இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, September 18, 2019

பிளஸ் 1, பிளஸ் 2 முதலாம் பாடப்பிரிவு நீக்கம் இன்ஜி.,- மருத்துவ பாடங்கள் பிரிப்பு


பிளஸ் 1, பிளஸ் 2 பாட தொகுப்பில் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவம் செல்வதற்கான முதலாம் பாட பிரிவு நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் இரண்டுக்கும் தனித்தனியே பாடங்களை பிரித்து

தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ள அரசாணைபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாட தொகுப்புகளில் மாற்றம்செய்யப்படுகிறது.

இந்த மாற்றம் வரும் 2020 - 21ம் கல்வி ஆண்டில் அமலுக்கு வரும். மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய நிர்வாக குழுவின் அறிக்கை மற்றும் அரசு தேர்வுகள் இயக்குனரின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.மொழி பாடம் மற்றும் ஆங்கிலம் தவிர மூன்று முதன்மை பாட தொகுப்பு 500 மதிப்பெண்களுக்கும் நான்கு முதன்மை பாட தொகுப்பு 600மதிப்பெண்களுக்கும் நடத்தப்படும். இதில் எதை வேண்டுமானாலும் மாணவர்கள் தேர்வு செய்யலாம். தற்போது பிளஸ் ௧ படிப்பவர்கள் அடுத்த கல்வியாண்டில் இப்போது படிக்கும் பாடதொகுப்பில் பிளஸ் ௨வை தொடரலாம் என கூறப்பட்டுள்ளது.புதிய அரசாணையின் படி கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் இணைந்த முதலாம் பாடப்பிரிவு நீக்கப்பட்டு உள்ளது. அறிவியல் மட்டும் உள்ள இரண்டாம் பாடப்பிரிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாற்றம் செய்யப்பட்டுள்ள பாட தொகுப்புகள்

பொது அறிவியல் பிரிவு
* கணிதம், இயற்பியல், வேதியியல்
* இயற்பியல், வேதியியல், உயிரியல்
* கணிதம், இயற்பியல், கணினி அறிவியல்
* வேதியியல், உயிரியல், மனை அறிவியல்
கலை பிரிவு
n வரலாறு, புவியியல், பொருளியல்
n பொருளியல், வணிகவியல், கணக்கு பதிவியல்
n வணிகவியல், வணிக கணிதம் மற்றும்
புள்ளியியல், கணக்கு பதிவியல்
* வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல்
* முன்னேறிய தமிழ், வரலாறு, பொருளியல்
தொழிற்கல்வி பிரிவு
* கணிதம், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
* கணிதம், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
* கணிதம், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
* கணிதம், சிவில் இன்ஜினியரிங்
* கணிதம், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்
* கணிதம், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம்
* உயிரியல், நர்சிங்
* மனை அறிவியல், டெக்ஸ்டைல் டிரஸ் டிசைனிங்
* மனை அறிவியல், உணவு சேவை மேலாண்மை
* உயிரியல், வேளாண் அறிவியல்
* வணிகவியல், கணக்கு பதிவியல்,
டைப்போக்ராபி மற்றும் கணினி அறிவியல்
n வணிகவியல், கணக்கு பதிவியல், ஆடிட்டிங் - பிராக்டிக்கல்

Tuesday, September 17, 2019

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி: பள்ளிக் கல்வித் துறை


தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6, 7, 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வியின் ஒருங்கிணைந்த கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் 6, 7, 8-ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்புக்கலைப் பயிற்சி வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, தற்காப்புக் கலை பயிற்சி அளிக்க அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் 6, 7, 8-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவிகளைத் தேர்வு செய்ய வேண்டும். ஆரோக்கியமாக இருக்கும் மாணவிகளை மட்டுமே பயிற்சிக்குத் தேர்வு செய்ய வேண்டும். தகுதிவாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் குறைந்தபட்சம் ஒன்றரை மணி (90 நிமிஷங்கள்) நேரம் வீதம் வாரத்துக்கு 2 வகுப்புகள் நடத்த வேண்டும்.

கராத்தே பயிற்றுநர் ஆணாக இருக்கும்பட்சத்தில் ஒரு பெண் ஆசிரியர் பயிற்சியின்போது உடனிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 மாதங்கள் தொடர்ந்து பயிற்சி அளிப்பதுடன், மாணவிகளுக்கு பேரீச்சம் பழம் உட்பட ஊட்டச்சத்து பொருள்களும் வழங்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 , 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: தமிழகத்தில் மூன்றாண்டுகளுக்கு விலக்கு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்


5 மற்றும் 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நாடு முழுவதும் அமல்படுத்தும் நிலையில், தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மூன்றாண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். பெரியார் பிறந்த நாளையொட்டி ஈரோடு பெரியார், அண்ணா நினைவகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

காலாண்டுத் தேர்வுக்குப் பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி. மத்திய அரசின் மூலமாக, காந்தியின் பிறந்த நாளை பள்ளிக் கல்வித் துறை மூலம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் காந்தி ஜயந்தி நாளில் அவரது படம் வைக்கப்பட்டு, விழாக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை தொடரும். காலாண்டுத் தேர்வு அட்டவணை தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வித் திட்டம் என்ற முறையில் மத்திய அரசால் 5, 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பது நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு மூன்றாண்டு காலம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டடத்தில் மாணவர்கள் தங்களது கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

எனவே, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தற்போது உள்ள நிலையே தொடரும். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது போன்ற கொள்கை முடிவுகளை முதல்வர்தான் எடுக்க வேண்டும் என்றார்.

Sunday, September 15, 2019

8ம் வகுப்புக்கு அறிவியல் செய்முறை தேர்வு


எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு அறிவிக்கப் பட்டதால், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் செய்முறை தேர்வை நடத்த, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி கல்வியின் தரத்தை உயர்த்த, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

இதன்படி, பிளஸ் 1ல், பொதுத் தேர்வு அமலுக்கு வந்தது. ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, புதிய பாட திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி, எட்டாம் வகுப்புக்கான கற்பித்தல் முறைகளில் மாற்றம் செய்வதற்காக, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 25 மதிப்பெண்களுக்கு அறிவியல் செய்முறை தேர்வு நடத்துவது போல், எட்டாம் வகுப்புக்கும் நடத்தலாம் என, ஆலோசனை நடத்தப்படுகிறது. அதனால், எட்டாம் வகுப்பு மாணவர்கள், அறிவியல் ஆய்வகங்களை பயன்படுத்தஅனுமதி அளிக்கப்படும். பள்ளிகளில் சிறப்பு செய்முறை தேர்வு பயிற்சியும் அளிக்கப்படும் என, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.

Saturday, September 14, 2019

8ம் வகுப்புக்கு பொது தேர்வு: முப்பருவ பாடமுறை ரத்தாகுமா?


ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளதால், ஏற்கனவே உள்ள, முப்பருவ பாடமுறை ரத்து செய்யப்படுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது. மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில், அவர்களுக்கு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில், வழக்கமான தேர்வு நடத்த வேண்டும்.

தேர்வு நடத்துவது தொடர்பாக, மாநில அரசுகள் சுயமாக முடிவு எடுக்க லாம் என, இந்த ஆண்டு மார்ச்சில், மத்திய அரசு உத்தரவிட்டது. இதை பின்பற்றி, நடப்பு கல்வி ஆண்டு முதல், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. குழப்பம்இதற்கான அரசாணையை, பள்ளி கல்வி முதன்மை செயலர் பிறப்பித்துள்ளார். சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., என்ற, மத்திய கல்வி வாரியங்கள், இன்னும் முடிவெடுக்காத நிலையில், தமிழக அரசு முந்திக் கொண்டு, இந்த முடிவை எடுத்துள்ளது.இந்த அறிவிப்பால், பல்வேறு நடைமுறை குழப்பங்களும், சந்தேகங்களும் எழுந்துள்ளன. தற்போதைய நடைமுறைப்படி, ஒன்று முதல், 9ம் வகுப்பு வரையிலும், முப்பருவ பாடமுறை அமலில் உள்ளது.இதன்படி, மாணவர்களுக்கு, முதல் பருவ தேர்வு, இரண்டாம் பருவ தேர்வு மற்றும் மூன்றாம் பருவ தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பருவ தேர்வுக்கும் பாட வாரியாக, தனியாக புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

முதல் பருவ தேர்வு முடிந்ததும், அந்த பாட புத்தகங்களை பயன்படுத்துவதில்லை.அடுத்த பருவ தேர்வில், முதல் பருவ தேர்வுக்கான பாடங்களில் இருந்து, கேள்விகளும் இடம் பெறாது. இரண்டாம் பருவ தேர்வுக்கு, தனியாகவும், மூன்றாம் பருவ தேர்வுக்கு, தனியாகவும் புத்த கங்கள் வழங்கப்படும். அந்தந்த பருவ தேர்வுக்கு, அந்தந்த பாடப் புத்தங்களை மட்டுமே படிக்க வேண்டும். முந்தைய பருவ பாடங்களை படிக்க தேவையில்லை. அபாயம் இந்நிலையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தப்படும் என அறிவித்ததால், மாணவர்கள், ஓராண்டு முழுவதும் நடத்தப்படும் மொத்த பாடங்களையும் படித்தாக வேண்டும்.அப்படியென்றால், முதல் பருவ பாடங்களை, இரண்டாம் பருவத்துக்கும், முதல் மற்றும் இரண்டாம் பருவ பாடங்களை, மூன்றாம் பருவ தேர்வுக்கும் சேர்த்து படிக்க வேண்டியதிருக்கும். இதனால், மாணவர்களின் மன அழுத்தம் அதிகரிப்பதுடன், புத்தக சுமையும் அதிகரிக்கும்.

மேலும், பொது தேர்வு முறை அமலானால், முப்பருவ பாட முறையை, ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். தொடர் மதிப்பீட்டு முறை என்ற, சி.சி.இ.,நீக்கப்பட வேண்டும். ஏனென்றால், ஓராண்டு பாடங்கள் அனைத்தையும், மாணவர்கள் படிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு கூடுதல் வேலை நாட்களும், நேரமும் தேவைப்படும். எனவே, சி.சி.இ., முறைக்கு தேவையான, பாடம் தொடர்பான இணை செயல்பாடுகளில், மாணவர்களால் ஈடுபட முடியாத நிலை ஏற்படும். அதேபோல், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, தொடர்ந்து அடிப்படை கல்வி கிடைப்பதிலும், சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளதாக, கல்வியாளர்கள் கருதுகின்றன

Wednesday, September 11, 2019

இடை நிற்றல் மாணவர்களின் விவரங்களைச் சேகரிக்க உத்தரவு


இடைநிற்றல் மாணவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து பள்ளிக் கல்விக்கான எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிப் படிப்பை தொடராமல் இடைநின்ற மாணவர், வயது பூர்த்தியாகியும் பள்ளிக்கு வராதவர் குறித்த விவரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது.

இதையடுத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்களைப் பள்ளியில் சேர்க்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தொடக்க கல்வி பயின்று இடையில் நின்ற மாணவர்கள், 14 வயதுக்குட்பட்ட, பள்ளி செல்லாத மாணவர்கள் விவரத்தை தலைமை ஆசிரியர்கள் கணக்கெடுப்பு செய்ய வேண்டும். பள்ளி விட்டு வேறு பள்ளி சென்ற மாணவர்களின் விவரங்களையும் சேகரித்து புதுப்பிக்க வேண்டும். இந்தப் பணி முடிவடைந்தவுடன் சேகரிக்கப்பட்ட விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பள்ளி கட்டடங்கள் சேதம் கணக்கெடுப்பு துவக்கம்


வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், சேதமடைந்த அரசு பள்ளி கட்டடங்களை கணக்கெடுக்கும் பணியை, பொதுப்பணித்துறை துவங்கி உள்ளது. மாநிலம் முழுவதும் அரசு பள்ளி கட்டடங்களை, மாநில அரசின் நிதி வாயிலாக மட்டுமின்றி, நபார்டு வங்கி கடனுதவியுடன் பொதுப்பணித் துறையினர் கட்டியுள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும், அரசு கட்டடங்களை பராமரிக்க ஒதுக்கப்படும் நிதியில், பள்ளி கட்டடங்களிலும் புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. தற்போது, மாநிலம் முழுவதும் கட்டப்பட்ட, பல்வேறு பள்ளி கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. வெள்ள அபாய காலங்களில், பொதுமக்களும், இந்த கட்டடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, அரசு பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து, சேதமடைந்த கட்டடங்கள் குறித்து, 10 நாட்களில் கணக்கெடுக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.சேதமடைந்த பள்ளிகளில், மழைக்கு முன், தற்காலிக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Tuesday, September 10, 2019

பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்


காந்தி ஜயந்தியை முன்னிட்டு பள்ளிகளில் புதன்கிழமையிலிருந்து வரும் அக்.1ஆம் தேதி வரை பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

மத்திய அரசின் தூய்மை இந்திய திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் காந்தி ஜயந்தியை முன்னிட்டு செப். 11 முதல் அக்டோபர் 1 வரை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அதன்படி, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்த்தல், பயன்பாட்டில் இருந்து நீக்குதல், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள பொருள்களை சேகரித்து மறுசுழற்சிக்கு உள்படுத்துதல் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

நமது மாநிலத்தில் பள்ளிகளில் ஏற்கெனவே ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பள்ளி வளாகம் மற்றும் அதற்கு அருகே உள்ள இடங்களில் இருந்து, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை சேகரிக்க வேண்டும். அக்டோபர் 3 முதல் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை வரை பிளாஸ்டிக் பொருள்களை உள்ளூர் தன்னார்வலர்களின் உதவியுடன் சேகரித்து, மறுசுழற்சிக்கு உள்படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் பொருள்களை மாணவர்கள், உள்ளூர் தன்னார்வலர்களுடன் இணைந்து சேகரித்தல், அவற்றை மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் இதுதொடர்பான அறிவுறுத்தல்களை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

சிறந்த ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது: மாவட்ட வாரியாக தேர்வு செய்ய குழு அமைப்பு


ஒரு மாவட்டத்துக்கு ஆறு ஆசிரியர்கள் வீதம் அனைத்து மாவட்டங்களிலும் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினர் பரிந்துரைகள் மற்றும் விண்ணப்பங்களின் அடிப்படையில் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அதன் விவர அறிக்கையைப் புகைப்பட ஆதாரங்களுடன் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக,  பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள  சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசு,  ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள்,  உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சிறந்த முறையில் கணினியைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர்,  கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர்,  குழந்தைகள் சேர்க்கை, பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர் என ஒரு மாவட்டத்துக்கு ஆறு ஆசிரியர் வீதம் தேர்வு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆசிரியர் பாராட்டுச் சான்றுடன் ரூ.10 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மாணவர்களின் கல்விச் செயல்பாடுகளை அறிந்து கொள்ளுதல்,  வினவுதல்,  பயன்படுத்துதல், புதிய விஷயங்களை உருவாக்குதல் என்ற நிலையில் வளர்த்தெடுப்பவராகவும்,  பள்ளி இணைச் செயல்பாடுகளான இசை, ஓவியம்,  தேசிய மாணவர் படை,  சாரண, சாரண இயக்கம், நாட்டு நலப்பணித் திட்டம்,  இளஞ்சிறார் செஞ்சிலுவை,  மாநிலமாவட்ட  அளவிலான விளையாட்டுப் போட்டிகளில்  பங்கு கொள்ளுதல், பரிசுகளை வெல்லுதல், தேசிய விழாக்களை நடத்துதல் மற்றும் மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்க கூடியவராக இருக்க வேண்டும். அதே வேளையில் தன்னுடைய தனித்திறமையால் பள்ளியின் வளர்ச்சிக்கும்,  முன்னேற்றத்துக்கும் உதவி செய்யக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.

ஆசிரியர் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் பயிலும் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டவராகவும், மாணவர்களை உளவியல் அடிப்படையில் வழிநடத்துபவராகவும் இருக்க வேண்டும்.
  வகுப்பறை கற்பித்தலில்... இந்த விருது வகுப்பறையில் கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.  ஆசிரியர் பணியிலும், பகுதி நிர்வாகப் பணியிலும் ஈடுபடும் ஆசிரியர் பிரிவினருக்குப் பொருந்தாது.  மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருது மற்றும் தமிழக அரசால் வழங்கப்படும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களைப் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி முதன்மைக் கல்வி அலுவலர்,  மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்டக் கல்வி அலுவலர்கள்,  மூத்த வட்டாரக் கல்வி அலுவலர்,  தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற மூத்த தலைமையாசிரியர் ஆகியோரைக் கொண்ட மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவானது பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அதன் விவர அறிக்கையைப் புகைப்பட ஆதாரங்களுடன் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Friday, September 06, 2019

மாணவிகள் படங்களை வலை தளங்களில் பதிவிடக் கூடாது : பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண்டு விழா, விளையாட்டு விழா உள்ளிட்ட பல்ேவறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவ்விழாக்களில் பங்கு பெறும் பெண் ஆசிரியைகள், மாணவிகள் சார்ந்த புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவிடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

தற்போதைய காலகட்டத்தில் இதுபோன்ற படங்களை பதிவிடுவதால் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பெண் ஆசிரியைகள், மாணவிகளின் புகைப்படத்தை பாதுகாப்பு கருதி சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் ஆசிரியைகள், மாணவிகளின் அனுமதி இன்றி பதிவிடுவது சட்டப்படி குற்றமாகும்.

இதனை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை தக்க கட்டுப்பாடுகளுடன் சுய கோப்புகளாக சேமிக்கலாம். பதிவிறக்கம் செய்ய இயலாத பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிளாக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

Tuesday, September 03, 2019

தலைமை வட்டார வள மையமாகும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் எஸ்சிஆர்டியின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் மாவட்ட தலைமை வட்டார வள மையங்களாக மாற்றம் பெறுகின்றன. அதன்படி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் ஆகியவற்றில் பணிபுரியும் முதல்வர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் கற்றல் கற்பித்தல் பணிகளை கண்காணிக்க வேண்டும்.அதில் குறைகள் இருந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பயிற்சி நிறுவன முதல்வரும், முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்களுக்கு ஒரு ஒன்றியத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் நான்கு வேலைநாட்கள் அல்லது மாதத்தில் 16 பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். கற்றல் உள்ளிட்ட பணிகளில் குறைகள் இருந்தால் வேறு ஆட்களை அனுப்பி, தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் நிறுவன முதல்வர்கள் பள்ளி ஆய்வின் தொகுப்பு அறிக்கை மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதோடு பாடப்புத்தகங்களில் பிழைகள் ஏதேனும் இருந்தால் அதுபற்றி ஆசிரியர்களிடம் கலந்தாலோசித்து இம்மாத இறுதிக்குள் இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் தமிழகத்தில் லட்சக்கணக்கானவர்கள் தேர்ச்சி பெறவில்லை. எனவே, ஆசிரியர் பள்ளி நிறுவனங்களின் தரத்தை உயர்த்துவதற்காக பள்ளிக்கல்வித்துறை இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.