தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகளை கணினிமயமாக்கல் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது: அரசுத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊதியமும், ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியமும் கருவூலத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் அனைத்து அரசுத் திட்டங்கள், நிவாரணத் தொகை மற்றும் அனைத்து பண செலவினங்களுக்கும் கருவூலத்துறையின் மூலம் நிதி வழங்கப்பட்டு வருகிறது.
அரசு அலுவலர்களின் பணிப் பதிவேட்டில் ஏற்படும் தவறான பதிவுகளை சுயசேவை என்ற முறையைப் பயன்படுத்தி கணினி வாயிலாக உரிய அலுவலருக்கு விண்ணப்பித்து சரிசெய்து கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பணிப் பதிவேட்டில் புதிதாக பதியப்படும் பதிவுகள் குறித்த விவரம் உரிய பணியாளருக்கு குறுந்தகவல் மூலமாக தெரிவிக்கப்படும். இம்முறையில் அரசுப் பணியாளர் அவரது சம்பளப் பிடித்தங்கள் கடன், முன்பணம், விடுப்பு தொடர்பான விவரப் பதிவுகளை எளிதாக அறிந்து கொள்ளலாம். மேலும், விடுப்பினை இணைய வழிக் கோரிக்கையாக விடுப்பதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மின்னணுப் பணிப் பதிவேடு, ஊதிய மென்பொருள் பதிவுகள் ஒருங்கிணைக்கப்படுவதால் மின்னணுப் பணிப் பதிவேட்டில் செய்யப்படும் அனைத்து பதிவுகளும் உடனுக்குடன் ஊதிய மென்பொருளில் தானாகவே மேம்படுத்தப்படும். இதனால் அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தை சரி பார்க்க முடியும். மேலும், நினைவூட்டுத் தகவல்களின் மூலம் ஆண்டு ஊதிய உயர்வு, விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றுக்கான பணப் பலன்களை பணியாளர்கள் உரிய நேரத்தில் பெற முடியும் என்றார்.
No comments:
Post a Comment