இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, December 20, 2018

சென்னை புத்தக கண்காட்சி 2019

கே.என்.சிவராமன்
குங்குமம் இதழின் ஆசிரியர்

#சென்னைபுத்தககண்காட்சி2019-II

சரி... இன்றைய வாழ்வியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் எப்படி புத்தகங்களை படிக்கலாம்..?

* அலுவல் வேலை அதிகம். அதை முடித்துவிட்டு அக்கடா என சோர்வுடன் வீட்டுக்குச் சென்றதும் அழுத்தமான உள்ளடக்கம் கொண்ட நூல்களை வாசிக்க ஆரம்பித்தால் அதிகபட்சம் இரண்டு, மூன்று பக்கங்களுக்கு மேல் அல்லது இரண்டு மூன்று பத்திகளுக்கு மேல் நம்மால் படிக்க முடியாமல் போகும். சோர்வு தலைதூக்கி கண்கள் தூக்கத்துக்கு கெஞ்ச ஆரம்பிக்கும்.

ஸோ, இதுமாதிரியான நேரங்களில் லைட்டர் ரீடிங்குக்கு மாறுவது நல்லது. இந்த லைட்டரையே நமக்கு விருப்பமான, நம் துறை சார்ந்த நூல்களாக தேர்வு செய்தால் நன்றாக இருக்கும்.

உதாரணத்துக்கு சினிமா தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டு என்றால்... வெங்கடேஷ் சக்கரவர்த்தி, ராஜன் குறை, யமுனா ராஜேந்திரன், பிரேம்... ஆகியோர் எழுதிய நூல்களையோ அல்லது உலகப் புகழ்பெற்ற சினிமா கலைஞர்களின் தமிழாக்கம் செய்யப்பட்ட பேட்டிகள் கட்டுரைகள் அடங்கிய புத்தகங்களையோ கையில் எடுக்காமல் சினிமா பத்திரிகையாளர்கள் அல்லது ஏவி.எம்.சரவணன், ஆரூர்தாஸ் எழுதிய புத்தகங்களையோ; தொகுக்கப்பட்ட ரா.கி.ரங்கராஜனின் ‘லைட்ஸ் ஆன்’, இயக்குநர் ஸ்ரீதர் - ஏ.வெங்கடேஷ் - சமுத்திரகனி - பாலா - சேரன்.... ஆகியோரின் தன் வரலாற்று நூல்களையோ எடுத்துப் படிக்கலாம். மெல்ல மெல்ல அலுவல் அழுத்தம் குறையும். மறையும்.

இதன் பிறகும் அரை மணிநேரம் படிக்க முடியும் என்றால் அழுத்தமான சினிமா நூல்களை எடுத்துப் படிக்கலாம்.

* அரசியல் சார்ந்த நூல்களில் ஆர்வம் என்றால்... முதலில் ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகங்களையோ தமிழாக்கங்களையோ படிக்காமல் எந்த சித்தாந்தத்தில் நமக்கு ஆர்வமும் விருப்பமும் நம்பிக்கையும் இருக்கிறதோ அந்த சித்தாந்தம் குறித்து நம் ஆட்கள் எழுதிய அறிமுக நூல்களை படிக்கத் தொடங்குவோம்.

இதன் மூலம் அடிப்படைகள் நமக்கு புரிபடும்.  பிறகு ஆய்வு புத்தகங்களை படிக்க ஆரம்பித்தால் ஓரளவு சரடு வசப்படும்.

இதற்குள் இன்னொரு காரியத்தையும் செய்வது நல்லது. அது எதிர் தரப்பினரின் நூல்களைப் படிப்பது. எடுத்துக்காட்டுக்கு மார்க்சியம். கம்யூனிச சித்தாந்தத்தில் ஈர்ப்பும் நம்பிக்கையும் இருக்கிறது என்றால்... அதன் அடிப்படைகளை அறிந்தபின் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கம்யூனிச நூலைப் படிப்பது நல்லது.

இதைப் படிக்கும்போது ‘உண்மைதானோ...’ என்ற கேள்வி நமக்குள் எழுந்தால்... மார்க்சிய சித்தாந்த அடிப்படைகளை குறைபாடாக நாம் புரிந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். உடனே அந்நூலில் அரவிந்தன் நீலகண்டன் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கான பதிலைத் தேடித் தேடி படிப்பது நம்மை நாமே செழுமைப்படுத்திக் கொள்ள உதவும்.

கேள்விகளைப் போலவே பதில்களை கண்டறிவதும் அவசியம்; முக்கியம்.

இது தலித்தியம், திராவிட இயக்கங்கள், மதவாத பிரதிகள், தமிழ்த் தேசிய இயக்கங்கள்... என சகலத்துக்கும் பொருந்தும்.

எதிர் தரப்பால் நாம் விரும்பும் சித்தாந்தங்கள் குறித்து எழுதப்பட்ட நூல்களை படிக்கும்போதுதான்... அதற்கான பதில்களை கண்டறியும்போதுதான்... தெளிவு பெறுவோம்.

* இட ஒதுக்கீடு, காவிரி / முல்லைப்பெரியாறு, கூடங்குளம்... என issue based ஆக படிக்கப் போகிறோம் என்றாலும் இப்படித்தான். பத்திரிகையாளர்கள் எழுதிய நூல்களை படித்துவிட்டு வரலாற்று ஆய்வுடன் எழுதப்பட்ட issue based புத்தகங்களை படிப்பது நல்லது.

திரும்பத் திரும்ப எல்லாவற்றுக்கும் பத்திரிகையாளர்கள் எழுதிய நூல்களை குறிப்பிடக் காரணம்... அவை நுனிப்புல் மேய்ந்ததாக இருந்தாலும் அடிப்படைகளை புரிய வைத்துவிடும். நீளமான வாக்கியங்களாக இருக்காது. ஓரளவு சரளமான நடையாக இருக்கும். முக்கியமாக நமக்கு அறிமுகமான சொற்களையே பயன்படுத்தியிருப்பார்கள். எனவே ஆராய்ச்சி நூல்களை படிப்பதற்கான வார்ம் அப் ஆக இவை இருக்கும்.

* சிறுகதைகள்... நாவல்கள் படிக்கப் போகிறோம் என்றால்... அதற்கும் நம்மை விரல் பிடித்து அழைத்துச் செல்லும் வழிகாட்டிகள் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு வண்ணதாசன்.

எப்படிப்பட்ட மன அழுத்தத்துடன் நாம் இருந்தாலும் அவரது ஒரு சிறுகதை நம்மை அணைத்து ஆறுதல் படுத்திவிடும். அதன் பிறகு இன்னொரு கதை. இதற்குள் திக்குத் தெரியாமல் தவித்த நம்மை ஆற்றுப்படுத்தியிருப்பார். இதன் பிறகு அதிக கவனத்தைக் கோரும் நாவல்களை எடுத்துப் படிக்கத் தொடங்கலாம்.

* எல்லோரது வாழ்க்கையையும் சில நூல்கள் மாற்றியிருக்கும்; உத்வேகத்தை அளித்திருக்கும்; கனவுகளை விரித்திருக்கும். அப்படிப்பட்ட புத்தகங்களை எப்போதும் நம் படுக்கைக்கு பக்கத்தில் வைத்திருப்பது நல்லது. ஏனெனில் இந்தப் புத்தகங்களே இழந்துவிட்டதாக நாம் நினைக்கும் உணர்வுகளை மீண்டும் மீட்க உதவும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், திரும்பத் திரும்ப சாண்டில்யனின் நாவல்களைப் படித்ததும்; மார்க்வெஸ் ‘கவுண்ட் ஆஃப் மாண்டோ கிறிஸ்டோ’வை தனக்குத் தோன்றும்போதெல்லாம் வாசித்ததும் இதனால்தான்.

உண்மையில் இப்படிப்பட்ட புத்தகங்களை நாம் படிப்பதில்லை; மாறாக, நமக்குள் நாம் பயணப்பட்டு மறைந்திருக்கும் நம் கனவுகளை, உத்வேகத்தை வெளியில் கொண்டு வருகிறோம். அவ்வளவுதான்.

* வேலைகளுக்கு மத்தியில் சமூக வலைத்தளங்களை நம்மால் அவ்வப்போது பார்க்க முடியும் என்றால்... தினமும் ஒரு சிறுகதை அல்லது ஓரு கட்டுரையை படிக்கலாம்.

இலக்கியம், ஓவியம், கலைகளில்தான் விருப்பம் என்றால் எம்.டி.முத்துக்குமாரசாமி, வாசுதேவன்... போன்றோர் அவ்வப்போது ஷேர் செய்யும் ஆங்கிலக் கட்டுரைகளை, நிலைத்தகவல்களாக அவர்கள் எழுதும் குறிப்புகளை ஒரு பார்வை பார்க்கலாம்.

இன்றைய மார்க்சியப் போக்குகள் குறித்து அறிய விரும்பினால் யமுனா ராஜேந்திரனின் முகநூல் பக்கத்தை எட்டிப் பார்க்கலாம். குறிப்புகள், அறிமுகங்கள்... என நமக்குக் கிடைக்கும்.

உதாரணத்துக்கு சொல்லப்பட்ட பெயர்கள் இவை. இன்னும் எண்ணற்றவர்கள் அந்தந்த துறைகள் சார்ந்து பல லிங்குகளை ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கண்டறிந்து நமக்கு தேவையானவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

* அலுவலகத்துக்கு டூ வீலர் அல்லது பேருந்து அல்லது மின்சார ரயிலில் பயணம் செய்கிறோம் என்றால்... ஆடியோ ஃபைல்ஸ் உதவும். வாய்ஸ் மெசேஜில் நாமே ஒரு சிறுகதை அல்லது ஒரு கட்டுரை அல்லது கவிதைகளை ரிக்கார்ட் செய்துவிட்டு பயணங்களின்போது அதைக் கேட்கலாம்.

ஒருவேளை அமர்ந்து செல்லும் வகையில் நம் பயணம் அமையும் என்றால் பர்ஸ், செல்போனை விட நூல்களை எடுத்துச் செல்வது முக்கியம். அதே. வார்ம் அப் புத்தகங்கள்தான். ஆய்வு நூல்கள் அல்ல.

* எந்த படைப்பையாவது / எந்த எழுத்தாளரின் தொகுப்புகளையாவது / எந்த சித்தாந்த கோட்பாட்டு நூல்களையாவது யாராவது முழுமையாக அல்லது நம்மை விட அதிகமாக படித்திருப்பார்கள். அவர்களுடன் போனில் பேசலாம் அல்லது நேரில் சென்று உரையாடலாம்.

* ஒருபோதும் படிக்க நேரமில்லை என்று சொல்லாமல் இருப்போம். நாளைக் காலை கடன் தொகையை அல்லது இஎம்ஐ-யை செலுத்த வேண்டுமென்றால் இன்று எத்தனைப் பேரை தொடர்பு கொண்டு உதவி கேட்கிறோம்... நேரில் சந்திக்கிறோம்..? இதற்கெல்லாம் எங்கிருந்து நேரம் கிடைக்கிறது..? அப்படித்தான் வாசிப்புக்காவும் நேரத்தை ஒதுக்க வேண்டும்.

இன்று லேண்ட் லைனில் யாரும் அமர்ந்து பேசுவதில்லை. நடந்துக் கொண்டே அல்லது பயணம் செய்து கொண்டே கைபேசியில் உரையாடுகிறோம். அதாவது காலத்துக்கு ஏற்ப நாம் மாறியிருக்கிறோம்.

இது வாசிப்புக்கும் பொருந்தும். டேபிள் அல்லது சோஃபாவில் அமர்ந்து; படுக்கையில் படுத்தபடி... என்றுதான் என்னால் படிக்க முடியும் என்று சொல்ல வேண்டாம். மாறாக நம் வாழ்க்கைச் சூழலுக்கு தகுந்தபடி படிக்கும் பழக்கத்தையும் மாற்றிக் கொள்வோம். குளிர் பிரதேசங்களில் ஸ்வெட்டரும் வெப்ப பிரதேசத்தில் பனியனுடன் சுற்றுவது போல்.

வீட்டுக்கு எப்படி அத்தியாவசியப் பொருட்கள் அவசியமோ அப்படி நூலகமும் தேவை. புத்தகங்கள் இல்லா வீடு சடலங்களின் இருப்பிடம். செல்போன், டிவி, சமையல் பாத்திரங்கள்... எல்லாம் வாங்க எப்படி நம் பொருளாதார நிலைக்குத் தகுந்தபடி முற்படுகிறோமோ... ஐபோன் முடியாவிட்டாலும் சைனா செட்டாவது வாங்குகிறோம் அல்லவா..? அப்படி நமக்குத் தேவையான... நமக்கு விருப்பமான புத்தகங்களையும் வாங்க வேண்டும்.

அதுவும் செல்போனுக்கு மாதாமாதம் ரீசார்ஜ் செய்வதுபோல் மாதம்தோறும் குறைந்தது ரூபாய் ஐநூறுக்குள்ளாவது புத்தகம் அல்லது புத்தகங்களை வாங்க வேண்டும்.

அழுத்தமாக இதைக் குறிப்பிடக் காரணம் நாம் அனைவருமே முதல் அல்லது இரண்டாம் தலைமுறை பட்டதாரிகள். இந்த நிலைக்கு நாம் வந்திருப்பதற்குக் காரணம் படிப்புதான். அப்படியிருக்க அதைப் புறக்கணிப்பது நம் எதிர்காலத்தையே புதைக்குழியில் புதைப்பதற்கு சமமல்லவா..?

மறுக்கவேயில்லை. இப்போது நாம் சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் படிப்பு நம்மைக் காப்பாற்றாது. ஆனால், இவை அனைத்தையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை, மனோதிடத்தை வாசிப்பு மட்டுமே கொடுக்கும்.

ஏனெனில் எழுத்தாளனை விட வாசகனே மேலானவர்கள். எழுத்தாளன் தன் கனவை மட்டும்தான் விதைக்கிறான். வாசகன் அதனுடன் தன் கனவையும் கலக்கிறான்.

‘சென்னை புத்தக கண்காட்சி 2019’ நம்மை அன்புடன் வரவேற்கிறது.

No comments:

Post a Comment