5 மற்றும் 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நாடு முழுவதும் அமல்படுத்தும் நிலையில், தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மூன்றாண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். பெரியார் பிறந்த நாளையொட்டி ஈரோடு பெரியார், அண்ணா நினைவகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
காலாண்டுத் தேர்வுக்குப் பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி. மத்திய அரசின் மூலமாக, காந்தியின் பிறந்த நாளை பள்ளிக் கல்வித் துறை மூலம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் காந்தி ஜயந்தி நாளில் அவரது படம் வைக்கப்பட்டு, விழாக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை தொடரும். காலாண்டுத் தேர்வு அட்டவணை தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வித் திட்டம் என்ற முறையில் மத்திய அரசால் 5, 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பது நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு மூன்றாண்டு காலம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டடத்தில் மாணவர்கள் தங்களது கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
எனவே, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தற்போது உள்ள நிலையே தொடரும். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது போன்ற கொள்கை முடிவுகளை முதல்வர்தான் எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment