இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, April 11, 2015

பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம்

பத்தாம் வகுப்பு சமச்சீர் பாடத் திட்டத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் பயிற்சி, விளக்க படம், வினாக்கள் கூடுதலாக இடம் பெற்றுள்ளன. பத்தாம் வகுப்புக்கு 2012 முதல் புது பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டன.

வரும் கல்வி ஆண்டில் சில பாடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; கூடுதல் வினா, பயிற்சி, படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 'புளு பிரின்ட்' மாற்றம்: அறிவியல் பாட வினாத்தாளில் 'புளு பிரின்ட்' சிறிது மாற்றப்பட்டு உள்ளது. உயர்கல்விக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் பாடங்களில் பயிற்சி வினாக்கள், கணக்குகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளன. சமூக அறிவியலில் 'பேரிடர் மேலாண்மை' குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் புத்தகங்கள்: ஆறு முதல் பத்தாம் வகுப்பு புத்தகங்கள் பள்ளிகளுக்கு தற்போது அனுப்பப்பட்டு உள்ளன. தேர்வு முடிவு வெளியான மறு நாளில் இருந்து புத்தகங்களை வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

5மணி நேரம் மின் தடை

பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்ததால், ஐந்து மணி நேரம் மின் தடை செய்ய, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, வீடு, விவசாயம், தொழிற்சாலை என, மொத்தம், 2.60 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். அனல், நீர் உள்ளிட்ட மின் நிலையங்களில், உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், துணைமின் நிலையங்களுக்கு கொண்டு வரப்படுகிறது. பின், அங்கிருந்து, டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி துணையுடன், கேபிள், மின் கம்பம் வாயிலாக, மின் வினியோகம் செய்யப்படுகிறது. துணைமின் நிலையம், டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி ஆகியவை, எப்போதும், அதிக வெப்பத்துடன் இருப்பதால், அவற்றில் அடிக்கடி பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டி உள்ளது. அதன்படி, மின் வாரியம் சார்பில், குறிப்பிட்ட இடைவெளியில், ஒவ்வொரு பகுதியிலும், காலை, 9:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை, பராமரிப்பு பணிக்காக, மின் வினியோகம் நிறுத்தப்படும். இதற்காக, மின் தடை செய்யப்படும் இடம், மின் வாரிய அதிகாரிகள் சார்பில், பொதுமக்களுக்கு, முன்கூட்டியே தெரிவிக்கப்படும்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்ததால், பள்ளிகளுக்கு தடையில்லாமல் மின் வினியோகம் செய்யப்பட்டது. இதனால், கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஐந்து மணி நேரம் தொடர், மின் தடையில் இருந்து, பொதுமக்கள் தப்பித்தனர். இந்நிலையில், தேர்வு முடிந்ததை அடுத்து, துணைமின் நிலையம், டிரான்ஸ்பார்மர் உள்ளிட்டவற்றில், பராமரிப்பு பணி செய்யப்பட இருப்பதால், மீண்டும், ஐந்து மணி நேரம் மின் தடை செய்யப்படும் சூழல் உருவாகி உள்ளது. இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோடைக்கால, மின் தேவை அதிகரிப்பால், 'ஓவர்லோடு' காரணமாக, மின் சாதனங்களில், அடிக்கடி பழுது ஏற்படும். இதைத் தவிர்க்க, அவற்றில், பராமரிப்பு பணி செய்ய வேண்டும். தற்போது, தேர்வு முடிந்துள்ள நிலையில், தொடர் பழுது ஏற்படும் இடங்களில், பராமரிப்பு பணி செய்யப்பட இருக்கிறது. இதற்காக, மின் தடை செய்யப்படும் இடங்கள், இரண்டு நாட்களுக்கு முன், பத்திரிகைகள் மூலம், மக்களுக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

தமிழ் சிறுகதை மற்றும் நாவல்கள்

Click below

http://books.tamilcube.com/tamil/

பீகாரில் ஊதிய உயர்வு கேட்டு ஆசிரியர்கள்.ஆர்ப்பாட்டம்

பீகாரில் சம்பள உயர்வு கேட்டு 73,000 பள்ளிகளை பூட்டி ஆசிரியர்கள் போராட்டம்

இந்திய அளவில் படித்தவர்களின் சராசரி விகிதம் 74. ஆனால் பீகாரில் 63 சதவீதம் பேரே படித்துள்ளனர்.

அடிப்படைக்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நிதீஷ்குமார் ஏற்கனவே முதல்–மந்திரியாக இருந்த போது 3.5 லட்சம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களை தற்காலிகமாக நியமனம் செய்தார். இவர்களுக்கு மதிப்பூதியம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டது.
அந்த மாநிலத்தில் உள்ள 80 ஆயிரம் நிரந்தர ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் சராசரியாக ரூ.40 ஆயிரம். ஆனால், தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளமாக தலா ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தகுதி இல்லாதவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

தற்போது பீகார் மாநில தொடக்கப் பள்ளிகளில் 63 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது. எனவே, நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையாக சம்பள உயர்வு, கூடுதல் ஆசிரியர் நியமனம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

இதுகுறித்து மாநில கல்வி மந்திரி பி.கே.சகி கூறும்போது, ‘‘ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து அரசுடன் பேசப்போகும் 15 உறுப்பினர்களின் பட்டியலை முதலில் அவர்கள் தரட்டும். அதன் பிறகு பேசி முடிவு செய்யலாம்’’ என்றார். ஆனால் ஆசிரியர் சங்க தலைவர் புரன்குமார், ‘ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறிய அரசு இப்போது பின் வாங்குகிறது’ என்றார்.

இந்த நிலையில் நியமன ஆசிரியர்கள் நேற்று முன் தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினார்கள். நேற்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடந்தது.

இதையடுத்து பீகார் மாநிலம் முழுவதும் 73 ஆயிரம் ஆரம்ப பள்ளிகளுக்கு பூட்டுப்போடும் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்துக்கு அந்த மாநில எதிர்க்கட்சியான பா.ஜனதா ஆதரவு அளித்துள்ளது.

Friday, April 10, 2015

விடைத்தாளை மற்ற பள்ளி ஆசிரியர்கள் மூலம் திருத்த கோரிக்கை

விடைத்தாள்களை, மற்ற பள்ளி ஆசிரியர்கள் மூலம் திருத்த ஏற்பாடு செய்ய கோரிக்கை

துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை அறிய, அவர்கள் எழுதிய தேர்வு விடைத்தாள்களை, மற்ற ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள் மூலம் திருத்துவதற்கு, கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் மட்டுமே, பிற மாவட்ட ஆசிரியர்கள் மூலம் திருத்தப்படுகின்றன. மாணவர்களின் கல்வித்தரத்தை அளவிடுவதில், எவ்வித முறைகேடும் நடைபெறாமல் இருக்க, இந்நடைமுறை பின்பற்றப்படுகிறது.

தற்போது, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, ஆல்பாஸ் முறை என்பதால், மாணவர்கள் தேர்வுகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்ற புகார் உள்ளது. தேர்வில் முழுமையாக விடை எழுதாவிட்டாலும், அம்மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்ய வேண்டிய கட்டாயத்தில், ஆசிரியர்கள் உள்ளனர். இதனால், பல பெற்றோருக்கு குழந்தைகளின் கல்வித்தரம் குறித்து, முழுமையாக அறிய முடிவதில்லை.

இந்நிலையை மாற்றும் வகையில், பல மாவட்டங்களில் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தேர்வு விடைத்தாள்களை, மற்ற ஒன்றிய பள்ளி ஆசிரியர்களின் மூலம் திருத்துவதற்கான நடவடிக்கைகள், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்மூலம், மாணவர்களின் உண்மையான கல்வித்தரத்தையும், பள்ளியின் தரத்தையும் அறிவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த நடைமுறையை, திருப்பூர் மாவட்டத்திலும் பின்பற்ற வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: மாணவர்களின் கல்வித்தரத்தை அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்வதால், அவர்கள் தேர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. தேர்வு முடிவு தெரிவிக்கப்படும் நாளில், அதை தெரிந்து கொள்வதில் கூட ஆர்வம் காட்டுவதில்லை. மாணவர்களை, கட்டாயம், பாஸ் செய்தே தீர வேண்டும் என்ற நிலையில், ஆசிரியர்கள் உள்ளனர்.

பள்ளிகளின் கற்பித்தல் நிலை என்ன என்பதை, அந்தந்த பள்ளி நிர்வாகத்தினரே அளவிட முடியாத நிலை உள்ளது. மற்ற பள்ளி ஆசிரியர்கள் மூலம் தேர்வு விடைத்தாள்களை திருத்தினால், மாணவர்களின் கல்வித்திறன் மட்டுமின்றி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் சுயமதிப்பீடு செய்ய முடியும்.

உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நடப்பது போல், துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும், மூன்றாம் பருவத்தேர்வை முன்னதாகவே நடத் தினால், அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கையை விரைந்து துவக்க முடியும். இதற்கு, மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

நாளை ஆதார் எண் சேர்க்கை சிறப்பு முகாம்

வாக்காளருக்கான ஆதார் மற்றும் கூடுதல் விவரங்களை இணைப்பதற்கான வாக்குச்சாவடி அளவிலான சிறப்பு முகாம்கள் நாளை தொடங்குகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்துள்ளார்.

காலை 10 மணிக்கு தொடக்கம்

இதுகுறித்து நிருபர்களுக்கு, சந்தீப் சக்சேனா அளித்த பேட்டி வருமாறு:-

வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் கடந்த மார்ச் 3-ந் தேதியில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக வந்து, ஆதார் எண், செல்போன் எண், இமெயில் போன்ற விவரங்களை சேகரிக்கும் பணி 6-ந் தேதி நிறைவடைந்துவிட்டது. 1.84 கோடி வாக்காளர்களை நேரடியாக அலுவலர்கள் சந்தித்து கூடுதல் விவரங்களை சேகரித்துள்ளனர்.

இதன் பிறகு சிறப்பு முகாம்கள் நடத்தி விவரங்கள் சேர்க்கும் பணி தொடங்கவுள்ளது. மொத்தமுள்ள 64ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நாளை (12-ந் தேதி) தொடங்கும். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 26, மே 10, 24 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடத்தப்படும். காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணிக்கு சிறப்பு முகாம் நிறைவடையும்.

ஆதார் நகலை கொண்டு செல்லுங்கள்

சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டு இருக்கும். அதைப் பார்த்துவிட்டு அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள், பெயர் சேர்ப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் உள்ள பெயர் நீக்கம், வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், புதிய புகைப்படம் சேர்த்தல் ஆகியவற்றையும் செய்யலாம்.

ஆதார் எண், இமெயில், செல்போன் எண் போன்றவற்றை இணைப்பதற்கான சிறப்பு முகாமுக்கு வருகிறவர்கள், தங்களைப்பற்றிய பதிவுகளில் என்னென்ன திருத்தங்கள் செய்ய வேண்டுமோ, அவற்றுக்கான அரசு தரப்பில் தரப்பட்டுள்ள ஆதாரங்களை கொண்டு வர வேண்டும்.

உதாரணமாக, முகவரி மாற்றம் செய்ய விரும்புகிறவர்கள் முகவரிக்கான ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போட், ஆதார் அட்டை போன்றவற்றை வாக்காளர் கொண்டு வர வேண்டும். ஆதார் அட்டையின் நகலை வைத்திருப்பது நல்லது.

ஆதார் எண் இல்லாவிட்டால்?

ஆதார் எண் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அதற்காக விண்ணப்பித்து இருந்தால் இ.ஐ.டி. என்ற எண் தரப்பட்டு இருக்கும். சிறப்பு முகாமில் அலுவலரிடம் அந்த எண்ணை கொடுக்கலாம். ஆதாருக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது டி.ஐ.என். என்ற எண் தரப்பட்டு இருக்கும். அதைக் கொடுக்க வேண்டும்.

இ.ஐ.டி. அல்லது டி.ஐ.என். இதில் எந்த எண் தரப்பட்டாலும், எதிர்காலத்தில் அந்த வாக்காளர் தனக்கான ஆதார் எண் பெறும்போது, அவரின் வாக்காளர் விவரங்களோடு அந்த ஆதார் எண் தானாக இணைந்துவிடும். ஒவ்வொரு வாக்காளருடன் தேர்தல் கமிஷன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு அறிவுரை வழங்குவதற்கு இமெயில், தொலைபேசி எண், செல்போன் எண் போன்றவை அவசியமாக உள்ளன.

2 கோடி பேர் விவரங்கள்

தமிழகத்தில் 5.62 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 4.18 கோடி பேர், அதாவது 82 சதவீதம் பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர். வீடு வீடாகச் சென்று வாக்குச்சாவடி அலுவலர்கள் 1.84 கோடி வாக்காளர்களின் கூடுதல் விவரங்களோடு, 9-ந் தேதி நிலவரப்படி மொத்தம் 2 கோடி பேரின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 35 லட்சம் பேரின் கூடுதல் விவரங்கள், வாக்காளர் பட்டியல் விவரங்களுடன் சேர்க்கப்பட்டுவிட்டன.

ஏப்ரல் 13-ந் தேதி முதல் மே 31-ந் தேதிவரை தேர்தல் நடத்தும் அதிகாரி, உதவி அதிகாரிகள் வாரத்துக்கு இரண்டு நாட்கள் தங்கள் அலுவலகங்களில் பிற்பகலில் முகாம் நடத்துவார்கள். அவர்கள் பெரும்பாலும் வருவாய்த்துறை அதிகாரிகள்தான்.

சரிபார்ப்புப் பணி

எந்த நாட்களில் அவர்கள் முகாம் நடத்துகிறார்கள் என்பதை அந்தந்த பகுதியில் மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிப்பார்கள். அவர்களையும் அணுகி ஆதார் மற்றும் கூடுதல் விவரங்களை சமர்ப்பிக்கலாம். திருத்தங்களையும் மேற்கொள்ளலாம்.

ஏற்கனவே பெறப்பட்டுள்ள கூடுதல் விவரங்களை அவர்களிடம் வாக்குச்சாவடி அலுவலர்கள் கொடுத்திருப்பார்கள். அதில் சந்தேகம் எழுந்தால், சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு இமெயில் அல்லது செல்போனில் அழைப்பு விடுத்து சரிபார்ப்புப் பணியைச் செய்வார்கள்.

நடமாடும் ஆதார் முகாம்

தமிழகத்தில் சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 70 சதவீதத்துக்கு மேல் மக்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 68 சதவீதம் மக்களுக்கு தரப்பட்டுள்ளது. குறைவான அளவில் ஆதார் அட்டை வழங்கப்பட்ட இடங்களில் நடமாடும் முகாம்களை வருவாய்த் துறை மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளோம்.

வாக்காளரின் கூடுதல் விவரங்களை சேர்க்கும் திட்டத்தின் இறுதி நாள் மே 31-ந் தேதியாகும். தமிழகத்தில் 82 சதவீதம் ஆதார் எண் பெற்றுள்ளதால் இன்னும் 15 நாட்களுக்குள் அவர்களின் கூடுதல் விவரங்களைப் பெறும் பணி நிறைவு பெறும் என்று நினைக்கிறேன்.

10 ம் வகுப்பு தேர்வுகள் நிறைவு

பத்தாம் வகுப்புத் தேர்வுகள் சமூக அறிவியல் பாடத் தேர்வுடன் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தன. தேர்வுகள் முடிவடைந்ததால், பல இடங்களில் மாணவர்கள் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் வரும் 20-ஆம் தேதி தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 19-ஆம் தேதி தொடங்கியது. மாநிலம் முழுவதும் 3,298 தேர்வு மையங்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். தேர்வுப் பணிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டு வந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைக் கொண்ட கண்காணிப்புப் படைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து மாநிலம் முழுவதும் 75 மையங்களில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற உள்ளன. இந்தப் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கல்வி மாவட்டத்துக்கு ஒரு மையம் வீதமும், பெரிய கல்வி மாவட்டங்களில் 2 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. எளிமையான சமூக அறிவியல் தேர்வு: பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. சராசரியாகப் படிக்கும் மாணவர்கள்கூட இந்தத் தேர்வில் எளிதாக தேர்ச்சி பெற்றுவிடலாம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் ஆங்கிலப் பாடத்தைத் தவிர மீதமுள்ள தேர்வுகள் அனைத்தும் எளிதாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்தத் தேர்வில் காப்பியடித்ததாக சேலம் மாவட்டத்தில் 5 பேர் உள்பட மொத்தம் 16 பேர் பிடிபட்டனர். 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை தேர்வுகள் எப்போது? பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவத்துக்கான தேர்வுகள் ஏப்ரல் 11 (சனிக்கிழமை) முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் கடைசி வாரத்தில் தேர்வுகள் நடைபெற உள்ளன. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமதம் இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் சற்றுத் தாமதமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகள் ஏப்ரல் 30-ஆம் தேதிதான் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. பிளஸ் 2 மொழிப்பாடங்கள், ஆங்கிலப் பாட விடைத்தாள் திருத்தும் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்ற நிலையில், பிற பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறவில்லை எனத் தெரிகிறது. அதேநேரத்தில், பிளஸ் 2 முடிவுகள் வெளியிடப்படுவது கடந்த ஆண்டை விட தாமதமாகுமா என்பதை இப்போதே கூற முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். விடைத்தாள் திருத்தத்துக்குப் பிறகு சி.டி.க்களில் வழங்கப்படும் மதிப்பெண் விவரங்கள் பிழையில்லாமல் இருந்தால், தேர்வு முடிவுகள் வழக்கம்போல வெளியிடப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

ஏப்ரல் 23 முதல் கோடை விடுமுறை அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 20-ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன. அதன்பிறகு, 2 நாள்கள் பள்ளிகள் செயல்படும். ஏப்ரல் 23 முதல் மே 31 வரை இந்தப் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி திங்கள்கிழமையாக இருப்பதால் பெரும்பாலும் அன்றைய தினமே பள்ளிகள் திறக்கப்படும். அப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றுவது குறித்து அரசு முடிவு எடுக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். அதேபோல, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை செயல்படும். இந்தப் பள்ளிகளுக்கு மே 1 முதல் 31 வரை கோடை விடுமுறை விடப்பட உள்ளது.

Wednesday, April 08, 2015

உதவிப் பேராசிரியர் நேரடிநியமனம் பெற்றவர் தேர்வு பட்டியல் வெளியீடு

உதவிப் பேராசிரியர் நேரடி நியமனத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

தமிழக அரசு 28-5-2013 அன்று வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டது. 2013 நவம்பர் 25-ஆம் தேதி முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்புகள் நடைபெற்றன. பின்னர், 2014 ஜூலை 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, 3-4-2009 தேதிக்கு முன்னர் எம்.ஃபில். முடித்த விண்ணப்பதாரர்களின் பணி அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டு, கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த விவரங்களின் அடிப்படையில் இறுதித் தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்தத் தகுதிப் பட்டியலிலிருந்து ஒரு பணியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதத்தில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இப்போது நேர்முகத் தேர்வு முடிந்து, இறுதியாக பணியிடத்துக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் முதன்மைத் தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், வரலாறு, புவியியல், சுற்றுலா, அரசியல் அறிவியல், உளவியல், சமஸ்கிருதம், சமூகவியல், விஷுவல் கம்யூனிகேஷன், இந்திய கலாசாரம், வணிகவியல் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்), வணிகவியல் (சர்வதேச வணிகம்) உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இதில் இடம்பெற்றுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன ஆணைகள் தனியாக வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

புதிய தலைமை தேர்தல் அதிகாரி

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நசீம் ஜெய்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தலைமை தேர்தல் கமிஷனாராக பதவி வகிக்கும் பிரம்மாவின் பதவிக்காலம் ஏப்ரல் 19ம் தேதியுடன் நிறைவடைகிறது.இவர் 2015-ம் ஆண்டு  ஜனவரி மாதம் 15ம் தேதி தலைமை தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து புதிய தேர்தல் கமிஷனராக நசீம் ஜெய்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் 2017-ம் ஆண்டு வரை இந்த பதவி வகித்து வருவார்.

நசீம் தற்போது தேர்தல் கமிஷனர்களில் ஒருவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.  நசீம் ஜெய்தி 1976-ம் ஆண்டு இந்திய ஆட்சி பணியில் சேர்ந்தவர் ஆவார்.

மாலை வானம் சிவப்பதேன்?

மாலைப்பொழுது சிவப்பதேன்?

மாலைப் பொழுதில் வானின் தோற்றம் வெளிரிப்போன சிவப்பு நிறத்தில் தோற்றமளிக்கும். காரணம், அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு நிறக்கதிர்கள் சிதறடிக்கப்படாமல் அதிக தூரம் பயணிக்கிறது. இதனால், வானிலிருந்து வரும் வெளிச்சம் சிவப்பாகத் தெரிவதால், மாலைப் பொழுது சிவப்பாக இருக்கிறது.

மேகத்தின் பக்கத்தில் ஏதாவது ஒரு பொருள் தாழ்ந்த பகுதியில் இருந்தால், அது மேகத்தின் தூரத்தில் இருக்கும் பொருள் ஒளிவிடுவதை விட, கீழே இருக்கும்போது அதிக பிரகாசமாகவே தோற்றமளிக்கும்.

மேகம் வழியாக வரும்போது, சிவப்பு மேகம் அழகான தோற்றத்துடன் சிவப்பாகக் காட்சியளிக்கும். அதன் மேல்பரப்பு, ஆழமாக ஊடுருவப்பட்டு, அழகாகத் தெரிவதால், சூரியன் மறையும் போது சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கிறது.