற்றத் துணிந்தான்.

புரோகிதர்களைச் சந்தித்தான். “என் அம்மாவிற்குத் திதி வருகிறது. அதற்குத் தாங்கள் அனைவரும் வந்து புரோகிதம் பண்ணுங்கள். என்னால் முடிந்தளவு தருகிறேன்” என்றான்.

புரோகிதர்களும் மகிழ்ந்து தெனாலிராமன் வீட்டிற்கு வந்தனர். அவனும் புரோகிதர்களை வரவேற்று உட்காரச் செய்தான். பின் கதவுகளை நன்கு தாழிட்டுப் பூட்டிக் கொண்டான். ஏற்கனவே நன்கு பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் ஆளுக்கு ஒரு சூடு போட்டான்.

புரோகிதர்கள் அய்யோ அம்மாவென்று கதறினார்கள். பின் மன்னரிடம் சென்று முறையிட்டனர்.

இதைப் பார்த்த மன்னர் தெனாலிராமன் மீது அளவிலடங்காக் கோபங்கொண்டார்.

பின் தன் பணியாட்களை அனுப்பி தெனாலிராமனை இழுத்து வரச் செய்தார். தெனாலிராமனைப் பார்த்ததும் “ஏனடா புரோகிதர்களுக்கு இவ்வாறு சூடு போட்டாய்” என்று கேட்டார்.

“மன்னாதி மன்னா….. என்னை மன்னிக்க வேண்டும் நான் சொல்லுவதை தாங்கள் கவனமாகக் கேட்க வேண்டுகிறேன். என் தாயார் உடல் நலமில்லாதிருந்து இறக்கும் தருவாயில் வலிப்பு நோய் வந்து விட்டது. அதற்கு வைத்தியர்கள் என் தாயாருக்குச் சூடு போடும்படி சொன்னார்கள். நான் சூடு போடும் முன் என் தாயார் இறந்து விட்டார்கள். ஆகையால் என் தாயாரின் ஆன்மா சாந்தியடைய புரோகிதர்களுக்கு சூடு போடும்படி பெரியவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே தான் புரோகிதர்களுக்குச் சூடு போட்டேன். இதில் என்ன தப்பு” என்று மன்னரிடம் கேட்டான் தெனாலிராமன்.

இதைக்கேட்ட மன்னர் கோபம் கொண்டு “என்னடா தெனாலிராமா, இது முட்டாள் தனமாக இருக்கிறதே” என்றார்.

இல்லை அரசே, விளக்கமாகக் கூறுகிறேன் சற்றுக் கேளுங்கள்” என்றான்.

முன்பு தங்கள் தாயார் மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவர்கள் ஆன்மா சாந்தியடைய 108 பொன்மாங்கனிகள் 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் தான் அவர்கள் ஆன்மா சாந்தியடையும் என்று சொன்னார்களே…… அதன்படியும் தாங்கள் கொடுத்தீர்களே………………….”

அதுபோலவே என் தாயாரின் வலிப்பு நோய்க்கு சூடு போட முடியாமல் போனதால் தான் இவர்களுக்குச் சூடு போட்டேன் என்றான். இதைக் கேட்ட மன்னர் நகைத்து விட்டார். தெனாலிராமனைப் பாராட்டினார். புரோகிதர்களின் பேராசையையும் புரிந்து கொண்டார்.

இன்றைய செய்தி துளிகள் : 

1) ஜனவரி 14-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ளூர் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

2) சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

3) தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமாகிறது கள்ளக்குறிச்சி: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

4) தமிழகத்தில் காலியாக உள்ள பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

5) 2019-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவிலேயே நடத்தப்படும் என பிசிசிஐ நிர்வாகக் குழு  அறிவிப்பு!

மாசு இல்லாப் போகி

போகிப்பண்டிகைக்கு (14.01.2019) தமிழக அரசு ஈடு செய்யும் விடுமுறை அறிவிப்பு. அவ்விடுமுறையை 09.02.2019 சனிக்கிழமை ஈடு செய்ய வேண்டும்.