அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. ஆகிய வகுப்புகள் தொடங்குவது குறித்து, 4 மாதங்களில் பரிசீலித்து முடிவெடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசின் ஆரம்பப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் இல்லாததால், தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் நிலையுள்ளது.
2009-ஆம் ஆண்டு இலவச, கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படியும், 2006-ஆம் ஆண்டு சமச்சீர் கல்வி தொடர்பாக தமிழக அரசால் அமைக்கப்பட்ட முத்துக்குமரன் குழுவானது வழங்கிய பரிந்துரையின்படியும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடங்க வேண்டும் என்றுவிருத்தாசலத்தில் உள்ள மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர், "அங்கன்வாடி மையங்களில், 5 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளைச் சேர்ப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கலாம்' என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:-
இது அரசின் கொள்கை சார்ந்த முடிவாகும். இருப்பினும், மனுதரார் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு 4 மாதத்துக்குள் பரிசீலனை செய்து உரிய முடிவு எடுக்க வேண்டும். அப்போது, முத்துக்குமரன் குழுவின் பரித்துரைகளை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றனர்.