இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, May 22, 2017

உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் ஒத்திவைப்பு


தமிழகம் முழுவதும், இன்று நடக்கவிருந்த, உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணிக்கான, பதவி உயர்வு கவுன்சிலிங், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான, பொது மாறுதல் கவுன்சிலிங், கடந்த 19ல் துவங்கியது.

உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் நேற்று நடந்தது. தலைமையாசிரியர் பணிக்கான பதவி உயர்வுக்கு, இன்று நடக்கவிருந்த கவுன்சிலிங், உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், தற்காலிகமாக ஒத்தி வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் இளங்கோவன் வெளியிட்ட அறிக்கையில், 'சென்னை ஐகோர்ட்டில், வழக்கு குறித்த தீர்ப்பு வெளியாகும் வரை, பதவி உயர்வு கலந்தாய்வு, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.

மேலும், இப்பதவிக்கான, கவுன்சிலிங் நடக்கவிருக்கும் தேதி, பின் அறிவிக்கப்படும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர், சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது:பட்டதாரி ஆசிரியர்கள், பணி மூப்பு அடையும் முன், தலைமையாசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதனால், 2008ல், சிலர் உயர் நீதிமன்றத்தை நாடினர். பள்ளிக்கல்வித் துறை சார்பில், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து, வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். ஜூன் இறுதிக்குள், காலியாக உள்ள, 250 உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களும், பதவி உயர்வால் நிரப்பப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மறுகூட்டலுக்கு அவகாசம்

10-ம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 24 மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வு இயக்கம் அறிவித்துள்ளது.

கோவை தணிக்கைக் குழு வழங்கிய M.Philல் ஊக்க ஊதியத்திற்கு தகுதியான பல்கலைக்கழக பட்டியல்.





Sunday, May 21, 2017

ஐடிஐ-க்களுக்கு பள்ளி அந்தஸ்து: மத்திய அரசு திட்டம்


தொழில் பயிற்சி நிலையங்களுக்கு (ஐடிஐ) உயர்நிலை மற்றும் மேநிலைப் பள்ளிகளுக்குரிய அந்தஸ்தை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

மாணவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் தொழில் பயிற்சிகளை ஐடிஐ-க்கள் அளித்து வருகின்றன. எனினும், அங்கு பயிற்சியை முடித்த மாணவர்கள், பள்ளிகளில் படிப்பை முடித்த மாணவர்களைப் போல கல்லூரிகளில் சேர முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில், ஐடிஐ-க்களுக்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்குரிய அந்தஸ்தை அளிக்கலாம் என்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் திறன் மேம்பாடு - தொழில் முனைவு நலத் துறை அமைச்சகம் பரிந்துரைத்தது.

அதனை ஏற்றுக்கொண்ட மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற ஒரு தனி வாரியத்தை, ஐடிஐ-க்களுக்காக அமைக்க முடிவு செய்துள்ளது. அவ்வாறு உருவாக்கப்படும் புதிய வாரியம், பள்ளிகளில் அரசுத் தேர்வுகள் நடத்தி வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு இணையாக, ஐடிஐ-க்களில் தேர்வுகளை நடத்தி சான்றிதழ்களை வழங்கும். இந்தச் சான்றிதழ்களைப் பெற்ற மாணவர்கள், 10-ஆவது மற்றும் 12-ஆவது வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இணையாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேர முடியும்.

அதற்காக, சிபிஎஸ்இ, பல்கலைக்கழக மானிய ஆணையம், மாநில கல்வி வாரியங்கள் உள்ளிட்ட அமைப்புகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் நாடெங்கிலும் உள்ள 13ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐடிஐ-க்களில் பயிலும் மாணவர்கள் பலனடைவார்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன

அதிரடி மாற்றம்

பிளஸ் டூ பொதுத்தேர்வு முறையில் அதிரடி மாற்றம் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 11,12 ம் வகுப்பு பாடதிட்டத்திலும் மாற்றம் கொண்டு வர விரைவில் அரசாணை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

* பிளஸ் டூ தேர்வில் 1200-க்கு பதிலாக மொத்த மதிப்பெண் 600-ஆக குறைகிறது.

* பிளஸ் டூ தேர்வு எழுதும் நேரம் 3 மணியில் இருந்து 2.30 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

* பாடவாரியாக 100 மதிப்பெண் கேள்வியில் 90 மதிப்பெண் கேள்வி பாடத்திலிருந்து வரும், 10 மதிப்பெண் கேள்வி மாணவர் செயல்திறன் தொடர்புடையதாக இருக்கும்

* நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அப்ஜெக்டிவ் முறை கேள்விகளும் இடம் பெறுகிறது

* பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்புகளை ஒருங்கிணைத்து ஒரே சான்றிதழாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகளில் அதிகரிக்காத மாணவர் சேர்க்கை


கடந்த 10 ஆண்டுகளாக நிலை உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்காத நிலையில், தமிழகம் முழுவதும் சுமார் 1500 பள்ளிகளைச் சேர்ந்த முதுநிலை ஆசிரியர்கள் வாரத்துக்கு 28 பாட வேளைகளுக்கு பதிலாக 14 பாட வேளைகளில் மட்டுமே பணிபுரியும் நிலை உள்ளது.

தமிழகத்தில் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் ஒரு தொடக்கப் பள்ளி, 3 கி.மீட்டரில் ஒரு நடுநிலைப் பள்ளி, 5 கி.மீட்டரில் ஓர் உயர்நிலைப் பள்ளி, 8 கி.மீட்டரில் ஒரு மேல்நிலைப் பள்ளி வீதம் இருக்க வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகள் எண்ணிக்கையின் காரணமாக, சுற்றளவு விதிமுறைகளுக்கு மாற்றாக, குறுகிய இடைவெளியில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உருவாகிவிட்டன.

இதனிடையே, கடந்த 20 ஆண்டுகளாக தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டன. தற்போது, தமிழகத்தில் இயங்கி வரும் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை மட்டும் 3,500-க்கும் கூடுதலாக உயர்ந்துவிட்டன. இதில், மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் ஒன்றியத் தலைநகரங்களில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் (மேல்நிலை வகுப்புகளில்) பயிலும் நிலை உள்ளது. பிற பகுதிகளில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 100-க்கும் குறைவாகவே உள்ளது.

குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் நிலை உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை சராசரியாக 50-க்கும் குறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. ஒவ்வோர் ஒன்றியத்திலும் குறைந்தபட்சமாக 6, அதிகபட்சமாக 12 மேல்நிலைப் பள்ளிகள் வீதம் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பள்ளிகளிலும் 6 முதல் 9 ஆசிரியர்கள் வரை பணிபுரிகின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாரத்துக்கு 28 பாட வேளை இருக்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால், 90 சதவீத அரசு முதுநிலை ஆசிரியர்கள் வாரத்துக்கு 14 பாட வேளைகளில் மட்டுமே (50 சதவீதம்) பணியாற்றி வருவதாகத் தெரிகிறது.

மாணவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால், பல பிரிவு மாணவர்களை ஒரே பாட வேளையில் வைத்து வகுப்பு நடத்தும் நிலையும் உள்ளது. ஆனால் பணி நேரத்தை அதிகரித்து காண்பிக்க, பாடவேளை அட்டவணையை தனித் தனியாக அமைத்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. தனியார் பள்ளி ஆசிரியர்களின் உழைப்புக்கு தகுதியான ஊதியம் கிடைக்காத நிலையில், அரசின் வழிகாட்டுதலில் (28 பாட வேளை) 50 சதவீத பணிகளை கூட நிறைவேற்றாத அரசுப் பள்ளி முதுகலை ஆசிரியர்களின் ஊதியத்துக்கு பெரும்தொகை செலவிடப்படுகிறது. ஆனாலும், அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவில்லை என்பது இன்றுவரை குற்றச்சாட்டாக உள்ளது. இதுபோன்ற சூழலில், தேர்வு மைய கண்காணிப்பு பணி, விடைத் தாள் திருத்தும் பணி ஒதுக்கீடு செய்வதிலும் ஒவ்வொரு முறையும் அனைத்து மாவட்டங்களிலும் பிரச்னை ஏற்படுகிறது. தாங்கள் சார்ந்த சங்கங்களின் மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு நெருக்கடி கொடுத்து நினைத்ததை சாதித்துக் கொள்கின்றனர்.

தங்களுக்கான பிரச்னைகளைத் தீர்க்க ஒன்றிணையும் ஆசிரியர்கள், அதே ஒற்றுமையை கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் செயல்படுத்துவதில்லை. எதிர்கால தலைமுறையின் நலன் கருதியும், அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பினை தவிர்க்கும் வகையிலும், ஆக்கப்பூர்வமான சீரமைப்பு நடவடிக்கைளை தமிழக பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியது: முதுகலை ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ. 40 ஆயிரம் முதல் ஊதியம் வழங்கப்படுகிறது. அந்த வகையில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளைச் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது உண்மைதான். இந்த நிலை, கடந்த 10 ஆண்டுகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ள உயர்நிலைப் பள்ளிகளிலும் உள்ளது. ஊராட்சி ஒன்றிய அளவில் குறைவான மாணவர்கள் உள்ள மேல்நிலைப் பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளோடு இணைக்கலாம்.

இன்றைய சூழலில், ஒரு ஒன்றியத்தில் 5 அரசு மேல்நிலைப் பள்ளிகள் தரமானதாக இயங்கினால் போதுமானது. குறைவான மாணவர்கள் எண்ணிக்கையோடு பெயரளவுக்கு பள்ளிகள் நடத்துவதை விட, ஆய்வுக் கூடங்கள், வகுப்பறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி சிறப்பாக நடத்த முடியும். ஒன்றியத்துக்குள் பள்ளிகளை இணைக்கும்போது, ஊதியமாக வழங்கப்படும் கணிசமான தொகை மிச்சமாகும். அதில் ஒரு சிறு பகுதியை செலவிட்டால், மாணவர்களை அழைத்து வர தனிபேருந்து வசதி கூட ஏற்படுத்த முடியும் என்றார்.

தனியார் பள்ளிக்கு 'டாட்டா' காட்டிய கிராமம்


தனியார் பள்ளிகளை புறக்கணித்து, ஒரு கிராமத்தை சேர்ந்த அனைவருமே, அரசு பள்ளியில், தங்களது குழந்தைகளை சேர்த்துள்ளனர் என்றால், நம்ப முடிகிறதா? ஆம், நம்பித் தான் ஆக வேண்டும். பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ளது, கொத்தவாசல் என்ற குக்கிராமம்.

இதை சுற்றியுள்ள ஊர்களில், பல தனியார் பள்ளிகள் உள்ளன. இவை, எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, தரமான ஆங்கிலவழி மற்றும் கம்ப்யூட்டர் கல்வி என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன், கொத்தவாசல் கிராமத்துக்கே, தங்களது பள்ளி வேன்களை அனுப்பி, குழந்தைகளை அழைத்து சென்றன. இதனால், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள இக்கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், 123 மாணவ, மாணவியரே படித்து வந்தனர். தனியார் பள்ளியில், 52 மாணவ, மாணவியர் படித்தனர்.

இந்நிலையில், 2016 ஆக., 8ல், வேள்விமங்கலம் பள்ளியில் இருந்து மாற்றலாகி, இப்பள்ளிக்கு ஆங்கில ஆசிரியராக வந்தார், இளவழகன். உள்ளூரில் பள்ளி இருந்தும், 10 கி.மீ.,ல் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இக்கிராம மக்கள், தங்களது பிள்ளைகளை அனுப்பி வைப்பதை பார்த்து, தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை, அரசு பள்ளியிலும் ஏன் உருவாக்கக் கூடாது என, யோசித்தார். தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களிடம் கலந்து பேசி, தன் சொந்த செலவில், ஒன்பது கம்ப்யூட்டர், ஸ்பீக்கர் உள்ளிட்டவற்றை, 1.68 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கி, பள்ளிக்கு வழங்கினார்.

கலெக்டரை அணுகி, புரொஜக்டரை பெற்றார்.பல புரவலர்களை நாடி, மேலும், ஆறு கம்ப்யூட்டர் வாங்கி, மொத்தம், 15 கம்ப்யூட்டர்கள் மூலம் தினமும் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தார். காணொலி காட்சி மூலம் வகுப்புகள், ஆங்கிலத்தில் பேச்சு பயிற்சி வழங்கி, படிப்படியாக குழந்தைகளை மெருகூட்டினார். இதுவரை இல்லாத அளவு, முதல் முறையாக கல்வித் திருவிழாவை நடத்தி, குழந்தைகளின் அசத்தலான ஆங்கில அறிவையும், திறமைகளையும், கிராமத்து மக்களுக்கு எடுத்து காட்டினார். குழந்தைகளின் திறமைகளை கண்டு, மெய்சிலிர்த்த பெற்றோர், அந்த மேடையிலேயே புரவலர்களாக மாறி, 1.59 லட்சம் ரூபாயை, பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினர். தற்போது, வாட்டி வதைக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், இப்பள்ளியின் ஆசிரியர்கள், இளவழகன் தலைமையில், தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோரை, வீடு தேடி சென்று பார்த்து, அரசு பள்ளியின் சிறப்புகளை விளக்கி கூறி, குழந்தைகளை சேர்க்கும்படி கோரினர்.

பள்ளியின் சிறப்பை, ஏற்கனவே அறிந்திருந்த பெற்றோர், தனியார் பள்ளியில் படித்து வந்த தங்களது குழந்தைகளை, அரசு பள்ளியில் சேர்த்துவிட்டு, தனியார் பள்ளிகளுக்கு, 'டாட்டா' காட்டி விட்டனர்.தனியார் பள்ளியில் படித்து வந்த, 52 பேரில், 49 குழந்தைகள், கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தற்போது சேர்ந்து விட்டனர். மீதியுள்ள, மூன்று குழந்தைகளும் விரைவில் சேர உள்ளனர். ஆசிரியர் இளவழகனின் கல்வி சேவையை, கொத்தவாசல் கிராமமே பாராட்டுகிறது.

தொடக்க, நடுநிலைப் பள்ளிக்கு 40 ஆயிரம் தூய தமிழ் அகராதிகள்


அரசு மற்றும் உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு இந்த கல்வியாண்டில் 40 ஆயிரம் துாய தமிழ் அகராதிகள் வழங்கப்பட உள்ளன.தாய்மொழி பற்றை வளர்க்க, நல்ல தமிழ் சொற்கள் கொண்ட அகராதி தயாரிப்பதற்கு, சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குனர் தலைமையில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.

அக்குழு பரிந்துரையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் துாய தமிழ் அகராதியை தமிழறிஞர்கள் தயாரித்து உள்ளனர்.இதில், வண்ணப்படங்களுடன் ஏராளமான தமிழ்சொற்கள் இடம்பெற்றுள்ளன. அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளுக்கு 40 ஆயிரம் அகராதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

குறிப்பிட்ட பாடவேளையில் மாணவர்களுக்கு துாய தமிழ்ச் சொற்கள் கற்பிக்கப்படும். இந்த அகராதிகள் தற்போது உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தற்போது தமிழ்மொழியில் அதிகளவில் வடமொழி, ஆங்கிலச் சொற்கள் கலந்துள்ளன. அவற்றையே தமிழ்சொற்களாக பாவிக்கும் நிலை உள்ளது. இதனால் பிறமொழி கலக்காத துாய தமிழ்சொற்களை ஆரம்பக் கட்டத்திலேயே மாணவர்களுக்கு கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

சமூக பாதுகாப்புத்துறையில் ஆசிரியர் பணியிடம் நிரப்புதல்

Click below

https://app.box.com/s/g4smrteoxzzhl5qqg8t7i866vhcnomag

Saturday, May 20, 2017

கலந்தாய்வு: 490 பேர் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு


தமிழகத்தில் இணையதளம் மூலம் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் 490 பேர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக தாங்கள் விரும்பிய இடத்துக்கு பதவி உயர்வு பெற்றனர். இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

இணையதளம் மூலம் சனிக்கிழமை நடைபெற்ற அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 490 பேர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு ஆணை பெற்றுள்ளனர். தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற கலந்தாய்வில், 188 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தாங்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதல் ஆணை பெற்றனர்.

மேலும் 49 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் ஆணை பெற்றனர். முன்னதாக, வெள்ளிக்கிழமை (மே 19) நடைபெற்ற கலந்தாய்வில் 528 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தாங்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதல் உத்தரவு பெற்றனர்.

அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை


அடிக்கடி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதன்மை கல்வி அலுவலர்கள் ஆண்டாய்வை மேற்கொள்ள வேண்டும்.

ஜூன் மாதம் 6, ஜூலை மாதம் 6, ஆகஸ்ட் 6, செப்டம்பர் 2, அக்டோபர் 5, நவம்பர் 5, டிசம்பர் 2, ஜனவரி 4, பிப்ரவரி 2 பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும்.முதன்மை கல்வி அலுவலர்கள் ஆண்டாய்வின் போது, ஆசிரியர்கள் வருகை பதிவேட்டினை ஆய்வு செய்து நீண்ட நாட்கள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அடிக்கடி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளின் கட்டமைப்பு வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, பள்ளியின் தளவாட பொருட்கள் கணினி, தொலைக்காட்சி மற்றும் நூலக பயன்பாடு சார்ந்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் திறந்தவெளி கிணறுகள், உயர் அழுத்த மின்கம்பங்கள், பழுதடைந்துள்ள கட்டிடங்கள் போன்றவை மாணவர்களுக்கு பாதுகாப்பற்றதாக ஆய்வின் போது கண்டறியப்பட்டால் அதனை ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு உடனடியாக அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேல்நிலை அறிவியல் பாடங்களுக்கான செயல்முறைகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் பராமரிக்கப்படும் மாணவர் சேர்க்கை பதிவேடு, ஆசிரியர் வருகைபதிவேடு, அரசு வழங்கும் நலத்திட்ட பொருட்கள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதற்கான பதிவேடு, இருப்பு பதிவேடு மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மூலமாக வழங்கப்பட்ட பொருட்கள் மற்றும் மானியங்கள் குறித்த பதிவேடுகள் அனைத்தையும் ஆய்வின் போது பரிசீலிக்க வேண்டும். ஆண்டாய்வு மேற்கொள்ளும் போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அக்குறைபாடுகளை களைய சார்ந்த பள்ளிக்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்க வேண்டும். கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின் மீண்டும் ஒருமுறை அப்பள்ளியை பார்வையிட்டு ஆய்வின் போது குறிப்பிட்ட குறைபாடுகள் களையப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தல் வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு 3வகை சீருடை: அடுத்த ஆண்டு அறிமுகம் அமைச்சர் அறிவிப்பு


அடுத்த கல்வியாண்டு முதல், மாணவர்களின் சீருடையில், அவர்கள் படிக்கும் வகுப்புகளின் அடிப்படையில் மாற்றம் செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உட்பட, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த, 635 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு, தற்காலிக அங்கீகாரம் வழங்கும் விழா, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடந்தது.

விழாவில், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக கல்வித் துறையில், அடுத்த கல்வியாண்டிலிருந்து, 1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை; 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை; பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, தனித்தனி நிறத்தில், மூன்று விதமாக பிரித்து சீருடை வழங்கப்படும். கடந்த ஒன்றரை மாதமாக, இரவு பகல் பாராமல் உழைத்து, தேர்வு முடிவுகளை திட்டமிட்ட தேதிகளில், எஸ்.எம்.எஸ்., உள்ளிட்ட நவீன முறைகளில் வெளியிடப்பட்டு உள்ளன. 'நீட்' தேர்வு தமிழகத்திற்கு சரியானதல்ல என, குரல் கொடுத்து வருகிறோம்.

இருப்பினும், மத்திய அரசு நடத்தும் எந்த போட்டி தேர்வையும், தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள வசதியாக, அவர்களை திறமையானவர்களாக உருவாக்கும் எண்ணம் உள்ளது. இதை நிறைவேற்ற, பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்படும். பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், 'அரியர்' முறையில், பிளஸ் 2 படித்துக் கொண்டே தேர்வெழுதி தேர்ச்சி பெறலாம். வரும் ஐந்து ஆண்டுகளுக்கு பின், அரசு பள்ளிகளில் சேர, போட்டி உருவாக்கும் நிலையை உருவாக்குவதே எங்களது இலட்சியம். தனியார் பள்ளிகளை பாதுகாப்போம்; ஏழை, எளிய மாணவர்களையும் தனியாருக்கு இணையாக உருவாக்குவோம். தமிழகத்தின், 32 மாவட்டங்களில், 2.13 கோடி ரூபாய் மதிப்பில், போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

வரும் கல்வியாண்டுகளில், பாடத்திட்டங்களை மாற்ற உள்ளோம். எந்த மாணவனும், எதிர் காலத்தில் தேசிய அளவிலான போட்டி தேர்வுகளை, போட்டி போட்டு வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாக்குவோம். பிளஸ் 1 வகுப்பிலேயே, கம்ப்யூட்டர் வழங்குவதோடு, இணையதள, 'வை - பை' வசதி செய்து தரப்படும். ஆசிரியர் பற்றாக்குறை என்ற மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது.

புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆசிரியர் பற்றாக்குறை இல்லாத நிலையில், மீதமுள்ளவர்களை தென் மாவட்டங்களில் கூடுதலாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

சமூக பாதுகாப்பு துறையில் தொழில் பிரிவு பயிற்று ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


சமூக பாதுகாப்பு துறையின் தொழில் பிரிவு பயிற்று ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு அரசு சமூகப் பாதுகாப்பு துறை நிறுவனங்களில் காலியாக உள்ள தொழில் பிரிவு பயிற்று ஆசிரியர் பணியிடங்களை, இதே துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் கல்வி பயின்ற மற்றும் பயிலும் மாணவர்களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளது.

தகுதியானவர்கள், www.socialdefence.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்வி, வயது, தொழிற்கல்வி சான்று மற்றும், சமூக பாதுகாப்பு துறை நிறுவன முன்னாள் மாணவர் என்பதற்கான சான்று ஆகியவற்றின் நகல்களை இணைத்து, வரும் மே 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை ஆணையர், சமூக பாதுகாப்பு துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ், சென்னை- 10 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044- 26426421 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம்'' என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 3 வண்ணங்களில் சீருடை அறிமுகம்: செங்கோட்டையன்


அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிக்கூடங்களில் 3 வண்ண சீருடைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருச்செங்கோட்டில் நடைபெற்ற விழா ஒன்றில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

2018-19ம் கல்வியாண்டு முதல், அரசுப் பள்ளிகளில் 3 வண்ணங்களில் சீருடைகள் மாற்றப்படும். அரசுப் பள்ளி மாணவர்கள் நீட், ஜே.இ.இ தேர்வை எதிர்கொள்ள பயிற்சி தரப்படும்.