பெட்ரோல் விலையை நிர்ணயித்து கொள்ளும் உரிமையை இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாதமும் 15 மற்றும் 30-ந்தேதிகளில் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது கச்சா எண்ணை விலை வீழ்ச்சி காரணமாக கடந்த மாதம் முதல் பெட்ரோல் விலை குறைந்து வருகிறது. இதுவரை லிட்டருக்கு ரூ.4.65 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் நிலவரப்படி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மேலும் குறைந்துள்ளது. மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் திருப்திகரமாக உள்ளது.
இதன் காரணமாக பெட்ரோல் விற்பனையில் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. இதனால் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 ரூபாய் (உள்ளூர் வரிகள் தவிர) குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று எண்ணை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.69.08க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.3.18 குறைந்து ரூ.65.90க்கு விற்பனை செய்யப்படும். இதேபோல் டெல்லியில் ரூ.63.09 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.70.35 ஆகவும், மும்பையில் ரூ.69.73 ஆகவும் பெட்ரோல் விலை குறைந்துள்ளது. இந்த மாதத்தில் 3-வது முறையாக பெட்ரோல் விலை குறைந்துள்ளது. கடைசியாக கடந்த 15-ம் தேதி லிட்டருக்கு ஒரு ரூபாயும், அதற்கு முன்னர் 85 பைசாவும் குறைந்தது குறிப்பிடத்தக்கது.