தமிழகத்தில் தற்போது 2,381 அரசுப் பள்ளிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்தத் திட்டம் மேலும் 3 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏழை பெற்றோரின் குழந்தைகளும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கிலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தது. இதையடுத்து ரூ.7.73 கோடியில் முதல் கட்டமாக அரசு நடுநிலைப் பள்ளி வளாகங் களில் இயங்கும் 2,381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி தொடங்கப்பட்டன.
3-4 வயது குழந்தைகளை எல்கேஜி வகுப்பி லும், 4-5 வயது குழந்தைகளை யுகேஜி வகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். மழலையர் வகுப்புகள் காலை 9.30 மணி முதல் மதியம் 3.45 மணி வரை நடைபெறும். இங்கு சேர்ந்து உள்ள குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்கள், புத்தகப்பை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு கற்றல் கருவி பெட்டி தரப்பட்டுள்ளது. அதன்மூலமாக ஆசிரியர்கள் தினமும் 2 மணி நேரம் பாடம் நடத்துகின்றனர். அது செயல்முறைக் கல்வியாகவே இருக்கும். இதர நேரங்களில் விளையாட்டு போன்ற தனித்திறன் சார்ந்த அம்சங்களில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த வகுப்புகளில் பெற்றோர் பலரும் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர்.
நிகழாண்டு இதுவரை 51 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். மழலையர் வகுப்புகளுக்கு பெற்றோர், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்தத் திட்டத்தை அரசுப் பள்ளி வளாகங்களில் செயல்படும் மற்ற 3 ஆயிரம் அங்கன்வாடிகளிலும் படிப்படியாக மழலையர் வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மையங்களில் படிக்கும் 60 ஆயிரம் குழந்தைகள் அப்படியே மழலையர் வகுப்புகளில் சேர்க்கப்படுவார்கள். இதற்கான கருத்துருக்கள், தேவையான கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. விரைவில் தமிழக அரசிடம் ஒப்புதல் பெற்று திட்டம் விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் ஏழை மக்களும் தனியார் பள்ளியை நோக்கிச் செல்லும் போக்கு மாறும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment