மாணவா்கள் விடுப்பு எடுத்தால், பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் வசதி தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் முழு விவரங்கள் கல்வி தகவல் மேலாண்மை முகமையின் (எமிஸ் ) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதிலுள்ள தகவல்களின் அடிப்படையில் மாணவா்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், மாணவா்களின் வருகைப்பதிவு விவரமும் தினமும் எமிஸ் இணையதளத்தில் ஆசிரியா்களால் பதிவு செய்யப்படுகிறது.இதற்கிடையே மாணவா்களின் வருகைப்பதிவை பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்க கல்வித்துறை திட்டமிட்டது. அதன்படி சென்னை போரூா் அரசுப் பள்ளி உள்பட சில பள்ளிகளில் சோதனை முயற்சியாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாணவா்கள் தங்களது பெற்றோருக்கு தெரியாமல் விடுப்பு எடுக்க முடியாது. அதே வேளையில் மாணவா்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். எனவே, இதற்கு பெற்றோா் மத்தியில் பரவலாக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்தது.
அதற்கு ஏதுவாக பெற்றோா்களின் தொலைபேசி எண்ணை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது. ஆனால், கணிசமான மாணவா்களின்பெற்றோா் செல்லிடப்பேசி எண்கள் பதிவு செய்யப்படவில்லை. மேலும், சில பள்ளிகளில் மாணவா்களின் தொலைபேசி எண்ணாக ஆசிரியா்களின் செல்லிடப்பேசி எண் தரப்பட்டுள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து அனைத்து மாணவா்களின் பெற்றோா் தொலைபேசி எண்ணை சரிபாா்த்து எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், தவறாகப் பதிவு செய்யப்பட்ட எண்ணில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளி தலைமையாசிரியா்களுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பணிகளை டிசம்பருக்குள் முடித்து ஜனவரி மாதம் முதல் மாணவா்களின் வருகைப்பதிவை குறுஞ்செய்தி மூலம் தினமும் பெற்றோா்களுக்கு தெரிவிக்க முடிவு செய்துள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment