இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, March 27, 2018

பான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறையாக நீட்டிப்பு-மத்திய அரசு அறிவிப்பு


பான்கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

இம்மாதம் 31-ம் தேதியுடன் பான்கார்டு, ஆதார் எண் இணைப்புக்கு இறுதிக் கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் காலக்கெடு நீட்டிப்பு என்பது 4-வது முறையாக வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசுகையில், கருப்புபணம், ஊழல் ஆகியவற்றை தடுக்கும் நோக்கில் வருமானவரி செலுத்துவோர் அனைவரும் வரிமானவரி ரிட்டன் தாக்கலின் போது, பான்கார்டுடன், ஆதார் எண்ணையும்இணைத்து தாக்கல்செய்வது கட்டாயம் என்று அறிவித்தார். இது கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 4 கட்டங்களாக ஆதார் எண், பான்கார்டு இணைப்பு காலக்கெடு நீட்டக்கப்பட்டது.

இந்நிலையில், இறுதியாக இம்மாதம் மார்ச் 31-ம் தேதிக்குள் வருமானவரி செலுத்துபவர்கள், பான்கார்டு வைத்திருப்பவர்கள் ஆதாரோடு இணைக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே இம்மாதம் ஆதார் எண்ணை, செல்போன் எண்ணோடு இணைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தீர்ப்பு வரும் வரை காலக்கெடுநீட்டிப்பு தொடரும் என்று அறிவித்தது.

இதனால், வேறு வழியின்றி, மத்திய அரசும், பான்கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை நீட்டிக்கும் முடிவுக்கு வந்துள்ளது.

இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் விடுத்துள்ள அறிவிப்பில், வருமானவரி செலுத்துபவர்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடு ஜூன் 30-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஆதார் எண் வைத்திருப்பவர்கள், ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்து இருப்பவர்கள் வருமானவரி ரிட்டனில் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 65 கோடி பான்கார்டுகள் இருக்கும் நிலையில்,அதில் 33 கோடி பான்கார்டுகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன.

Monday, March 26, 2018

1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள லிங்க், பார்கோடுடன் 100 தலைப்பில் 1.70 கோடி புத்தகங்கள்: மே மாதம் பள்ளிகளுக்கு வழங்க முடிவு


1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பல புதிய நவீனங்கள் அடங்கிய புதிய பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக அவற்ைற அச்சிடும் பணிகள் முடிய உள்ளன. மே இறுதி வாரத்தில் பள்ளிகளுக்கு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டம் மாற்றிஅமைக்கப்படுகிறது.

வரும் கல்வி ஆண்டில் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருந்தார். பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு 100 தலைப்புகளில் 1.70 கோடி பாடநூல் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் கழகம் தொடங்கியுள்ளது. பிராந்திய மொழிகளிலும் பாடப்புத்தகம் அச்சிடப்படுகிறது. இந்த புதிய புத்தம் வழவழப்பான அட்டை, திடமான தாளில் பல நிறங்களில் படங்கள் என்று மாணவர்களை கவரும் வகையில் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.

முதல் பருவத்துக்கான புத்தகத்தை பொறுத்தவரையில் பாடப்புத்தகங்கள் எண்ணிக்கையில் 1 முதல் 3 வரை இருக்கும். பாடப்புத்தகங்களின் உள்ளே இடம் பெறும் பாடங்களுக்கு ஏற்ற பல நிறங்களில் படங்கள் அச்சிடப்படுகிறது. அதற்கு அருகில் ‘கியூ ஆர்’ எனப்படும் ‘கியூக் ரெஸ்பான்ஸ் கோட்’ அச்சிடப்படுகிறது. அந்த படங்கள் குறித்து கூடுதல் தகவல் வேண்டும் மாணவர்கள் அந்த கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து செல்போனில் பார்த்தால் அந்த படங்கள் குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். மேலும், முப்பரிமாணத்தில்(3டி) அந்த படத்தையும் பார்க்க முடியும்.

அதுமட்டும் இல்லாமல் சில இடங்களில் இணைய தளங்களின் லிங்க்-கும் குறிப்பிடப்படும். அதைக் கொண்டு மாணவர்கள் அந்த இணைய தளத்துக்கு சென்று கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். மேலும், 9, 10, பிளஸ் 1 வகுப்பு பாடப்புத்தகங்களில், ஆங்காங்கே, மேற்படிப்பு குறித்த தகவல்களும் அச்சிட்டு வழங்கப்பட உள்ளன. இந்த பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி மே மாதம் இரண்டாவது வாரத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த பணி முடிந்ததும் மே இறுதி வாரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று சேரும். வழக்கம் போல பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்கப்படும். மற்ற வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் சுமார் 4.50 கோடி அச்சிடும் பணியும் நடக்கிறது

2,000 மாணவர்களுக்கு நேரடி நீட் பயிற்சி: ஏப்.5-இல் தொடக்கம்


தமிழகத்தில் நீட் தேர்வு எழுதுவதற்காகப் பதிவு செய்தவர்களில் 2,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குத் தமிழகத்தில் 9 மையங்களில் தங்கும் விடுதியுடன் நீட் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மத்திய அரசின் சார்பில் நடைபெறும் போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெற வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் 412 இலவசப் பயிற்சி மையங்களைத் தொடங்கி நடத்தி வந்தது.

இம்மையத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் 72,000 பேர் சனி, ஞாயிறுக்கிழமைகளில் பயிற்சி பெற்று வந்தனர். பிளஸ் 2 பொதுத்தேர்வை முன்னிட்டு இப்பயிற்சி தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள 8,233 மாணவர்களில் 2,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அவர்கள் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி உள்பட இடங்களில் உள்ள 9 கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டு நேரடிப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. வரும் ஏப்.5-ஆம் தேதி முதல் மே 3-ஆம் தேதி வரை பயிற்சி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், நீட் தேர்வு மே 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைக் கருத்தில்கொண்டு ஏப்.5 -ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்துக்கு 2,000 மாணவர்களுக்கு நேரடிப் பயிற்சியும், 6,233 மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையிலும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சி முதலில் நான்கு இடங்களில் மட்டுமே நடத்தத் திட்டமிட்டப்பட்டிருந்தது. தற்போது மாணவர்களின் நலன் கருதி 9 இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவடைந்ததும் ஏற்கெனவே தங்களது பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சியைத் தொடரலாம் என்றனர்.

Sunday, March 25, 2018

ஆண்டுக் கணக்கு முடிக்கும் நாள் மாற்றம்: ஏப். 1, 2-இல் வங்கிகள் இயங்காது


நிகழ் நிதியாண்டின் (2017-18) வங்கிக் கணக்கு முடிக்கும் நாள் ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து (ஞாயிற்றுக்கிழமை) ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு (திங்கள்கிழமை) மாற்றப்பட்டுள்ளது. எனவே, இரு தினங்களிலும் வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவையைப் பெற முடியாது. இதுதொடர்பாக, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் அண்மையில் வெளியிட்ட சுற்றறிக்கை:-

ஒவ்வொரு நிதியாண்டிலும் ஆண்டு இறுதி வங்கிக் கணக்குகள் முடிக்கும் நாள் ஏப்ரல் 1-ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. மேலும், சில மாநிலங்களில் அன்றைய தினம் கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகை தினமும் கொண்டாடப் படுகிறது. இதனை முன்னிட்டு, அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டுமென இந்திய வங்கிகள் நிர்வாகத் தரப்பிடம் (ஐபிஏ) அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி இந்தக் கோரிக்கை குறித்து கலந்தாலோசனை செய்தது.

இதைத் தொடர்ந்து, நிகழ் நிதியாண்டில் ஆண்டு இறுதி வங்கிக் கணக்குகள் முடிக்கும் நாளை ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு மாற்றுவதென இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. மேலும், வங்கிக் கணக்குகள் முடிக்கும் மாற்றுத் தேதி (ஏப்ரல் 2) குறித்த தகவலை மாநில அரசுகளுக்குத் தெரியப்படுத்துமாறு தனது பிராந்திய அலுவலகங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

மார்ச் 29, 30 வங்கிகள் விடுமுறை: வரும் வியாழக்கிழமை (மார்ச் 29), வரும் வெள்ளிக்கிழமை (30) ஆகிய இரு தினங்களும் அரசு விடுமுறை என்பதால் வங்கிகள் இயங்காது. எனினும், வரும் மார்ச் 31 என்பது மாதத்தின் ஐந்தாவது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் செயல்படும். வாடிக்கையாளர்கள் வங்கிகளின் சேவைகளைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, March 22, 2018

ஆண்டுவிழா விதிமுறைகள்


அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா உள்பட பல்வேறு விழாக்களை நடத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை விதித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஒன்றியத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 16 -ஆம் தேதி நடைபெற்ற ஆண்டு விழாவில், அதிக ஒளி கொண்ட சோடியம் விளக்கு பயன்படுத்தப்பட்டதால் மாணவர்களுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.

இதைத்தொடர்ந்து தொடக்கக் கல்வித் துறையின்கீழ் செயல்பட்டு வரும் அரசு, ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி , நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளில் இனிவரும் காலங்களில் ஆண்டு விழா நடத்தப்படும்போது பாதுகாப்பு குறித்த அறிவுரைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதில், "பள்ளிகளில் நடத்தப்படும் விழாக்கள் மாலை 6 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும்; விழாவின்போது அதிக ஒலி கொண்ட ஒலிப்பெருக்கி, அதிக ஒளி கொண்ட மின்விளக்கு சாதனங்கள் பயன்படுத்தக் கூடாது; விழா நடைபெறும் இடமானது மாணவர்களுக்கு பாதுகாப்பானதாகவும் எளிதில் மாணவர்கள் வெளியே சென்றுவர ஏதுவாகவும் இருத்தல் வேண்டும்; ஆண்டு விழா நடைபெறும் முன்னர் விழா மேடை, மாணவர்கள் இருக்கை, விழாவிற்காக பயன்படுத்தப்படும் ஒலி, ஒளி சாதனங்கள் ஆகியன அமைத்தல் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டும்' என தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

Tuesday, March 20, 2018

பள்ளி நிதி செலவினம்: அறிக்கை தயாரிப்பு மும்முரம்


தமிழகத்தில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், ஏப்., 20ம் தேதியுடன் முடிவடைகின்றன. மற்ற வகுப்புகளுக்கும், ஏப்., 19ம் தேதிக்குள் மூன்றாம் பருவ தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோடை விடுமுறை முன்கூட்டியே வழங்க திட்டமிட்டுள்ளதால், கடந்தாண்டு போல அல்லாமல், தேர்வுகளும் விரைவாக நடத்தப்படுகின்றன.

அதற்குள் பள்ளிகளுக்கு, அரசு சார்பில் வழங்கப்பட்ட நிதித்தொகைக்கான, வரவு-செலவு குறித்த அறிக்கை தயாரித்து சமர்ப்பிப்பது வழக்கம். இதில், இடம்பெற்ற தகவல்கள் ஆதாரப்பூர்வமாக இருக்கும் பட்சத்தில், கல்வித்துறை சார்பில், தடையின்மை சான்று வழங்கப்படும்.இது பெற்றால் மட்டுமே, அடுத்த கல்வியாண்டில் தொடர்ந்து, அரசின் திட்டங்களில் பங்கேற்க முடியும். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு, ஆண்டுதோறும், 7,500 ரூபாய், பராமரிப்பு செலவினத்திற்கு வழங்கப்படுகிறது.

அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு, அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ், 15 ஆயிரம் ரூபாய், பராமரிப்பு தொகையாக, ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுதவிர, ஆண்டுவிழாவுக்கு பிரத்யேக நிதி அளிக்கப்பட்டுள்ளது.இந்த தொகையை கொண்டு மேற்கொள்ளப்பட்ட அனைத்து செலவினங்களுக்கும், ரசீது இணைத்து அறிக்கை தயார் செய்ய வேண்டியது அவசியம்.இப்பணிகள் விறுவிறுப்பாக நடப்பதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,

'பள்ளி வேலை நாள் முன்கூட்டியே முடிவதால், நிர்வாக பணிகளும் முடிக்க வேண்டியுள்ளது. எனவே, பள்ளி வரவு-செலவு அறிக்கை தயாரித்து, கல்வித்துறை திட்ட அலுவலகங்களில், 'ஆடிட்டிங்' சமர்ப்பிக்க, பணிகள் நடக்கின்றன' என்றனர்.

Monday, March 19, 2018

அனைத்து மாவட்டங்களிலும் நடக்க இருந்த தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு திடீர் ரத்து: முறையான பட்டியல் இல்லை என குற்றச்சாட்டு


தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஓய்வு, விருப்ப ஓய்வு மற்றும் இறப்பு காரணமாக தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அப்பள்ளிகளில் பதவி உயர்வு மூலம் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதில் ஒன்றிய அளவில் முன்னுரிமை மற்றும் தேர்ந்தோர் பட்டியலின்படி வெளிப்படை தன்மையுடன் கலந்தாய்வு முறையில் பதவி உயர்வுகள் வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குநர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டு இருந்தார். இதற்கிடையில் நேற்று நடக்க இருந்த பதவி உயர்வுக்கான கலந்தாய்வை திடீரென ரத்து செய்து தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தொடக்கக்கல்வி அதிகாரிகள் கூறியதாவது:ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியாக உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களின் விவரங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது. ஆனால் அந்த பட்டியல் முறையாக தயாரிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. சிலர் இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து உடனடியாக கலந்தாய்வை ரத்து செய்ய உத்தரவிட்டார். இந்த பட்டியல் முழுமையாக தயாரிக்கப்பட்டு பின்னர் கலந்தாய்வு நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பள்ளிக் கட்டடங்கள் விதிமுறைப்படிதான் கட்டப்பட்டுள்ளனவா?: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு


தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டடங்கள் தேசிய கட்டட விதிகளுக்குட்பட்டு கட்டப்பட்டுள்ளனவா என்பது குறித்து மாவட்டக் கல்வி அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைத்து அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குநர் பாடம் நாராயணன் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த 2004 -ஆம் ஆண்டு கும்பகோணம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியாகினர்.

இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பள்ளிகளின் கட்டடத்தை அனைத்து கோணத்திலும் ஆய்வு செய்ய வேண்டும்; 2005 -ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேசிய கட்டட விதிகளை பின்பற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அரசு பள்ளிகள்கூட பின்பற்றுவதில்லை. உத்தரவுகள் அனைத்தும் வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளன.

தேசிய கட்டுமான விதிகளின்படிதான் பள்ளிகளின் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன என்பதையும், தீ தடுப்பு உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் அங்கு உள்ளன என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிசெய்ய உத்தரவிட வேண்டும். இதற்காக மாவட்டம்தோறும் குழுக்கள் அமைக்க வேண்டும்' எனக் கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை அரசு அதிகாரிகள் கடைபிடிக்காததால் தனியார் பள்ளிகளும் விதிமீறல்களில் ஈடுபடுகின்றன என மனுதாரர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளும் தேசிய கட்டட விதிகளின்படி கட்டப்பட்டுள்ளனவா, அவற்றில் தீ தடுப்பு உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்டங்கள் அளவில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளின் தலைமையில் குழுக்களை அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 9 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Sunday, March 18, 2018

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குளறுபடி கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


பொதுத் தேர்வில் குளறுபடி பற்றி மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. அவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு பொதுத்தேர்வையும் சந்திக்கும் வகையில் 12ம் வகுப்பு தேர்விற்கு பிறகு மாணவர்களுக்கு ஒரு அட்டவணை வழங்க இருக்கிறோம். அந்த அட்டவணையில் மத்திய அரசின் 29 பயிற்சி திட்டங்கள் குறித்த விபரங்களோடு, பயிற்சி நடைபெறும் மாநிலங்கள், அதற்கு விண்ணப்பிக்கும் காலம், தேர்வு தேதி குறித்த விபரங்களை ஆய்வு செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

பொதுவாக நமது கல்வி முறை மாறி வருவதோடு 12 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் மாற்றியமைக்கப்பட்டுள்ள பாடதிட்டங்கள் குறித்தும், அதற்கேற்ப மத்திய அரசு கொண்டு வரும் பொதுத்தேர்வை சந்திக்கும் வகையிலும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வில் கேள்வித்தாள் குளறுபடி பற்றி மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. அவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. கோபியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். ஜூன் மாதம் கோபியில் அரசு மற்றும் தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும்.

அதன்மூலம் தகுதி வாய்ந்த அனைவருக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றார்.கோயில் நிலங்களில் மைதானம்: பேட்டியின்போது, `பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை அதிகரிக்க தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் கோயில் நிலங்கள் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டு விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

பாட புத்தகம் தயாரிப்பு : 28க்குள் முடிக்க கெடு


புதிய பாடத்திட்டத்தின் கீழ், அனைத்து வகுப்புகளுக்கும், பாட புத்தகங்கள் தயாரிப்பை, மார்ச், 28க்குள் முடிக்க, பள்ளிக்கல்வித்துறை, கெடு விதித்துள்ளது.தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படுகிறது.

இதில், வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது.புதிய பாடத்திட்டத்தின்படி, பல்வேறு கல்லுாரிகள் மற்றும் பிரபல பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள், புதிய பாடப்புத்தகத்தை எழுதியுள்ளனர். அவற்றில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கான புத்தகங்கள், முழுமையாக சரிபார்க்கப்பட்டு, அச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஒன்பது மற்றும் பிளஸ் 1 புத்தகங்களின் அம்சங்கள், படங்கள், க்யூ.ஆர்., கோடு போன்றவற்றை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. அதேபோல், க்யூ.ஆர்., கோடு அடிப்படையில், மொபைல் ஆப்பில், வீடியோ படங்களும் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், பாட புத்தக ஆய்வு பணிகளை முழுமையாக முடித்து, மார்ச், 28க்குள் அச்சடிக்க வழங்குமாறு, மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதனால், இறுதி கட்டமாக, பிழை திருத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Saturday, March 17, 2018

பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வு விடைத்தாள் ஆசிரியர்கள் விரும்பும் மையத்தில் திருத்த அனுமதி


பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த, விரும்பிய மையங்களில் ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கும்படி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசந்தராதேவி, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிளஸ்1, பிளஸ்2 பொதுதேர்வின் விடைத்தாள் திருத்தும் பணியில் ஒரு கல்வி மாவட்டத்திற்குள் அமைக்கப்பட்ட விடைத்தாள் திருத்தும் மையங்களில், ஆசிரியர்கள் தான் சார்ந்த கல்வி மாவட்டத்திற்கு அருகில் உள்ள கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் அதற்கு அனுமதியளிக்கலாம். இதனால் அந்த கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி, குறித்த தேதிக்குள் நிறைவடையாத சூழ்நிலை ஏற்படுமேயானால், திருத்தப்பணி நிறைவுறாத மையத்தில் சென்று பணியாற்றி விடைத்தாள் திருத்தும் பணியினை குறித்த தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அனுமதிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.