பத்தாம் வகுப்பு மாணவர்கள், தங்களை பற்றிய விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்வதில் தவறு ஏற்பட்டிருந்தால், சரியான விபரங்கள் அளிக்க மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 27ல் துவங்க உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர், ஜாதி, பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விபரங்களும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டன.
பதிவு பணி அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் நடந்தது. இந்நிலையில், சில மாணவர்கள் தவறுதலாக விபரம் தந்து விட்டதாக தேர்வுத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மீண்டும் சரியான விபரத்தை பதிவு செய்ய மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை பள்ளிகளுக்கு தேர்வுத்துறை அனுப்பி உள்ளது. இந்த பட்டியலில் தவறு இருந்தால் 25ம் தேதிக்குள் தலைமை ஆசிரியரிடம் கூறி ஆன்லைனில் திருத்தி கொள்ளலாம். தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், இந்த ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பெயர், ஜாதி, பிறந்த தேதி உள்ளிட்ட முழு விபரம் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன. இதில் பெயர், ஜாதி, பிறந்த தேதி ஆகியவற்றில் உள்ள தவறுகளை திருத்தி கொள்ளலாம். பத்தாம் வகுப்பு சான்றிதழில் தவறான தகவல் பதிவு செய்யப்பட்டால் மாணவரின் வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார்.