இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, April 09, 2019

திறனறி தேர்வு முடிவு வெளியீடு

தேசிய திறனறித் தேர்வின் முதற்கட்ட தேர்வு முடிவு வெளியீடு

10-ம் வகுப்பு முடித்து மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு நடத்தப்பட்ட தேசிய திறனறித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

2018 நவம்பரில் தமிழகம் முழுவதும் 1.59 லட்சம் 10-ம் வகுப்பு மாணவ, மாணவியர் எழுதிய தேசிய திறனறித் தேர்வு முடிவுகளை தற்போது அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

11-ம் வகுப்பில் இருந்து ஆராய்ச்சிப் படிப்பு வரை உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனறித் தேர்வு முடிவுகள் www.dge2.tn.nic.in என்ற தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மாநில அளவில் தேசிய திறனறித் தேர்வு நடத்தப்படும். பின்னர் இரண்டாம் கட்டமாக தேசிய அளவில் திறனறித் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மாநில அளவில் நடத்தப்பட்ட முதற்கட்ட தேர்வு முடிவுகளைத் தான் தற்போது, தமிழ்நாடு அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

Monday, April 08, 2019

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு, புதிய பாடத்திட்ட நூல்கள் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு


பிளஸ் 2, பத்தாம் வகுப்பு உள்ளிட்ட முக்கிய வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டப் புத்தகங்கள் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் பத்தாண்டுகளுக்குப் பிறகு முதல்கட்டமாக 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டங்கள் நிகழ் கல்வியாண்டில் அறிமுகமானது. மீதமுள்ள வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய பாடத் திட்டமாக மாற்றப்பட உள்ளன.

இதற்கான புத்தக தயாரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்தச் சூழலில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் அண்மையில் கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் ஆப்) வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் புதிய பாடத் திட்ட புத்தகங்களை அதிகாரப்பூர்வமாக www.tnscert.org இணையதளத்தில் தற்போது பதிவேற்றம் செய்துள்ளது. அதில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு போன்ற முக்கிய வகுப்புகளுக்கான அனைத்து பாடப் புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.

இதர வகுப்புகளுக்கான பாடப் புத்தங்கள் படிப்படியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான பாடநூல்களில் இடம்பெற்றுள்ள அனைத்து சிறப்பம்சங்கள் வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எஞ்சிய வகுப்புகளிலும் இருக்கும். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்த புரிதல் ஏற்படுவதற்காக முன்கூட்டியே புத்தகங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 9-ஆம் வகுப்புக்கு முப்பருவ கல்வி முறை மாற்றப்பட்டுள்ளதால் புத்தகங்கள் ஒரே தொகுதியாக அச்சிடப்பட்டுள்ளன.

இதுதவிர கடந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய பாடத்திட்டம் அதிகமாகவும், கடினமாகவும் இருப்பதாக பரவலாக கருத்துகள் வந்தன. அதை ஏற்று கலை, தொழில் பிரிவுகளில் சில கூடுதல் பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன. 2.30 கோடி இலவச பாடநூல்கள் தயார்: அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 2.3 கோடி புத்தகங்கள் பாடநுôல் கழகம் மூலம் அச்சிடும் பணிகள் முடிந்துவிட்டன. அவற்றை இப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கிருந்து பள்ளிகளுக்கு பாடநூல்கள் பிரித்து அனுப்பப்படும். கோடை விடுமுறை முடிந்து ஜூனில் பள்ளிகள் திறக்கப்படும்போது எல்லா மாணவர்களுக்கும் இலவச புத்தகங்கள் வழங்கப்படும் என்றனர்.

ஆசிரியர் கலந்தாய்வு: வழிகாட்டுதல் விதிமுறைகளில் புதிய மாற்றங்கள்


தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததும் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும், கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல் விதிமுறைகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 38,000-க்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் 2.4 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மாநில அளவில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, ஆண்டுதோறும் மே மாதத்தில் இணையதளம் வழியாக நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், நிகழ் கல்வியாண்டு வரும் 13-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால், மக்களவைத் தேர்தல் வரும் 18-இல் நடைபெற இருப்பதால், அதுதொடர்பான பணிகளில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் இப்போது ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை இன்னும் வெளியிடப்படாதது, பல ஆண்டுகளாக பணி மாறுதலை எதிர்பார்த்து வெளி மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களை கவலை அடையச் செய்தது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "மக்களவைத் தேர்தல் முடிந்தப் பின் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியாகும். மேலும், ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல் விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. எந்த முறைகேடுகளும் இன்றி இந்த ஆண்டு கலந்தாய்வு நடத்தப்படும்' என்றனர்.

Friday, April 05, 2019

தேர்தல் பணியின்போது உடல் நலம் பாதிக்கப்பட்டால் உயர் சிகிச்சை: தேர்தல் ஆணையம்


தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற ஊழியர்கள் பணிக்காலத்தில் ஏதேனும் உடல் நலக்குறைவை சந்தித்தால் அவர்களுக்கு உயரிய நிலையில் இலவசமாக சிகிச்சை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு தேர்தல் நேரத்தில் ஏற்படுகின்ற உடல்நலக் குறைவுகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விபத்து, இருதய பாதிப்புகள் போன்ற எந்தவிதமான உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையிலோ, அரசு மருத்துவமனையிலோ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சிகிச்சை செலவுகளுக்காக ஒரு நபருக்காக ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்ய ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

50 ஆயிரத்திற்கு மேல் ரூ.1 லட்சம் வரை தலைமை தேர்தல் அதிகாரியிடம் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்னர் செலவு செய்யலாம். ரூ.1 லட்சத்திற்கும் மேல் உள்ள செலவுகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்த பின்னரே செலவு செய்ய இயலும். தேர்தல் பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்தல் தொடர்பான எந்த ஒரு பணிக்காகவும் பணியாளர் வீட்டில் இருந்து புறப்படுவது முதல் வீடு அல்லது அலுவலகத்திற்கு திரும்பும் வரை ஏற்படும் உடல் நலக் குறைவுகளுக்கும், விபத்துகளுக்கும் இந்தச் சலுகையை பெற்றுக்கொள்ள இயலும்.

இந்த தேர்தல் பணியாளர்கள் பட்டியலில் போலீஸார், மத்தியப் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் உள்ளிட்டோரும் அடங்குவர். தேர்தல் மோதலில் பாதிக்கப்பட்டாலோ, உடல் நலக் குறைவு ஏற்பட்டாலோ அவர்களுக்கு மிகச் சிறந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு ஆகும்

Wednesday, April 03, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி


தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும். ஆரம்ப பள்ளி, இடைநிலை மற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) மேற்கொண்டு வருகிறது.

இதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, தாள் 2 என தகுதிக்கேற்ப இரு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்று 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 4 ஆண்டு பி.எட். பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் தாள்-1 தேர்வை எதிர்கொள்ளலாம். இவர்கள் 5-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் வாய்ப்புப் பெறலாம். அதேபோன்று 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தாள்-2 தேர்வு நடத்தப்படுகிறது.

பட்டப் படிப்புடன், 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், பி.எட் பயிற்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம். தற்போது 2019-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு கடந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பத்தின் விலை ரூ.500 ஆகும். குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடையவுள்ளது.

கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நிகழாண்டு அதிகளவில் விண்ணப்பங்கள் விற்பனையாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை போட்டித் தேர்வு நடைபெறும் தேதி, காலிப் பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Tuesday, April 02, 2019

ஜூனில் பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: தனித்தேர்வர்கள் ஏப்.8 முதல் விண்ணப்பிக்கலாம்


தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான துணைத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் வரும் ஏப்.8-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வர்களுக்கு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மார்ச் 2019 மேல்நிலைப் பொதுத்தேர்வுகள் முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர், அந்தத் தேர்வுகளில் தோல்வியுறும் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு அவர்கள் படித்த பள்ளி, தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலம் ஜுன் மாதம் சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பின்னர் வாய்ப்பு வழங்கப்படும்.

விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் வரும் ஏப்.8-ஆம் தேதி முதல் ஏப்.12-ஆம் தேதி வரையிலான நாள்களில் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.

Wednesday, March 27, 2019

ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை: ஏப். 22 முதல் விண்ணப்பிக்கலாம்


பொருளாதார அளவில் நலிவடைந்தோர் தங்களது குழந்தைகளை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு அல்லது எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்க வரும் ஏப். 22-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இது குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான இயக்குநர் எஸ்.கண்ணப்பன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பெற முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இதையடுத்து கடந்த 2009-ஆம் ஆண்டு இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. அனைத்து தனியார் பள்ளிகளிலும் எல்.கே.ஜி. சேர்க்கையில் 25 சதவீத இடஒதுக்கீட்டை ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே அந்தச் சட்டம் ஆகும். அதன்படி தமிழகத்தில் 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் இருந்து, ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வரும் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற ஏப்.22-ஆம் தேதி முதல் மே 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் பெற்றோர் தங்களது இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஐந்து தனியார் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய். ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பம் செய்பவர்கள் குழந்தையின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ் போன்றவற்றை இணைக்க வேண்டும்.

எங்கு விண்ணப்பிக்கலாம்?: இணைய வசதி இல்லாதோர் முதன்மைக் கல்வி அலுவலர், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான ஆய்வாளர் அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால், பெற்றோர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். இந்த விண்ணப்பங்களைப் பள்ளியிலேயே இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம் அல்லது ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள இடங்களில் இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம்.

ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் வெளிப்படையான முறையில் குலுக்கல் நடத்தி மாணவர் தேர்வு செய்யப்படுவர். அந்தந்த பள்ளிகளில் குறிப்பிட்ட நாள் அன்று நடத்திடும் குலுக்கல் நிகழ்வுகளை கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் நியமிக்கும் இதர அரசுத் துறை அதிகாரிகள் கண்காணிப்பர். கடந்த ஆண்டு எந்தெந்தப் பள்ளியில் எவ்வளவு இடங்கள் உள்ளன என்ற விவரங்களை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

'வாரம் ஒருமுறை சாலைபாதுகாப்பு உறுதிமொழி' பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவு


வாரத்தில் ஒருநாள், அனைத்து பள்ளி மாணவர்களும், காலை வழிபாட்டு கூட்டத்தில், சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க வேண்டும்' என, பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.பள்ளி கல்வி இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை:தமிழகத்தில், அதிகமான சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இந்திய தேசிய குற்றவியல் அறிக்கைப்படி, ஆண்டு தோறும், 65 ஆயிரம் பேர், சாலை விபத்தால் உயிரிழக்கின்றனர்.

இதில், 2017ம் ஆண்டில் மட்டும், 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், 569 பேர்.சாலை விதிகளை மீறுவதே, இதற்கு முக்கிய காரணம். எனவே, அனைத்து பள்ளிகளிலும் சாலை பாதுகாப்பு திட்டம், சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடுதல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், சாலை பாதுகாப்பு மன்றம் உருவாக்குதல் உள்ளிட்ட, பல்வேறு திட்டங்களை, பள்ளிக் கல்வித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.இனி, வாரத்தில் ஒரு நாள், அனைத்து பள்ளிகளிலும், காலை வழிபாட்டுக் கூட்டத்தில், விழிப்புணர்வு வாசகங்களை, உறுதிமொழியாக எடுக்க வேண்டும். பள்ளி தலைமையாசிரியர்கள், இதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.'விதிகளை பின்பற்றுவேன்'நான் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவேன்; நான் பழகிய பின்னரே வாகனம் ஓட்டுவேன்; நான் ஓட்டுனர் உரிமம் பெற்ற பிறகே வாகனம் ஓட்டுவேன்; நான் என் பெற்றோருக்கும், ஓட்டுநர்களுக்கும் வாகனம் ஓட்டும் போது, 'சீட் பெல்ட்' அல்லது 'ஹெல்மெட்' அணிந்து கொள்ள வேண்டுமென வற்புறுத்துவேன்.நான், என் ஓட்டுனர், வேகக் கட்டுப்பாட்டை மீறாதவாறு பார்த்துக் கொள்வேன்; ஓட்டுனர், வாகனத்தை ஓட்டும்போது, செல்போன் உபயோகிப்பதை அனுமதிக்க மாட்டேன்; என் ஓட்டுனர் அசதியாக இருக்கும்போது, வாகனம் ஓட்ட அனுமதிக்க மாட்டேன்.நான் ஆட்டோ அல்லது வேனில் பயணித்தால், அளவுக்கு மீறி பயணியரை ஏற்றுவதை அனுமதிக்க மாட்டேன்; நான் பேருந்தின் படிக்கட்டில் பயணிக்க மாட்டேன்

Monday, March 25, 2019

ஆன்லைன் வழியில் தேர்வுகள்: ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு


ஆசிரியர் தகுதித் தேர்வு, முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு, உதவி தொடக்கக் கல்வி அதிகாரி தேர்வு (தற்போது வட்டார கல்வி அதிகாரி தேர்வு), சிறப்பாசிரியர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.

பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் தேர்வுமுறை தற்போது மாற்றப்பட்டுள்ள நிலையில், தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு புதிதாக போட்டித்தேர்வையும் தேர்வு வாரியம் நடத்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அரசு பாலிடெக்னிக் தேர்விலும் அதற்கு முன்பு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்விலும் மதிப்பெண் குளறுபடி மற்றும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், எவ்வித புகாருக்கும் இடம் தராமல் தேர்வுகளை நடத்தவும், தாமதம் இன்றி தேர்வு முடிவுகளை வெளியிடவும் ஆன்லைன்வழி தேர்வுக்கு மாற ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்தது.

முன்பு ஒவ்வொரு தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள், காகித வழியில் பெறப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள கணினி ஆசிரியர் தேர்வு முதல்முதலாக ஆன்லைன்வழியில் நடத்தப்பட உள்ளது. தற்போது இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகள் கூறியது: கணினி ஆசிரியர் தேர்வைத்தொடர்ந்து அனைத்து தேர்வுகளையும் ஆன்லைன்வழியில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. இதற்கான பணிகள் இறுதி நிலையை எட்டியுள்ளன. எனினும் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதார்கள் விண்ணப்பிக்கும் தேர்வுகள் "ஓஎம்ஆர் ஷீட்" முறையிலேயே வழக்கம்போல் நடத்தப்படும்.

காரணம் ‘டெட்’ எனப்படும் தகுதித்தேர்வுக்கு சாதாரணமாக 7 லட்சம் பேர் விண்ணப்பிப்பது வழக்கம். அதுபோன்ற நிலையில், இத்தேர்வை ஆன்லைன்வழியில் நடத்துவது சிரமமாக இருக்கும். பொதுவாக அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு, அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு, உதவி தொடக்கக் கல்வி அதிகாரி (தற்போது வட்டார கல்வி அலுவலர் தேர்வு), மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தேர்வு, முதுநிலை விரிவுரையாளர் தேர்வு, சிறப்பாசிரியர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கு குறைந்தஎண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களே விண்ணப்பிப்பார்கள்.

எனவே, இருக்கின்ற சூழலைப் பார்த்து குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் தேர்வுகளை ஆன்லைன் வழியாகவும், ‘டெட்’ தேர்வு போன்ற அதிக விண்ணப்பதாரர்கள் கலந்துகொள்ளும் தேர்வுகளை வழக்கம்போல் ‘ஓஎம்ஆர் ஷீட்’ முறையிலும் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், ஆன்லைன் தேர்வு முறையால் தேர்வு முடிவுகளை வெகுவிரைவாக ஒருசில வாரங்களிலேயே வெளியிட முடியும் என்றனர்.

Friday, March 22, 2019

ஜூன் 3 முதல் இலவச பாடநூல் விநியோகம்: புதிய பாடத் திட்டப் பணிகள் நிறைவு


பள்ளிக்கல்வியில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து ஜூன் 3- ஆம் தேதி முதல் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பாடநூல்கள் வழங்கப்படவுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பத்தாண்டுகளுக்குப் பிறகு 2018-2019-ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பாடத்திட்டம் மற்றும் உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பேராசிரியர்கள், வல்லுநர்கள், உளவியல் நிபுணர்கள் வழிகாட்டுதலுடன் முதல் கட்டமாக 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

வண்ணமயமான பக்கங்கள், க்யு.ஆர். குறியீடு, யூ- டியூப் இணைப்பு, செல்லிடப்பேசி செயலியில் பதிவிறக்கம் என பல புதிய அம்சங்கள், தொழில்நுட்பங்களோடு அமையப்பெற்ற புதிய பாடநூல்கள் அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து எஞ்சியுள்ள 2, 3, 4, 5, 7, 8, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்ட பணிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கி நடைபெற்று வந்தன. இது குறித்து பாடத்திட்டக் குழுவினர் கூறுகையில், ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பில் 2, 7, 10, 12 ஆகிய நான்கு வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 2019-20-ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து திருத்தப்பட்ட அரசாணையில் அனைத்து வகுப்புகளுக்கும் வரும் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பாடத்திட்டப் பணிகள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் முழு வீச்சில் நடைபெற்று வந்தன. இந்த எட்டு வகுப்புகளுக்கும் பிறமொழிகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடத்துக்கான வடிவமைப்பு முடிவடைந்த பின்னர் அதை பேராசிரியர் கொண்ட குழுவினர் மேலாய்வு செய்துள்ளனர். நீட், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளை கருத்தில் கொண்டு பாட நூல்களில் சிந்தனையைத் தூண்டும் பாடப் பகுதிகளை இணைத்துள்ளோம்.

தற்போது பாடத்திட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. இதையடுத்து பாடநூல்கள் அச்சிடும் பணி விரைவில் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி வரும் கல்வியாண்டில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பாடநூல்கள் வழங்கப்படும் என்றனர்.