் உலக சிறுவர் நூல் தினத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தாங்களே சிறுவர் நூல்களை தயாரித்து பாராட்டு மற்றும் பரிசு பெற்றுள்ளனர். உலக சிறுவர் நூல் தினம் ஏப்ரல் 2-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களது ஆசிரியர்கள் அறிவிப்பு கொடுத்துள்ளனர். மேலும் சிறுவர் நூல் அமைய வேண்டிய விதம் குறித்து கூறியுள்ளனர்.
இதனையடுத்து மாணவ மாணவியர் ஒவ்வொருவரும் தனித்தனியே சிறுவர் நூலில் இருக்க வேண்டிய சிறிய நீதி போதனைக் கதை, படங்கள், கார்ட்டூன், விடுகதைகள், ஜோக், வித்தாயசம் கண்டுபிடி, அறிய தகவல்கள் என அருமையாக தங்கள் கைப்பட சனி, ஞாயிறு விடுமுறையில் தயாரித்து திங்கள்கிழமை கொண்டு வந்து ஒப்படைத்துள்ளனர். இதில் சிறப்பாக படைப்புகளைச் சமர்ப்பித்த 5-ம வகுப்பைச் சேர்ந்த முத்துலட்சுமி, ராஜேஸ்வரன், முனீஸ்வரி, வீரலட்சுமி மற்றும் 4-ம் வகுப்பைச் சேர்ந்த மகாலட்சுமி, சோனியா, பொன்செல்வி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் உலக சிறுவர் நூல் தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.
இதில் சிறப்பான படைப்புகளை படைத்த மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கி ஆசிரியை என்.ரெங்கலதா பேசுகையில் கூறியதாவது: டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஆன்சு கிறிஸ்டியன் ஆன்டர்சன் என்பவர் பிரபல டேனிய மொழி எழுத்தாளர் மற்றும் கவிஞர். குறிப்பாக சிறுவர் கதை எழுதி புகழ்பெற்றவர். இவர் தனது வாழ்நாளில் உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளை தனது ஆக்கங்களால் மகிழ்வித்தார். இவரது கதைகள் 150-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மாணவர்கள் புத்தகங்களைப் படிக்கும் ஆவலைத் தூண்டுவதற்காக இவரது பிறந்தநாளான ஏப்ரல் 2-ம் நாள் உலக சிறுவர் நூல் தினமாக அனுசரிக்கப்படுகிறது என்று கூறினார். கிராமப்புறத்தில் முழுவதும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் படிக்கும் இப் பள்ளி மாணவர்களிடம் உள்ள திறன்களை வெளிக் கொண்டுவர ஆசிரியர்கள் எடுக்கும் முயற்சியை கிராம மக்களும், கல்வித் துறையினரும் பாராட்டினர்.