தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,188 பேர் புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் பெற முடியாமல் தவிப்பது தகவல் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் 2003 ஏப்.,1 ல் புதிய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதுவரை 4.23 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அவர்களிடம் வசூலித்த புதிய பென்ஷன் திட்ட சந்தா, அரசு பங்கு தொகை என, மொத்தம் ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் பணியில் இறந்தோரின் குடும்பம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணம் பலன் வழங்கப்படவில்லை. இதையடுத்து புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிப்ரவரியில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் தொடர் போராட்டம் செய்தனர். புதிய பென்ஷன் திட்டம் குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழுவை அரசு அமைத்தது. மேலும் பணியில் இறந்தோரின் குடும்பம், ஓய்வு பெற்ற ஊழியர்கள் கருவூல கணக்குத்துறை இயக்குனரகத்திற்கு விண்ணப்பித்து பணப்பலன் பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான விண்ணப்பங்களை ஏதாவதொரு காரணத்தை கூறி கருவூல கணக்குத்துறை அதிகாரிகள் நிராகரித்து வருகின்றனர். இதற்கிடையில் திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டைச் சேர்ந்த பிரடரிக் ஏங்கல்ஸ் தகவல் உரிமைச் சட்டம் மூலம் கருவூல கணக்குத்துறை இயக்குனரகத்தில் சில தகவல்களை பெற்றார். அதன்படி 2016 ஜூன் 22 வரை 1,433 பேர் பணப்பலன் கேட்டு விண்ணப்பித்தனர். இதில் 245 பேருக்கு மட்டுமே பணப்பலன் வழங்கி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: விண்ணப்பித்தோரில் 25 சதவீதம் பேருக்கு கூட பணப்பலன் கொடுக்கவில்லை. பணப்பலன் பெற்றோரில் பெரும்பாலானோர் நீதிமன்றங்கள் மூலமே பெற்றனர். கருவூல கணக்குத்துறை அதிகாரிகள் எழுத்துப்பிழை போன்ற சிறு காரணத்திற்கு கூட விண்ணப்பங்களை நிராகரிக்கின்றனர். விதிமுறை இருந்தும் துறை வாரிய பணப்பலன் கேட்டு விண்ணப்பித்தோரின் விபரங்களை தர மறுத்துவிட்டனர், என்றார்.
Thursday, June 30, 2016
புதிய பென்ஷன் திட்ட பணப்பலனிற்காக 1188 பேர் தவம்
ராதாகிருஷ்ணன் விருது வழங்குவதில் சிக்கல்
தமிழக அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக...: முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, விருதாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கை துவங்கி உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும், சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களை தேர்வு செய்து, மாவட்ட வாரியாக முடிவு செய்ய வேண்டும்.
அதன் பின், மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள், மாநில அளவில் தேர்வு செய்யப்படுவர். ஆக., 8ம் தேதிக்குள் மாவட்ட அளவிலான ஆசிரியர் பட்டியலை, சென்னைக்கு அனுப்ப, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வழக்கு : கடந்த ஆண்டு ராதாகிருஷ்ணன் விருது வழங்கியதில் விதிகள் மீறப்பட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஏப்., 29ல், ஆசிரியர் சங்கத்தால் வழக்கு தொடரப்பட்டது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில், மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட தேர்வு குழு உறுப்பினர்களுக்கே விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டதாக, இந்த வழக்கில் புகார் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், தற்போது வெளியிட்ட புதிய அறிவிப்பின் படி, ராதாகிருஷ்ணன் விருதுக்கு விருதாளர்கள் பட்டியலை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இனி 5ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்?
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், புதிய கல்வி கொள்கையை வகுத்துள்ளது. பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக, அக்கொள்கையின் முக்கிய அம்சங்களை தனது இணையதளத்தில் நேற்று வெளியிட்டது.
அதில், தற்போது, 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களையும் கட்டாயமாக தேர்ச்சி பெறச் செய்வதை மாற்றி, 5 ம் வகுப்புவரை மட்டுமே 'ஆல் பாஸ்' திட்டம் பின்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 8-ம் வகுப்புவரை அனைவரையும் தேர்ச்சி பெறச் செய்வதால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுவதால், இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது.
அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தாங்கள் விரும்பினால், 5ம் வகுப்புவரை தாய் மொழி அல்லது பிராந்திய மொழியை பயிற்று மொழியாக கொண்டு, பாடங்களை கற்பிக்கலாம். அப்படி செய்தால், இரண்டாவது மொழி ஆங்கிலமாக இருக்கும். மூன்றாவது மொழியை, அரசியல் சட்டத்துக்குட்பட்டு, மாநில அரசு தேர்வு செய்யலாம். பள்ளி, பல்கலைக்கழக அளவில் சமஸ்கிருதம் கற்பிப்பதற்கான வாய்ப்பு பரவலாக்கப்படும்.
அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்த பரிசீலிக்கப்படும். கல்வித்துறையில் முதலீடு அதிகரிக்கப்படும். வெளிநாட்டு முன்னணி பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் அமைய ஊக்குவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Wednesday, June 29, 2016
பிஎப் நிலுவையை தனியார் வங்கிகள் வசூலிக்க எதிர்ப்பு
பிஎப் நிறுவனம் சார்பாக தொழிலாளர்களின் நிதியை தனியார் வங்கிகள் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் பிஎப் தொகையின் பெரும்பகுதியை பிஎப் நிறுவனம் சார்பாக பாரத ஸ்டேட் வங்கி வசூலித்து வருகிறது. இந்நிலையில், இந்த வசூல் பணியை தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, ஆக்சிஸ் மற்றும் எச்டிஎப்சி வங்கிகள் வசூலிக்க அனுமதிக்கக்கூடாது என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிஎப் டிரஸ்டி மற்றும் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மகாராஷ்டிரா பொது செயலாளர் பி.ஜே.பனசூர் கூறுகையில், ‘‘தொழிலாளர்களின் பிஎப் நிதியை நிறுவனங்களிடம் இருந்து தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, ஆக்சிஸ், எச்டிஎப்சி வங்கிகள் வசூலிக்க அனுமதிக்க கூடாது என்று நிதி தணிக்கை மற்றும் முதலீட்டு குழு பரிந்துரை செய்துள்ளது’’ என்றார். பொதுவாக நிதி தணிக்கை மற்றும் முதலீட்டுக்குழு பரிந்துரை ஏற்கப்படுவது வழக்கம்.
தற்போது தனியார் வங்கிகள் வசூலிப்பதற்கு அனுமதிக்க கூடாது என்று இந்த குழு சமர்ப்பித்த பரிந்துரை அடுத்த மாதம் 7ம் தேதி மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தலைமையில் நடக்கும் மத்திய அறக்கட்டளை குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். தற்போது பிஎப் நிதியில் சுமார் 25 சதவீதம் மேற்கண்ட மூன்று வங்கிகள் மூலம் வசூலிக்கப்பட்டு வருவதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7th pay commission report approve by cent govt
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
7வது ஊதியக் குழு பரிந்துரைகள் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படுகிறது.
ஊதியக் குழு அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அமைச்சரவை செயலர் பி.கே. சின்ஹா தலைமையிலான செயலர் குழு இறுதி செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நிதி அமைச்சகம் அமைச்சரவைக் குறிப்பைத் தயார் செய்தது. இதையடுத்து, ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு இன்று புது தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
7-ஆவது ஊதியக் குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதன் அடிப்படையில், அதன் பரிந்துரைகள் சென்ற ஜனவரி 1-ஆம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படும். இதனால், 50 லட்சம் மத்திய அரசு பணியாளர்களும், 58 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவர்.
7வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவதால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.02 லட்சம் கோடி கூடுதலாக செலவாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 0.7 சதவீதம்.
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 14.27 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியில் சேரும் அறிமுக நிலை பணியாளருக்கான மாத ஊதியம் தற்போதைய ரூ.7,000-லிருந்து, ரூ.18,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சரவை செயலரின் அதிகபட்ச மாத ஊதியம் தற்போதைய ரூ.90,000-லிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Tuesday, June 28, 2016
ஜூலையில் 11 நாள்கள் வங்கிகள் செயல்படாது
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம், விடுமுறை நாள்கள் (2-ஆவது, 4-ஆவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை), ரமலான் பண்டிகை தின விடுமுறை (ஜூலை 6) ஆகியவை காரணமாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட தேசிய வங்கிகள் ஜூலை மாதம் 11 நாள்கள் செயல்படாத சூழ்நிலை உருவாகியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியை அது சார்ந்த பிற வங்கிகளுடன் இணைப்பதற்கு வங்கி ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 12, 13, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன.
மேலும் ஜூலை மாதம் 5 ஞாயிற்றுக்கிழமைகள் வருவதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய காரணங்களால் ஜூலை மாதம் மொத்தம் 20 நாள்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஜூலை மாதம் பண பரிவர்த்தனையை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் 220 பள்ளிகளில் "ஸ்டெம்' பயிற்சித் திட்டம்
மாணவர்களுக்கான செய்முறைக் கற்பித்தல் பயிற்சியான "ஸ்டெம்' பயிற்சித் திட்டம், நிகழ் கல்வியாண்டில் மேலும் 220 பள்ளிகளில் தொடங்கப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) சார்பில், கடினமான பாடங்களான அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், பொறியியல் ஆகியவற்றை, ஆசிரியர்கள் எளிதாக மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கான "ஸ்டெம்' திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
முதல் கட்டமாக கோவை, தருமபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருவாரூர், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் 10 அரசுப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அறிவியல் பாடத்துக்கான கருத்துருக்கள் செய்முறைப் பயிற்சிகளாக நிபுணர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டன. இந்தச் செய்முறைப் பயிற்சிகளுக்கான உபகரணங்கள், ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் கையேடு ஆகியவை ஆர்எம்எஸ்ஏ மூலம் வழங்கப்பட்டன.
குறிப்பாக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, மூன்றாம் வகுப்பு முதலான பாடங்களின் அடிப்படையில் செயல் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன. பின்னர், ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்டெம் செய்முறைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 220 பள்ளிகளுக்கு விரிவாக்கம்: நிகழ் கல்வியாண்டில் இந்தத் திட்டம், மேலும் 220 பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்களை புத்தாக்கச் சிந்தனைகளுடனும், மாறுபட்டு சிந்திக்கத் தூண்டும் வகையிலும் "ஸ்டெம்' திட்டம் தொடங்கப்பட்டது. எளிமையான செய்முறைப் பயிற்சிகளை ஆசிரியர்கள் முதலில் செய்து காட்டுவார்கள். பின்னர், இந்தப் பயிற்சிகளை மாணவர்கள் தாங்களாகவே செய்து பார்ப்பதால், கடினமான அடிப்படைக் கருத்துருக்கள் எளிதில் புரியும். இந்தத் திட்டத்தின் மூலம், மாணவர்கள் மனப்பாடக் கல்வி முறையைத் தாண்டி, செயல்வழிக் கற்றலுக்கு பற்றுவிக்கப்படுகிறார்கள்.
எனவே, முக்கியப் பாடங்களான கணிதம், அறிவியல் பாடங்களுக்கு உபகரணங்களைக் கொண்டு செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்தக் கல்வி ஆண்டில் மேலும் 220 பள்ளிகளில் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. இதன்மூலம், மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறன் மேம்படும் என்றனர்.
272 விரிவுரையாளர் நியமனம் : டி.ஆர்.பி., தேர்வு அறிவிப்பு
பள்ளிக்கல்வித் துறையின் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், விரிவுரையாளர் பணிக்கு, 272 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு, செப்., 17ல் நடக்க உள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், தமிழக ஆசிரியர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுகிறது.
இந்த நிறுவனத்தில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்ற, 272 விரிவுரையாளர் புதிதாக நியமிக்கப்படுகின்றனர். மூத்த விரிவுரையாளர், 38; விரிவுரையாளர், 166; இளநிலை விரிவுரையாளர், 68 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள், ஜூலை, 15ம் தேதி முதல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., அலுவலகங்களில் விற்பனை செய்யப்படும். ஜூலை, 30ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சி.இ.ஓ., அலுவலகங்களில் மட்டுமே வழங்க வேண்டும்.
நேரிலோ, தபாலிலோ டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு அனுப்பக்கூடாது. விண்ணப்பங்களுக்கு, 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தில் எந்த வகுப்பின ருக்கும் சலுகை இல்லை. ஜூலை, 31ம் தேதி, 57 வயதை தாண்டுவோர் விண்ணப்பிக்க முடியாது. அனைத்து வகுப்பினருக்குமான, 69 சதவீத இடஒதுக்கீடு, தமிழில் முதுகலையுடன் எம்.எட்., படித்தவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்பு பிரிவினருக்கு இடஒதுக்கீடு சலுகை உண்டு. எழுத்துத்தேர்வில், மூன்று தாள்களில், மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு, 'அப்ஜெக்டிவ்' வகை வினாத்தாள் இருக்கும்.
முக்கிய பாடம் மற்றும் ஆசிரியர் பயிற்று முறை பாடங்களுக்கு, தலா, 70 மதிப்பெண்; பொது அறிவுக்கு, 10 மதிப்பெண் வழங்கப்படும். இந்த தேர்வு தொடர்பான பாடத்திட்டம் மற்றும் விரிவான தகவல்களை, http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
Sunday, June 26, 2016
தமிழக பள்ளிக்கல்வி நிதி: மத்திய அரசு நிபந்தனை
தமிழகத்தில் அரசு பள்ளிகளின் பராமரிப்பு, தரம் உயர்த்து தல் போன்ற திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க, மத்திய அரசு பல நிபந்தனைகளை விதித்துள்ளது.
தமிழகத்தில் தொடக்க பள்ளிகளை, நடுநிலை பள்ளிகளாகவும், நடுநிலை பள்ளிகளை, உயர்நிலையாகவும், உயர்நிலை பள்ளிகளை, மேல்நிலையாகவும் தரம் உயர்த்த, மத்திய அரசின் பல திட்டங்களில் நிதி உதவி வழங்கப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு அளித்த நிதி உதவியும், அனுமதிக்கப்பட்ட திட்டங்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை என, மத்திய அரசு பல்வேறு விளக்கங்களை தமிழக பள்ளிக்கல்வி செயலரிடம் பெற்றுள்ளது. இந்நிலையில், 2016 - 17ம் கல்வி ஆண்டுக்கான திட்டங்களையும், அதற்கான நிதியையும் அறிக்கையாக அளித்து, மத்திய அரசிடம் தமிழக அரசு நிதி உதவி கேட்டுள்ளது.
இதை பரிசீலித்த மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட பிரிவு, தமிழகத்திற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
நிபந்தனைகள் என்ன?
தமிழக அரசு அனுமதி கேட்ட திட்டங்களும், நிதியும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு முடிவு செய்யப்படும். ஆனால், மாநில அரசின் திட்ட பங்கீடு சரியாக வழங்கப்படும் என்று, தமிழக அரசு எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும், பெற்றோர், கல்வியாளர்கள் கொண்ட பள்ளி மேலாண்மை குழு கண்டிப்பாக அமைத்து, அவர்களது பெயரில் வங்கிக் கணக்கு துவங்க வேண்டும். அந்த கணக்கில் பள்ளியின் வளர்ச்சி நிதி வழங்கப்படும்.
கடந்த கல்வி ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் நிறைவு சான்றிதழை அளித்த பிறகே, முதல் கட்டமாக நிதி ஒதுக்கப்படும். இரண்டாவது தவணை நிதியானது, மாநில அரசின் பங்கு தொகை ஒதுக்கிய பிறகே, மத்திய அரசிடமிருந்து வழங்கப்படும்.
இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
Saturday, June 25, 2016
காரைக்குடியில் நடக்கிறது பி.இ. 2ம் ஆண்டில் நேரடி சேர்க்கை ஜூன் 29ல் கவுன்சலிங் தொடக்கம்
தமிழகத்தில் உள்ள 536 பொறியியல் கல்லூரிகளில் பி.இ நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதற்கான கவுன்சலிங் வரும் 29ம் தேதி துவங்கி ஜூலை 9 வரை காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வரும், சேர்க்கை செயலாளருமான ராஜ்குமார் கூறியதாவது: பி.இ நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு 14 ஆயிரத்து 785 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதால், தகுதியான அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. கவுன்சலிங் வரும் மாணவர்களுக்கு, காரைக்குடி பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகளின் காலியிடங்களை தெரிந்து கொள்ளும் வகையில் பெரிய ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் இணையதளம் ஷ்ஷ்ஷ்.ணீநீநீமீtறீமீணீ.நீஷீனீ-ல் கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். 10ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ மதிப்பெண் சான்றிதழ்கள், புரவிசனல் அல்லது டிப்ளமோ சான்று, பி.எஸ்.சி பட்டதாரிகள் தங்களது டிகிரி சான்று, சாதி சான்று, முதல் தலைமுறை பட்டதாரி சான்று ஆகியவற்றின் அசல் சான்றுகளை கொண்டு வர வேண்டும். படிவங்களோடு டி.டி அனுப்பாதவர்கள் கவுன்சலிங் வரும்போது கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பி.எட்., செய்முறை தேர்வு மதிப்பெண் திடீர் குறைப்பு
பி.எட்., கல்லூரிகளில், இந்த ஆண்டு செய்முறை தேர்வுக்கான மதிப்பெண், திடீரென பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும், ஓராண்டு பி.எட்., படிப்பு, இந்த ஆண்டு முதல், இரண்டு ஆண்டு படிப்பாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ், 690 கல்லுாரிகளில், 70 ஆயிரம் பி.எட்., மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் கீழ், பி.எட்., படிப்பு நடத்தப்படுகிறது. அதன்படி, முதலாம் ஆண்டு செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண் முறை குறித்து, கல்லூரிகளுக்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், 15 விதமான செய்முறை தேர்வுகளுக்கு, 200 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 'தியரி' என்ற கருத்தியல் தேர்வுகளுக்கு, 900 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டுகளில், மொத்த மதிப்பெண்களில், 50 சதவீதம் செய்முறை தேர்வுக்கு ஒதுக்கப்பட்டது.
செய்முறை தேர்வு மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஏனென்றால், செய்முறை பயிற்சிகள் எடுக்காமலேயே, 50 சதவீத தேர்ச்சி மதிப்பெண்ணான, 100 மதிப்பெண்களை பெற முடியும். அதனால், பல மாணவர்கள் செய்முறை தேர்வுக்கு செல்லாமல், ஓ.பி., அடிக்க வாய்ப்புள்ளது என, கல்லூரி பேராசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். மாணவர்கள், முதலாம் ஆண்டில், 40 நாட்கள் பள்ளிகளுக்கு சென்று பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து பாடம் எடுப்பர். அப்போது கிடைக்கும் அனுபவங்களை, வகுப்பில் பாடம் எடுத்தல்; மாணவர்களின் நடத்தை பற்றி எழுதுதல்; மாணவர்களின் உணர்வை புரிந்து கொள்ளுதல். யோகா பயிற்சி எடுத்து அதை பற்றி எழுதுதல்; பாடங்களில் படித்தது தொடர்பான காட்சிகளை, மனிதர்களை நேரில் சென்று பார்த்தல்; வகுப்புகளில் பாடம் நடத்த தேவையான கருவிகளை உருவாக்குதல் என, 15 வகை செய்முறை தேர்வுகளை பி.எட்., மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். ஆனால், இந்த தேர்வுக்கு, மதிப்பெண் குறைவாக தரப்படுவதால், வகுப்புகளுக்கு சென்று பாடம் எடுக்கும் செயல்முறை பயிற்சிகளில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்தாமல் விட்டு விட வாய்ப்பு உள்ளதாக, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வுக்கு இருந்த சிக்கல் தீர்ந்தது
ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கான தேர்வு நிலை உத்தரவு வழங்க, சான்றிதழ் உண்மைத்தன்மை அறிக்கை பெற வேண்டிய அவசியம் இல்லை' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில், 2002 முதல் பல்வேறு கட்டங்களில் நியமிக்கப்பட்ட, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 10 ஆண்டுகள் பணி முடித்த பின், தேர்வு நிலை பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இந்த உத்தரவு பெற்றால், அடிப்படை ஊதியத்தின், இரு மடங்கு அளவுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, 10 ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியர்களுக்கு, தேர்வு நிலை உத்தரவு வழங்க ஆணையிடப்பட்டு உள்ளது. ஆனால், இந்த நடைமுறையில் பலவித விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
'தேர்வு நிலை உத்தரவு வழங்கும் முன், ஆசிரியர்களின் சான்றிதழின் உண்மைத்தன்மை தேவை' என, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். ஆனால், 40 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் உண்மைத்தன்மை அறிக்கை வருவதில் இழுபறி ஏற்பட்டது. இதுகுறித்து, ஆசிரியர்கள் தரப்பில், அமைச்சரிடம் தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டன. அதனால், 'சான்றிதழின் உண்மைத்தன்மை தேவை இல்லை' என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.