இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, May 18, 2016

பிளஸ் 1 சேர்க்கையில்இட ஒதுக்கீடு கட்டாயம்


'பிளஸ் 1 வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை, அரசு நிர்ணயித்துள்ள இட ஒதுக்கீட்டின்படி நடத்த வேண்டும்' என, பள்ளிக் கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுகுறித்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் பிறப்பித்துள்ள உத்தரவு:

பிளஸ் 1 வகுப்பில், பிற்படுத்தப்பட்டோருக்கு, 30 சதவீதம்; மிக பிற்படுத்தப்பட்டோருக்கு, 20; எஸ்.சி., பிரிவினருக்கு, 18; எஸ்.டி., பிரிவினருக்கு, 1; இதர பிரிவினருக்கு, 31 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த விதிகளை மீறும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அப்பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மாணவர்களிடம் விண்ணப்பம் பெறும்போதே, தனியாக பதிவேடு வைத்து, இன வாரியாக விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

மாணவர் சேர்க்கைக்கு முன், தலைமை ஆசிரியர் தலைமையிலான குழு, விண்ணப்பங்களை ஆய்வு செய்து, இடஒதுக்கீட்டின் படி பட்டியல் தயாரிக்க வேண்டும். ஆக., 31க்குள் இட ஒதுக்கீட்டின்படி சேர்க்கை குறித்த விவரத்தை, அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் ஓட்டுப்பதிவு பல மடங்கு உயர்வு


கடந்த இரண்டு தேர்தலை விட, இம்முறை அதிகளவில், தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.தமிழகத்தில், 2011 சட்டசபை தேர்தலில், ஒரு லட்சம் தபால் ஓட்டுகள் பதிவாகின. அடுத்து, 2014 லோக்சபா தேர்தலில், 85 ஆயிரம் தபால் ஓட்டுகள் பதிவாகின. இம்முறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார், வேன் டிரைவர்கள் என, மொத்தம், 6.26 லட்சம் பேர், தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.இவர்களில், 14ம் தேதி வரை, 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர், தபால் ஓட்டை பதிவு செய்தனர். அதன் பின்னும் ஏராளமானோர், தபால் ஓட்டு போட்டுள்ளனர். எனவே, இம்முறை, 4 லட்சம் தபால் ஓட்டுகள் பதிவாகியிருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது

ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ விண்ணப்பம் வினியோகம்


ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்புக்கு, வரும் 20ம் தேதி முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படும்' என, கல்வித் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தொடக்க கல்வி டிப்ளமோ படிப்பில், ஒற்றை சாளர முறையில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், மே 20ம் தேதி முதல், ஜூன் 10ம் தேதி வரை, காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன் 10ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில், விண்ணப்பங்களை பெறலாம். பட்டியலினத்தவர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர், 250 ரூபாய் செலுத்தியும், இதர பிரிவினர், 500 ரூபாய் செலுத்தியும் விண்ணப்பங்களை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

200 ஆசிரியர்களுக்கு இரண்டு தபால் ஓட்டுஎண்ணிக்கையில் குளறுபடி ஏற்படுமா?


சட்டசபை தேர்தலில், 200 ஆசிரியர்களுக்கு, இரண்டு தபால் ஓட்டுகள் கிடைத்துள்ளன. இவை, ஓட்டு எண்ணிக்கையில் சேருமா, சேராதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு, தபால் ஓட்டுகள் போட அனுமதி அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள், தேர்தல் பணிக்கான பயிற்சியில் இருந்தபோது, விண்ணப்பம் வழங்கப்பட்டு, விவரங்கள் பெறப்பட்டன. அவற்றை சரிபார்த்த பின், தபால் ஓட்டு சீட்டுகள் வழங்கப்பட்டன. இந்த ஓட்டு சீட்டு வழங்குவதில், பல இடங்களில் குளறுபடி ஏற்பட்டது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, தபால் ஓட்டு சீட்டுகள் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. இதுகுறித்து, நமது நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, கலெக்டர் அலுவலகங்களை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு, போராட்டம் நடத்திய பின், அவர்களுக்கு, தபால் ஓட்டு சீட்டுகள் வழங்கப்பட்டன.

இதன்படி, கோவை மாவட்டத்தில், கலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், 200 பேர், தங்களுக்கு தபால் ஓட்டு இல்லை என, கலெக்டர் அலுவலகத்தில், 14ம் தேதி போராட்டம் நடத்தினர். அப்போது, அந்த இடத்திலேயே தபால் ஓட்டு சீட்டுகள் வழங்கப்பட்டு, அவர்கள் அங்கேயே ஓட்டு போட்டனர்.இந்நிலையில், இந்த, 200 ஆசிரியர்களுக்கும், மேலும், ஒரு தபால் ஓட்டு சீட்டு, அவர்களின் வீட்டு முகவரிக்கு, நேற்று முன்தினம் வந்துள்ளது. இதனால், ஆச்சரியம் அடைந்த ஆசிரியர்கள் பலர், இரண்டாவது ஓட்டையும் பதிவு செய்துள்ளனர்.

இன்று காலை, 8:00 மணி வரை தபால் ஓட்டுப்பதிவுக்கு அவகாசம் உள்ளது. சில ஆசிரியர்கள் மட்டும், தங்களுக்கு இரண்டாவது ஓட்டு சீட்டு வந்துள்ளதாக, அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஆனால், 180க்கும் மேற்பட்டோர், இரண்டாவது தபால் ஓட்டையும் பதிவு செய்துள்ளனர். இதனால், 'தபால் ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்படும்' என, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tuesday, May 17, 2016

கோவில்பட்டியில் பரபரப்பு : வாக்குப்பதிவு அலுவலர்கள் சம்பளம் வாங்க மறுப்பு


தேர்தல் பணியில் ஈடுபட்டதற்கு குறைவாக ஊதியம் வழங்குவதா என எதிர்ப்பு தெரிவித்து வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் சம்பளம் வாங்க மறுத்தனர். இதனால் மின்னணு இயந்திரங்கள் கொண்டு செல்வதில் 1 மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் நேற்று 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குச்சாவடி தலைமை தேர்தல் அலுவலருக்கு சம்பளமாக ரூ.1700ம் மற்ற 4 பேரில் 3 பேருக்கு ரூ.1300-ம், பி2பி பிரிவின்கீழ் 4வது ஊழியருக்கு ரூ.600 என்ற அடிப்படையில் தேர்தல் கமிஷனால் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி புதுக்கிராமத்தில் எண் 175 மற்றும் எண் 176 ஆகிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

175வது வாக்குச்சாவடி தலைமை தேர்தல் அலுவலராக எட்டயபுரம் அருகே தலைக்காட்டுபுரம் அரசு பள்ளி தலைமையாசிரியரும், தமிழ்நாடு அரசு ஆரம்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளருமான விளாத்திகுளத்தை சேர்ந்த சுப்புராஜ் என்பவர் பணியில் ஈடுபட்டார். இதுபோல் அவருக்கு உதவியாக மேலும் 4 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு இயந்திரங்கள் இரவு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டு இருந்தன. இன்று அதிகாலை 5.45 மணி அளவில் கோவில்பட்டி தொகுதி மண்டல தேர்தல் அலுவலர் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் வாக்குப்பதிவு இயந்திரங்களை பெற்றுக்கொள்ள அங்கு சென்றனர்.

அப்போது வாக்குச்சாவடி தலைமை தேர்தல் அலுவலர் சுப்புராஜ், வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்ட சக ஆசிரியர்கள் 4 பேருக்கு சம அளவில் ரூ.1300 வழங்க வேண்டும் என்றும், பாரபட்சமாக ஒரு ஊழியருக்கு மட்டும் ரூ.600 வழங்குவதற்கு எதிர்ப்பும் தெரிவித்தார். இதேபோல தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி பணி ஆசிரியர்களுக்கு முரண்பாடு இல்லாமல் சம அளவில் ஊதியம் வழங்க வேண்டும் என்று மண்டல தேர்தல் அலுவலர் சுப்பிரமணியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி கவனத்துக்கு கொண்டு செல்வதாக மண்டல தேர்தல் அலுவலர் சுப்பிரமணியன் உறுதியளித்தார். ஆனாலும் அர்கள் சம்பளம் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். இதுதொடர்பாக அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் எழுதி வாங்கினர். இதைத்தொடர்ந்து மண்டல தேர்தல் அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கிருந்து பெற்று தூத்துக்குடிக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

நாளை முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்


பிளஸ் 2 பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை வியாழக்கிழமை (மே 19) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்கள், தனித்தேர்வர்கள் மே 19-ஆம் தேதி முதல் தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் அளித்து தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் மே 21-ஆம் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் படித்த, தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

மாவட்ட வாரியாக ஓட்டுப்பதிவு சதவீதம்


மாவட்டம் சதவீதம்
திருவள்ளூர் 71.20
சென்னை 60.99
காஞ்சிபுரம் 68.77
வேலுார் 77.24
கிருஷ்ணகிரி 78.38
தர்மபுரி 85.03
திருவண்ணாமலை 82.99
விழுப்புரம் 79.44
சேலம் 80.09
நாமக்கல் 82.10
ஈரோடு 79.39
நீலகிரி 70.53
கோவை 68.13
கரூர் 83.09
திருச்சி 75.77
பெரம்பலுார் 79.54
கடலுார் 78.64
நாகப்பட்டினம் 76.05
திருவாரூர் 78.04
தஞ்சாவூர் 77.45
புதுக்கோட்டை 77.07
மதுரை 71.09
திண்டுக்கல் 79.62
தேனி 75.29
ராமநாதபுரம் 67.78
சிவகங்கை 69.80
விருதுநகர் 76.36
திருநெல்வேலி 71.94
துாத்துக்குடி 71.17
கன்னியாகுமரி 66.32
அரியலுார் 83.77
திருப்பூர் 72.68

அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு: தனியார், மெட்ரிக் பள்ளிகள் பின்னடைவு


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின. அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த ஆண்டை விட, இம்முறை மாணவ, மாணவியரின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரம், தனியார், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் தேர்ச்சி குறைந்துள்ளது.

தமிழகத்தில், 2011ம் ஆண்டு, அனைத்து பள்ளிகளிலும், சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் படி, அரசு, அரசு உதவி பெறும், தனியார் மற்றும் மெட்ரிக் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும், சமச்சீர் 1 2 பாடத்திட்டத்தின் படியே மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், பிளஸ் 1, பிளஸ் 2வில் மட்டும், மாநில பாடத்திட்டத்தில் பாடங்கள் நடத்தியுள்ளன. இந்த பள்ளிகளின் பட்டியலும், முதல் முறையாக தேர்வுத்துறை பட்டியலில் தனியாக குறிப்பிடப் பட்டுள்ளன.

நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் படி, தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களில், 97.89 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். எனினும், கடந்த ஆண்டை ஒப்புடுகையில், இந்த ஆண்டு தனியார், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் உள்ளிட்ட பள்ளிகளின் மாணவர் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அதே நேரம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட சற்று அதிகரித்துள்ளது.

248 அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி: பிளஸ் 2 தேர்வில், தமிழகம் முழுவதும், 248 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்று உள்ளன. தமிழகம் முழுவதும், 2,704 அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 3 லட்சத்து, 47 ஆயிரத்து, 478 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அவர்களின், இரண்டு லட்சத்து, 97 ஆயிரத்து, 641 பேர் தேர்ச்சி பெற்றுஉள்ளனர். இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:

பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகள், கடந்த ஆண்டை விட அதிக தேர்ச்சி பெற்றுள்ளன. இந்த ஆண்டு, 85.71 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 248 அரசு பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுஉள்ளன. கடந்த ஆண்டு, 196 பள்ளிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு, பள்ளிக்கல்வித் துறையின் முயற்சியால், கூடுதலாக, 52 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்று உள்ளன.

வளர்ச்சி பாதையில்...:கடந்த, 2012ல், 41 அரசு பள்ளிகள் மட்டுமே, 100 சதவீத தேர்ச்சி பெற்ற நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்து, இந்த ஆண்டு, 248 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன

Detailed analysis about Schools and Students

Click below

https://results.reportbee.com/2016/tn/12

Saturday, May 14, 2016

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பில் 21,755 பேர்


கடந்த, ஒரு மாதத்தில் எடுத்த கணக்கெடுப்பில், 21 ஆயிரத்து, 755 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறை சார்பில், 6 முதல், 14 வயதுடைய குழந்தைகள், 100 சதவீதம் ஆரம்பக் கல்வியை கற்க வேண்டும் என்பதற்காக, ஆண்டுதோறும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம், பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுகிறது.

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டு மாநிலம் முழுவதும், 79 ஆயிரத்து, 844 நகர, கிராமங்களில் கணக்கெடுப்பு பணி முடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்., 5ம் தேதி முதல், இம்மாதம், 5ம் தேதி வரை நடந்த கணக்கெடுப்பில், மாநிலம் முழுவதும், 21 ஆயிரத்து, 755 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுஉள்ளனர்.இதில், கிருஷ்ணகிரி, அதிகபட்சமாக, 1,949, திருநெல்வேலி, 1,386, விழுப்புரம், 1,384, கோவை, 1,381, குறைந்தபட்சமாக கன்னியாகுமரி, 109, நாகப்பட்டினம், 131 என, பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளனர். இவர்களை, பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்

கதை, கவிதை சேகரிக்க உத்தரவுதலைமை ஆசிரியர்கள் அதிருப்தி


பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து, கதை, கவிதை உள்ளிட்டவற்றை சேகரித்து அனுப்ப, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறும் நேரத்தில், இந்த உத்தரவு ஆசிரியர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியிடும் இதழுக்காக, மாணவர்களுக்கு பயன்படும் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், துணுக்குகள், பல்வேறு செயல்பாடுகள் மற்றும் சிறப்பாக செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகம் குறித்த விவரங்கள் ஆகியவற்றை அனுப்பி வைக்க, அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவற்றை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் சேகரித்து, மே 18ம் தேதி மாலைக்குள், மாவட்டக்கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்க, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உத்தரவிட்டுள்ளார். மாணவர்களுக்கு கோடை விடுமுறையும், ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி மற்றும் பணியும் உள்ள நிலையில், கதை, கவிதை, துணுக்குகளை சேகரிக்கும் பணி, தலைமை ஆசிரியர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

Friday, May 13, 2016

வரும் 17ல் பிளஸ் 2 'ரிசல்ட்': 19ல் தற்காலிக சான்றிதழ்


மே, 17ல் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், 19ல் வழங்கப்படுகிறது.இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், மே, 17 காலை, 10:31 மணிக்கு வெளியிடப்படும். தேர்வர்கள், பிறந்த தேதி மற்றும் பதிவு எண் மூலம், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.பள்ளிகளிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களிலும் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி தெரிந்து கொள்ளலாம்.

தேர்வர்கள் மே, 19ல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்யலாம். மே, 21 முதல், தேர்வர்கள் தாங்கள் படித்த, தேர்வு எழுதிய பள்ளியில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம். விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும்; தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலமும், மே, 17, 18ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே, மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும்.

விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை, விண்ணப்பிக்க உள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும். விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை, மாணவர் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டிலுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, விடைத்தாள் நகலை மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்.சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடக்கும். விண்ணப்ப தேதி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Thursday, May 12, 2016

பூத் சிலிப் வழங்கும் பணி.ஆசிரியர்கள் வேதனை


வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகிப்பதில் பணிச் சுமை ஏற்பட்டு வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.

சட்டப் பேரவைத் தேர்தலில் ஆள் மாறாட்டத்தைத் தடுக்க, வாக்குப் பதிவு தினத்துக்கு நான்கு நாள்களுக்கு முன்னதாகவே வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணியை நிறுத்திவிட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதாவது பூத் ஸ்லிப் வழங்கும் பணியை மே 12-ஆம் தேதியுடன் நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்குத் தொகுதிகளில் மே 8-ஆம் தேதியே  வாக்குச் சாவடி நிலை அலுவலர்களான ஆசிரியர்களிடம் பூத் சிலிப்வழங்கப்பட்டதாம்.

இதில், ஒவ்வொரு ஆசிரியருக்கும் சுமார் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட பூத் சிலிப்களை விநியோகிக்கும் பணி தரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில், அவர்கள் வேலைக்குச் சென்று விடுவதால் பூத் சிலிப் வழங்குவதில் சுணக்கம் ஏற்பட்டதாகவும், புதன்கிழமை இரவு 12 மணி வரை இப்பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டதாகவும், இதனால் ஆசிரியைகள் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:

  இடம் பெயர்ந்தோர் மற்றும் இறந்த வாக்காளர்கள் குறித்து வழங்கப்பட்டுள்ள படிவங்களில் அவர்களின் வரிசை எண், பாகம் எண், உறவினர் பெயர், ஆண் மற்றும் பெண், வாக்காளர் அடையாள அட்டை எண், விடுபட்டதற்கான காரணம் உள்ளிட்டவற்றை எழுதித் தர வேண்டிய நிலை உள்ளது.

வாக்காளர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது, பலர் வேலைக்குச் சென்று விடுகின்றனர். குறுகிய நாள்களுக்குள் இப்பணியை செய்து முடிப்பதில் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது. இதனால், பெண் ஆசிரியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய பாதிப்புக்குத் தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பே காரணம். இதற்கு, உரிய நிவாரணம் கிடைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்

ஓட்டுச்சாவடிகளில்சாமியானா பந்தல்


வெயில் அதிகமாக இருப்பதால், தேவைப்படும் ஓட்டுச்சாவடிகளின் முன், சாமியானா பந்தல் அமைத்துக் கொள்ள, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது. பொது மக்கள் ஓட்டு போடுவதற்கு வசதியாக, 66,001 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொகுதிக்கு, ஒரு ஓட்டுச்சாவடி, பெண்களுக்கானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பர். அதேபோல், மாநிலம் முழுவதும், 968 மாதிரி ஓட்டுச் சாவடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த ஓட்டுச் சாவடிகளில், வாக்காளர்கள் அமர சோபா போடப்படும். முன்புறம் பந்தல் போடப்பட்டு, வாழை மரம் நடப்படும். தமிழகம் முழுவதும், வெயில் அதிகமாக உள்ளது. பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில், அருகிலேயே காலி வகுப்பறைகள் இருக்கும். எனவே, அங்கு வாக்காளர்கள் அமர வைக்கப்படுவர்.

அந்த வசதி இல்லாத ஓட்டுச் சாவடிகளில், சாமியானா பந்தல் அமைக்க, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது. அதேபோல், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், குடிநீர் வசதி செய்யவும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது

'டிப்ளமோ' தேர்வுஅறிவிப்பு


அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தொடக்க கல்வி, 'டிப்ளமோ' தேர்வுக்கான, முதலாம் ஆண்டு தேர்வு, ஜூலை, 1ல் துவங்கி, ஜூலை, 16ல் முடிகிறது. இரண்டாம் ஆண்டுக்கான தேர்வு, ஜூன், 30ல் துவங்கி, ஜூலை, 15ல் முடிகிறது. இந்த தேர்வுகள், காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை நடக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, May 11, 2016

தேர்தல் பணியால்ஆசிரியர்கள் அவஸ்தை


தேர்தல் பணிகளில், ஆண், பெண் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஓட்டுச்சாவடி அதிகாரி, அலுவலர் பணிகளில், பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், வரும் 15ம் தேதி முதல், 16ம் தேதி இரவு வரை, தேர்தல் பணியாற்ற வேண்டும். இதற்கான உத்தரவுகள் அனைத்து ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளன.

அதில், சில ஆசிரியைகளுக்கு, அவர்களது வீட்டிலிருந்து, 80 கி.மீ., துாரத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளில், பணி ஒதுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நாளில் ஓட்டுப்பதிவு, மாலை 6:00 மணிக்கு முடிந்து, மின்னணு ஓட்டுப் பெட்டிகளை, ஓட்டு எண்ணும் மையத்துக்கு அனுப்ப, இரவு 9:00 மணி ஆகிவிடும். அதன்பின், நகர்ப்புறம் அல்லாத மற்ற பகுதிகளிலிருந்து, வீடுகளுக்கு திரும்ப போக்குவரத்து வசதி கிடைக்காது.

பணி முடித்து, வீட்டுக்கு வந்து சேர நள்ளிரவை தாண்டி விடும் என்பதால், அவர்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுகுறித்து, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது:தேர்தல் பணிக்கான சம்பளம், மிக குறைவாக இருந்தாலும், ஜனநாயக கடமை என்ற அடிப்படையில், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால், பணி இடங்களை ஒதுக்குவதில், அதிகாரிகள் உரிய விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. இதனால், 80 கி.மீ., துாரத்தில், தேர்தல் பணி ஒதுக்கப்படுவதால், பெண் ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இரவில், தாமதமாக தேர்தல் பணி முடியும் நிலையில், அவர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதி களை, தேர்தல் அதிகாரிகள் செய்து கொடுப்பதில்லை.இதேபோல், காலை 5:00 மணிக்கு, தேர்தல் பணி துவங்கும் நிலையில், இரவு 7:00 மணிக்கு முடியும் வரையில், ஆசிரியர்களுக்கு எந்த இடைவேளையும் ஒதுக்கப்படுவதில்லை.

அதனால், கழிப்பறைக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, தேர்தல் பணியில் அவர்களது கவனம் சிதறும் நிலை உள்ளது. எனவே, உரிய வசதிகள் செய்து தரவும், மாற்று பணியாளர்கள் நியமித்து, ஆசிரியர்களுக்கு சில நிமிடங்கள் இடைப்பட்ட ஓய்வு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.