தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டம், மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டம், ஓரியண்டல் பாடத்திட்டம், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டம் என நான்கு பாடத்திட்டங்களின் கீழ் பள்ளிகள் இயங்கி வந்தன. இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு மேற்கண்ட பாடத்திட்ட முறைகள் கலைக்கப்பட்டு பொதுப் பள்ளி முறையை அரசு கொண்டு வந்தது. அதற்கு பிறகு அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில், அரசுப் பள்ளிகள் தவிர தனியார் பள்ளிகள் இயங்குவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. அங்கீகாரம் பெறுவதற்கு 5 துறைகளிடம் இருந்து சான்று பெற வேண்டும் என்றும் அரசு தெரிவித்துவிட்டது. மேலும், தனியார் பள்ளிகள் தமிழை முதன்மைப் பாடமாக நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால், தமிழ் மொழியைப் படிக்க விரும்பாத பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக்கல்வி நடத்தும் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு பெரிய அளவில் மவுசு கூடத் தொடங்கிவிட்டது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் போது தமிழை படிக்காமலேயே உயர் கல்விக்கு சென்றுவிட முடியும் என்ற நிலை நீடிக்கிறது. இதனால் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் புதிய பள்ளிகள் தொடங்க விரும்புவோர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளை தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் ஆண்டுக்கு சுமார் 50 பள்ளிகள் தொடங்க விண்ணப்பங்கள் மத்திய அரசுக்கு வருகிறது. இருப்பினும், மாநில அரசுகள் பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்றுகள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது. இதை தொடர்ந்து, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககத்திடம் தடையில்லா சான்று கேட்டு தனியார் விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த காலங்களில் புதிய பள்ளிகள் தொடங்க 20 லட்சம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது அந்த அளவுக்கு செலவு செய்ய வேண்டியதில்லை என்று பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
இதனால் புதிய பள்ளிகள் தொடங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த ஆண்டு சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க 50 பேர், தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதற்கும் தேதி மாலை வரை கடைசி நாளாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த கடைசி தேதி ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ஆண்டு நீட்டிக்கப்படுமா என்று தனியார் எதிர்பார்த்துள்ளனர். இதற்கிடையே, அரசுப் பள்ளிகளில் தனியார் பங்களிப்புடன் கழிப்பிடம் கட்டித் தரப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். தனியார் பங்களிப்பு எப்படி அரசுப் பள்ளிக்கு பொருந்தும் என்று பலர் எதிர்பார்த்து இருந்த நிலையில், தற்போது அதற்கு விளக்கம் கிடைத்துள்ளது. அதாவது, புதிதாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தொடங்கவும், சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று பெறவும் விண்ணப்பித்தவர்கள் அரசுப் பள்ளிகளில் கழிப்பிடம் கட்டித் தருதல் மற்றும் குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும் என்று மெட்ரிக்குலேஷன் இயக்ககம் கேட்கிறது.
அமைச்சரின் ஆலோசனையின் பேரில் அதை ஒரு விதியாகவும் வைத்துள்ளது. அதனால் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சிலர் கழிப்பிடம் கட்டித்தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். ஏற்காதவர்களுக்கு தடையில்லா சான்று கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.