இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, April 08, 2018

தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீடு இடங்களை நாளை வெளியிட வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்


தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களை பள்ளிகளின் தகவல் பலகையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.10) வெளியிட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. அல்லது ஒன்றாம் வகுப்பில் 25 சதவீத இடஒதுக்கீடு கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கு ஏப்ரல் 20-ம்
தேதியில் இருந்து மே 18-ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதைக் கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. அல்லது ஒன்றாம் வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை அந்தந்தப் பள்ளிகளின் தகவல் பலகையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.10) வெளியிட வேண்டும்.

உதாரணமாக எல்.கே.ஜி. வகுப்பில் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 200 இடங்கள் இருப்பின் அதில் 25 சதவீத இடங்களின் எண்ணிக்கையை பட்டியலில் குறிப்பிட வேண்டும்.
இந்தச் சேர்க்கையின்போது வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஆதரவற்றோர், எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம் இருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே முன்னுரிமை அளித்து சேர்க்கை வழங்கப்பட வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. தனியார் பள்ளி சேர்க்கைக்கு ஏப்.20-ஆம் தேதி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும்போது தேவையான ஆவணங்களை பெற்றோர் எடுத்துச் செல்ல வேண்டும்.

விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்: பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் (அசல்), நலிவடைந்த பிரிவினரில் இதர வகுப்பினரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருப்பின், அவர்களின் வருமானச் சான்று (அசல்), பள்ளிக்கும், மாணவர் வசிக்கும் இடத்திற்கும் இடையேயான தொலைவு ஒரு கிலோ மீட்டர் முதல் ஒன்றரை கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருத்தல் வேண்டும். (வருவாய்த் துறையினரால் அளிக்கப்பட்டுள்ள இருப்பிடச்சான்று, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை (இவற்றுள் ஏதேனும் ஒன்றின் அசல்). இந்த ஆவணங்களுடன் சென்றால் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பதிவு செய்து அதற்கான ஒப்புகைச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

Friday, April 06, 2018

புதிய பாடத் திட்ட புத்தகங்கள் மே இறுதியில் வெளியிடப்படும்


புதிய பாடத் திட்டப்படி தயாரிக்கப்படும் புத்தகங்கள் மே இறுதியில் வெளியிடப்படும் என்றார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன். இதுகுறித்து தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையும் போட்டி போட்டு முன்னேறி வருகின்றன. தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில்கொண்டு நீட் தேர்வு உள்ளிட்ட மத்திய அரசின் 29 போட்டித் தேர்வுகளை மாணவர்கள் சந்திக்கும் வகையில் சென்னை, கோவை, திருச்சி, கோவில்பட்டி உள்ளிட்ட 9 மையங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் கல்வியாண்டில் மத்திய கல்வி வாரிய பாடத் திட்டத்தை (சிபிஎஸ்இ) விஞ்சும் வகையில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பாடத் திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது.

மே மாத இறுதியில் இதற்கான புத்தகம் வெளியிடப்படும். அடுத்த கல்வியாண்டில் மற்ற வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படும். புதிய பாடத் திட்டத்தை மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்களை தயார்படுத்தும் வகையில் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்கள் 10 ஆயிரம் பேருக்கு கோடை விடுமுறை தொடங்குவதற்கு முன்பாக பயிற்சி அளிக்கப்படும். தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அனைவருக்கும் சம உரிமை வழங்கும் வகையில் மாற்றி அமைக்கும் திட்டம் உள்ளது. பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தை தனியாக 6 மண்டலங்களாக பிரிக்கும் உத்தேசம் இல்லை என்றார் அவர்.

புதிய சீருடை குறித்த இயக்குநர் செயல்முறைகள்


Thursday, April 05, 2018

பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் பெரிய மாற்றம்


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை, தொடக்கக்கல்வி இயக்குனரகம், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம், பள்ளிசாரா கல்வி இயக்குனரகம், அரசு தேர்வுத்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகம், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம், இடைநிலை கல்வி திட்ட இயக்குனரகம் ஆகியவை உள்ளன.

இதில் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் 5 ஆயிரத்து 850 உயர்நிலை பள்ளிகளும், 7 ஆயிரத்து 300 மேல்நிலை பள்ளிகளும் இருக்கின்றன. பள்ளிகளை கண்காணிக்க மாவட்ட கல்வி அதிகாரிகளும், அவர்களை கண்காணிக்க முதன்மை கல்வி அதிகாரிகளும் உள்ளனர். இந்த முதன்மை கல்வி அதிகாரிகளை மேற்பார்வை செய்ய இணை இயக்குனர்கள் (சென்னை டி.பி.ஐ. வளாகம்) இருக்கிறார்கள். இணை இயக்குனர்களை கண்காணிக்க இயக்குனர் இருக்கிறார்.

இதைப்போல தொடக்க கல்வித்துறை இயக்குனரின் கட்டுப்பாட்டில் 35 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளும், 9 ஆயிரத்து 800 நடுநிலை பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளை கண்காணிக்க உதவி கல்வி அதிகாரிகளும், அவர்களை கண்காணிக்க மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளும், அவர்களை கண்காணிக்க இணை இயக்குனர்களும் உள்ளனர். இணை இயக்குனர்களை மேற்பார்வை செய்ய இயக்குனர் இருக்கிறார்.

மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் அனைத்து மாவட்ட பயிற்சி நிறுவனங்களும், அனைத்து ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும் இயங்குகின்றன.

அரசு தேர்வுத்துறை, அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடத்தி முடிவை வெளியிட்டும், அவர்களுக்கு சான்றிதழ் வழங்கியும் வருகிறது.

இந்த துறைகள் அனைத்தும் தனித்தனியாக இயங்குவதால், அதிகாரிகள், ஊழியர்கள் என ஏராளமானோர் தேவைப்படுகின்றனர். எனவே இதில் பல துறைகளை இணைத்து நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படுத்த அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

அந்தவகையில் தொடக்ககல்வித்துறை இயக்குனரகம், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் ஆகியவை ஒழிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் தமிழ்நாடு அளவில் 6 மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றுக்கு என இயக்குனர்கள் அமர்த்தப்படுவர்.

டி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மட்டும் இருப்பார். அவர்தான் அனைத்து மண்டல இயக்குனர்களையும் கண்காணிப்பார். பள்ளிக்கல்வி இயக்குனர் தவிர அனைத்து இயக்குனர்களும் சென்னையை விட்டு வெளியே போய் பதவி வகிப்பார்கள்.

ஆசிரியர் தேர்வு வாரியம் வருடத்திற்கு குறைந்த அளவில்தான் வேலைக்கு ஆட்களை தேர்ந்து எடுக்கிறார்கள். எனவே ஆசிரியர் தேர்வு வாரியமும் கலைக்கப்படும் என தெரிகிறது. அவற்றின் பணிகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

இதைப்போல உதவி கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் பணியிடங்களும் ஒழிக்கப்பட்டு அவர்களுக்கு வேறு பணிகள் வழங்கப்படுகிறது. முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இப்போது உள்ள அதிகாரத்தை விட கூடுதல் அதிகாரம் கொடுக்கப்படும்.

இது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தி விரைவில் முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

1, 2ம் வகுப்புகளுக்கு கணினியில் தேர்வு


அரசுப்பள்ளி முதல், 2ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் கையடக்க கணினியில் தேர்வு நடத்தப்படவுள்ளது.தமிழக அரசின் புதிய கல்வித்திட்டத்தின் கீழ், ஜனவரி முதல் 13 மாவட்டங்களை சேர்ந்த 173 அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஒன்று, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கையடக்க கணினியை பயன்படுத்தி கற்பித்தல், தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய முறையில் பயின்ற மாணவர்களுக்கு ஏப்.,9, 10, 11, 12 தேதிகளில் ஆண்டுத் தேர்வு நடக்கிறது.இதுவரை, 40 மதிப்பெண்கள் கல்வி இணை செயல்பாடுகளுக்கும், 60 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் 40 மதிப்பெண்களுக்கு மட்டுமே எழுத்து தேர்வு நடத்தப்படும். 20 மதிப்பெண்களுக்கு கையடக்க கணினி வழியாக மாணவர்கள் விடையளிக்க வேண்டும். பதில்கள் இணையதள உதவியுடன் திருத்தப்படும். தமிழ், ஆங்கிலம், கணக்கு, சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய நான்கு பாடங்களுக்கும் இதுபோல், புதிய முறையில் தேர்வு நடத்த உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

​Madurai Kamaraj University (DDE). B.Ed Spot Admission - 2018 -2020​- No Entrance Examination 👇👇👇👇

டி.எம்.சி

டி.எம்.சி

Thousand Million Cubic[TMC] ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள்.
ஒரு  டிஎம்சி கணக்கெடுப்பு - 1 பில்லியன் கன அடி ஆகும்.

கன அளவு : ஒரு பொருள் எவ்வளவு இடத்தை எடுக்கின்றது என்பதைக் குறிக்கும் ஒரு கணித அளவாகும். அப்படியெனில் ஒரு கன அடி என்பது 28.3 லிட்டர் நீருக்கு சமம்.

டிஎம்சி அளவிடும் முறை :

கால்வாயின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணையை கட்டி அதில் ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் என்ற அளவில் ஒரு மதகு மட்டும் இருக்கும், மதகை திறப்பதன் மூலம் ஒரு வினாடியில் வெளியேறும் நீரின் அளவை கணக்கிட்டால் போதும். ஒரு மணி நேரத்தில் எத்தனை லிட்டர் நீர் வெளியேறியது என்பதை கணக்கிடலாம்.

டிஎம்சியின் கணக்கீடு மற்றும் அவற்றின் பயன்பாடுகள் :

ஒரு டிஎம்சி எவ்வளவு லிட்டர் - 1 பில்லியன்(100 கோடி) கன அடி.

கடந்த முறை மற்றும் இம்முறை வழங்கப்பட்ட நீரின் அளவு என்ன? மற்றும் அவற்றின் நன்மை தீமைகள் :

கடந்த முறை வழங்கிய டிஎம்சி யின் அளவு - 192 டிஎம்சி.

இம்முறை வழங்கிய டிஎம்சி யின் அளவு 177.25 டிஎம்சி.

கடந்த முறையை விட குறைக்கப்பட்ட 14.75 டிஎம்சி நீரால் தமிழகத்திற்கு 41,767,34,87,232 (சுமார் 41,767 கோடியே 34 லட்சம்) லிட்டர் நீர் இழப்பு ஏற்படும்.

தமிழ் நாட்டின் மொத்த விவசாய விளை பரப்பளவு :

தமிழகத்தில் மொத்தம் 22.3 லட்சம் ஹெக்டேர் பாழ்பட்ட நிலம் இருப்பது வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

காவிரி நீரால் தமிழ்நாட்டில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 44,000 சதுர கி.மீ.

காவிரி நீரால் கர்நாடகாவில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 34,000சதுர கி.மீ.

காவிரி நீரால் புதுச்சேரி பாசனம் பெறும் நிலப்பரப்பு 148 சதுர கி.மீ.

காவிரி கேரளாவில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 2,800 சதுர கி.மீ.

நெல் பயிர் சாகுபடிக்கு இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 20,000 முதல் 40,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றது.

காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கும் நீரின் அளவு 14 டிஎம்சி அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளதால் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாயம் பாதிக்கும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Wednesday, April 04, 2018

கல்வித்துறையில் உருவானது எஸ்.எஸ்.ஏ.எஸ்., திட்டம் ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு


மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) மற்றும் மாநில திட்டமான மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (டயட்) ஆகியவற்றை ஒன்றாக இணைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவை ஒருங்கிணைக்கப்பட்டு, 'எஸ்.எஸ்.ஏ.எஸ்., (சப்கோ சிக்ஷா - அச்சி கிச்ஷா) திட்டம்' என புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக கல்வித்துறையில் 1- 8ம் வகுப்பு வரை எஸ்.எஸ்.ஏ., 9-10ம் வகுப்பில் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் செயல்படுகின்றன. இதன் மூலம் கற்றல் கற்பித்தல், உபகரணம், ஆசிரியருக்கான பயிற்சி, புதிய வகுப்பறை, பள்ளி பராமரிப்பிற்காக மத்திய, மாநில அரசுகள் 60:40 விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. இதில் 1-12 வகுப்புகள் புதிய திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020 வரை இருக்கும். கல்வி அதிகாரிகள் கூறியதாவது: முழு விவரம் கிடைத்ததும் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்.

இதன்மூலம் பள்ளிகளுக்கு 100 சதவீதம் அடிப்படை வசதி கிடைக்கும். கற்றலுக்கான டிஜிட்டல் திட்டம், கணினி தொழில் நுட்பம், மின்னணு பாடத்திட்டம், மெய்நிகர் வகுப்பறை உட்பட கூடுதல் வசதிகளுடன் அடுத்த நிலைக்கான நவீன திட்டங்கள் செயல்படுத்த வாய்ப்புள்ளது, என்றார்.

ரயில்வே அறிவிப்பு


இனி ரயில்களில் ஏ/சி பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு மென்மையான, இதமான, சுத்தமான போர்வைகள் வழங்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

இதுவரை வழங்கப்படும் போர்வைகள் கனமாகவும், கம்பளிகளில் பிசிறுகளுடனும், அழுக்குடனும் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் இனி வழங்கப்படும் போர்வைகளின் எடை 450 கிராம் மட்டுமே இருக்கும். தற்போது வழங்கப்படும் போர்வைகளின் எடை சுமார் 2.2 கிலோவாகும். இது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையே மாற்றப்படும்.

ஆனால் இனி போர்வைகளை குறைந்த இடைவெளியில் தோய்க்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது

நாட்டின் தலைமை தணிக்கைக் குழு (சிஏஜி) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் ரயில் ஏ/சி பெட்டிகளில் வழங்கப்படும் போர்வைகளின் அசுத்தம், எடை, மற்றும் தலகாணிகளின் தரம், சுத்தம் ஆகியவை பற்றி விமர்சித்திருந்தது. இதனையடுத்து இந்த நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

Tuesday, April 03, 2018

தேர்தல் பணி ஊதிய நிலுவை; ஆசிரியர்கள் போராட்டம்


ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பணி செய்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க கோரி, மாநகராட்சி அலுவலகத்தில், ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதியில் ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களாக 232 பூத்களில்ஆசிரியர்கள் பணியாற்றினர். இதில், 19 பேருக்கு ஊதியர் வழங்கப்படவில்லை.

தேர்தல் கமிஷன் வழங்கிய ஊதியத்தை பெற்று தனது வங்கி கணக்கில் வைத்துள்ள மாநகராட்சி நிர்வாகம் தங்களுக்கு வழங்காமல் இழுத்தடிப்பதாக கூறி, ஆசிரியர்கள் நேற்று மாலை, மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கனகராஜா, மாநகர நிர்வாகிகள் ஜோசப், குழந்தை அற்புதராஜ் உள்ளிட்டோர் ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட னர்.தேர்தல் பிரிவு அலுவலர் ராம் லட்சுமணன், பேச்சு நடத்தினார். இதில், மே மாதம் இந்த நிலுவை தொகை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனால், ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்

Monday, April 02, 2018

நாடு முழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவான 2.55 லட்சம் பள்ளிகள் இணைப்பு: மாநில அரசுகளிடம் கருத்து கேட்கிறது மத்திய அரசு


நாடு முழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.55 லட்சம் அரசு தொடக்கப்பள்ளிகளை அருகில் உள்ள  பள்ளிகளுடன் இணைப்பதற்காக அனைத்து மாநிலங்களின் கருத்துக்களையும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை  கேட்டுள்ளது.

நாட்டில் தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக, அனைவருக்கும் கல்வி திட்டம்,  அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம், ஆசிரியர் கல்வித்திட்டம் என்று பல்வேறு திட்டங்களை மத்திய அரசு  நடைமுறைப்படுத்துகிறது. இதற்காக ஆண்டுக்கு ₹75 ஆயிரம் கோடி வரை செலவிடவும் திட்டமிட்டுள்ளது. இந்த மூன்று திட்டங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அரசு  மற்றும் அரசு நிதியுதவி பெறும் பல பள்ளிகள், மாணவர்கள் எண்ணிக்கை குறைவு காரணமாக ஆண்டுதோறும் மூடப்பட்டு  வருவதாகவும், இதற்கு போதிய ஆசிரியர்கள் இல்லாததும், தரமான கல்வி இல்லாததும் காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு நிதியாண்டும் கல்விக்காக செலவிடும் நிதி அரசு, அரசு நிதியுதவி பள்ளி மாணவர்களை  முழுமையாக சேருவதில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அதோடு  தேசிய அளவில் மாணவர்களின் கல்வித்தரம் குறைந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.இத்தகைய சூழலில் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை  நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் 30 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள அரசு, அரசு நிதியுதவி தொடக்க,  நடுநிலைப்பள்ளிகளை மற்ற அரசுப்பள்ளிகளுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களின்  பள்ளிக்கல்வித்துறைகளிடமும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கருத்து கேட்டு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

இந்த பள்ளிகள் இணைப்புப்பட்டியலில் இனி புதிதாக குழந்தைகளை சேர்க்க முடியாத நிலை உள்ள பள்ளிகள், 30 மாணவர்களுக்கு  குறைவாக உள்ள பள்ளிகள், போதிய ஆசிரியர்கள் இல்லாத 2.55 லட்சம் பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு  இணைக்கப்படும் பள்ளிகளுக்கு தேவையான இடவசதியை ஏற்படுத்துவதுடன், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும்,  அதற்கேற்ப ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கும் வகையில் பள்ளிகளில் கல்வியின் தரம் மேம்படுத்தப்படும். மேலும்,  அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு தேவையான வசதிகளும் செய்து தரப்படும். மாநிலங்கள் தரும் கருத்துக்களின்  அடிப்படையில் அதற்கான மசோதா இறுதி செய்யப்பட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படும் என்று பள்ளி கல்வித்துறை  அதிகாரிகள் தெரிவித்தனர்.

Sunday, April 01, 2018

கல்வித் துறை செயல்பாடுகளால் அவதிக்குள்ளாகும் தலைமை ஆசிரியர்கள்


கல்வித் துறை அதிகாரிகளின் செயல்பாடுகளால் மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்க முடியாமல் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு மத்திய அரசு சார்பில் கல்வி உதவித் தொகை ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. மாணவிகளை ஊக்குவித்து அவர்கள் கல்வியைத் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு கல்வி உதவித் தொகையை வழங்கி வருகிறது.
3 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு தலா ரூ. 500, 6-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தலா ரூ. 1,000, 7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தலா ரூ. 1,500 என கல்வி உதவித் தொகையாக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து மாநில அரசின் கல்வித் துறை மூலம் மாணவிகளுக்கு வழங்குகிறது. இத் தொகை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் காசோலையாக சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் வழியாக மாணவிகளின் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகக் கணக்கில் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்படும் காசோலை தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியின் பெயரைக் குறிப்பிட்டு, அந்த காசோலையை பாரத ஸ்டேட் வங்கியின் அனைத்து கிளைகளிலும் பணமாக்கிக் கொள்ளும் வசதி உள்ளது.
அதன்படி, சில வங்கிக் கிளைகளில் தலைமை ஆசிரியர்களின் அடையாளச் சான்றை சரிபார்த்துவிட்டு காசோலைக்கான பணத்தை தலைமை ஆசிரியரிடம் வங்கி அதிகாரிகள் வழங்குகின்றனர்.
சில வங்கிகளில் சம்பந்தப்பட்ட பள்ளியின் பெயருடன் கூடிய தலைமை ஆசிரியர் பெயரில் வங்கிக் கணக்கு இருந்தால் அக்கணக்கில் காசோலையை வரவு வைத்த பிறகு, பணம் எடுக்க அனுமதிக்கப்படும் என வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், பள்ளிப் பெயருடன் கூடிய தலைமை ஆசிரியர் பெயரில் வங்கிக் கணக்கு பராமரிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
வங்கிக் கணக்கு இல்லாத பெயரில், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு கல்வித் துறை அதிகாரிகள் பள்ளியின் பெயர் குறிப்பிட்டு காசோலைகளை வழங்கும் பட்சத்தில், அந்த காசோலையை பணமாக்க பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பல்வேறு சிரமத்துக்கு உள்ளாகின்றனர். வங்கி அதிகாரிகளிடம் சென்று கோரிக்கை வைக்க வேண்டியுள்ளது. ஆனால், வங்கி அதிகாரிகள் அவர்களுடைய கோரிக்கையை ஏற்பதே இல்லை. காசோலைக்கு பணம் வழங்கும் வங்கிக் கிளைகளின் மேலாளர்களிடம் விசாரித்துவிட்டு பணம் வழங்கலாமே என்று கேட்டால் அதுமாதிரி ஏதும் செய்ய முடியாது எனக் கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் தலைமை ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.
பாரத ஸ்டேட் வங்கியின் சில கிளைகளில் காசோலையை பணமாக்க வழிமுறை உள்ளது.
அதே வங்கியின் சில கிளைகளில் காசோலையைப் பணமாக்க வழிமுறை இல்லையெனக் கூறி திருப்பி அனுப்புவது வேடிக்கையாக உள்ளது.
இவ்வாறான நிலைக்கு, வங்கியில் கணக்கு இல்லாத பெயருக்கு பள்ளிகளுக்கு கல்வித் துறை அதிகாரிகள் காசோலை வழங்குவதுதான் காரணமாக உள்ளது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் அரசுக் கணக்கிலிருந்து நேரடியாக இசிஎஸ் முறையில் மாணவிகளின் வங்கி அல்லது அஞ்சலகக் கணக்கில் கல்வி உதவித் தொகையை வரவு வைக்கக் கூடிய நிலையில், வங்கிக் கணக்கு இல்லாத பெயருக்கு காசோலை வழங்குவது மன உளைச்சல் மற்றும் அலைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும் தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
சில வங்கிகள் காசோலைக்கு பணம் வழங்கக் கூடிய சூழ்நிலையில், சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கல்வி உதவித் தொகையை சம்பந்தப்பட்ட மாணவிகளின் வங்கி அல்லது அஞ்சலகக் கணக்கில் செலுத்தி வரவு வைக்காமல், மாணவிகளின் பெற்றோரை அழைத்து பணமாகவே நேரடியாக வழங்கிவிடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இவ்வாறு ரொக்கமாக வழங்கப்படும்போது முறைகேடு நடப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே, இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கவும், பள்ளித் தலைமை ஆசிரியர்களை மன உளைச்சலுக்கும், அலைச்சலுக்கும் உள்ளாக்காமல் அரசுக் கணக்கிலிருந்து நேரடியாக சம்பந்தப்பட்ட மாணவிகளின் வங்கி அல்லது அஞ்சலகக் கணக்கில் இசிஎஸ் முறையில் செலுத்தி, வரவு வைக்க கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வங்கிக் கணக்கு இல்லாத பெயரில்,
சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு கல்வித் துறை அதிகாரிகள் பள்ளியின் பெயர் குறிப்பிட்டு காசோலைகளை
வழங்கும் பட்சத்தில், அந்த காசோலையை பணமாக்க
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பல்வேறு சிரமத்துக்கு உள்ளாகின்றனர். வங்கி அதிகாரிகளிடம் சென்று கோரிக்கை வைக்க வேண்டியுள்ளது.
ஆனால், வங்கி அதிகாரிகள் அவர்களுடைய கோரிக்கையை ஏற்பதே இல்லை. காசோலைக்கு பணம் வழங்கும் வங்கிக் கிளைகளின் மேலாளர்களிடம் விசாரித்துவிட்டு பணம் வழங்கலாமே என்று கேட்டால் அதுமாதிரி ஏதும் செய்ய  முடியாது எனக் கூறி திருப்பி அனுப்பி
விடுகின்றனர். இதனால் தலைமை ஆசிரியர்கள்
மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.