ஆய்வக உதவியாளர்கள்
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு 2015-ம் ஆண்டு மே 30-ந் தேதி அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்பட்டு, முடிவுகள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப 1:5 விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் முதன்மை கல்வி அலுவலர்களால் வெளியிடப்படும். இப்பட்டியல் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், நடை முறையில் உள்ள இனசுழற்சி, விண்ணப்பதாரர்கள் அளித்திருந்த விவரங்கள் அடிப்படையிலும் தயார் செய்யப்படும்.
சான்றிதழ் சரிபார்த்தல்
சான்றிதழ் சரிபார்ப்பு பணி அடுத்த மாதம் 9-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் அறிவிக்கப்படும் மையங்களில் நடத்தப்படும்.
மொத்த மதிப்பெண் 167. அதில் எழுத்துத்தேர்வுக்கு 150 மதிப்பெண். மீதம் உள்ள 17 மதிப்பெண்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது ‘வெயிட்டேஜ்’ அடிப்படையில் வழங்கப்படும். அதன் விவரம் வருமாறு:-
‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் விவரம்
வேலைவாய்ப்பக பதிவுமூப்புக்கு 10 மதிப்பெண்கள் அளிக்கப்படும்.
வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து முதல் 2 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 2 மதிப்பெண்களும், 4 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 4 மதிப்பெண்களும், 6 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 6 மதிப்பெண்களும், 8 ஆண்டுகள் வரை காத்திருப்பவர்களுக்கு 8 மதிப்பெண்களும், 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் காத்திருப்பவர்களுக்கு 10 மதிப்பெண்களும் வழங்கப்படும்.
கல்வித்தகுதிக்கு மதிப்பெண்
கூடுதல் கல்வி தகுதிக்கு 5 மதிப்பெண்கள் அளிக்கப்படும்.
பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2 மதிப்பெண்களும், இளங்கலை பட்டம் மற்றும் அதற்கு மேல் படித்தவர்களுக்கு 3 மதிப்பெண்களும், ஆய்வக உதவியாளராக முன் அனுபவம் உள்ளவர்களுக்கு கூடுதலாக 2 மதிப்பெண்களும் வழங்கப்படும்.
கருத்தில் கொள்ளப்படும் தேதி
இப்பணி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி நாளான 6.5.2015 வரை தகுதியுள்ள வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை, கல்வி தகுதி, முன் அனுபவம் ஆகியவை மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்பு அன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங் கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது.
பணி அனுபவத்தை பொறுத்தவரை தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் பணிபுரிந்த 6.5.2015 வரையிலான பணிக்காலம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
பள்ளிக்கல்வி துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருந்தால் பணி அனுபவ சான்றில் மாவட்ட கல்வி அலுவலரிடமும், கல்லூரிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருந்தால் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரிடம் மேலொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
வெளிப்படையான நியமனம்
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் எழுத்து தேர்வு மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்பின் போது அளித்த சான்றிதழுக்கான மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப்பட்டியல் தயார் செய்யப்படும். அதன் அடிப்படையில் நடைமுறையில் உள்ள இனசுழற்சி, இதர உள்இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தேர்வு பட்டியல் உடனடியாக வெளியிடப்படும்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உரிய பணி நியமன ஆணை வெளிப்படையான கலந்தாய்வு மூலம் மாவட்ட கல்வி அலுவலர்களால் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.