இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, December 15, 2012

மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு'வழங்க தகவல்கள் சேகரிப்பு

்:கல்வி மேலாண்மை தகவல் முறையில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம்தோறும் மாணவர்கள் குறித்த தகவல் சேகரிக்கும் பணியில், கல்வி துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் பொது தேர்வுக்கு தனியாக தகவல் சேகரிக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது.

மாணவர் பெயர், பாலினம், பிறந்த தேதி, பெற்றோர், ரத்த வகை, வகுப்பு, குடும்பத்தினர் எண்ணிக்கை, ஜாதி, பள்ளியில் சேர்ந்த தேதி உட்பட 30க்கும் மேற்பட்ட தகவல்களை சேகரித்து வருகின்றனர். இத்தகவல்கள், கல்வி துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது. தகவலின் அடிப்படையில் ஒவ்வொரு மாணவருக்கும் "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படுகிறது. மாணவர்கள் ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு செல்லும் போது சான்றிதழ் இல்லாவிட்டாலும், இந்த கார்டை காண்பித்தால், கார்டில் உள்ள எண்ணை, கம்ப்யூட்டரில் பதிவு செய்து பார்த்து, மாணவனின் தகவல்களை தெரிந்து கொண்டு சேர்த்து கொள்வர்.மேலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது, மாணவர்கள் குறித்த தகவல்களை, ஆண்டுதோறும் சேகரிக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஸ்மார்ட் கார்டு தகவலின்படி, சென்னையிலிருந்தே பொது தேர்வுக்கு மாணவர்களின் "பயோ டேட்டா'வை எடுத்துக் கொண்டு, "ஹால் டிக்கெட்' அனுப்பி விடுவர்

Friday, December 14, 2012

மாயன் காலண்டரால் பீதி வேண்டாம்: 450 கோடி ஆண்டுகள் உலகம் அழியாது- விஞ்ஞானிகள் கருத்து

  மாயன் வம்சத்தினர் ஒரு காலத்தில் சிறப்பாக வாழ்ந்தவர்கள். அவர்கள் மண்ணியல், விண்ணியல், சிற்பம், ஓவியம், காலக்கணிதம், வடிவ இயல், மாந்திரீகம், கணிதம், அறிவியல் என பல கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.   உயர்ந்த அறிவு படைத்த அவர்கள் ஒரு காலண்டரை உருவாக்கியிருந்தனர். அந்த காலண்டரில் குறிப்பிட்டுள்ளபடியே சில விஷயங்கள் இதுவரை நடந்திருக்கின்றன.  

அந்தக் காலண்டர் டிசம்பர் 21, 2012 உடன் முடிந்து போகிறது. அதன் பின் ஒன்றுமில்லை. இதனால் உலகம் அழிந்து விடுமோ என்ற பரபரப்பு உருவாகியுள்ளது.   இல்லாவிட்டால் அவ்வளவு அறிவு படைத்த மாயன் சந்ததிகள் அந்த காலண்டரின் தொடர்ச்சியாக வேறு காலண்டரை உருவாக்கியிருக்க மாட்டார்களா?   அதுசரி, இந்த மாயன்கள் யார்? அவர்களுக்கு எப்படி உலக அழிவை கணித்துக் கூறும் ஆற்றலும், திறனும் வந்தது? கிறிஸ்து பிறப்பதற்கு கிட்டத்தட்ட 2000, 3000 ஆண்டுகளுக்கு முன், மாயா என்ற இனம் தென்அமெரிக்காவில் இருந்தது. அவர்கள் வானியல் சாஸ்திரம் முதல் புவியியல், விஞ்ஞானம், சிற்பக்கலை, கட்டடக்கலை என பல கலைகளில் ஆற்றல் மிகுந்தவராக வாழ்ந்தனர்.  

இவர்கள் உருவாக்கிய காலண்டர் கி.மு. 3113-ல் தொடங்கி கி.பி. 2012 டிசம்பர் 21-ம் தேதி முடிவுக்கு வருகிறது.   அவர்களது நாள் காட்டியின் முதல் நாள் 0, 0, 0, 0, 0 என்பதில் ஆரம்பிக்கிறது. அது சுழன்று 13, 0, 0, 0, 0 என்னும் இறுதி நாளை அடைகிறது. இதற்கு மொத்தமாக 5125 வருடங்கள் ஆகின்றன.   மாயனின் இந்த நாட்காட்டியின் முதல் தேதியான 0, 0, 0, 0, 0 என்பது தற்போதுள்ள நம் நவீன நாள்காட்டியின்படி, கி.மு. 3114-ஐக் குறிக்கிறது. மாயன் காலண்டரின் முடிவடையும் தேதியான 13, 0, 0, 0, 0 நாள் தற்போதுள்ள நமது நவீன நாள்காட்டியின்படி கி.பி. 2012 டிசம்பர் மாதம் 21-ம் தேதி 11:11:11 மணிக்கு முடிவடைகிறது.  

மிகச் சிறந்த வானியல் அறிவு பெற்றிருந்த மாயன் இன மக்கள் 2012-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதியுடன் தங்கள் காலண்டரை முடித்துக் கொள்ள என்ன காரணம்?   அன்றுதான் உலகத்தின் இறுதிநாள். அதனால்தான் அவர்கள் காலண்டரில் அதன் பிறகு தேதிகள் இல்லை. அதன் பிறகு இந்த உலகம் இருக்காது இதுதான் மாயன் காலண்டரை நம்புவோரின் நம்பிக்கையாக இருக்கிறது.   இது உண்மைதானா? உலகம் அழிந்து விடுமா?   நாசா விஞ்ஞானிகள், அதற்கு வாய்ப்பே இல்லை. இதெல்லாம் வீண் புரளி என்கிறார்கள். ஆனால் நம்பிக்கையாளர்கள் பலர், உலகம் அழியாவிட்டாலும் நிச்சயம் அன்று மிகப்பெரிய ஆபத்துக்கள் பூமிக்கு ஏற்படக் கூடும். ஏதேனும் புதிய கிரகங்கள் அல்லது விண்கற்கள் சூரியனுடனோ அல்லது பூமியுடனோ மோதலாம்.

இதைப்பற்றி மாயன்கள் தங்கள் சிலம்பலம் நூலில் மிகத் தெளிவாகக் குறித்துள்ளனர்.   அதன் காரணமாக பூமி சுழற்சியில் அல்லது சூரியனின் பாதையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம். ஆபத்துக்கள் நேரலாம் என நம்புகின்றனர்.   இது பற்றி சென்னை பிர்லா கோளரங்க செயல் இயக்குனர் டாக்டர் பி.எம்.அய்யம்பெருமாள் கூறியதாவது:-   வருகிற 2012-ம் வருடத்தில் உலகம் அழியும் என்று, சமீபகாலமாக உலகம் எங்கும் தகவல் பரவி வருகிறது. இது வதந்தியா? இல்லது உண்மையா? என்று பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.   சூரியனில் இருந்துதான் கிரகங்கள் தோன்றி பிரபஞ்சத்தில் இயங்கி வருகின்றன.

சூரியன் தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சூரியனில் இருந்து வினாடிக்கு 750 டன் ஹைட்ரஜன் ஆவி வெளியாகி 746 டன் ஹீலியமாக வெளிப்படுகிறது. மீதமுள்ள 4 டன் ஒளியாகவும், வெப்பமாகவும் வெளிப்படுகிறது.   விஞ்ஞானிகளின் அதி நுட்ப ஆராய்ச்சியில் இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பே இல்லை. பலர் கூறுவது போல் 2012-ல் கண்டிப்பாக உலகம் அழியாது. 2020-ம் ஆண்டு ஒரு குறுங்கோள் பூமியை தாக்கும் என்று கூறுகிறார்கள். அவ்வாறு தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.   குறுங்கோள் இடம் பெயர்ந்து பூமியை தாக்கும் நிலை ஏற்பட்டால் அக்னி ஏவுகணை மூலமாக குறுங்கோளை பொடிப்பொடியாக தகர்க்கும் சக்தி உலக ஆய்வுக்கூடத்தில் உள்ளது. ஆகவே எந்த சூழ்நிலையிலும் பூமிக்கு ஆபத்து ஏற்படாது என்றார்.

TNPTF 20.12.12 Arpattam notice model

TNPTF 20.12.12 Arpattam notice model

ஆசிரியர் ஓய்வூதியம் தொடர்பான இயக்குநரின் கடிதம்

புதிதாக நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர் கடைப்பிடிக்கபட வேண்டிய 15 விதிமுறைகள்

புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் உச்சநீதி மன்றத்தின் ஆணைப்படி பணியமர்த்தப்பட்ட மாவட்டத்தை தவிர்த்து பிற மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கோர இயலாது

மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் பணிநியமனம் பெற்று வந்த இடைநிலை ஆசிரியர்கள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் காரணமாக 2009 முதல் மாநில பதிவு மூப்பு படி பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். மேற்காணும் தீர்பு மாவட்டம் விட்டு மாவட்டம் பணி இட மாறுதல் கோர மாட்டோம் என்ற நிபந்தனையை மனுதாரர்கள் ஏற்றதன் அடிப்படையில் அளிக்கப்பட்டதால், அவ்வுத்தரவின் படி 2009திற்கு பிறகு நியமிக்கப்படும்  இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டும், மாவட்டத்திற்குள்  மட்டுமே பணியிட மாறுதலும்  அளிக்கப்படுகிறது.

 தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் இடைநிலை ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், உச்சநீதிமன்றத்தில் உள்ள TET தொடர்பான வழக்கின் காரணமாக  அவர்களுக்கு "weightage" முறைப்படி நியமிக்காமல், TET தேர்ச்சி பெற்றோரின் மாநில பதிவு மூப்புப்படியே நியமிக்கப்பட்டனர் . எனவே அவர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்ட பணி இட மறுத்தல் தற்போது பெற இயலாது.

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அரசு பள்ளிகள் சாதிக்க 6ம் வகுப்பிலிருந்து தயார்படுத்த வேண்டும் : கல்வி துறை இணை இயக்குனர் அறிவுரை

  ""தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில், அரசு பள்ளிகள் தேர்ச்சி அதிகரிக்க, ஆறாம் வகுப்பிலிருந்தே மாணவர்களை தயார்படுத்த வேண்டும்'', என அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இணை இயக்குனர் நரேஷ் பேசினார்.

ராமநாதபுரத்தில் நடந்த தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: ஒவ்வொரு பள்ளியிலும், பத்தாம் வகுப்பில் மட்டும், மாணவர்களை தேர்ச்சிக்கு தயார்படுத்தினால் சாதிக்க முடியாது. ஆறாம் வகுப்பிலிருந்தே, மாணவர்களை படிப்பில் சிறந்து விளங்க தயார் செய்ய வேண்டும். இதற்காக ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி, தேர்ச்சி விகிதத்தை படிப்படியாக உயர்த்த வேண்டும். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே தகவல் தொடர்பு இல்லாவிட்டால், சாதிப்பது கடினம்.

முதல்வர் ஜெ., கல்வி துறையின் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார். எனவே அரசு பள்ளி ஆசிரியர்கள், பொது தேர்வில் மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதுடன், நூறு சதவீத தேர்ச்சிக்கு முயற்சி எடுக்க வேண்டும். ஒரு பள்ளியில் 90 சதவீதம் வெற்றி என்றால், அங்கு, 10 சதவீத தோல்விக்கு, தலைமை ஆசிரியர் பொறுப்பேற்க வேண்டும். எனவே நூறு சதவீதம் என்பதை சவாலாக எடுத்து, மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும், என்றார்.

6 மாதங்களில் 1,200 முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: ஜனவரியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

  அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள், மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்ற, 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மட்டும், முதலில் பணி நியமன உத்தரவுகள் வழங்குவதாக, திட்டமிடப்பட்டிருந்தது. பின், திடீரென, முதுகலை ஆசிரியர்களும், பட்டியலில் சேர்க்கப்பட்டனர். முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற விழாவில், 2,895 பணியிடங்களில், 2,308 பேரை மட்டும் தேர்வு செய்து, பங்கேற்க செய்தனர். இவர்களுக்கு, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், பணியிட ஒதுக்கீட்டிற்கான உத்தரவு வழங்கப்படவில்லை. இந்த உத்தரவு எப்போது வழங்கப்படும் என்ற தகவல் தெரியாமல், தேர்வு பெற்றவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களின், புகைப்படங்களுடன் கூடிய விவரங்களை, பள்ளிக் கல்வித் துறையிடம், இன்னும் டி.ஆர்.பி., ஒப்படைக்கவில்லை. இதனால், 2,308 பேரின், பணி நியமனம், எப்போது நடக்கும் என, தெரியாத நிலை உள்ளது. கல்வித்துறை வட்டாரத்தினர் கூறுகையில், "டி.ஆர்.பி.,யில் இருந்து, உரிய ஆவணங்கள் வந்ததும், பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற ஆசிரியர்களைப்போல், முதுகலை ஆசிரியர்களும், "ஆன்-லைன்' வழியில், கலந்தாய்வு நடத்தி, பணி நியமனம் செய்யப்படுவர்' என, தெரிவித்தனர். கடந்த, கல்வியாண்டுக்கான, காலி பணியிடங்களுக்குத் தான், தற்போது நியமனம் நடக்கிறது.

2,895 பணியிடங்களில், 2,308 பேர் நியமிக்கப்பட்டால், பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்களின் படிப்பில் பாதிப்பு ஏற்படாது. அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள், மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஆர்.பி.,க்கு, கல்வித் துறை தெரிவித்துள்ளது. எனவே, ஜனவரியில், புதிய முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, போட்டித்தேர்வு அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய வட மாவட்டங்களில் தான், அதிக காலி பணியிடங்கள் உள்ளன. எனவே, அனைத்து ஆசிரியர்களும், மேற்கண்ட மாவட்டங்களில், பணி நியமனம் செய்யப்படுவர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Thursday, December 13, 2012

வாக்காளர் அடையாள அட்டை பெற அதிகாரிகளை கண்டறிய புது வசதி

தமிழகம் முழுவதும் உள்ள, ஓட்டு சாவடி மைய அதிகாரிகளுக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டு, தொகுதி வாரியாக வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஓட்டு சாவடி மையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நேரத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகளுக்காக, இந்த மையங்களுக்கான தற்காலிக அதிகாரிகள் நியமிக்கப்படுவர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. தேர்தல் முடிந்தவுடன், வாக்காளர் பட்டியல் சம்பந்தமான பணி என்றால், அந்தந்த தொகுதி தேர்தல் பிரிவு அலுவலகங்களை நாடும் நிலைமை உள்ளது. சில தொகுதிகளில், தாசில்தார் அலுவலகத்தை அடைய, பல கி.மீ., தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பலர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்காமல் விட்டு விடுகின்றனர். இந்நிலையில், சிரமமின்றி, வாக்காளர் பட்டியல் தொடர்பான சேவைகளை பெற வசதியாக, நிரந்த ஓட்டு சாவடி மைய அதிகாரிகளை நியமிக்க, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

இதற்கான அறிவிப்பு, ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அரசியல் சார்பற்றோர், அங்கன்வாடி சத்துணவு பணியாளர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், அதிகாரிகள், பொது துறை நிறுவன ஊழியர்கள், தொண்டு நிறுவனத்தினர், பொதுநல சங்கத்தினர் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. தற்போது, பல தொகுதிகளில், நிரந்தர ஓட்டு சாவடி மைய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விட்டனர். சில தொகுதிகளில் அவர்களை நியமிக்கும் பணி, தொடர்ந்து நடந்து வருகிறது. ஓட்டுசாவடி மைய அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையத்துடன் நேரிடையான தொடர்பு ஏற்படுவதோடு, பொதுமக்களும் அலைய வேண்டியதில்லை. இந்நிலையில், ஓட்டு சாவடி மைய அதிகாரிகளை, பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில், அவர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்க, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த அடையாள அட்டையில், புகைப்படம், தொகுதியின் பெயர், நபரின் பெயர், பகுதி எண் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டைகளை தயார் செய்யும் பணி, விரைவாக நடந்து வருகிறது.

8 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர் : தற்காலிக அட்டவணையும் தயார

்  பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை, தேர்வுத்துறை இயக்குனரகம், இறுதி செய்தது. 8 லட்சம் மாணவ, மாணவியர், பொதுத்தேர்வில் பங்கேற்கின்றனர். மார்ச் 1 அல்லது 4ம் தேதியில், தேர்வை துவக்கும் வகையில், தற்காலிக தேர்வு அட்டவணையை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு, தேர்வுத்துறை அனுப்பியுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு, ஆண்டுதோறும், மார்ச் முதல் வாரத்தில் துவங்கும். முந்தைய தேர்வு, மார்ச், 8ல் துவங்கி, 30 வரை நடந்தது. வரும் மார்ச்சில், பொதுத்தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, தேர்வுத்துறை, மும்முரமாக செய்து வருகிறது. தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை, நவம்பர் இறுதிக்குள் தர வேண்டும் என, ஏற்கனவே, தேர்வுத்துறை கூறியிருந்தது.

கூடுதலாக 46 ஆயிரம் பேர் : அதன்படி, மாவட்ட வாரியாக, மாணவ, மாணவியரின் விவரங்கள் அடங்கிய பட்டியல்கள் பெறப்பட்டு, தற்போது, இறுதி செய்யப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி, எட்டு லட்சம் மாணவ, மாணவியர், பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர். முந்தைய தேர்வை, 7.56 லட்சம் பேர் எழுதினர். வரும் தேர்வை, கூடுதலாக 46 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். அறிவியல் பிரிவு மாணவ, மாணவியருக்கு, பிப்ரவரி இரண்டாவது வாரத்தில், செய்முறைத் தேர்வு துவங்கி விடும். அதற்கு, இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, செய்முறை தேர்வில் பங்கேற்பவர்களுக்கு, பதிவெண்கள் வழங்க வேண்டும். இதே எண்களைத் தான், எழுத்து தேர்விலும், மாணவ, மாணவியர் பயன்படுத்துவர். எனவே, ஜனவரியில், பொங்கல் பண்டிகை முடிந்ததும், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பதிவெண்கள் விவரம், அந்தந்த பள்ளிகளில் அறிவிக்கப்பட உள்ளது. செய்முறைத் தேர்வில், நான்கு லட்சம் மாணவர்கள் பங்கேற்பர் என, கூறப்படுகிறது. இவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

தற்காலிக அட்டவணை : இதற்கிடையே, தேர்வுக்கான தற்காலிக அட்டவணையை, தமிழக அரசின் பார்வைக்கு, தேர்வுத்துறை அனுப்பி உள்ளது. மார்ச் 1 அல்லது 4 ல் இருந்து, தேர்வை துவக்கும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அரசின் ஒப்புதல் கிடைத்ததும், அட்டவணை குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் கருத்து கேட்கப்படும். தேர்வு காலத்தில் விழாக்களோ அல்லது விடுமுறை நாட்களோ அல்லது மாணவருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏதாவது உள்ளதா என, கண்டறிந்து கருத்துக்களை தெரிவிப்பர். அதனடிப்படையில் மாற்றங்கள் இருந்தால், திருத்தம் செய்யப்பட்டு, தேர்வு அட்டவணை இறுதி செய்யப்படும். அதன்பின், மீண்டும் அரசின் ஒப்புதல் பெற்று, அதிகாரப்பூர்வமாக, மாணவ, மாணவியருக்கு அறிவிக்கப்படும். மார்ச் 1ம் தேதி, வெள்ளிக்கிழமை வருவதால், இந்த தேதியில் இருந்து துவங்கும் அட்டவணை இறுதியாவதற்கு, அதிக வாய்ப்புகள் இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

10ம் வகுப்பு நிலை என்ன? : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியரின் விவரங்கள், பள்ளிகள்தோறும் சேகரிக்கப்பட்டு, கல்வி மாவட்ட அளவில் பொறுப்பில் உள்ள பள்ளிகளிடம், "சிடி'க்களாக வழங்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவ, மாணவியரின் புகைப்படங்களுடன், அவர்கள் பிறந்த தேதி, முகவரி, பெயர், எழுதும் பாடங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன், "சிடி'க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வரும், 20 தேதிக்குள், தேர்வுத்துறை தெரிவிக்கும் தேதியில், சம்பந்தபட்ட "சிடி'க்களை, பொறுப்பு மையங்களில் ஒப்படைக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு பள்ளிகளிலும், மாணவர்கள் விவரங்கள் அடங்கிய "சிடி'க்கள் தயாராக உள்ளன. மாணவரின் பெயர், தலைப்பு எழுத்துக்களில், பெரும்பாலும் தவறுகள் வருகின்றன. மாணவர்கள், உயர் கல்விக்கு செல்லும்போது, பல்வேறு பிரச்னைகள் வருகின்றன. எனவே, மாணவர்கள் விவரங்கள் அடங்கிய படிவத்தில், மாணவர்களிடம் கையெழுத்து வாங்கியுள்ளோம். தயாராக உள்ள, "சிடி'க்களை, தேர்வுத்துறை தெரிவிக்கும் தேதியில், குறிப்பிட்ட மையங்களில் வழங்குவோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

கல்லாதவர்களே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்: ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி ஜெயலலிதா பேச்சு

  சென்னையில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை மற்றும் மாணவ மாணவிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் மாணவ, மாணவியருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கற்றவனை கண்ணுடையர் என்றும், கல்லாதவனை புண்ணுடையர் என்றும் கூறியிருக்கிறார் திருவள்ளுவர். மெய்யறிவைத் தரக் கூடியது கல்வி என்று சங்க கால நூல்கள் கூறுகின்றன. சங்க காலம் தொடங்கி இது நாள் வரை தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குவதால் கல்வி சிறந்த தமிழ்நாடு என்று தமிழ்நாட்டை சிறப்பித்து பாடியுள்ளார் மகாகவி பாரதியார்.

கற்றலால் சிறப்பும், கல்லாமையால் இழிவும் வந்தெய்தும் என்று புலவர் இளங்கீரனார் பாடியுள்ளார். ஒருவன் கல்வி கற்றால் அவனிடம் உள்ளத்தால் துணிவும், உடலளவில் பணிவும் வந்து சேரும் என்பது சான்றோர் வாக்கு. கீர்த்தியும் பெருமையும் கிடைப்பது கல்வி என்று கல்வியைப் பற்றி ஒளவையார் எடுத்துரைத்துள்ளார். அனைத்து அணிகலனையும் விட கல்வி அழகே அழகு என நாலடியார் பாடல் தெளிவாக்குகிறது. நன்மையும், தீமையும் விளையக் கூடிய நிலமாக இருப்பது மனம். ஆதலால் ஒழுக்கத்தை வளர்க்கும் கல்வியையே மக்களுக்கு போதிக்க வேண்டும் என்றார் அறிஞர் பிளாட்டோ.

பூசை அறை, சமையல் அறை, படுக்கை அறை வைத்துக் கட்டும் நம் மக்கள் படிக்கும் அறை வைத்து வீடு கட்டும் காலம் என்று வருகிறதோ அன்று தான் நாம் எழுச்சி பெற்றவர்களாவோம் என்று கூறினார் பேரறிஞர் அண்ணா. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த கல்வியை அனைவரும் கற்க வேண்டும்; கல்லாதவர்களே இல்லாத மாநிலமாக தமிழகத்தை ஆக்க வேண்டும் என்ற அடிப்படையில், கல்விக்காக பல்வேறு சலுகைகளை எனது தலைமையிலான அரசு வழங்கி வருகிறது.

ஓன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு கட்டணமில்லா கல்வி வழங்கப்படுகிறது. மாணவ-மாணவியர் பசியின்றி கல்வி கற்க வசதியாக சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சத்துணவுத் திட்டத்தில் மாணவ-மாணவியரின் விருப்பத்திற்கேற்ப உணவு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், 4 ஜோடி சீருடை, காலணிகள், கணித உபகரணப் பெட்டி, வண்ண பென்சில்கள், புத்தகப் பை, புவியியல் வரைபடம் ஆகியவை ஆண்டுதோறும் மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

கிராமப்புற மக்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன. இது தவிர, ஆரம்பப் பள்ளிகள் இடைநிலைப் பள்ளிகளாகவும், இடை நிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், உயர் நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. மேல் நிலை வகுப்பு பயிலும் மாணவ-மாணவியருக்கு விலை ஏதுமின்றி மிதி வண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேல் நிலைக் கல்வியில் இடை நிற்றலை தடுக்கும் வகையில், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

மேல் நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக் கணினிகள் வழங்கும் திட்டம் எனது அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கணினி வழிக் கல்வி அளிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1,660 கோடி ரூபாய் செலவில் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. முன் எப்போதும் இல்லாத உயர் அளவாக இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறைக்கென 14,553 கோடி ரூபாய் நிதியினை எனது தலைமையிலான அரசு ஒதுக்கியுள்ளது.