டிஇடி இரண்டாம் தாள் தேர்வில் கணக்கு, அறிவியல் பகுதியில் இடம் பெற்ற பல கேள்விகள் கடினமாக இருந்ததால் பட்டதாரிகள் விடை எழுத திணறினர். ஆசிரியர் தகுதித் தேர்வில் நேற்று முன்தினம் முதல்தாள் தேர்வு நடந்தது. இடைநிலை ஆசிரியர்களுக்கான அந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்தது.
நேற்று தாள் 2க்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 2 ஆயிரம் பட்டதாரிகள் பங்கேற்றனர். இவர்களுக்காக 1263 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னையில், மொத்தம் 31 ஆயிரத்து 235 பேர் தேர்வு எழுத 88 ேதர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் 29 ஆயிரத்து 507 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். 1728 பேர் வரவில்லை. சென்னையில் 94 சதவீத வருகை இருந்தது. தேர்வு காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. முன்னதாக 9 மணி முதல் மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாள் 150 கேள்விகள் இடம் பெற்றன. அதில் உளவியல், தமிழ், ஆங்கிலம், மற்றும் முக்கிய பாடங்களுக்கான கேள்விகள் இடம் பெற்றிருந்தன.
கேள்வித்தாள்கள் ஏ,பி, சி,டி என நான்கு வரிசைகளில் தயாரிக்கப்பட்டு இருந்தது. நேற்றைய தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாளில் தமிழ், ஆங்கிலம், உளவியல் பாடப் பகுதிகளில் இடம் பெற்ற கேள்விகள் எளிதாக இருந்தன. கணக்கு பாடத்தில் இடம் பெற்ற கேள்விகளில் 15 கேள்விகளுக்கான விடையை கண்டு எழுதுவது கடினமாக இருந்ததாக பட்டதாரிகள் தெரிவித்தனர். அதாவது, 3 அல்லது 5 மதிப்பெண் கேள்விகளை போல கேட்கப்பட்டுள்ளன. ஒரு கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவே 3 நிமிடங்கள் செலவிட வேண்டியிருந்ததாக பட்டதாரிகள் தெரிவித்தனர். அதேபோல இயற்பியல் பாடப் பகுதியில் இடம் பெற்ற பெரும்பாலான கேள்விகள் சிக்கலான கேள்விகளாக இருந்தன.
குறிப்பாக எளிதில் விடை காண முடியாத அளவில் இருந்தன. இதனாலும் அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்ததாகவும் பட்டதாரிகள் வருத்தம் தெரிவித்தனர். இதனால் இந்த டிஇடி தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது