இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, May 09, 2019

தொலைநிலை படிப்புகளை வழங்க கூடுதலாக 3 கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி: தமிழகத்தில் 8 பல்கலைக்கழகங்களின் படிப்புகள் மட்டுமே செல்லும்


தொலைநிலை படிப்புகளை வழங்க தமிழகத்தில் கூடுதலாக 3 கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) அனுமதி அளித்துள்ளது. அதன் மூலம், தமிழகத்தில் உள்ள 8 பல்கலைக்கழகங்கள் வழங்கும் தொலைநிலை படிப்புகள் மட்டுமே செல்லுபடியாகும். பிற அரசு அல்லது தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தொலைநிலை படிப்புகளை வழங்க இயலாது. மாணவர்களின் நலனுக்காக இந்த விவரங்கள் www.ugc.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொலைநிலை படிப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பு யுஜிசி கட்டுப்பாட்டில் வந்த பின்னர், திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்விக்கான புதிய வழிகாட்டுதல் (தொலைநிலைக் கல்வி வழிகாட்டி-2017), கடந்த 2017 ஜூன் மாதம் யுஜிசி வெளியிட்டது. அதன் பிறகு, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்து தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை யுஜிசி வரவேற்றது. அந்த அறிவிப்பின்போது, தொலைநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 3.26 நாக் புள்ளிகள் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்ற புதிய நிபந்தனையையும் யுஜிசி வெளியிட்டது.

எந்தெந்த பல்கலைக்கழகங்கள் நடத்த முடியும்:

இதனால் தமிழகத்தைப் பொருத்தவரை, சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் தகுதியை பெற்றன. அதன் பின்னர், 2018 டிசம்பர் 31-ஆம் தேதி இரண்டாவது பட்டியலை யுஜிசி வெளியிட்டது. அந்தப் பட்டியலின்படி சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மற்றும் எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய நான்கு கல்வி நிறுவனங்களுக்கு 2022-23-ஆம் கல்வியாண்டு வரை தொலைநிலைப் படிப்புகளை வழங்க அனுமதி அளித்தும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு 2019-20-ஆம் கல்வியாண்டு வரை அனுமதி அளித்தும் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை வெளியிட்ட புதிய பட்டியலில் கூடுதலாக ஒரு அரசு பல்கலைக்கழகத்துக்கும், இரண்டு தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி அனுமதி அளித்துள்ளது. அதாவது, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், சென்னை ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய 3 கல்வி நிறுவனங்களுக்கும் இப்போது அனுமதி அளித்துள்ளது. எனவே, 2019-20-ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் இந்த 8 கல்வி நிறுவனங்கள் மட்டுமே தொலைநிலை படிப்புகளை வழங்க முடியும்.

No comments:

Post a Comment