தமிழக அரசின் இலவச திட்டத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள்; பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, 'லேப் - டாப்' வழங்கப்படுகிறது. கடந்த, 2013 - 14 கல்வி ஆண்டில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு வழங்கியது போக, மீதி உள்ளவற்றை திருப்பி அனுப்புமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மீதியிருக்கும் லேப் - டாப் பற்றிய கணக்கு, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இன்னும் வரவில்லை. இந்நிலையில், மீதியுள்ள லேப் - டாப்களை, உடனடியாக அனுப்புமாறு, அனைத்து பள்ளிகளுக்கும் அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழ்நாடு மின்னணு கழகமான, 'எல்காட்' நிறுவனத்துக்கு, நாங்ள் கணக்கு கொடுக்க வேண்டும். எனவே, ஓராண்டாக பதுக்கி வைத்த, லேப் - டாப்களை உடனடியாக அனுப்ப உத்தரவிட்டுள்ளோம். அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.-
Wednesday, November 04, 2015
லேப் - டாப்' பதுக்கல் பள்ளிகளுக்கு உத்தரவு
பி.எட்., படிப்பில் புதிய மாற்றம் தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகம்
பி.எட்., படிப்பில், புதிய பாடத்திட்டம் அமலாகியுள்ள நிலையில், சி.சி.இ., எனப்படும், தொடர் மற்றும் விரிவான மதிப்பீட்டு முறையும், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவுப்படி, நாடு முழுவதும் பி.எட்., படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை அறிமுகமாகிஉள்ளது.இந்த முறைப்படி, பி.எட்., படிக்கும் இரண்டு ஆண்டுகளுக்கும் தேர்வுக்கான மதிப்பெண் மட்டுமின்றி, சி.சி.இ., முறையில், 30 மதிப்பெண் கூடுதலாக வழங்கப்படுகிறது. மாணவர்களின் கற்றல் திறன், வகுப்புகளில் ஆர்வமாக பங்கேற்றல், செய்முறைப் பயிற்சியில் ஈடுபாடு, கற்றல் பயிற்சிக்கான திட்ட வரைவு தயாரித்தலில் ஆர்வம் மற்றும் புதுமை என, மாணவர்களின் செயல்திறன்கள் அடிப்படையில்,சி.சி.இ., மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது
.யோகா உள்ளிட்ட உடல்நலம் குறித்த பாடங்களுக்கும் தனியாக மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன. பி.எட்., மாணவர்கள், முதலாம் ஆண்டில், 20; இரண்டாம் ஆண்டில், 80 என, மொத்தம், 100 நாட்கள், பள்ளிகளுக்கு சென்று பாடம் நடத்தும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர் போல், 'பவர் பாயின்ட் பிரசன்டேஷன்' மூலம், கருத்தரங்கம் நடத்தி, பயிற்சித் திறமையை வெளிப்படுத்த வேண்டும். இதுபோன்று புதிய முறைகளுடன் படித்து, நல்ல கல்வித் தரத்துடன் பி.எட்., முடிக்க உள்ள பட்டதாரிகள், இனிமேல் நடக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்று, எளிதாக தேர்ச்சி அடைய வாய்ப்புள்ளதாகவும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்படும் என்றும் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
மாநிலப் பள்ளிகளில், 8ம் வகுப்பு வரையிலும்; மத்திய இடைநிலைக் கல்வி வாரிய, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு வரையிலும், கடந்த 2010ம் ஆண்டு முதல், சி.சி.இ., முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், ஆசிரியர் படிப்புக்கும், சி.சி.இ., மதிப்பெண் திட்டம் அறிமுகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.-
Tuesday, November 03, 2015
ஜாதி, வருமான சான்றிதழ் பள்ளிகளில் மையங்கள்
பள்ளி மாணவர் களுக்கு, ஜாதி, வருமான மற்றும் இருப்பிட சான்றிதழ் வழங்க, தாலுகாவுக்கு, நான்கு பள்ளிகளில் ஒருங்கிணைந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டன. முகாமைத் தவறவிடும் மாணவர்கள், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் ஆகியோரிடம் கையொப்பம் பெற்று, சான்றிதழ் வாங்கி வந்தனர். தற்போது, தாலுகாவுக்கு, நான்கு பள்ளிகளில், ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கும் மையங்கள் அமைக்கப்படுகின்றன. இனி, தாலுகா அலுவலகங்களுக்கோ, இ-சேவை மையங்களுக்கோ மாணவர்கள் அலைய வேண்டியதில்லை; சம்பந்தப்பட்ட மையங்களுக்கு சென்று விண்ணப்பித்து, சான்றிதழ் பெறலாம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
தீபாவளிக்கு முதல் நாள் விடுமுறை உண்டா?
'தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான, நவ., 9ம் தேதி, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்' என, மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.வரும், 10ம் தேதியான செவ்வாய் கிழமை அன்று, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வோர் வசதிக்காக, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து, தமிழகத்தின் பல பகுதி களுக்கும், சிறப்பு ரயில்கள் மற்றும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தீபாவளிக்கு முன், சனி, ஞாயிறு என, இரு நாட்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை; திங்கள் கிழமை பணி நாள்; செவ்வாய் கிழமை, தீபாவளி விடுமுறை என, உள்ளது.
அதனால், வெளியூர் செல்வோர், திங்கள் கிழமை வேலை நாளுக்காக, சொந்த ஊர் செல்வதை தவிர்த்து, தாங்கள் வசிக்கும் ஊர்களில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, திங்கள் கிழமை ஒருநாள் மட்டும், 'ரிலிஜியஸ் லீவ்' எனப்படும், மதச்சார்பு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, பெற்றோர், ஆசிரியர் தரப்பில் கூறியதாவது:சனி, ஞாயிறு விடுமுறை நாளாக இருந் தும், ஊருக்குச் செல்ல முடியாத தர்ம சங்கட மான சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, பள்ளிக் கல்வித் துறை மற்றும் பொதுத் துறை விதிகளின் படி, மதச்சார்பு விடுமுறையை அரசு அறிவித்தால், மாணவர்களுக்கு, நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Monday, November 02, 2015
சிறை செல்லும் போராட்டம்'ஜாக்டோ' கூட்டுக்குழு முடிவு
பதினைந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பரில், தடையை மீறி மறியல் மற்றும் சிறை செல்லும் போராட்டம் நடத்த, ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, 'ஜாக்டோ' முடிவு செய்துள்ளது.ஆசிரியர்களின், 24 சங்கங்கள் இணைந்த, ஜாக்டோ கூட்டு நடவடிக்கை குழுவின், உயர்நிலைக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில், அரசின் கவனத்தை ஈர்க்க, தொடர் போராட்டம், மாநாடு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.இதன்படி, வரும், 16ல் அமைச்சர், செயலர் மற்றும் உயரதிகாரிகளை சந்தித்து மனு அளிக்கப்படும். டிச., 5, 6ல் மாவட்ட அளவில் மாநாடு; டிச., 12, 13ல் வட்டார அளவில் ஆயத்த மாநாடு; டிச., 28, 29, 30ம் தேதிகளில், தமிழகம் முழுதும் கலெக்டர் அலுவலகங்கள் முன், தடையை மீறி தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும்.இதுகுறித்து, ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச் செயலருமான சாமி சத்தியமூர்த்தி கூறும்போது,
''ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை, ஜாக்டோ கூட்டுக்குழுவின் போராட்டம் தொடரும். மறியல் போராட்டத்தில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டால், சிறை செல்லவும் தயாராக உள்ளோம்,'' என்றார்.
பொதுத்தேர்வு வினாத்தாளில்புதிய மாற்றங்கள் அறிமுகம்
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில், புரிந்து விடை எழுதுதல், சிந்தனைத் திறன் மற்றும் படித்ததை பயன்படுத்துதல் என, மூன்று வகையான கேள்விகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பு பணி துவங்கியுள்ளது; ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் மூலம், 100க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
முதலில், நுாறு வினாத்தாள்களில், சிறந்த, 10 வினாத்தாள்கள் தேர்வு செய்யப்படும்; பின், அந்த, 10ல் இடம்பெற்றுள்ள, சிறந்த வினாக்களை மட்டும் எடுத்துச் சேர்த்து, இறுதி வினாத்தாள் தயாரிக்கப்படும்.இதுகுறித்து, தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தற்போதைய பாடத்திட்டத்தின், 'புளூ பிரின்ட்'டில் உள்ளது போல் தான் வினாத்தாள் இருக்கும். ஆனால், பாடங்களை புரிந்து படித்ததை உறுதி செய்ய உதவும் கேள்விகள்; படித்ததை விடையாக எழுதும் கேள்விகள்; பாடங்களின் அடிப்படையில், சிந்தித்து எழுதும் கேள்விகள் என, மூன்று வகைகளில் இருக்கும். புத்தகத்தின் பின்பக்க கேள்விகள் மற்றும் முந்தைய ஆண்டு பொதுத்தேர்வு வினாத்தாளில் உள்ள கேள்விகள் மட்டுமின்றி, தற்போது, புதிய கேள்விகளும் கேட்கப்பட உள்ளன.
எனவே, புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் மாணவர்கள் படிக்க வேண்டும்; நிச்சயமாக, பாடங்களை தவிர்த்து எந்த கேள்வியும் இருக்காது. அதே நேரத்தில், பாடங்களின் அடிப்படையில் சிந்தித்து எழுதும் வகையிலான கேள்விகள், நிச்சயம் இடம்பெறும். இந்த முறையில் தான், இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு வினாத்தாளும் அமையும். அதன் மூலம் பொதுத்தேர்வு வினாத்தாள் எப்படி இருக்கும் என்பதை மாணவர்கள் அறிய முடியும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.ஏன் புரிந்து படிக்க வேணடும்? பல பள்ளிகளில், புளூ பிரின்ட்டில் உள்ளது போல், ஒரு குறிப்பிட்ட பாடத்தில் இரண்டு மதிப்பெண் வினாக்கள், இரண்டு கேட்கப்படும் என கூறப்பட்டிருந்தால், அதன்படி, இரண்டு மதிப்பெண் வினாக்களை மட்டுமே கற்றுக் கொடுத்து, பாடத்தின் மற்ற அம்சங்களை விட்டு விடுகின்றனர்.
அதேபோல் கேள்வியையும், அதற்கான புத்தக பதிலையும் புரிந்தோ, புரியாமலோ படித்து, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் திணறுகின்றனர். இதைத் தவிர்க்க, பள்ளி கல்வித்துறைக்கு, அண்ணா பல்கலையில் இருந்து பல்வேறு ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன. எனவே, பள்ளி கல்வியை முடிக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் தடுமாறாமல் இருக்கவும்; பாடங்களை புரிந்து படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண்ணில் தேர்ச்சி பெறவும், இந்த வினாத்தாள் மாற்றம் உதவும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sunday, November 01, 2015
தமிழ் மொழி
உயிர் எழுத்துக்கள்
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள எனும் உயிர் எழுத்துக்கள் நாக்கின் உதவி இன்றி, அதாவது நாக்கு வாயின் மேல் அன்னத்தில் படாமல் வெறும் காற்றின் உதவியால் மட்டுமே உருவாகும் ஒலிகள் ஆகும். உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் கொண்டு உருவாகும் இந்த ஒலிகள் உயிர் எழுத்துக்கள் / ஒலிகள் என்று அழைக்கப்படுகின்றன.
மெய் எழுத்துக்கள்
க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் எனும் மெய் எழுத்துக்கள் நாக்கின் உதவிக் கொண்டு உருவாகும் எழுத்துக்கள் ஆகும். அதாவது, இந்த எழுத்துக்கள் உருவாகும் போது நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடும். இந்த ஒலிகள் உருவாகும் போது காற்றின் பங்கு மற்றும் உதவியை விட, உடலின் பங்கு அதிகம் என்பதால் இவை மெய் எழுத்துக்கள் / ஒலிகள் என்று அழைக்கப்பட்டன.
தமிழ் எழுத்துக்களும் உடல் பாகங்களும்
தமிழ் எழுத்துக்கள் நமது மார்பு, கழுத்து, தலை, மூக்கு போன்ற நான்கு இடங்களில் பிறக்கின்றன. இவை ஒலியாக வெளிப்பட உதடு, நாக்கு, பல், அண்பல் (மேல் பல் வரிசையின் அடிப்பகுதி), அண்ணம் (வாயி
தமிழ் எழுத்துக்கள்
உயிர் எழுத்து, மெய் எழுத்து மற்றும் இவை இரண்டின் கலப்பில் பிறந்த உயிர்மெய் எழுத்து மற்றும் "ஃ" எனும் ஆயுத எழுத்தையும் சேர்த்து தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் பிறந்துள்ளன.
உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1 (ஃ)
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247
பாவாணர் கருத்து
உலக மாந்தர் முதன் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ (படர்க்கை), இ (தன்னிலை) மற்றும் உ (முன்னிலை) என்பது பாவாணரரின் கருத்து. தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர். அவை தான் த், ம், ழ் என்பவை ஆகும்.
தமிழ் பெயர் பிறந்த விதம்
த், ம், ழ் எனும் இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி த்+அ = ‘த' வாகவும், ம்+இ = ‘மி' யாகவும், ழ்+உ = "ழு" வாகவும் என்று "தமிழு" என்று ஆக்கினர்
உகரத்தை நீக்குதல்
பிறகு கடைசி எழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி "தமிழு" என்பதை "தமிழ்" என்று அழைத்தனர். இது தான் நம் தாய் மொழிக்கு "தமிழ்" என்று பெயர் வந்ததன் காரணமாம்.
Saturday, October 31, 2015
'பிளாஸ்டிக்' தேசிய கொடி பள்ளிகளுக்கு அரசு தடை
பள்ளி, கல்லுாரிகளில், 'பிளாஸ்டிக்' தேசியக் கொடியை பயன்படுத்த, தமிழக அரசு தடை விதித்துள்ளது.பள்ளி, கல்லுாரி விழாக்களில், பலவிதமான தேசியக் கொடிகள் பயன்படுத்தப்படுகின்றன; விழா முடிந்ததும் வெளியே வீசப்படுகின்றன. இவற்றில், பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடி மக்கிப் போகாமல், அப்படியே கிடப்பதால், அவமரியாதை செய்யப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.இதை தவிர்க்க, தமிழகத்தில் பிளாஸ்டிக் தேசியக் கொடிகள் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான, பொதுத்துறை முதன்மைச் செயலர் ஜதீந்திரநாத் ஸ்வைனின் உத்தரவு, பள்ளி, கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப் பட்டுள்ளது
விகல்ப் திட்டம் அறிமுகம்
TNPTF MANI
முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் உள்ள ரயில் பயணிகளுக்காக "விகல்ப்" திட்டம் அறிமுகம்
முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் உள்ள ரயில் பயணிகளின் வசதிக்காக, அதே வழித்தடத்தில் பயணிக்கும் மற்ற ரயில்களில் அவர்களுக்கு இடமளிக்கும் "விகல்ப்" என்ற புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணிகளுக்காக, விகல்ப் என்ற புதிய திட்டத்தை ரயில்வே துறை நாளை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம், முன்பதிவு செய்த ரயிலில் டிக்கெட் கடைசி வரை உறுதியாகவில்லை என்றால், அதே மார்க்கத்தில் ஓடும் அடுத்த ரயிலில் டிக்கெட் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விகல்ப் திட்டத்தை, இணையம் மூலம் அடுத்த 6 மாதங்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்தவர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் ரயில்வே துறை கூறியுள்ளது.
இணையம் மூலம் டிக்கெட் பதிவு செய்யும்போது, விகல்ப் என்ற தேர்வையும் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், அதே வழித்தடத்தில் ஓடும் அடுத்த ரயிலில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்று ரயில் திட்டம் நாளை முதல் டெல்லி - லக்னோ மற்றும் டெல்லி - ஜம்மு வழித்தடத்தில் ஓடும் ரயில்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
முதல் சோதனையில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து மற்ற வழித்தடங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
Friday, October 30, 2015
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி.டி.இ.டி.) முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.ctet.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிகளுக்கு சி.டி.இ.டி. தேர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
2015-ஆம் ஆண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சேர்த்து மொத்தம் 959 மையங்களில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வை 7.5 லட்சம் பேர் எழுதினர். இந்தத் தேர்வுக்கான முடிவை சி.பி.எஸ்.இ. வெள்ளிக்கிழமை வெளியிட்டது. தேர்வில் பங்கேற்ற அனைவருக்குமான மதிப்பெண் பட்டியலும், தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான தகுதிச் சான்றிதழும் விரைவில் விநியோகிக்கப்படும் என சி.பி.எஎஸ்.இ. தெரிவித்துள்ளது.
அடுத்த தேர்வுகள்: 2016-ஆம் ஆண்டுக்கான சி.டி.இ.டி. தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதியன்றும், செப்டம்பர் 18-ஆம் தேதியன்றும் அடுத்தடுத்து நடத்தப்படும் எனவும் சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
1.20 லட்சம் ஆசிரியர்களின் டி.பி.எப்., மாநில கணக்காயருக்கு மாற்றம்
தமிழக தொடக்கக் கல்வித் துறையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளில், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், 1.20 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களின் ஊதியத்தில், மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும், வருங்கால வைப்புநிதி கணக்குகள், மாநில தகவல் மையத்தால் பராமரிக்கப்பட்டன.ஆனால், 2003க்கு பின், புதிய ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் துவங்கப்பட்ட பின், அந்த கணக்குகளும், மாநில தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்பட்டதால், குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் வருங்கால வைப்புநிதிக் கணக்குகள் அனைத்தும், மாநில கணக்காயர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டு உள்ளன. இனி, வருங்கால வைப்புநிதிக் கணக்குகளை, ஏ.ஜி., அலுவலகத்தில் தெரிந்து கொள்ள, ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் அறிவுறுத்தி உள்ளார்.இதற்கிடையில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், இதுவரை கணக்கில் வராமல் இருந்த, 21.70 லட்சம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்குகள் சரிசெய்யப்பட்டு உள்ளன. இந்த கணக்குகள், மாநில தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்படுவதாக, கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
நவ2 ல் ப்ளஸ் 2 சிறப்பு தேர்வு முடிவு
ஆங்கில ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் கிராக்கி
அரசு பள்ளிகளில், ஆங்கில ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கு காத்திருக்கின்றனர். அரசு பள்ளிகளில் உள்ள இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களில் பட்டப்படிப்பு முடித்தவருக்கு, பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வு, நேற்று நடந்தது.
இதில், 400 பேருக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த பதவி உயர்வில் தமிழ், அறிவியல் மற்றும் கணிதத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு, போதிய காலியிடம் இல்லை. நேற்றைய கலந்தாய்வில், 1989ல் பணியில் சேர்ந்த, அறிவியல் பட்டதாரிகளுக்கே பதவி உயர்வு பரிசீலிக்கப்பட்டது. தமிழ் பாடத்தில், 2001; கணிதம், 2002; வரலாறு, 2006ல் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டது.
ஆங்கிலத்தில் மட்டும், 2014ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு கூட, பதவி உயர்வு கிடைத்தது. இதுகுறித்து, அதிகாரிகள் கூறும்போது, 'தமிழ், அறிவியல், வரலாறு பாடங்களில் காலியிட எண்ணிக்கையை விட, அதில் பட்டம் பெற்ற ஆசிரியர் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளது. இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்கள், ஆங்கில பட்டப்படிப்பு முடிக்காததால், அவர்களால், பதவி உயர்வு பெற முடியவில்லை' என்றனர்
Thursday, October 29, 2015
அஞ்சல் துறை செல்வமகள் திட்டம்: வயது 12-ஆக அதிகரிப்பு
அஞ்சலக செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பெண் குழந்தைகள் பயனடையும் வகையில் வயது 10-லிருந்து 12-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை நகர அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பெண் குழந்தைகள் பயனடையும் வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டம் ("சுகன்யா சம்ரித்தி கணக்கு') மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரையில் இந்தியாவில் உள்ள அஞ்சலகங்களில் மொத்தம் 73 லட்சம் செல்வமகள் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதில், தமிழகத்தில் மட்டும் 11 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரையில் முதலீடான தொகை ரூ.2,328 கோடி ஆகும். இதற்கு முன்பு வரையில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் தொடக்க காலம் என்பதால் அரசு இரண்டு ஆண்டு சலுகை வழங்கி திட்டத்துக்கான பெண் குழந்தைகளின் வயதை 12-ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சலுகை வரும் 1.12.2015-ஆம் தேதி முடிவடைகிறது. அதனால் 3.12.2003 முதல் 2.12.2005 வரை பிறந்த பெண் குழந்தைகள் இத் திட்டத்தில் வரும் 1.12.2015 வரையில் சேரலாம். வரும் டிசம்பர் 1-ஆம் தேதிக்குப் பிறகு, 10 வயது வரையில் உள்ள குழந்தைகள் மட்டுமே இந்தத் திட்டத்தில் சேர்ந்து பலன் அடைய முடியும்.
இதை பள்ளிகளில் 6,7-ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளின் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோல், பள்ளிகளில் ஆசிரியர்களும் பெற்றோர்களிடம் எடுத்துரைக்க வேண்டும். செல்வமகள் சேமிப்புக் கணக்கை கிளை அஞ்சலகங்கள் உள்ளிட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கலாம். இந்தக் கணக்கு தொடங்குவதற்கு குறைந்தது ரூ.1000-ம் செலுத்த வேண்டும். அதையடுத்து, ரூ.100 அல்லது அதன் மடங்குகளாகவோ செலுத்தலாம். இதில், குறிப்பிட்ட தவணை முறைகள் இல்லாமல் வசதிக்கேற்ப பணம் செலுத்தும் வசதி உண்டு. எல்லா அஞ்சலகங்களிலும் இதற்கான சிறப்பு சேவை முகாம் நவம்பர் மாதம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் 9.2 கூட்டு வட்டி மிக கணிசமானதாகும் என்றார் மெர்வின் அலெக்சாண்டர்.