இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, September 27, 2015

மதுரையில் 27.9.2015 அன்று நடந்த TNPTF மாநிலச் செயற்குழுதகவல் துளிகள்...

1).தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மாநடு வருகிற பிப்ரவரி 2016ல் தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்த மாநிலச் செயற்குழு ஒப்புதல்.

2).டிசம்பர் குளிர்கால கூட்டத்தொடர் நடக்கும்பொழுது கல்வியை பாதுகாக்ககோரி மாபெரும் பேரணி - இந்திய தலைநகரில் நடத்த முடிவு. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க செயற்குழுவில் மாவட்டச் செயலாளர்கள் ஒப்புதல்.

3).நாளை (28.9.15) ஜேக்டோ உயர்மட்ட கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் செ.பாலச்சந்தர் பங்கேற்பு.

4).2016 இயக்க நாட்காட்டிக்கு துணைப்பொதுச் செயலாளர் தோழர் மயில் தலைமையில் குழு அமைப்பு. மாநிலப்பொறுப்பாளர்கள் முருகேசன்,ராஜா, ஜான் ஆகியோர் குழுவில் இடம்பெற மாநிலச் செயற்குழு ஒப்புதல்.

5).இயக்க இதழை மாத இதழாக மாற்ற முடிவு. ஆண்டுச்சந்தா ரூ120 ஆகவும்.
ஆயுள் சந்தா ரூ1200 ஆகவும் மாற்ற செயற்குழு முடிவு.

6). ஜனவரி 2016 முதல் புதிய பொழிவுடன் மாத இதழ் வெளியீடு.சந்தா மாற்றம் உடனடி அமுல். ஆண்டு சந்தாவிற்கு மட்டும் அக்டோபர் 31 வரை தவிர்ப்பு.

7).வருகிற அக்டோபர் 14 புது தில்லியில்அகில இந்திய ஆசிரியர் சங்கங்களின் சார்பில் கருத்தரங்கம். மாநிலத் தலைவர் திரு.மோசஸ், மாநிலப்பொருளாளர் திரு.ஜீவானந்தம், துணைப்பொதுச் செயலாளர் திரு.மயில், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் திரு.சரவணன் பங்கேற்பு.

8).வருகிற 22, 23 ஹைதராபாத்தில் பெண் ஆசிரியர் மாநாடு. மாவட்டத்திற்கு ஒரு பெண் ஆசிரியர் வீதம் நமது அமைப்பிலிருந்து30பேர் பங்கேற்பு. பங்கேற்பாளர் விவரத்தினை அக்டோபர்5க்குள் தோழர் மலர்விழியிடம் மாவட்டச்செயலாளர்கள் சமரப்பிக்க வேண்டும்.

9).நோபாள பூகம்பத்தில் பாதிக்கப்பட்டமக்களுக்காக நமது இயக்கத்தின் சார்பாக ரூ50000 அளிக்க மாநிலச் செயற்குழு ஒப்புதல்.

10).செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தைவெற்றிகரமாக்கியஉறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்க மாவட்ட கிளைக்கு உத்தரவு.

11).ஜேக்டோ வேலை நிறுத்தத்தை முழு மூச்சுடன் பணியாற்றி வெறிறகரமாக்கிட வேண்டுகோள்.

12).நாளை(28.9.2015)
மாநிலப் பொறுப்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்க தொடக்கக்கல்வி இயக்குனரை சந்திக்கின்றனர்.

13).திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலரின் அநாகரிகமான செயலுக்கு முற்றுபுள்ளி வைக்க மாவட்ட கிளை மாபெரும் போராட்டம் நடத்த மாநிலச் செயற்குழு வழிகாட்டல். மாநிலத் தலைவர் தோழர் மோசஸ் பங்கேற்பு. அனைத்து மாவட்டச் செயலாளர்களும் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் திரு.எஸ்.கிருஷ்ணன் அழைப்பு. மாநிலச் செயற்குழு ஏற்பு.

அக்.15-இல் பள்ளிகளில் இளைஞர் எழுச்சி நாள்


குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15ஆம் தேதி, பள்ளிகளில் இளைஞர் எழுச்சி நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் ஆசிரியராக இருப்பதையே பெரிதும் விரும்பினார். இளைய தலைமுறையினரும், மாணாக்கர்களும் வாழ்வின் உன்னத நிலை அடைவதற்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் சிறந்த பங்காற்றிடவும் உந்துசக்தியாக விளங்கினார்.

எனவே, அவரது நினைவைப் போற்றும்விதமாக அப்துல் கலாம் பிறந்த தினமான அக். 15ஆம் தேதி இளைஞர் எழுச்சி நாளாக தமிழக அரசின் சார்பில் கடைப்பிடிக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதனடிப்படையில் வரும் அக். 15ஆம் தேதி கலாமின் சாதனைகள் குறித்து விளக்கவும், இந்தியாவின் எதிர்காலத்துக்குத் தேவைப்படும் ஆராய்ச்சிகள், அறிவியல் வளர்ச்சிகள் குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தவும், நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு குறித்து தெளிவுபடுத்தவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய ஓய்வு 50 வயதுக்கு மேல் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் கலக்கம்


மத்திய அரசில் 18 பெரிய துறைகள் உள்ளன. ராணுவம், பாதுகாப்பு, வெளியுறவு, மனித வள மேம்பாடு, எல்.ஐ.சி., தபால், பி.எஸ்.என்.எல்., கப்பல், வருமான வரி, சுங்கவரி உள்ள பல துறைகளில் ரெயில்வே மிகப் பெரிய துறையாகும். இந்த துறையில் மட்டும் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
அனைத்து மத்திய அரசு துறைகளிலும் மொத்தம் 34 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 38 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். மத்திய அரசின் புதிய கொள்கைக்கு எதிராக நவம்பர் 23–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபடப் போவதாக அறிவிப்பு கொடுத்துள்ளனர்.

அந்நிய நேரடி முதலீடு, தனியார் மயம், ஆட் குறைப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளை கண்டித்து நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் மத்திய அரசு ஏற்கனவே உள்ள சட்டத்தை புதிதாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. 56(ஜெ), 56 (ஐ) ஆகிய விதியின் கீழ் 50 முதல் 55 வயதுடைய அல்லது 30 வருடம் சர்வீஸ் முடித்தவர்களை 3 மாதத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
இதற்காக 2 பேர் கொண்ட ஆய்வு கமிட்டியை அமைத்து செயல்படுத்தவும் அனைத்து துறை அதிகாரிகளும் இதனை உடனே பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவு கடந்த 4–ந்தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய உத்தரவால் அனைத்து ஊழியர்களும் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்துள்ளனர்.
இதனால் ‘ஏ’ முதல் டி பிரிவு வரை உள்ள அதிகாரிகளும் ஊழியர்களும் பழி வாங்கப்படலாம் என்று கருதுகின்றனர்.
நவம்பர் மாதம் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தடுக்கவும் ஒடுக்குவதற்காகத்தான் புதிய சட்டத்தை தற்போது மத்திய அரசு அமல்படுத்துகிறது.

இதன் மூலம் ஊழியர்களை கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக மத்திய தொழிற்சங்கங்கள், ரெயில்வே தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
இதுகுறித்து எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்க பொதுச் செயலாளர் பி.எஸ்.சூரிய பிரகாசம் கூறியதாவது:–

இந்த புதிய சட்டத்தால் ரெயில்வே துறையில் உள்ள அனுபவமிக்க தொழிலாளர்கள், அதிகாரிகள் பாதிக்கப்படுவார்கள். சம்பள உயர்வு கட், பதவியிறக்கம் போன்று ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளான தொழிலாளர்களையும், அதிகாரிகளையும் நேர்மையற்ற திறமையற்றவர்களாக கருதி கட்டாய ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளது.
இந்த சட்டத்தை பயன்படுத்தி வேலை செய்ய தகுதி இல்லாதவர்கள் எனக் கூறி 50 வயதுக்கு மேல் உள்ளவர்களை வெளியேற்ற மோடி அரசு சதி செய்கிறது. சரியாக வேலை செய்யவில்லை என்று காரணம் காட்டி வீட்டிற்கு அனுப்புவதற்கு வழி வகுக்கிறது. காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நசுக்கத்தான் இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இதனை உடனே வாபஸ் வாங்க வேண்டும். வாபஸ் வாங்கும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, September 26, 2015

வாக்காளர் பெயர் நீக்கம் செய்ய புதிய முறை அறிமுகம்ஓட்டுச்சாவடி அலுவலர் சான்று வழங்கினால் மட்டுமே அமல்


வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பரிவர்த்தனையில், உரிய அலுவலர் சான்று வழங்கும் முறை அறிமுகமாகி உள்ளது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, விண்ணப்பத்துடன் முகவரி, வயது போன்றவைகளுக்கான ஆவணங்கள், ஆதார் அடையாள அட்டை போன்றவைகளின் நகல்களும் இணைக்கப்பட வேண்டும். உத்தரவுஅந்த படிவத்தை, உரிய அலுவலர்கள் விசாரித்து பெயர் சேர்க்கப்படும். ஆனால், எவ்வித அறிவிப்பும் இன்றி, பெயர் நீக்கம் செய்யப்படுவதாக, ஆயிரக்கணக்கான புகார்கள் வருகிறது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன், சேலம் தெற்கு தொகுதி, அ.தி.மு.க.,- - எம்.பி., பன்னீர்செல்வம் பெயர் நீக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், தேர்தல் ஆணையம், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பொறுப்பு வகிப்போர், பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்றவைகளுக்கு சான்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:

வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், முகவரி, வயது, எழுத்துப்பிழை போன்ற மாற்றங்களுக்கு விண்ணப்பத்துடன், உரிய ஆவணங்கள் இணைக்கப்படும். அதை ஒவ்வொரு பகுதிக்கும் ஆசிரியர், வி.ஏ.ஓ., அங்கன்வாடி பணியாளர், கிராம உதவியாளர் என, குறிப்பிட்ட நபர்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டு, அவர்கள் விசாரிப்பர். விசாரணைக்குப்பின், அவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில், பெயர் சேர்த்தல், நீக்கம், மாற்றம் நடக்கிறது. தற்போது, சிறிய கிராமங்களில், ஒரு ஓட்டுச்சாவடி இருந்தால், வி.ஏ.ஓ.,வும், இரண்டு இருந்தால், வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளரும், நகரப்பகுதியில் ஆசிரியர், வி.ஏ.ஓ., அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் போன்றோரும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

புதிதாக வரும் பெயர் சேர்ப்பு, நீக்கம், மாற்றம் போன்றவைகளை, இவர்கள் முழுமையாக விசாரித்து, ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் தனியாக சான்று வழங்க வேண்டும். அச்சான்றில், குறிப்பிட்ட நபரை நீக்கம் செய்யலாம், பெயரை சேர்க்கலாம் என, இவர்கள் குறிப்பிட வேண்டும். தீர்வுஅவர்கள் வழங்கும் சான்று அடிப்படையில்தான், இப்பரிவர்த்தனை நடக்கும். இனி, இந்த அலுவலர்கள் தவறு செய்தாலோ, பதவின்போது தவறு நடந்தாலோ, உரிய அலுவலர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சேலத்தில், எம்.பி., பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பிரச்னையில், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டதால், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இனி, இதுபோன்ற நடவடிக்கை தொடர்வதுடன், தேவையின்றி பெயர் சேர்ப்பு, நீக்க பிரச்னைக்கு விடிவு ஏற்படும், இவ்வாறு அவர் கூறினார்.

வாக்காளர் சேர்ப்பு மனுக்களை மொத்தமாக பெறத்தடை


புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு மனுக்களை, மொத்தமாக பெற தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் செப்.,15 முதல் அக்.,14 வரை சுருக்கத் திருத்தப் பணிகள் நடக்கின்றன. வரும், 2016 ஜன.,1 தகுதி நாளாகக்கொண்டு, 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களது பெயர்களை பட்டியலில் புதிதாக சேர்ப்பது, பெயர்களை நீக்குவது, திருத்தம், முகவரி மாற்றத்திற்கு ஓட்டுச்சாவடி நிலை அலுவலர், தாசில்தார், நகராட்சி கமிஷனர், ஆர்.டி.ஓ., விடம் மனு தரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக ஓட்டுச்சாவடிகளில் செப்.,20 ல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அடுத்த முகாம் அக்.,4ம் தேதி நடக்கிறது. தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகை யில்,''பட்டியலில் போலி வாக்காளர்களை சேர்த்துவிடக்கூடாது என்பதில் தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது. அரசியல் கட்சி பிரமுகரோ அல்லது தனிநபரோ பெயர் சேர்க்க, பத்து விண்ணப்பங்களுக்கு மேல் தந்தால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,''என்றார்.

'படிப்பு அவசியமில்லை' என நினைப்போர் அதிகரிப்பு: என்.எஸ்.எஸ்.ஓ., ஆய்வில் அதிர்ச்சி தகவல்


    இந்தியாவில், 100க்கு 13 பேர், பள்ளிக்கு சென்றதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது; 'படிப்பு அவசியம் இல்லை' என, இவர்கள் கூறுவதாக, ஓர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. பள்ளியில் சேர்க்க பணம் இல்லாமை, வீட்டு வேலைகள் போன்ற பல்வேறு காரணங்களால், சிறுவயதில் பள்ளியில் சேர முடியாமல் போவது சகஜம். மாறாக, படிப்பு அவசியம் இல்லை என நினைப்பதால், பெரும்பாலானோர் பள்ளியில் சேர்ந்து படிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதாக, என்.எஸ்.எஸ்.ஓ., எனப்படும், தேசிய மாதிரி கணக்கீட்டு அலுவலக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, என்.எஸ்.எஸ்.ஓ., ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:5 வயது முதல், 29 வயது வரையுள்ள நபர்களிடம், பள்ளிப்படிப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 100 பேரில், 13 பேர், படிப்பு அவசியம் இல்லை எனக் கருதுவதால், பள்ளியில் சேரவில்லை என்றோ, படிப்பை பாதியில் விட்டு விட்டதாகவோ தெரிவித்தனர். 10 வயது முதல் 14 வயதுள்ள குழந்தைகளிடையே, இந்த விகிதாச்சாரம் மிக அதிகமாக காணப்பட்டது. இந்த பிரிவில், மூன்று பேரில், ஒருவர், படிப்பு அவசியம் இல்லை எனக் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

10 ஆண்டுக்கு முன், இதே போன்று நடந்த ஆய்வில், நான்கில் ஒருவர் மட்டுமே, இதுபோன்ற பதிலை அளித்திருந்தனர். கிராமப்புறங்களில் அதிகமாக, 34.8 சதவீதம் பேர், பள்ளிப் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. நகர்ப்புற குழந்தைகளை பொறுத்தவரை, 22.8 சதவீதம் பேர், பள்ளிப் படிப்பு அவசியமில்லை எனக் கூறி உள்ளனர். அதேசமயம், வயது அதிகமானோரில், குறைந்த விகிதத்தினரே, படிப்பு அவசியமில்லை எனத் தெரிவித்தனர். 15 முதல் 19 வயதுக்கு உட்பட்ட, பள்ளிக்கு செல்லாத ஒவ்வொரு 100 பேரில், 17 பேர் மட்டுமே, 'பள்ளி படிப்பு அவசியமில்லை' எனத் தெரிவித்தனர். 20 முதல் 24 வயதுக்கு உட்பட்ட பிரிவில், 12 சதவீதத்தினரே, இந்த பதிலை கூறியிருந்தனர்.

மொத்தத்தில், 5 வயது முதல், 29 வயதுக்கு உட்பட்டோரில் பெரும்பாலானோர், வீட்டில் போதிய வருவாய் இல்லாமையால், படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். இந்த காரணத்தை, 36 சதவீதம் பேர் கூறியுள்ளனர். 26 சதவீதம் பேர், வீட்டு வேலைகளை கவனிக்க, படிப்பை விட்டதாக தெரிவித்துள்ளனர். பெண்களில் 50 சதவீதம் பேர், வீட்டு வேலைகளை கவனிக்க, படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். பெரும்பாலான பெண்கள், திருமணம் காரணமாக, படிக்க தொடர முடியவில்லை. உலக நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில், பெண்களுக்கு திருமணம் செய்யும் வயது, குறைவாக உள்ளது. அதனால், சிறுவயதிலேயே, பெண்களின் படிப்பை நிறுத்தி விட்டு, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். கிராமப்புறங்களில், இவ்வழக்கம் அதிகமாக உள்ளது.

ஆண்களை பொறுத்தவரை, 15 வயது ஆனபின், வீட்டுத் தேவைக்கு சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தால், படிப்பை பாதியில் கைவிடுவது அதிகமாக உள்ளது. சொந்த மாநிலங்களை விட்டு வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வசிப்பவர்களின் குழந்தைகளுக்கு, கல்வி வசதி எளிதாக கிடைப்பதில்லை. இருப்பிடச் சான்று, இடமாற்று சான்று போன்ற நடைமுறை சம்பிரதாயங்கள், இவர்களின் கல்விக்கு தடைக்கல்லாக உள்ளன. இவ்வாறு, என்.எஸ்.எஸ்.ஓ., ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, டில்லி ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த, துணை பேராசிரியர் ஜெயன் ஜோஸ்தாமஸ் கூறுகையில், 'நாட்டில் கல்விக்கான தேவை, அதிகமாகி உள்ளது. அதிகம் பேர், பள்ளிகளுக்கு செல்லத் துவங்கி உள்ளனர். ஆனால், கல்வி கட்டமைப்பு, தரம், ஆசிரியர்களின் திறன், போன்றவை, குறிப்பிடும்படி இல்லை; எனவே, பலர், பாதியில் படிப்பை விட்டு விடுகின்றனர்' என்றார். டில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணை பேராசிரியர் ஹிமான்ஷு கூறுகையில், 'நாட்டின் கல்வி முறை, படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இல்லை. பள்ளி, கல்லுாரிகளை மாற்றுவதை விட, செய்யும் வேலையை எளிதாக மாற்றிக் கொள்ள முடியும். பள்ளிக்கு நீண்ட காலம் செல்லாத குழந்தை, மீண்டும் பள்ளியில் சேர்வது மிகக் கடினம்' என்றார்.

Friday, September 25, 2015

1,144 உதவிப் பேராசிரியர், விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர்


தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் 611 உதவிப் பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக்குகளில் 533 விரிவுரையாளர் பணியிடங்கள் என மொத்தம் 1,144 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 4 ஆண்டுகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 11 பாலிடெக்னிக்குகள், 24 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், 14 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதோடு, 959 புதிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவியருக்குத் தரமான கல்வியை வழங்கும்பொருட்டு, அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 611 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், அரசு பாலிடெக்னிக்குகளில் 533 விரிவுரையாளர் பணியிடங்கள் என மொத்தம் 1,144 உதவிப் பேராசிரியர், விரிவுரையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்.

அண்ணா பல்கலைக்கழக உள்கட்டமைப்பு வசதிக்கு ரூ.252 கோடி: பல்கலைக்கழகத் துறைகளை உள்ளடக்கிய 4 வளாகங்களையும், 13 உறுப்புக் கல்லூரிகளையும், 4 மண்டல அலுவலகங்களையும் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல், பொறியியல் சார்ந்த துறைகள் மிகச் சிறப்பு வாய்ந்த வளர்ச்சி நிலைக்கு உயர்த்தப்படும். விடுதிகள், போக்குவரத்து வசதிகள், மைய நூலகங்கள், கணினி மையங்கள், சூரிய ஒளியில் இருந்து ஆற்றல் உருவாக்கும் அமைப்புகள் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.252 கோடியே 60 லட்சத்தில் மேற்கொள்ளப்படும்.

அன்னை தெரசா மகளிர் பல்லைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.60 கோடியில் மேம்படுத்தப்படும். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.62 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த நிதியின் மூலம் கல்வி, நிர்வாகக் கட்டடங்கள், வகுப்பறைகள், விடுதிகள், ஆய்வுக் கூடங்கள், கழிப்பறைகள் ஆகியவை கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

புதிதாக 5 கல்வியியல் கல்லூரிகள், 5 பாலிடெக்னிக்குகள் புதிதாக 5 கல்வியியல் கல்லூரிகள், 5 பாலிடெக்னிக்குகள் தொடங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 1957-ஆம் ஆண்டுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் அரசு கல்வியியல் கல்லூரி ஏதும் தொடங்கப்படவில்லை. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மூலம் 5 உறுப்புக் கல்வியியல் கல்லூரிகள் ரூ.15 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும். பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் தொழில்நுட்பக் கல்வியையும், வேலைவாய்ப்பையும் பெற 5 புதிய அரசு பாலிடெக்னிக்குகள் ரூ.150 கோடியில் தொடங்கப்படும் என்றார்.

புதிதாக 32 நீதிமன்றங்கள்: முதல்வர்


தமிழகத்தில் 13 மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள், 9 குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், 10 விரைவு நீதிமன்றங்கள் என மொத்தம் 32 நீதிமன்றங்கள் புதிதாக அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண லால்குடி, கீரனூர், ஓமலூர், பரமத்தி, ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களில் தலா ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அமைக்கப்படும்.

கோவையில் 2 கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள், மதுரையில் 3 கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள், மணப்பாறை, அருப்புக்கோட்டை, திருமங்கலத்தில் ஒரு கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் என 13 மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. வாடிப்பட்டி, ஆண்டிப்பட்டி, ஓமலூர், கீரனூர், கும்பகோணம், பெரம்பலூர், தாம்பரம், ஆலந்தூர், பத்மநாபபுரம் ஆகிய இடங்களில் தலா ஒரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வீதம் 9 குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். மொத்தம் 22 நீதிமன்றங்கள் ரூ.9 கோடியில் அமைக்கப்படும்.

விரைவு நீதிமன்றங்கள்: தேனி, பரமக்குடி, ஆரணி, நாகர்கோவில், விழுப்புரம், பழனி, மேட்டூர், கும்பகோணம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் மாவட்ட நீதிபதி அளவிலான 10 விரைவு நீதிமன்றங்கள் ரூ.5 கோடியே 32 லட்சத்தில் அமைக்கப்படும்.

செப்.28 முதல் அக்.6 வரை பத்தாம் வகுப்பு தனித் தேர்வு


பத்தாம் வகுப்பு தனித் தேர்வு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இதுவரை பதிவிறக்கம் செய்யாதவர்கள் அவற்றைப் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

ஏ.டி.எம்.,மில்கிடைக்கும்ரூ.5௦ நோட்டு


வங்கி, ஏ.டி.எம்.,களில், 1,000, 500, 100 ரூபாய் நோட்டுகளுடன், இனி மேல், 50 ரூபாய் நோட்டும் கிடைக்கும்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இப்போது, ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு, இரண்டு வித ரூபாய் நோட்டுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 1,000 ரூபாய் நோட்டுகளுடன், 500 ரூபாயும்; 500 ரூபாயுடன், 100 ரூபாய் நோட்டுகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், வாடிக்கையாளர்களின் வசதிக்காக, 100 ரூபாயுடன், 50 ரூபாய் நோட்டும் வழங்க, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.

இந்த உத்தரவையடுத்து, சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள, எஸ்.பி.ஐ., கிளையின், ஏ.டி.எம்., மையத்தில் இந்த வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற வங்கிகள், தங்கள் ஏ.டி.எம்., மையங்களில், 50 ரூபாய் நோட்டுகளை நிரப்பும் பணியை துவங்கியுள்ளன. விரைவில் நாடு முழுவதும், அனைத்து வங்கிகளின், ஏ.டி.எம்., மையங்களிலும் இந்த வசதியை பெறலாம்.

EMIS DATA login page

Click below

https://emis.tnschools.gov.in/accounts/login/?_e_pi_=7%2CPAGE_ID10%2C6017525494