சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயல் தமிழகத்தைப் புரட்டிப்போட்டது. புயல் வரும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், புயலுக்குப் பிறகு நிவாரணப் பணிகளின்போதும் தமிழகத்தில் பள்ளிகளுக்கு அதிக அளவு விடுமுறை அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, கஜா புயலால் அதிக சேதம் அடைந்த பகுதிகளான தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளின் பள்ளிகளுக்கு அதிக அளவு விடுமுறை விடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, அடுத்த மாதம் பொங்கல் விடுமுறை வருகிறது. 10, 11 & 12-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வுகள் நெருங்கும் பட்சத்தில், இந்த விடுமுறை மாணவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கல்வியாளர்கள் எச்சரித்திருந்தனர்.
இதற்கிடையே, மழை விடுமுறைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மழை பெய்தால், உடனே பள்ளிகளுக்கு விடுமுறை விடக் கூடாது
தூரல், மிதமான மழைக்கு விடுமுறை அளிக்கக் கூடாது. மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை விட வேண்டும். மழை காரணமாக கல்வி மாவட்ட அளவில் அல்லது ஊராட்சி, வருவாய் மாவட்ட அளவில் மட்டுமே விடுமுறை விடலாம். மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும்.
விடுமுறை காரணமாக பாடத்திட்டம் பாதிக்காத வண்ணம் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேநேரம், திருவிழா காலங்களில் உள்ளூர் விடுமுறை விடும்போது, பணிநாள் குறித்தும் அறிவிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment