மண்ணெண்ணெய் மீதான மானிய சுமையை குறைக்கும் வகையில், அடுத்த 10 மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும், லிட்டருக்கு, 25 பைசா விலை உயர்த்த, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து, அரசு மூத்த அதிகாரி கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளாக, மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படாமல், மானிய விலையிலேயே விற்கப்பட்டு வருகிறது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் பெரியளவில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதை தவிர்க்க, மண்ணெண்ணெய் மீதான மானியச் சுமையை குறைக்க, பெட்ரோலியத் துறை முடிவு செய்தது.
எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு, பெட்ரோலியத் துறை, அனுப்பியுள்ள கடிதத்தில், மண்ணெண்ணெய் விலையை, 2017 ஏப்ரல் வரை, 10 மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும், லிட்டருக்கு, 25 பைசா உயர்த்த அனுமதி அளித்துள்ளது; இம்மாதம், 1ம் தேதி முதல், இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும், பொது வினியோக முறையில் விற்கப்படும் மண்ணெண்ணெய், முந்தைய விலையிலேயே விற்கப்படுகிறது. மாநில அரசுகளின் ஒப்புதலுக்கு பின், பொது வினியோக முறை மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் செய்யப்படும்.
இவ்வாறு அதிகாரி கூறினார்.
5 ஆண்டுகளுக்கு பின்...: டில்லியில், விலை ஏற்றத்துக்கு முன், மண்ணெண்ணெய், லிட்டருக்கு, 14.96 ரூபாய்க்கு விற்கப்பட்டது; கடைசியாக, 2011, ஜூனில், லிட்டருக்கு, 2.64 ரூபாய் உயர்த்தப்பட்டது; அதற்கு முன், 2010, ஜூனில், லிட்டருக்கு, 3.23 ரூபாய் விலை ஏற்றப்பட்டது.
மண்ணெண்ணெய், அடக்க விலையை விட, லிட்டருக்கு 13.12 ரூபாய் குறைவாக
விற்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், 12 ரூபாய் இழப்பை, மத்திய அரசு ஏற்கிறது. மீத இழப்பை, ஓ.என்.ஜி.சி., போன்ற எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கின்றன.
பெட்ரோலியப் பொருட்களுக்கு மத்திய அரசு அளிக்கும் மொத்த மானியத்தில், 41.7 சதவீதம், மண்ணெண்ணெய்க்கே செலவாகிறது. கடந்த, 2015 - 16ம் நிதியாண்டில், பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியமாக, 27 ஆயிரத்து, 571 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.