தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., வழியாக தேர்வு நடத்தப்படுகிறது. 10ம் வகுப்பு தகுதியில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பதவிகளுக்கு, 'குரூப் - 4' வரிசையிலும், வி.ஏ.ஓ., பணியிடத்துக்கு, தனியாகவும் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதனால், மனித வளம் மற்றும் நிதி இழப்பு கருதி, இரு தேர்வுகளையும் ஒன்றாக நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்தது. இதையடுத்து, வி.ஏ.ஓ., பதவியும் இணைக்கப்பட்ட, குரூப் - 4 தேர்வுக் கான அறிவிக்கையை நேற்று வெளியிட்டது.
இதன்படி, 2018 பிப்., 11ல் நடக்கும் தேர்வுக்கு, நேற்று முதல், 'ஆன் - லைன்' பதிவு துவங்கியது; டிச., 13 வரை விண்ணப்பிக்கலாம்; கட்டணத்தை, டிச., 15 வரை செலுத்தலாம். இந்த தேர்வில், இளநிலை உதவியாளர் பதவிக்கு, 4,300 பேர் உட்பட, எட்டு பதவிகளில், 9,351 பேர் சேர்க்கப்பட உள்ளனர். வி.ஏ.ஓ., பதவிக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வயது வரம்பில், எந்த மாற்றமும் இல்லை. ஒருவர் ஒரு விண்ணப்பம் மட்டுமே பதிவு செய்யலாம். தேர்வு முடிவு வரும் போது, தரவரிசை அடிப்படையில், தகுதியான, விருப்பப்பட்ட பதவியை தேர்வு செய்யலாம். முதற்கட்டமாக, டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில், தங்கள் சுயவிபரங்களை, ஒரு முறை பதிவாக, ஆன் -- லைனில் பதிவு செய்ய வேண்டும்.
அதன் வழியாக, குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே, ஒரு முறை பதிவு செய்தவர்கள், மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை. கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். குரூப் - 4 தேர்வுக்கு, 12 லட்சம் பேரும், வி.ஏ.ஓ.,தேர்வுக்கும், 15 லட்சம் பேரும், இதுவரை விண்ணப்பித்து வந்தனர். வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பிக்கும், 60 சதவீதம் பேர், குரூப் - 4 தேர்வையும் எழுதி வந்தனர். தற்போது, குரூப் - 4 தேர்வில், வி.ஏ.ஓ., பணியிடமும் சேர்க்கப்பட்டதால், 18 லட்சம் பேர் போட்டியிடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், 'இந்து அறநிலையத் துறை செயல் அதிகாரி பதவியில், நான்கு காலியிடங்களை நிரப்ப, 2018 ஜன., 20, 21ல் தேர்வு நடக்கும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. இதற்கான, ஆன் - லைன் பதிவு, நேற்று துவங்கியது. டிச., 13 வரை விண்ணப்பிக்கலாம்; டிச., 15 வரை தேர்வு கட்டணம் செலுத்தலாம். கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.