இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, January 20, 2018

அரசின் இரு சக்கர வாகன திட்டத்துக்கு நாளை முதல் பிப். 5வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு


தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:

கியர் இல்லாத 125சிசி இயந்திரத் திறன் கொண்ட புதிய இரு சக்கர வாகனங்களுக்கு வாகன விலையில் ரூ.25 ஆயிரம் அதாவது 50 சதவீதம் தொகை பயனாளிக்கு அரசினால் வழங்கப்படும் என்றும், இரு சக்கர வாகனம் 2018ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு பின்னர் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். நிறுவனப் பணியிலுள்ள மற்றும் முறைசாரா பணியிலுள்ள பெண்கள், கடைகள் மற்றும் இதர நிறுவனங்களிலுள்ள பெண்கள், அரசு சார்பு நிறுவனம், தனியார் நிறுவனம், சமுதாய அமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மகமை அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெண் வங்கி வழி நடத்துநர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதாரஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஊரின் கடைநிலைப்பகுதி மலைப்பகுதி, மகளிரை குடும்ப தலைவராக கொண்ட பெண், ஆதரவற்ற மகளிர், ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளி (பெண்), திருமணமாகாத 35 வயதுக்கு மேற்பட்ட மகளிர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மகளிர் மற்றும் திருநங்கையினருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். தமிழ்நாட்டை சார்ந்த 18 முதல் 40 வயது வரையுள்ள இருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ள பெண்கள், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து ஐம்பது ஆயிரத்துக்கு மிகாமல் உள்ள பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

பயனாளிகள் தங்களுக்கு விருப்பமுள்ள 125சிசி திறன் கொண்ட இருசக்கர வாகனத்தை சொந்த நிதியிலிருந்து அல்லது இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிலுள்ள வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வசதி பெற்றும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். மேலும், மனுவுடன் பிறந்த தேதிக்கான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, இருசக்கர வாகன உரிமம், ஆதார் அடையாள அட்டையின் நகல், உரிய அலுவலரால் வழங்கப்பட்ட இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் - நகல், வேலை வழங்கும் அலுவலரால், நிறுவனத்தால் வழங்கப்படும் வருமான சான்றிதழ் அல்லது சுய வருமான சான்றிதழ், நிறுவனத் தலைவர் சங்கங்கள் மூலம் ஊதியம் பெறுபவர்களின் ஊதியச்சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுள்ளவர்களின் சான்றிதழ்கள், கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம், சிறப்பு தகுதி பெற விரும்புவோர் அதற்குரிய சான்றிதழ், சாதி சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர்) உரிய அலுவலரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் இருசக்கர வாகனத்தின் விலைப்புள்ளி ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கான மனுக்கள் நாளை முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும், திருச்சி உட்பட மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பிப்ரவரி 5ம் தேதி கடைசி நாள்.

Friday, January 19, 2018

CPS interest

போலியோ தடுப்பு மருந்து: பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு


போலியோ தடுப்பு மருந்து குறித்து பெற்றோர், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கல்வித்துறை அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத் துறை சார்பில், வரும் 28 மற்றும் மார்ச் 11 ஆகிய நாள்களில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலியோ தடுப்பு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளது.

போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம்களாக செயல்படவுள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் இதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பள்ளி தலைமையாசிரியர்கள் காலை இறை வணக்கத்தின்போது இது குறித்து மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களின் பெற்றோருக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாட்டு நலப்பணித் திட்ட மாணவ தொண்டர்கள், தேசிய பாதுகாப்பு படை மாணவர்கள், ஆசிரியர்கள் மூலம் இந்தப் பணிக்கான ஒத்துழைப்பை சிறப்பாக வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்களை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து இந்த முகாம்கள் சிறப்பாக செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.

பி.எப்., வட்டி: அரசு உத்தரவு


பங்களிப்பு ஓய்வூதியம் திட்டத்தில், பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, 7.6 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு ஊழியர்களிடம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை, பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகைக்கு, 2017 அக்டோபர், 1 முதல், டிச., 31 வரை, 7.8 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஜனவரி, 1 முதல், மார்ச், 31 வரை, 7.6 சதவீத வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசின், நிதித்துறை செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

Thursday, January 18, 2018

5, 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு: விரைவில் மசோதா: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்


தொடக்கக் கல்வியை மேம்படுத்தும் வகையில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறையை அமல்படுத்துவதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். 'இம்மசோதாவுக்கு இதுவரை 26 மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்து விட்டன. ஒருசில மாநிலங்கள் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

விரைவில் அந்த மாநிலங்களிடமும் ஒப்புதல் பெறப்படும்' என்றும் அவர் கூறினார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்' சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட இரண்டு நாள் கல்வி மாநாட்டின் இறுதி நாளான வியாழக்கிழமை நிகழ்வில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியது: ஒரு நாட்டைப் பாதுகாக்க ராணுவம் எந்த அளவுக்குத் தேவையோ, அதுபோல ஒரு நல்ல பண்பு நிறைந்த சமூகத்தைப் பாதுகாக்க சிறந்த பள்ளிகள் தேவை. இதை உணர்ந்துள்ள மத்திய அரசு தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை மிகப் பெரிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.

பல சிறிய நாடுகளிலும்கூட, ஒன்றாம் வகுப்பு முதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை தேர்வுகள் நடத்தப்படுவதில்லை. மாணவர்களை முறையாக மதிப்பீடு செய்யாமலேயே 9-ஆம் வகுப்புக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால், மாணவர்கள் பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு, 7-ஆம் வகுப்பு மாணவருக்கு, 4-ஆம் வகுப்பு கணிதத்தைப் போடத் தெரிவதில்லை.

இதை மாற்றி, முறையான, தரமான தொடக்கக் கல்வியை குழந்தைகளுக்கு வழங்கும் நோக்கத்தோடு 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறை (போர்டு எக்ஸாம்) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான சட்ட மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இதன்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு மார்ச் மாதம் நடத்தப்படும் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, மே மாத துணைப் பொதுத் தேர்வில் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். இந்த இரண்டாவது வாய்ப்பிலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அடுத்த வகுப்புக்கு அனுப்பப்பட மாட்டார்கள். இந்தச் சட்ட மசோதாவுக்கு இதுவரை 26 மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்துவிட்டன. எதிர்ப்புத் தெரிவித்து வரும் ஒரு சில மாநிலங்களிடமும் விரைவில் ஒப்புதல் பெறப்பட்டுவிடும்.

8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்'


எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள், இன்று, 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்யலாம். எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, வரும், 29ல் பொது தேர்வு நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்தோர், இன்று முதல், அரசு தேர்வுத்துறையின், http://www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என, அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்து உள்ளது

எமிஸ்' இணையதளத்தில் சிறப்பு வசதி ஜன., 25க்குள் பணி முடிக்க உத்தரவு


எமிஸ்' இணையதளத்தில், விடுபட்ட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், புதிய பதிவு எண் உருவாக்க, சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதால், 25க்குள், பணிகளை முடிக்குமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், அனைத்து வகை பள்ளிகளின் தகவல்களை திரட்டி, ஆவணமாக்கும் வகையில், 'எமிஸ்' எனப்படும், பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை இணையதளம், 2012ல் துவங்கப்பட்டது.

இதில் ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களை, களையும் வகையில், அண்ணா பல்கலை தொழில்நுட்பக் குழு உதவியோடு, மேம்படுத்தப்பட்ட எமிஸ் இணையதளம், 2017 ஜூனில் உருவாக்கப்பட்டது. பள்ளி வாரியாக, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றிய தகவல்கள் அடிப்படையாக வைத்து, மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. எனவே, 'ஆதார்' எண் கட்டாயம் இணைக்க வேண்டுமென, வலியுறுத்தப் படுகிறது. இதற்காக, 413 வட்டார வள மையங்களிலும், ஆதார் பதிவுக்கான மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

எமிஸ் இணையதளத்தில், மாணவர்களின் தகவல் பதிவேற்றும் பணிகள் முழுமை பெறவில்லை. இடம் பெயர்வு காரணமாக, வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து, அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு, புதிய பதிவு எண் உருவாக்குவதில் சிக்கல் நீடிப்பதாக, புகார் எழுந்தது. இதனால், விடுபட்ட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், புதிய பதிவு எண் உருவாக்க, நேற்று முதல், 25 வரை, சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் ஒருவர் கூறுகையில், 'எமிஸ் பதிவு எண் இல்லாத மாணவர்களின், தகவல்களை புதிதாக சேர்க்க, சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

'இவ்வாய்ப்பை பயன்படுத்தி, அனைத்து வகை பள்ளிகளும், 25க்குள், மாணவர்களின் தகவல்களை பதிவேற்றும் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 'இக்காலக்கெடு இறுதியானது என்பதால், தலைமையாசிரியர்கள் அலட்சியம் காட்டக் கூடாது' என்றார்.

B Ed பட்டப்படிப்பு பயிற்சி அரசாணையில் ஆணையில் திருத்தம்.



Wednesday, January 17, 2018

*English phonetics Training for primary upper primary trs!!!*

Click below

https://app.box.com/s/eqgiod4fyq7lxs4ahnearpipw9t4d5kd

EMIS


அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை வண்ணத்தில் மாற்றம்!: தயாராகும் துணிநூல் துறை


தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவசச் சீருடையின் நிறம் அடுத்த கல்வியாண்டு (2018-19) முதல் மாற்றப்படுகிறது. இந்த மாற்றத்தை எதிர்கொள்ள துணிநூல் துறையினர் தயாராகி வருகின்றனர். 1 முதல் 5 -ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மெரூன் நிற கால் சட்டை - வெளிர் சந்தன நிறச் சட்டையும், மாணவிகளுக்கு இதே நிறத்தில் ஸ்கர்ட்- சட்டையும் சீருடையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 6 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு பச்சை நிற கால்சட்டையும், மாணவிகளுக்கு பச்சை நிற சுடிதாரும் சீருடையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தலா 4 செட் சீருடைகளை அரசே வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான சீருடைத் துணி உற்பத்திக்கான நூல் ஒப்பந்தப் புள்ளி பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் சென்னையில் கைத்தறி, துணிநூல் துறை மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நிகழாண்டில் சீருடைத் துணி உற்பத்தி, விநியோகப் பணிகள் தாமதமாகும் எனத் தெரிகிறது. இதுகுறித்து துணிநூல் துறையினர் கூறியதாவது:

அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பள்ளிச் சீருடையை அறிமுகம் செய்து அரசு அறிவித்துள்ளது. இந்தச் சீருடைகள் உற்பத்திப் பணியை 125 நாள்களுக்குள் (மே மாதத்துக்குள்) முடித்து சமூகநலத் துறையிடம் ஒப்படைக்கப்படும். அதன்பின் பள்ளிக் கல்வித் துறை மூலம் சீருடைகள் விநியோகம் செய்யப்படும். இந்த ஆண்டு மே மாதத்துக்குள் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் 2 ஜோடி சீருடையும், அடுத்த இரண்டு மாதங்களில் தலா ஒரு ஜோடி சீருடையும் விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

வரும் கல்வியாண்டில் 1,6&9 ம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் தயார்


தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு கடைசியாக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அதுபோல 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை உள்ள பாடத்திட்டங்கள் 7 வருடங்களுக்கு முன்பாக மாற்றி அமைக்கப்பட்டது. பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் தரத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து தரப்பில் இருந்தும் விடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்க அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதுபற்றி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வரும் கல்வி ஆண்டில் அமல்

1, 6, 9, மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை வருகிற கல்வி ஆண்டு (2018-2019) முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்காக பல்வேறு கூட்டங்கள் நடத்தி எப்படி பட்ட பாடத்திட்டத்தை கொடுக் கலாம் என்று எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைமையிலான குழு முடிவு செய்தது.

இதேபோல் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த கருத்துகளில் தேவையானவை மற்றும் தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் தெரிவித்தவற்றில் சிறந்த கருத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன. மாணவர்களுக்கு புத்தக சுமை இருக்கக்கூடாது என்று கருதி பருவ முறையில் (ஒரு ஆண்டுக்கு 3 பருவமாக ) பாடப்புத்தகங்கள் தொகுக்கப்பட்டு வருகிறது.

பாடத்திட்டம் தயார்

முதல் கட்டமாக 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம் உள்பட 7 மொழிகளில் புதிய பாடத்திட்டம் தயாராகி வருகிறது. 1, 6, 9 வகுப்புகளில் முதல் பருவ பாடத்திட்டங்கள் ஆங்கில மொழியில் மட்டும் தயாரிக் கப்பட்டு உள்ளது. மற்ற மொழிகளில் தயாராகி வருகிறது.

இந்த பாடத்திட்டத்தில் மனப்பாடத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் புரிந்து கொண்டுபடிப்பதற்கு முக்கியத்துவம் அளித்து தயாரிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதிக அளவில் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது. பாடத்திட்டம் சிறப்பாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

ஆர்வத்துடன் படிப்பார்கள்

மொத்தத்தில், படிக்கும் மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்கும் விதமாக புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. பாடத்திட்டம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்மார்ட்' அடையாள அட்டை


தமிழக பாடத்திட்ட பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும், 'ஆதார்' எண்ணுடன் கூடிய, 'ஸ்மார்ட்' அடையாள அட்டை, அடுத்த ஆண்டு வழங்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக் கல்வி தரத்தை உயர்த்த, பாடத்திட்ட மாற்றம், ஸ்மார்ட் வகுப்பு, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி என, பல பணிகள் நடந்து வருகின்றன.

வரும் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறந்ததும், அனைத்து மாணவர்களுக்கும், ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதற்காக, மாணவர்களின் முழு விபரங்களையும் சேகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இறுதியாண்டு தேர்வுக்கு முன், இந்த பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாணவர்களின், 'ஆதார்' எண், மொபைல்போன் எண், பெற்றோர் விபரம், முகவரி, ரத்தப் பிரிவு, கற்பிக்கும் மொழி, கல்வி மேலாண் தகவல் அமைப்பான, 'எமிஸ்' எண் ஆகியவை, ஸ்மார்ட் அட்டையில் இடம்பெற உள்ளன.

இந்த அட்டையில், சிறிய வகை, 'சிப்' பொருத்தவும், அதன் மூலமாக மாணவர்களுக்கு, 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவு மேற்கொள்ளவும், கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

பொங்கல் முடிந்தது போனஸ் வருமா?


தமிழக அரசு அறிவித்த, பொங்கல் போனஸ் பணம், பொங்கல் முடிந்த பின்பும், இன்னும் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை, 14ம் தேதி கொண்டாடப்பட்டது. அதையொட்டி, அரசு ஊழியர், ஆசிரியர்களில், சி மற்றும் டி பிரிவினருக்கு, 3,000 ரூபாய் போனஸ் வழங்க, அரசு உத்தரவிட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி, 10 நாட்கள் ஆகி விட்ட நிலையில், இன்னும் பணம் வழங்கப்படவில்லை.

ஐந்து நாள் பொங்கல் விடுமுறை முடிந்து, நேற்று வேலை நாள் துவங்கிய நிலையில், மாலை வரை பணம் வரவில்லை என, ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தெரிவித்துள்ளனர். 'அரசின் நிதித் துறையில் இருந்து பண ஒதுக்கீடு கிடைத்ததும், கருவூலம் மூலமாக, அவரவர் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்' என, அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டது. இந்நிலையில் அரசு அறிவித்தும் பொங்கல் போனஸ் தொகை இன்னும் கைக்கு வந்து சேராததால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

Tuesday, January 16, 2018

ஒரு இடத்தில் கூட நிரந்தர முதல்வர் இல்லை அரசு பி.எட் கல்லூரிகளில் 85 சதவீத பணியிடம் காலி: என்சிடிஇ அங்கீகாரம் ரத்தாகும் அபாயம்


தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் 85 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், நடப்பாண்டு என்சிடிஇ அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்வியியல் (பி.எட்,எம்.எட்) கல்லூரிகள், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

சென்னை சைதாப்பேட்டை, சென்னை லேடி வெலிங்டன், நாமக்கல் குமாரபாளையம், வேலூர், நெல்லை, மதுரை, கோவை, தஞ்சாவூர் ஒரத்தநாடு உள்ளிட்ட 7 இடங்களில் அரசு கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. மேலும் திருச்சி, பெரம்பலூர் மற்றும் விழுப்புரத்தில் உறுப்பு கல்லூரிகள் உள்ளன. இதுதவிர, சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் புதிதாக கல்வியியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் 85 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:கல்வியியல் கல்லூரிகள் அனைத்தும் பெங்களூரை தலைமையிடமாக கொண்ட, தேசிய கல்வியியில் கழகத்தின் (என்சிடிஇ) அங்கீகாரம் பெற்று செயல்படுகின்றன. என்சிடிஇ விதிப்படி, ஒவ்வொரு கல்லூரியிலும் மொத்தம் 12 பேராசிரியர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக பார்த்தால் 20க்கும் குறைவான பேராசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். சுமார் 85 சதவீத இடங்கள் காலியாக உள்ள நிலையில், கவுரவ பேராசிரியர்கள் மட்டுமே நீண்டகாலமாக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிஎட் படிப்பு காலம் 2 வருடமாக உயர்த்தப்பட்டது. அதன்படி பார்க்கும்போது, பேராசிரியர்களின் எண்ணிக்கையும் இருமடங்காக்க வேண்டும்.

இது ஒருபுறம் இருக்க, ஒரு கல்லூரியில் கூட நிரந்தர முதல்வர் இல்லை. பேராசிரியர் எண்ணிக்கை, கட்டமைப்பு வசதி, கல்வி உபகரணங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து தான் என்சிடிஇ அங்கீகாரம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டு முடிவதற்குள், தமிழக கல்வியியல் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என பல்கலைக்கழகம் சார்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உயர்கல்வித்துறைக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை புதிய நியமனங்களுக்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், அரசு கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதுடன், நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது என்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில நாளிதழ்'


தமிழகத்தில் உள்ள 31,322 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் வகையில், ஆங்கில நாளிதழ் வழங்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, மாணவ, மாணவிகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் வகையில், ஆங்கில நாளிதழ் தமிழகத்தில் உள்ள 31,322 அரசுப் பள்ளிகளுக்கும் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் நாளிதழின் ஒவ்வொரு பிரதி வழங்கப்படும் என்றார் அவர்.

4 தமிழக அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து


பள்ளிக் கல்வித் துறையை சேர்ந்த இயக்குனர், கார்மேகம் உள்ளிட்ட நான்கு பேருக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.தமிழக அரசு துறைகளில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு, பணி அனுபவம், ஆங்கில மொழித் திறன், பணித் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தும், அதற்கான பதவி உயர்வும் வழங்கப்படும்.

இந்த ஆண்டு, நான்கு, ஐ.ஏ.எஸ்., இடங்களுக்கு, 2017 டிச., 27ல், புது டில்லியில் நேர்காணல் தேர்வு நடந்தது. அதில், தமிழகத்தை சேர்ந்த, 19 அதிகாரிகள் பங்கேற்றனர். தேர்ச்சி பட்டியல், நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தொடக்க கல்வி இயக்குனராக இருந்த கார்மேகம், ஊரக வளர்ச்சி துறை அதிகாரி, மேகராஜ், பதிவுத்துறை கூடுதல், ஐ.ஜி., ரத்னா மற்றும் கூட்டுறவு துறை சிறப்பு அதிகாரி, சிவன் அருள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்

Monday, January 15, 2018

கல்வி சுற்றுலாவுக்குகட்டுப்பாடு விதிப்பு


உயரதிகாரிகளின் முன்அனுமதியின்றி, ஆபத்தான இடங்களுக்கு மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்து செல்லக்கூடாது; விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்,' என, தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டில், அரையாண்டு தேர்வுகள் முடிந்த நிலையில், ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களை, கல்வி சுற்றுலாஅழைத்து செல்வது வழக்கம்.

ஒவ்வொரு ஆண்டும் இது வழக்கமாக நடைபெறும் என்ற போதும், மாணவர் பாதுகாப்பு கருதி, பல்வேறு உத்தரவுகளை கல்வித்துறை, அவ்வப்போது பிறப்பிக்கும்.சில தினங்களுக்கு முன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர் மூலம் தலைமை ஆசிரியருக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில்,'பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும் எனில், அந்த இடம், நாட்கள் உள்ளிட்ட விவரங்களை, உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி, அனுமதி பெற வேண்டும்.

குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்கும், இடம் பற்றி முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மாணவியரை, பெண் ஆசிரியர்களுடன் அழைத்து செல்ல வேண்டும். ஆபத்தான, வெள்ள அபாயம் உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா செல்லக்கூடாது,' என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது