இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, August 25, 2019

செப்., 12ல் காலாண்டு தேர்வு


தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு, அடுத்த மாதம், 12ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், சமச்சீர் கல்வி பாட திட்டத்தில், அனைத்து மாணவர்களுக்கும், ஒரே தேர்வு முறை பின்பற்றப்படுகிறது. இந்த ஆண்டு, ஒன்று முதல் பிளஸ் 2 வரை, அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாட திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதில், ஒன்று முதல் ஒன்பது வரையிலும், முப்பருவ தேர்வு முறை திட்டமும், மற்ற வகுப்புகளுக்கு, ஒருங்கிணைந்த தேர்வு திட்டமும் நடைமுறையில் உள்ளது. அதன்படி, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான, முதல் பருவ தேர்வு, செப்டம்பரில் நடக்க உள்ளது. பருவ தேர்வுகளுக்கான தேதியை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களே முடிவு செய்து நடத்தலாம் என, அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு, செப்., 12ல் துவங்கும் என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, செப்டம்பர், 23வரை தேர்வு நடத்தப்படுகிறது. செப்., 24 முதல், 30ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது

Wednesday, August 21, 2019

உபரி பணியிடங்கள் கணக்கெடுப்பு

10,000 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிறக்கத்தையடுத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆபத்து : உபரி பணியிடங்கள் கணக்கெடுப்பு

தமிழகத்தில் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிறக்கத்தை தொடர்ந்து உபரியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர்களை காலி செய்யும் நடவடிக்கையில் தொடக்கக்கல்வித்துறை இறங்கியுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை நாடு முழுவதும் கல்வித்துறையில் ஏற்படும் அநாவசிய செலவினங்களை குறைக்கும்படி மாநில அரசுகளை வலியுறுத்தி வருவதுடன், கல்வித்துறைக்காக செலவிடப்படும் செலவினங்களையும் கண்காணிக்க தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ள தமிழக அரசு, மத்திய அரசின் அழுத்தம் காரணமாக செலவினங்களை குறைக்கும் வழிவகைகளை கண்டறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைப்பது,  காலியாகும் அரசுப்பள்ளி கட்டிடங்களை நூலகங்களாக மாற்றுவது என பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேநேரத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் மாணவர் எண்ணிக்கை எதிர்பார்ப்புக்கு ஏற்ப அரசுப்பள்ளிகளில் உயராததால் வேறுவழியின்றி உபரி ஆசிரியர்கள் கணக்கெடுப்பை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசு கையில் எடுத்தது. தமிழகத்தில் அரசு ஆரம்ப பள்ளிகள் 23,928, நடுநிலைப் பள்ளிகள் 7,260, உயர்நிலைப் பள்ளிகள் 3,044, மேல்நிலைப்பள்ளிகள் 2,727 ஆகியவை உள்ளன. இதில் ஆரம்ப பள்ளிகளில் 64,855 ஆசிரியர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 50,508 ஆசிரியர்களும், உயர்நிலைப் பள்ளிகளில் 27,891 ஆசிரியர்களும், மேல்நிலைப்பள்ளிகளில் 73,616 ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர். இவர்களில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 16 ஆயிரத்து 110 உபரி ஆசிரியர்கள் இருப்பது தெரிய வந்தது. இவர்களில் 14 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களில் 4 ஆயிரம் பேர் பணி நிரவல் மூலம் வேறு பள்ளிகளுக்கு கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளனர். மீதமுள்ள 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை அவர்கள் தற்போது பெறும் அதே ஊதிய விகிதத்தில் இடைநிலை ஆசிரியர்களாக பணியிறக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக தொடக்க, நடுநிலைப்பள்ளிகளிலும் உபரி ஆசிரியர் கணக்கெடுப்பை அரசு கையில் எடுத்துள்ளது. அதன்படி, 1.08.2019ம் தேதி நிலவரப்படி 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பணியிடம் உபரி பணியிடமாக கருத்தில் கொள்ள அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் பள்ளிகளில் 75 மாணவர்கள் இருந்தால் மட்டுமே 3 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். 105 மாணவர்களும், அதற்கு மேலும் இருந்தால் மட்டுமே 4ம் பணியிடம் கருத்தில் கொள்ளப்படும் என்றும் தொடக்கக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கான முறையான அறிவிப்பு வெளியானதும் உபரி ஆசிரியர்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு பணி நிரவல் மூலம் வேறு பள்ளிகளுக்கு நியமனம் செய்யப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் நிலை குறித்து வேறு முடிவு எடுக்கப்படலாம். இந்த தகவல் இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘பட்டதாரி ஆசிரியர்களை தொடர்ந்து அரசு இடைநிலை ஆசிரியர்கள் பக்கம்  கவனத்தை திருப்பியுள்ளது. இதற்கு மத்திய அரசின் கடும் அழுத்தமே காரணம். வேறு துறைகளில் சிக்கனத்தையும், ஆட்குறைப்பையும் மேற்கொள்ளலாம். கல்வித்துறையில் இந்த நடவடிக்கை நாட்டின் முன்னேற்றத்தையே பாதிக்க செய்து விடும். காமராஜர் காலத்தில் அப்போதைய மக்கள் தொகையை கருத்தில் கொண்டு அரசாணை 250ன்படி 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நடைமுறை கடந்த 1996-2000ம் காலக்கட்டத்தில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று ஆனது. இதன் மூலம் 2 லட்சம் ஆசிரியர்கள் என்பது 1 லட்சம் ஆசிரியர்கள் என்று குறைந்தது. தற்போது அரசு மேற்கொள்ள உள்ள நடவடிக்கை மூலம் இன்னும் 10 முதல் 20 ஆண்டுகளுக்கு ஆசிரியர்கள் நியமனம் என்பதே இருக்காது என்பதுடன், டெட் தேர்வு மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களின் நிலையும் கேள்விக்குறியாகும். எனவே, காமராஜர் காலத்து நடைமுறையை மீண்டும் பின்பற்றினால் உபரி ஆசிரியர்கள் என்ற நிலை இருக்காது. புதிய பணியிடங்களும் உருவாகும். ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் குறையும். அதோடு தமிழகத்தில் அடிப்படை கல்வியுடன், பள்ளிக்கல்வியும் மேம்படும்’ என்று தெரிவித்தனர்

தமிழகத்தில் அடுத்த மாதம் வாக்காளர் சரிபார்ப்பு பணி


தமிழகத்தில், வாக்காளர் சரிபார்ப்பு பணி, அடுத்த மாதம் நடக்க உள்ளது.தவறுகள் இல்லாத, வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்காக, வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தை, தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. \ இத்திட்டத்தில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, செப்., 1 முதல், 30 வரை நடக்க உள்ளது.

அப்போது, வாக்காளர்களை சரி பார்ப்பதற்காக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக வருவர். அவர்களிடம், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது, தங்களுடைய பெயர் என்பதை உறுதிப்படுத்த, வாக்காளர்கள் உரிய ஆவணத்தை அளிக்க வேண்டும். பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், ஆதார், ரேஷன் கார்டு, பான் கார்டு, பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், தபால் கணக்கு புத்தகம், வருமான வரி அறிக்கை, குடிநீர், தொலைபேசி, மின் கட்டணம், காஸ் பில், பிறரிடமிருந்து வந்த தபால் ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றை காண்பிக்கலாம்.வாக்காளர்கள், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை, பொது சேவை மையத்திற்கு சென்று, சரிபார்த்து கொள்ளலாம்.

மேலும், '1950' என்ற தொலைபேசி எண்ணில் பேசியும், www.nvsp.in என்ற இணையதளத்திலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

Saturday, August 17, 2019

அரசுப் பள்ளிகளில் நூலக வாசிப்புக்கு இரு பாடவேளைகள் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு


அரசுப் பள்ளிகளில் புத்தகங்கள் படிப்பதற்காக மாணவர்களுக்கு வாரம்தோறும் 2 பாடவேளைகள் ஒதுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் இரா.சுடலைக் கண்ணன், அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே வாசிப்புத் திறனை மேம்படுத்த பள்ளி வளாகத்தில் நூலகப் பயன்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை மேலும் பலப்படுத்தும் வகையில், நூலகங்களில் புத்தகங்கள் படிக்க ஏதுவாக, மாணவர்களுக்கு வாரம்தோறும் 2 பாடவேளைகள் ஒதுக்க வேண்டும். நூலகங்களை மேற்பார்வையிட சிறப்பு ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். அந்த ஆசிரியருக்கு குறைந்த பாடவேளைகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் கிழிக்கப்பட்டால் பொறுப்பாசிரியர் மற்றும் மாணவருக்கு எவ்வித அபராதமும் விதிக்கக் கூடாது. அதற்கு மாறாக சேதமடைந்த புத்தகங்களைச் சரிசெய்ய பள்ளி மானிய நிதியைப் பயன்படுத்த வேண்டும். தினசரி நாளிதழ்கள் வாங்க இந்த நிதியைப் பயன்படுத்தக் கூடாது.

மாணவர்கள் தங்கள் விருப்பப்படி, புத்தகங்களைத் தேர்வு செய்து படிக்க வழி செய்வதுடன், ஆண்டுதோறும் பள்ளிகளில் ஏப்ரல் மாதம் தேசிய நூலக வாரம் கொண்டாடப்பட வேண்டும். மாதத்துக்கு ஒருநாள் இறைவணக்க கூட்டத்தில் மாணவர்களை தங்கள் படித்த புத்தகம் குறித்து  பேச வைக்க வேண்டும். மாவட்ட மைய நூலகங்களுக்குச் சென்று பார்வையிட வைத்தல், முன்னாள் மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் உதவியால் நூலகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை  திறம்பட மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, August 12, 2019

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி-யுகேஜி வகுப்புகள்: கூடுதலாக 3 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த முடிவு


தமிழகத்தில் தற்போது 2,381 அரசுப் பள்ளிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்தத் திட்டம் மேலும் 3 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏழை பெற்றோரின் குழந்தைகளும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கிலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தது. இதையடுத்து ரூ.7.73 கோடியில் முதல் கட்டமாக அரசு நடுநிலைப் பள்ளி வளாகங் களில் இயங்கும் 2,381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி தொடங்கப்பட்டன.

3-4 வயது குழந்தைகளை எல்கேஜி வகுப்பி லும், 4-5 வயது குழந்தைகளை யுகேஜி வகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். மழலையர் வகுப்புகள் காலை 9.30 மணி முதல் மதியம் 3.45 மணி வரை நடைபெறும். இங்கு சேர்ந்து உள்ள குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்கள், புத்தகப்பை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு கற்றல் கருவி பெட்டி தரப்பட்டுள்ளது. அதன்மூலமாக ஆசிரியர்கள் தினமும் 2 மணி நேரம் பாடம் நடத்துகின்றனர். அது செயல்முறைக் கல்வியாகவே இருக்கும். இதர நேரங்களில் விளையாட்டு போன்ற தனித்திறன் சார்ந்த அம்சங்களில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த வகுப்புகளில் பெற்றோர் பலரும் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர்.

நிகழாண்டு இதுவரை 51 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். மழலையர் வகுப்புகளுக்கு பெற்றோர், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்தத் திட்டத்தை அரசுப் பள்ளி வளாகங்களில் செயல்படும் மற்ற 3 ஆயிரம் அங்கன்வாடிகளிலும் படிப்படியாக மழலையர் வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் படிக்கும் 60 ஆயிரம் குழந்தைகள் அப்படியே மழலையர் வகுப்புகளில் சேர்க்கப்படுவார்கள். இதற்கான கருத்துருக்கள், தேவையான கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. விரைவில் தமிழக அரசிடம் ஒப்புதல் பெற்று திட்டம் விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் ஏழை மக்களும் தனியார் பள்ளியை நோக்கிச் செல்லும் போக்கு மாறும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Saturday, August 10, 2019

நுாலகங்களாக மாறும் 46 பள்ளிகள்


தமிழகத்தில், முதல் கட்டமாக, 46 பள்ளிகள், நுாலகங்களாக மாற்றப்படுகின்றன.

தமிழகத்தில், ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள, அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு, அவை, நுாலகங்களாக மாற்ற, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.முதல் கட்டமாக, நீலகிரி - ஆறு, சிவகங்கை, வேலுாரில், தலா - நான்கு, விருதுநகர், திருப்பூர், திருவண்ணாமலை, நாமக்கல், கிருஷ்ணகிரியில், தலா - மூன்று, விழுப்புரம், துாத்துக்குடி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், தர்மபுரியில், தலா - இரண்டு, திருவள்ளூர், தேனி, நாகை, காஞ்சிபுரம், கோவையில், தலா, ஒரு பள்ளி என, 46 பள்ளிகள், நுாலகங்களாக மாற்றப்படுகின்றன.நுாலகங்களில், குறைந்தபட்சம், 1,000 புத்தகங்கள் இடம்பெற்றிருக்கும்.

Thursday, August 08, 2019

ஏ.டி.எம்.,மில் இரவு நேர பரிவர்த்தனை நிறுத்தம்


ஏ.டி.எம். மோசடி அதிகளவில் இரவு நேரங்களில் நடப்பதால் இரவு 11:00 முதல் காலை 6:00 மணி வரை 'கார்டு' பண பரிவர்த்தனையை நிறுத்தி எஸ்.பி.ஐ. எனும் பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வங்கி கிளைகளுக்கு எஸ்.பி.ஐ. அனுப்பிய சுற்றறிக்கை:

ஏ.டி.எம். கார்டு வாயிலாக 40 ஆயிரம் ரூபாய் வரை பண பரிமாற்றம் செய்ய முடியும். வங்கி வேலை நேரங்களில் மட்டுமல்லாமல் எந்த நேரத்திலும் இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும்.ஏ.டி.எம். இயந்திரங்களில் 'ஸ்கிம்மர்' இயந்திரம் பயன்படுத்தி இரவு நேரங்களில் கார்டுக்கும் வங்கி கணக்கிற்கும் பண பரிமாற்றம் செய்து சிலர் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

இதனால் வாடிக்கையாளர்களுக்கும் வங்கிக்கும் அதிக இழப்பு ஏற்படுகிறது.இதுபோன்ற மோசடியை தவிர்க்க ஏ.டி.எம். கார்டிலிருந்து பணம் எடுக்கும் அளவு 40 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் இரவு நேரங்களில் நடக்கும் மோசடியை தவிர்ப்பதற்காக இரவு 11:00 மணி முதல் காலை 6:00 மணி வரை ஏ.டி.எம். மையத்தில் கார்டிலிருந்து மற்றொரு கார்டுக்கும் வங்கி கணக்கிற்கும் பண பரிமாற்றம் செய்வதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு ஏ.டி.எம். மைய திரையில் வெளியாகும். மேலும் அனைத்து வங்கி கிளைகளும் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, August 06, 2019

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம்: எமிஸ் விவரங்களுடன் இணைக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு


தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு, ஆதார் எண் கட்டாயம் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண் பதிவு வழங்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட மாணவர்களின் எண் விவரங்கள் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மைய (எமிஸ்) விவரங்களுடன் ஒருங்கிணைக்க வேண்டும்.

மாணவர்களுக்கான ஆதார் பதிவுப் பணிகளைச் சிறப்பாக தொய்வின்றி மேற்கொள்ளும் வகையில் கணினி விவரப் பதிவாளர்கள் பணியில் இருக்கும் ஒவ்வொரு கிராமப்புற வட்டார வள மையத்துக்கு ஒன்று வீதம் ஆதார் பதிவுக் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு ஆதார் பதிவு மேற்கொள்ள தயார் நிலையில் நிறுவப்பட்டுள்ளன. வட்டார வள மைய கணினி விவரப் பதிவாளர்களும் ஆதார் பதிவு செய்யும் கருவியை இயக்கி, சம்பந்தப்பட்ட மாணவர்களிடம், மாணவர்களின் பெற்றோர்களிடம் சம்பந்தப்பட்ட மாணவர்களின் ஆதார் எண் விவரங்களைச் சேகரித்து, விவரங்களை ஆதார் கருவி மூலம் பதிவு செய்திட வேண்டும். பதிவு செய்யப்பட்ட விவரங்களை குறிப்பிட்ட காலவரைக்குள் ஆதார் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

கட்டணம் பெறக் கூடாது: ஆதார் எண் சம்பந்தப்பட்ட விவரங்களில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட வேண்டியிருந்தால், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுரைப்படி செய்யப்பட வேண்டும். மேலும், ஆதார் எண் பதிவு செய்த பின்பு சம்பந்தப்பட்ட மாணவர்களுக்குப் பதிவு செய்யப்பட்டமைக்கான ரசீது அளிக்கப்பட வேண்டும். ஆதார் பதிவு, பள்ளி வேலை நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட வேண்டும். புதிய ஆதார் எண் பதிவுக்கு மாணவர்களிடம் எந்தவித கட்டணமும் பெறக்கூடாது. மாணவர்களின் ஆதார் எண் பதிவில் மாணவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களில் மாற்றம் செய்யப்பட வேண்டியிருந்தால், மாற்றம் செய்து ரூ.50 கட்டணமாக வசூல் செய்யலாம்.

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இச்சேவை வழங்கப்படுகிறது. பிற பொதுமக்களுக்கு இம்மையங்களில் சேவை அளிக்கக்கூடாது.

குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்: விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு புறம்பாகவோ பதிவுகள் மற்றும் மாற்றங்கள் செய்யும் பணிகள் ஏதேனும் செய்யப்பட்டது என கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர் மீது குற்றவியல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆதார் எண் பெறப்படாத மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் சரிபார்த்தபடி மாணவர்களை ஆதார் பதிவு மையத்திற்கு அழைத்து வந்து ஆதார் எண் பதிவு செய்திட வேண்டும். ஆதார் பதிவுப் பணிகளை துரிதமாக செய்யும் வகையில் மாவட்ட அளவில் ஆதார் பதிவு கண்காணிப்புக் குழு ஏற்படுத்தவும், அந்த குழுவிற்கு தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது

Saturday, August 03, 2019

மக்கள் தொகை கணக்கெடுப்பு

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்குகிறது - மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசிதழில் கடந்த 31-ந் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுபற்றி மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அசாம் தவிர்த்து நாடு முழுவதும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்குகிறது. அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பட்டியல் தயாரிக்கும் பணி ஏற்கனவே நடைபெற்று, கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரைவு பட்டியல் வெளியானது. இதில் 40 லட்சம் பேர் விடுபட்டதாக பெரிய சர்ச்சை எழுந்தது.

இந்த தேசிய கணக்கெடுப்பில் சுமார் 31 லட்சம் பயிற்சி பெற்ற கணக்கெடுப்பாளர்கள் வீடு, வீடாக சென்று தகவல் சேகரிப்பார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்களாக இருப்பார்கள். இந்திய பதிவாளர் ஜெனரல் தேவைக்கு ஏற்ப மின்னணு வடிவில் விண்ணப்பம் தயாரிக்கப்பட்டு அதில் தகவல்களை பதிவு செய்வார்கள்.

இந்த பணி மூன்று கட்டங்களாக நடைபெறும். இதில் முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள் கணக்கெடுப்பு பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள். சுமார் 45 ஆயிரம் கிராமங்களில் இணையதள வசதி இல்லை. அதுபற்றிய தகவலும் தனியாக சேகரிக்கப்படும். சட்டப்படி ஒவ்வொரு குடிமகனும் இந்த கணக்கெடுப்பில் இடம்பெற வேண்டும்.

கிராமம், துணை நகரம், துணை மாவட்டம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் மக்கள் தொகை பட்டியல் தயாரிக்கப்படும். இந்த பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடைந்ததும் வெளியிடப்படும். இது இந்திய குடிமக்கள் தேசிய பட்டியல் தயாரிப்பதற்கு அடிப்படையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த பணிகளும் மின்னணு அடிப்படையில் நடத்தப்பட்டு, தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு மக்கள் தொகை பட்டியல் 2024-2025-ம் ஆண்டில் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்

Thursday, August 01, 2019

கரும்பலகையில் 3 செ.மீ., குறையாத அளவில் எழுதவேண்டும்:பள்ளிக்கல்வி அறிவுறுத்தல்


கரும்பலகையில், 3 செ.மீ.,க்கு குறையாத அளவில் எழுத வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கண் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளைன் அறிவுரைப்படி, மாணவர்களின் கண் நலனை பாதுகாக்கும் பல்வேறு நெறிமுறைகளை, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள, சுற்றறிக்கை:

ஆசிரியர்கள், வகுப்பறையில் உள்ள, கருப்பலகையில் எழுதும்போது, 3 செ.மீ., அல்லது அதற்கு மேல், எழுத்து அளவு இருப்பது அவசியம்.எழுத்து அளவு, எப்போதும், ஒரே அளவில் இருக்க, 'ஸ்டென்சில் மார்க்கிங்' என்ற, எழுத்து அளவு குறியீட்டை பயன்படுத்தலாம்.கண் சார்ந்த பிரச்னைகள் இருக்கும் குழந்தைகளை, வகுப்பில், முதல் வரிசையில் அமர வைப்பதுடன், வகுப்பறையில், சீரான வெளிச்சம் எப்போதும் இருக்கும்படி, பார்த்துக் கொள்வது அவசியம்.கண் கூசும் அளவுக்கு, கருப்பலகையில், வெளிச்சம் இருக்கக் கூடாது. குழந்தைகள், எந்த சிரமமும் இல்லாமல், கரும்பலகையை பார்க்க வழி செய்ய வேண்டும்.தலைமை ஆசிரியர்கள், தொடர்ந்து, இந்த நடைமுறையை கண்காணிக்க வேண்டும். இதனால், குழந்தைகளுக்கு, பார்வை சார்ந்த பிரச்னைகள் தவிர்க்கப்படும்.இவ்வாறு, அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அறிவியல் விருது பெற:ஆசிரியர்களுக்கு வாய்ப்பு


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான அறிவியல் விருதுக்கு, செப்., 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தில் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அறிவியல் விருது வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்த, அறிவியல் நகரம் சார்பில், இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு, ஏழு முதல், பிளஸ் 2 வரை வகுப்பு எடுக்கும், 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ் வழி, ஆங்கில வழி என, தலா, ஐந்து பேருக்கு விருது வழங்கப்படும். விண்ணப்பங்களை, www.sciencecitychennai.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.இந்த விருதை பெற தகுதி உள்ளவர்கள், தலைமை ஆசிரியர், முதன்மை கல்வி அதிகாரி வழியாக, செப்., 15க்குள் பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.