தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச், 5ம் தேதி, பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்குகிறது. மார்ச், 31ல் நிறைவடைகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 19ல் துவங்கி, ஏப்ரல், 10ம் தேதி நிறைவடைகிறது.
மாநிலம் முழுவதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள தேர்வு மையங்களில், 60 ஆயிரம் தேர்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளி மையங்களுக்கு, அரசுப் பள்ளிகளின் கல்வி மையங்கள் போல், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகளை வெளிப்படையாகவும், முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவும், பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
மாணவ, மாணவியர் பதற்றமின்றி தேர்வு எழுத, அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். மாணவர் காப்பியடிக்காமல் தடுக்க, உடைக் கட்டுப்பாடு கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. குழுவாக காப்பியடித்தல், தனியாக 'பிட்' பேப்பர் வைத்து காப்பியடித்தல், மற்ற மாணவர்களைப் பார்த்து எழுதுதல், ஆள் மாறாட்டம், சில ஆசிரியர்கள் (தேர்வு அறைக் கண்காணிப்பாளர்கள்) துணையுடன் காப்பியடித்தல் போன்ற புகார்கள் இல்லாமல், 100 சதவீதம் வெளிப்படையான தேர்வாக நடக்கும்.
இதன் ஒரு கட்டமாக, தேர்வு அறைகளை கேமராக்கள் மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளி தேர்வு அறைகளில், இந்தத் திட்டத்தை சோதனை முயற்சியாககொண்டு வருவது குறித்துப் பேசி வருகிறோம்.தனியார் பள்ளிகளில், பல இடங்களில் வகுப்பறைகளில் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வகுப்பறைகள்தேர்வு அறையாக அமையும் பட்சத்தில், அங்குள்ள கேமராக்களைப் பயன்படுத்தி, தேர்வு முழுவதும், வீடியோவாகப் பதிவு செய்யப்படும். பின்னர் புகார்கள் வந்தால் ஆய்வு செய்யும் வகையில், வீடியோ ஆவணமாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளுடன் பேசி வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.