புதிதாக 4,084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிகழ் கல்வியாண்டில் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். சட்டப் பேரவையில் பள்ளி கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழகத்தில் தொலைதூரப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகமுள்ள இடங்களில் புதிதாக தொடக்கப் பள்ளிகள் தொடங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன. அதன்படி, 30 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். புதுமையான கற்பித்தல் முறைகளைப் பின்பற்றுதல் உள்பட கல்வி வளர்ச்சிக்காக சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளைக் கண்டறிந்து விருதுகள் அளிக்கப்படும். அதன்படி, ஒரு மாவட்டத்துக்கு ஒரு தொடக்கப் பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி என நான்கு பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும்.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சமும், சான்றிதழ்களும் அளிக்கப்படும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சமும், சான்றிதழ்களும் கொடுக்கப்படும். மாணவர்கள் பொது அறிவு, மொழித் திறன்களை வளப்படுத்த பள்ளிகளுக்கு நாளிதழ்கள், சிறுவர் இதழ்கள் அளிக்கப்படும். 31 ஆயிரத்து 322 அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அவை வாங்கி கொடுக்கப்படும். காலிப் பணியிடங்கள்: பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டிய அவசியமிருப்பதால், நிகழ் கல்வியாண்டில் 3 ஆயிரத்து 336 முதுநிலை பட்டதாரி ஆசிரியர், 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 4,084 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். கல்வி, பள்ளி மேலாண்மைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர் என மாவட்டத்துக்கு ஆறு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.
அவர்களுக்கு கனவு ஆசிரியர் என்ற விருது அளிக்கப்படும். இந்த விருது ஆசிரியர் பாராட்டுச் சான்றுடன், ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகை அடங்கியதாக இருக்கும். பள்ளிக் கல்வித் துறையில் 17 ஆயிரம் தாற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். உலகத் தமிழ் மாணவர்கள் தாய்மொழி கற்க உதவி உலக நாடுகளில் வாழும் தமிழ் மாணவர்கள் தாய்மொழி கற்பித்தலுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள்:
புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்களின் தமிழ் உணர்வைப் போற்றிப் பாதுகாப்பது கடமையாகும். அங்குள்ள தமிழ் மாணவர்கள் தமிழை நன்கு கற்றுக் கொள்வதற்கு உதவியாக தமிழ்ப் பாடப் புத்தகங்களை அவர்களுக்கு அனுப்புதல், சிறந்த தமிழ் ஆசிரியர்களை அனுப்பி அங்குள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், இணையதளம் வாயிலாக அவர்களுக்கு தமிழ் கற்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், மியன்மர், மோரீஷஸ் ஆகிய நாடுகளில் உள்ள தமிழ்க் குழந்தைகள் நல்ல முறையில் தமிழ் கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இதைத் தவிர கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்குப் புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்படும். அதன்படி, யாழ்ப்பாணத்தில் உள்ள பொது நூலகத்துக்கும், மலேசிய பல்கலைக்கழகத்துக்கும் பொது மக்களிடமிருந்து ஒரு லட்சம் அரிய நூல்கள் கொடையாகப் பெற்று வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். தனியார் பள்ளிகளில் மாணவர்சேர்க்கை நடைமுறை: நவம்பர் வரை நீட்டிப்பு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறை நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பதில்:
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத அளவுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. நிகழ் கல்வியாண்டில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த மாணவர் சேர்க்கை நடைமுறையானது நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.