இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, January 03, 2018

மொபைல் - ஆதார்' இணைப்பது இனி எளிது!


மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். 2017 டிசம்பருக்குள் இணைக்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என, மத்திய அரசு எச்சரித்தது. அதனால், அந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர் மையங்களில், மக்கள் முட்டி மோதினர்.

இதையடுத்து, அதற்கான கெடு, வரும் மார்ச் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது.இந்த சூழலில், ஆதார் எண்ணுடன், வாடிக்கையாளரே, மொபைல் எண்ணை இணைக்கும் வகை யில், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, '1456' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை, மொபைலில் அழைத்தால், பதிவு செய்யப்பட்ட குரல் சேவை ஒலிக்கும். அதில், விருப்ப மொழியை தேர்ந்தெடுத்து, உங்கள் ஆதார் எண்ணை, 'டைப்' செய்ய வேண்டும்.

அது, உடனடியாக தனித்துவ அடையாள எண் ஆணையமான, யு.ஐ.டி.ஏ.ஐ.,க்கு அனுப்பப்படும்.அது, தகவல்களை உறுதி செய்ததும், 'ஒன் டைம் பாஸ்வேர்டு' மொபைல் போனுக்கு வரும். அந்த எண்ணை உடனே, 'டைப்' செய்து அனுப்பிய பின், இணைப்பை துண்டிக்கலாம். அடுத்த நிமிடத்தில், உங்கள் எண், ஆதாருடன் இணைத்ததை உறுதி செய்து, எஸ்.எம்.எஸ்., செய்தி வரும். சில நிமிடங்களில் இதைச் செய்து விடலாம்.

Tuesday, January 02, 2018

பகுதி நேர பி.இ.: இன்று முதல் பதிவு செய்யலாம்


பகுதி நேர பொறியியல் படிப்புகளில் சேர புதன்கிழமை (ஜன.3) முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத் துறைகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் பகுதி நேர பி.இ. படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் பட்டப் படிப்புகளில் ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் மட்டுமே சேர்க்கை பெற முடியும். இந்தப் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் www.annauniv.edu/bept2018 என்ற இணையதளத்தில் புதன்கிழமை முதல் பதிவு செய்யலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஜெனரிக்' மருந்து 96 சதவீதம் விலை குறைவு


பி.எம்.பி.ஜே.பி., எனப்படும், பிரதமர் பார்திய ஜனஷாதி பாரியோஜனா திட்டத்தில், 'ஜெனரிக்' எனப்படும் பொது மருந்துகள், வழக்கமாக விற்கப்படும் அலோபதி மருந்துகளின் விலையில், 96 சதவீதம் வரைகுறைவாக விற்கப்படுகின்றன.லோக்சபாவில் நேற்று, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர், மன்ஷுக் மாண்டவியா, கேள்வி ஒன்றுக்கு, எழுத்து மூலம் அளித்த பதில்:

மருந்துகடைகளில்,நிறுவனங்களின் பிராண்டுகள் பெயரில் கிடைக்கும் மருந்துகள், அதிக விலைக்கு விற்கப்படு கின்றன.இவை, பிராண்டுகளின் பெயரில் அல்லாமல், ஜெனரிக் எனப்படும் பொது மருந்துகளாக, மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கின்றன. வழக்கமான மருந்துகளை ஒப்பிடுகையில், ஜெனரிக் மருந்துகள், 96 சதவீதம் வரை குறைவாக விற்கப்படுகின்றன.

கொழுப்பை குறைக்க உதவும், அடோர்வாஸ்டாலின், 10 மில்லிகிராம் எடையளவு, 10 மாத்திரைகள், 70 ரூபாய்க்கு கடைகளில் விற்கப்படுகின்றன.இதே போன்ற ஜெனரிக் மாத்திரைகள், எட்டு ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.கடந்த, 2017, டிச., 27ம் தேதி வரை, நாடு முழுவதும், 3,033 ஜெனரிக் மருந்து கடைகள் செயல்பட்டு வருகின்றன.இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.

450 தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி - மாநில திட்ட இயக்குநர் கடிதம்


Monday, January 01, 2018

புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக தொடர் மறியல் : ஜாக்டோ ஜியோ குழு முடிவு


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, தொடர் மறியலில் ஈடுபட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்புக்குழு முடிவு செய்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தபடி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஜாக்டோஜியோ ஒருங்கிணைப்பு குழு நீண்டநாட்களாக வலியுறுத்தி வருகிறது. இதை கண்டித்து, கடந்தாண்டு நடந்த போராட்டம் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவால் திரும்ப பெறப்பட்டது. இவ்வழக்கு, நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்களில் ஈடுபட சென்னையில் நடந்த ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் பார்த்திபன், ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலருமான பேட்ரிக் ரெய்மண்ட் ஆகியோர் கூறியதாவது: கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில், ஜன., 6 தொடர் முழக்க போராட்டம், ஜன., 3ல் மாவட்ட கூட்டங்கள், ஜன., 9, 10 ல் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், சட்டசபை கட்சித் தலைவர்களை சந்திப்பது, பிப்., 4ல் சென்னையில் கருத்தரங்கு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கோரிக்கைகளை நிறைவேற்றாதபட்சத்தில், மதுரையில் இம்மாத இறுதிக்குள் நடக்கும் உயர்மட்டக்குழு கூட்டத்தில் தொடர் மறியல் போராட்ட தேதியை அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.இவ்வாறு கூறினர்.

பள்ளிகளில் இனி கல்வி நிகழ்ச்சிகள் மட்டுமே : அரசு உத்தரவு


தமிழகத்திலுள்ள அரசு துவக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இனி கல்வி நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்த அனுமதியளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், கருத்தரங்கள் நடத்த அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். மற்ற பொது நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியளிக்க கூடாது என, பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். கல்வி நிகழ்ச்சிகள் குறித்து, முன்கூட்டியே மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி கல்வி நிறுவனங்கள் அனுமதி பெற வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும், எனக் கூறியுள்ளார்.

Sunday, December 31, 2017

ஜாக்டோ-ஜியோ போராட்டம் அறிவிப்பு


ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் நேற்று அவசரமாக சென்னையில் கூடி ஆலோசித்தனர். தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க கட்டிடத்தில் நடந்த கூட்டத்துக்கு இரா.தாஸ், அன்பரசு ஆகியோர் தலைமை வகித்தனர். மற்ற ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு அடுத்தகட்ட நகர்வு குறித்து பேசினர். கூட்டத்தின் இறுதியில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் குறித்து ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் கூறியதாவது:

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்யும் அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று கேட்பது, பொங்கல் போனஸ் கேட்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் 6ம் தேதி தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும். மாவட்ட அளவில் 3ம் தேதி கூட்டங்கள் நடத்துவது, 9 மற்றும் 10ம் தேதிகளில் அனைத்து அரசியல் கட்சி சட்ட மன்ற, கட்சி தலைவர்கள், அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளோம்.

முன்னதாக 4ம் தேதி புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் குறித்து கருத்தரங்கு நடத்த உள்ளோம். இதையடுத்து மதுரையில் உயர்மட்டக் குழு கூட்டத்தில் தொடர் மறியல் போராட்டம் நடத்துவது குறித்து முடிவெடுத்து அதற்கான தேதியை அறிவிக்க உள்ளோம். இவ்வாறு தாஸ் கூறினார்

செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் இணைக்க புதிய நடைமுறை: ஜனவரி முதல் வாரத்துக்குள் அமல்படுத்த வாய்ப்பு


செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதாரை எளிதாக இணைப்பதற்கு புதிய நடைமுறைகளை ஜனவரி முதல் வாரத்துக்குள் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக பி.எஸ்.என்.எல். நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். அரசின் நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், மற்ற சேவைகள் பெறவும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வங்கிக் கணக்கு, செல்லிடப்பேசி எண் உள்பட பல்வேறு சேவைத் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை 2018- ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்லிடப்பேசி மூலம் பல்வேறு சேவைகள் வழங்கி வரும் தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் செல்லிடப்பேசி எண்களுடன் ஆதாரை இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆதார் எண்ணை இணைக்க அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதற்கிடையில், செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதாரை எளிதாக இணைப்பதற்கு ஓடிபி நடைமுறையும், ஐவிஆர் எனப்படும் செல்போன் அழைப்பு மூலமாகவும் ஆதார் எண்ணை இணைக்கும் நடைமுறை ஜனவரி 1-ஆம் தேதி அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பின்படி, இதற்கான மென்பொருள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.இதையடுத்து, இந்த புதியமுறைகள் ஜனவரி முதல் வாரத்துக்குள் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக பி.எஸ்.என்.எல். நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியது: இந்த முறையில் மூத்த குடிமக்களுக்கு பதிவு செய்வதில் உள்ள சிரமம் பற்றி தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது. இதில் உள்ள சில சிரமங்களை தீர்க்கும் வகையில் புதிய முறைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடைகளில் செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதாரை இணைக்கும்போது, பணம் செலுத்துவதில் உள்ள சிரமம், ஆதாரில் பதிவு செய்யாத வாடிக்கையாளர்களை முதலில் பதிவு செய்து பின்னர் செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதாரை இணைப்பது ஆகியவை எளிதாக செய்வதற்கு முயற்சி எடுக்கப்படுகிறது என்றனர் அதிகாரிகள்.

செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் இணைப்பு பணி தீவிரம்: பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் கடந்த 5 மாதமாக ஈடுபட்டு வருகிறது. சென்னை தொலைபேசி வட்டத்தில் 12 லட்சம் செல்லிடப்பேசி சந்தாதாரர்கள் உள்ளனர். இவர்களில் 4.5 லட்சம் பேரின் செல்லிடப்பேசி எண்களுடன் ஆதார் எண் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளது. தினமும் 3,000 முதல் 4,000 பேரின் செல்லிடப்பேசி எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு வட்டத்தில் 75 லட்சம் சந்தாதாரர்களில் 37 லட்சம் சந்தாதாரர்களின் செல்லிடப்பேசி எண்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 70 கோடிக்கும் மேலான செல்லிடப்பேசி எண்களுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Saturday, December 30, 2017

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் கவனத்துக்கு...


தமிழகத்தில் வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் செவ்வாய்க்கிழமை (ஜன.2) முதல் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கடந்த டிச.22}ஆம் தேதி முதல் டிச.29}ஆம் தேதி வரையிலான நாள்களுக்குள் தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. இந்த நாள்களில் விண்ணப்பிக்கத் தவறி தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் (தத்கல்) கீழ் ஜன.2}ஆம் தேதி முதல் ஜன.4}ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

எங்கு விண்ணப்பிப்பது? மாணவர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தனியார் இணையதள மையங்கள் வழியாக விண்ணப்பிக்கக் கூடாது. சேவை மையங்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலும், அனைத்து முதன்மைக் கல்வி, மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகங்களிலும் தெரிந்து கொள்ளலாம். அறிவியல் பாடத்துக்கான செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு கருத்தியல் தேர்வுக்கு விண்ணப்பிக்காத தனித்தேர்வர்கள், புதிய பாடத்தில் தேர்வெழுதி தோல்வியடைந்தவர்கள், பழைய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தைத் தவிர பிற பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் ஆகியோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம் எவ்வளவு? தேர்வுக்கட்டணம் ரூ.125; சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.500; இணையதள பதிவுக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.675}ஐ ரொக்கமாக சேவை மையங்களில் செலுத்தி, ரசீதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். கட்டணம் செலுத்திய ரசீதில் உள்ள எண்ணைக் கொண்டே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களுக்கும் அந்தந்த கல்வி மாவட்டங்களிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வு மைய விவரம் அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்படும்.

Friday, December 29, 2017

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் தட்கலில் விண்ணப்பிக்கலாம்


அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தரதேவி நேற்று வெளியிட்ட அறிக்கை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள் டிசம்பர் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

மேற்கண்ட தேதிக்குள் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தக்கல்) ஜனவரி 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். சேவை மையங்கள் பற்றிய விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்வுக் கட்டணமாக ரூ.125 மற்றும் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.500, ஆன்லைன் கட்டணம் ரூ.50 உள்பட மொத்தம் ரூ.675ஐ செலுத்த வேண்டும். தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித் தேர்வர்களுக்கும் அந்தந்த கல்வி மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இது குறித்த விவரம் ஹால்டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கனவு ஆசிரியர்’ விருது மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க குழுக்கள் அமைப்பு


தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:–

அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறந்த முறையில் கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு கனவு ஆசிரியர் விருதுடன், ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று 2017–18–ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

அதன்படி கனவு ஆசிரியர் விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர் தலைவராகவும், பள்ளிக்கல்வித்துறை கூடுதல், இணை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குனர், அரசு தேர்வுகள் துறை இயக்குனர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் திட்ட இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (மேல்நிலை கல்வி) உறுப்பினர் செயலராகவும் மாநில குழு அமைக்கப்படுகிறது.

முதன்மை கல்வி அலுவலர் தலைவராகவும், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மூத்த உதவி தொடக்க கல்வி அலுவலர், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற மூத்த தலைமை ஆசிரியர், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கூடுதல் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்படுகிறது. ஒரு மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்கள் வீதம் 192 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.19 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வு: மாணவருக்கு இலவச கையேடு : 70 ஆயிரம் மாணவர்களுக்கு பயன்


நீட், ஐ,ஐ.டி., போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சிறப்பு கையேடுகள் வழங்கியுள்ளது. 'நீட்', ஐ.ஐ.டி., ஜே.இ.இ. போன்ற தகுதித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த சிறப்புமையங்கள் துவக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக மாவட்டம் தோறும் தலா 3 'தொடுவானம்' சிறப்பு மையங்கள் துவங்கப்பட்டுள்ளன.

இம் மையங்களில் ஆன்-லைன் வசதியுடன் வீடியோ கான்பரசிங் முறையில் கல்வியாளர்கள், நிபுணர்கள் பயிற்சி அளிக்கின்றனர். இம்மையங்களில் பயிற்சி பெற தமிழகம் முழுவதும் 70 ஆயிரம் மாணவர்கள் ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர்.இவர்களுக்கு 'ஸ்பீடு இன்ஸ்டியூட்' மூலம் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும் போட்டித்தேர்விற்கான 300 பக்க கையேடுகள் பாகம்,1, பாகம் 2 என இரு புத்தகங்களாக மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அதில், தேவையான இடங்களில் அட்டவணை தரப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் பல்வேறு தேர்வுகளில் கேட்கப்பட்டிருந்தவை உட்பட 500க்கும் மேற்பட்ட கேள்விகள, இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ஒரு புத்தகத்தின் மதிப்பு ரூ. 300க்கும் மேல் இருக்கும் என, கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Thursday, December 28, 2017

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டுவிழா கொண்டாட உத்தரவு


தமிழக அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக க அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களிடம் ஏற்படுத்தவும், பள்ளிகளுடனான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கவும், மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தவும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழாக்களை கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

நன்கொடை பெற்று நடத்தலாம்: அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுடன் கலந்தாலோசித்து பள்ளி ஆண்டு விழா நடத்தப்படும் தேதியை முடிவு செய்து அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விழாவில் மாணவர்களின் பெற்றோர் கட்டாயம் இடம் பெற வேண்டும். கூடுதலாக அந்தப் பகுதியைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், கல்வியாளர்களை பங்கு கொள்ளச் செய்ய வேண்டும். இதற்கான நிதி அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் தொகை தேவைப்படும் நிலையில் அருகில் உள்ள தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து நன்கொடையாகப் பெற்று ஆண்டு விழாவை நடத்த வேண்டும்.

80-க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால்...

மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 80-க்கும் குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகள், 120-க்கும் குறைவாக உள்ள நடுநிலைப்பள்ளிகளுக்கு ஆண்டுவிழா கொண்டாட நிதி ஒதுக்கப்படவில்லை. அந்தப் பள்ளிகள் அருகில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களிடமிருந்து நன்கொடை பெற்று ஆண்டு விழாவை நடத்தலாம். இதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகள் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தச் செய்வதாக இருக்க வேண்டும். பள்ளியின் இறுதித் தேர்வு முடிவதற்குள் இந்த விழாக்கள் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

பள்ளி ஆண்டு விழாக்களில் அரசியல்வாதிகளுக்கு அனுமதி


பள்ளி ஆண்டு விழாக்களில், அரசியல்வாதிகள் பங்கேற்க, பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது. பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுவதற்கான வழிமுறைகளை, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், நந்தகுமார், சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.

அதன் விபரம்: பள்ளி ஆண்டு விழாக்களில், மாணவர்களின் தனித்திறன், ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள் இடம் பெற வேண்டும். வகுப்பு சுவர்களில் வண்ண சித்திரங்கள் வரையலாம். பெண் கல்வி, கட்டாய கல்வி உரிமை சட்டம் போன்றவை குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும். பேச்சு, ஓவியம், கட்டுரை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசு வழங்க வேண்டும்.

விழா ஏற்பாட்டில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களை ஈடுபடுத்த வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் போன்ற பொறுப்பில் உள்ள கட்சியினர், முக்கிய விருந்தினராக பங்கேற்கலாம். மாணவர்களின் பெற்றோரையும், கண்டிப்பாக நிகழ்ச்சிக்கு வரவழைக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

R.L 2018