இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, February 26, 2018

மாணவர்கள் சந்தேகங்களை தீர்க்க விரைவில், 'ஹெல்ப்லைன்


மாணவர்களுக்கு, புதிய பாடத்திட்டங்களில் ஏற்படும் சந்தேகங்களை போக்க, 24 மணி நேரமும் பதிலளிக்கும் வகையில், '14417' என்ற, ஹெல்ப்லைன் வசதி, விரைவில் துவக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், காராப்பாடியில், அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:

வரும் கல்வியாண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் துவங்கவுள்ளது. பாடத்திட்டத்தில் ஏற்படும் சந்தேகங்களை போக்கிடவும், மேல்நிலை படிப்புக்கு பின், எந்த கல்லுாரிகளில் சேர்வது, தேர்வு முறைகள் உள்ளிட்ட கேள்விகளுக்கு, 24 மணி நேரமும் பதிலளிக்கும் வகையில், '14417' என்ற, 'ஹெல்ப்லைன்' வசதி விரைவில் துவக்கப்படும்.

மாணவர்களின் தற்கொலை எண்ணங்கள் தோன்றாமல் தவிர்க்கவும், 'சிநேகா' என்ற தொண்டு நிறுவனத்துடன், கல்வித்துறை இணைந்து, மாணவர்களின் வீட்டிற்கே சென்று, 'கவுன்சிலிங்' அளிக்கப்படும். புதிய பாடத்திட்டங்களை, மாணவர்களுக்கு கற்பிக்க ஏதுவாக, இரண்டு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, February 25, 2018

தமிழகம் முழுவதும் ஆசிரியரின்றி இயங்கும் ஆங்கிலவழி பள்ளிகள்


தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள ஆங்கில வழி வகுப்புகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் தமிழ், ஆங்கில வழி மாணவர்கள் ஒரே வகுப்பில் அமர்ந்து பயிலும் அவலம் நிலவுவதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் ஏறத்தாழ 30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 9 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன.

வேலூர் மாவட்டத்தில் 5760 தொடக்கப்பள்ளிகளும், 450 நடுநிலைப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவை அனைத்துமே அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகள்தான். இவற்றில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு வகுப்பில் 35 மாணவர்களுக்கு மேல் படித்து வந்தனர். இன்று, ஒரு வகுப்புக்கு 80 பேர் வீதம் படித்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் சென்னை, ஈரோடு, நாகர்கோவில் உட்பட குறிப்பிட்ட நகரங்களை தவிர்த்த பிற நகரங்களில் ஒரு வகுப்புக்கு 10 பேர் என்பதே அதிகபட்சம்தான். இதனால் இத்தகைய பள்ளிகள் இன்று ஓராசிரியர் அல்லது ஈராசிரியர் பள்ளிகளாக தரம் குறைந்துள்ளன.

இந்நிலையில்தான் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க ஆங்கிலவழிக்கல்வியை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக கடந்த 2013ம் ஆண்டு மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 10 தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் நிதியுதவிப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.

இதில் கிராமப்புறங்களில் உள்ள ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளும் அடக்கம். ஆனால், இதுவரை ஆங்கிலவழிக்கல்விக்கு என்று தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து, தமிழ் மற்றும் ஆங்கிலவழிக்கல்வி மாணவர்கள் ஒரே வகுப்பில் அமர்ந்து தமிழ் வழியில் நடத்தப்படும் பாடங்களை கற்கும் நிலை உள்ளது. எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஆங்கிலவழி கற்பித்தல் திறன் கொண்ட ஆசிரியர்களை தனியாக நியமிக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஜாக்டோ - ஜியோ அமைப்பு போராட்டம் ஒத்திவைப்பு


ஜாக்டோ - ஜியோ சார்பில், நான்கு நாட்களாக நடந்த மறியல் போராட்டம், முடிவுக்கு வந்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், பிப்., 21 முதல், தொடர் மறியல் போராட்டம் நடந்தது. சென்னையில், சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன், தினமும் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் மறியல் நடத்தினர்.

அவர்களை போலீசார், காலையில் கைது செய்து, மாலையில் விடுவித்து வந்தனர்.நேற்று முன்தினம், பிரதமர் மோடி, சென்னையில் பங்கேற்ற அரசு விழா நடந்த இடம் அருகே, நான்காவது நாளாக போராட்டம் நடத்தினர். இதனால், போலீசார், அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், போலீஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது, முதல்வருடன் பேச்சு நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.இதையடுத்து, நேற்று முன்தினத்துடன் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வு முடிந்தபின், கோடை விடுமுறையில், மே, 8ல், கோட்டையை நோக்கி பேரணி செல்ல, ஜாக்டோ - ஜியோ முடிவு செய்துள்ளது. இதற்காக, மார்ச், 24ல் மாவட்ட வாரியாக, ஆயத்த பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

தேர்வு அறையில் மின் விசிறி கட்டாயம் : பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு


பொது தேர்வுக்கான, தேர்வு அறைகளில், மின்விசிறி மற்றும், கடிகாரம் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்' என, பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பாடத்திட்டத்தில், மார்ச், 1ல், பிளஸ் 2; மார்ச், 7ல், பிளஸ் 1; மார்ச், 16ல், 10ம் வகுப்புக்கும், பொது தேர்வுகள் துவங்க உள்ளன.

தேர்வின் போது, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, தமிழகம் முழுவதும், 30 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன், ஒரு லட்சம் ஆசிரியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும்படி, பள்ளிகளை தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

* உள்ளூர் மின் வாரிய அதிகாரிகளுடன் பேசி, அனைத்து தேர்வு மையங்களுக்கும், தடையில்லா மின் வசதி பெற வேண்டும் * அனைத்து தேர்வறைகளின் முன்புறமும், குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஓட்டை, உடைசல் பெஞ்ச்கள் மற்றும் எழுத்து பலகைகளை மாற்றி, மாணவர்களுக்கு வசதியான பெஞ்ச்கள் மற்றும் எழுத்து பலகைகள் வைக்க வேண்டும் * தேர்வின் போது, மாணவர்களின் காலணிகள், உடைமைகளை வைக்க, தனி அறைகளை ஒதுக்க வேண்டும். * அனைத்து தேர்வறைகளிலும், இயங்கும் நிலையில், மின் விசிறி மற்றும் சுவர் கடிகாரங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து


தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், பொது தேர்வுக்கான, 'ப்ளூ பிரிண்ட்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு வரை, 10 ஆண்டுகளுக்கு மேலாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை; பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 13 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. கல்வியாளர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன் தலைமையிலான, கலைத்திட்டக்குழு, புதிய பாடத்திட்டத்தை தயாரித்துள்ளது. முதற்கட்டமாக, வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது. இதற்கான புத்தகங்கள் அச்சிடும் பணி, ஒரு வாரத்திற்கு முன் துவங்கின. புதிய பாடத்திட்டத்தை, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு இணையாக, பேராசிரியர் குழுவினர் தயாரித்துள்ளனர்.

மாணவர்கள், மனப்பாட கல்வியை கைவிட்டு, பாடங்களை புரிந்து படிக்க வேண்டும்; நுழைவு தேர்வை பயமின்றி எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்த பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.இதற்காக, பழைய பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை அமலில் இருந்த, 'ப்ளூ பிரிண்ட்' முறை, புதிய பாடத்திட்டத்தில், ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சிந்தனைத்திறனை சோதிக்கும் வினா வகைகள், மாணவர்களது புரிந்து கொள்ளும் திறனை அதிகரிக்கும் வகையிலான அம்சங்கள், புதிய பாடத்திட்ட புத்தகங்களில் இடம் பெற்றுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Saturday, February 24, 2018

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு ஆசிரியர் நியமனம் இல்லை


தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வித் திட்டத்திற்கு, ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாததால் மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், 2013ம் ஆண்டு ஆங்கிலவழி செயல்வழிக்கற்றல் திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 10 தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி பாடத்திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்ததால், மாணவர் சேர்க்கை அதிகரிக்க தொடங்கியது. ஆனால் இதற்கென தனியாக ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லை. பள்ளிகளில் பிற வகுப்பெடுக்கும் தமிழ்வழி கல்வி கற்கும் மாணவர்களின் ஆசிரியர்களே ஆங்கில வகுப்பும் எடுத்தனர். கடந்த 2013ம் ஆண்டில் ஆங்கில வழிக்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் இந்த கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு வந்துவிட்டனர்.

இதுபோல் மற்ற கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகள் வந்துவிட்டனர். ஆனால் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க போதிய ஆசிரியர்கள் மட்டும் இல்லை.சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், ‘‘கூடுதல் பணிச்சுமையால், ஆசிரியர்கள் தமிழ்வழி கல்வி வகுப்பறையிலேயே, ஆங்கிலவழி கல்வி மாணவர்களுக்கும் பாடங்களை கற்பித்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் ஆங்கிலவழி கல்வி பாடங்களை கற்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி என்பது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே உள்ளது,’’ என்றார்.

அனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்கம்: பள்ளிக்கல்வி இயக்குநர் வலியுறுத்தல்


தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்க (ஜேஆர்சி) அமைப்பு கட்டாயமாகச் செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் வலியுறுத்தினார். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் "ஜுனியர் ரெட்கிராஸ்' அமைப்பின் கல்வி மாவட்ட அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்களுக்கான மாநில மாநாடு சென்னை எழும்பூரில் உள்ள இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு மாநில கிளை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு மாநில கிளை தலைவர் ஹரீஸ் எல்.மேத்தா தலைமை வகித்தார். மாநாட்டை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் தொடங்கி வைத்துப் பேசியது:- சமூகத்தைப் பாதுகாக்கவும், பிறருக்கு உதவும் நோக்கம் வேண்டும் என்ற கொள்கையோடும் செயல்பட்டு வருகிறது இளஞ்செஞ்சிலுவை சங்கம். மாணவர்களை நல்வழிபடுத்துவதில் இந்தச் சங்கத்தின் பணி அளப்பரியது. ஆசிரியர்கள் இதில் முக்கிய பொறுப்பேற்று செயல்பட வேண்டும். பள்ளிகளில் செயல்பட்டு வரும் ஜேஆர்சி அமைப்பு மாணவர்களுக்கு முறையாகப் பயிற்சி அளிக்க வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும் இந்த அமைப்பை கட்டாயமாக ஏற்படுத்த வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கல்வி இணைச் செயல்பாடுகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான இயக்குநர் எஸ்.கண்ணப்பன் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் ஜே.ஆர்.சி. அமைப்பை தொடங்குவது குறித்து தொடர்புடைய கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றார்

Friday, February 23, 2018

பிளஸ் 1 வகுப்பு அகமதிப்பீடு: திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு


பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண் குறித்த திருத்தப்பட்ட அரசு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இம்மாணவர்களுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவது குறித்து ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்டது. அதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தத் திருத்தங்கள்படி, மாணவர் வருகைப் பதிவேடு, கல்வி இணைச் செயல்பாடுகள் போன்றவற்றில் வழங்கப்பட்டு வந்த அதிக மதிப்பெண்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: அகமதிப்பீட்டுக்கு தொழிற்கல்வி செய்முறை தவிர்த்து 10 மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம்: மாணவர் வருகைப் பதிவேடு - 2 மதிப்பெண்கள்; 80 சதவீதத்துக்கு மேல் வருகைக்கு 2 மதிப்பெண்கள், 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை 1மதிப்பெண் வழங்கப்படும். உள்நிலைத் தேர்வுகள் - 4 மதிப்பெண்; சிறந்த ஏதேனும் மூன்று தேர்வுகளின் சராசரி மதிப்பெண் நான்கு மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும்.

ஒப்படைவு, செயல்திட்டம், களப்பயணம் - 2 மதிப்பெண்; இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடலாம். அவற்றுக்கு உரிய பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும். கல்வி இணைச் செயல்பாடுகள் -2 மதிப்பெண்; மரம் வளர்த்தல், இலக்கிய மன்றம், தேசிய மாணவர் படை, விளையாட்டுச் செயல்பாடுகள் என ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் 33 செயல்பாடுகளில் ஏதேனும் மூன்று செயல்பாடுகளில் பங்கேற்றுள்ளதை கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்கலாம். தொழிற்கல்வி செய்முறை பாடத்துக்கான அக மதிப்பீடு: மொத்தம் 25 மதிப்பெண்கள் மாணவர் வருகைப் பதிவு - 5 மதிப்பெண்கள்; 80 சதவீதத்துக்கு மேல் வருகை- 5 மதிப்பெண்கள்; 75 முதல் 80 சதவீதம் வரை- 3 மதிப்பெண்கள். உள்நிலைத் தேர்வுகள்- 10 மதிப்பெண்கள்; சிறந்த ஏதேனும் மூன்று தேர்வுகளின் சராசரி மதிப்பெண் 10 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும்.

ஒப்படைவு, செயல்திட்டம், களப்பயணம்- 5 மதிப்பெண்கள்; இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடலாம். அவற்றுக்கு உரிய பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும். கல்வி இணைச் செயல்பாடுகள்- 5 மதிப்பெண்கள்; ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து ஏதேனும் மூன்று மட்டும். அவற்றுக்கு உரிய பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்புகள் தொடங்கி உள்ள தமிழக அரசு ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கணினி வழியில் கல்வி கற்பிக்கும் பகையில் ‘ஸ்மார்ட்’ வகுப்புகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. இதற்காக பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்துடன் பள்ளி கல்வித்துறை ஏற்படுத்தியுள்ளது.

புதிய பாடத்திட்டத்தை வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தும் நிலையில், 2 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ‘365’ என்ற மென்பொருளை ‘மைக்ரோ சாப்ட்’ நிறுவனம் இலவசமாக தரவுள்ளது.

‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம் கரூர், கன்னியாகுமரி, திருப்பூர் வடக்கு, ஒசூர், கடலூர் மாவட்டங்களில் தலா ஒரு பள்ளிக்கூடத்தையும், சென்னையில் எழும்பூர் மாகாண மகளிர் பள்ளி மற்றும் லேடி வெலிங்டன் பள்ளி உள்ளிட்ட 7 பள்ளிகளை தத்தெடுத்துள்ளது.

இந்த பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு அந்த நிறுவனம் சார்பில் கணினி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக ‘கிளவ்ட் கம்ப்யூட்டிங்’ என்ற தொழில்நுட்பத்தை பள்ளிகளில் பயன்படுத்த உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆன்லைன் கலந்தாய்வு

வருகிற கல்வி ஆண்டு முதல் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும்

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2018-2019-ம் கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஏற்கனவே அறிவித்தபடி ஆன்லைன் கலந்தாய்வு முறையில் மேற்கொள்ளப்பட உள்ளது. என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் கலந்தாய்வில் கலந்துகொண்டு தங்களுக்கு பிடித்த கல்லூரிகளை தேர்வு செய்துகொள்ளலாம்.

வீட்டில் இணையதள வசதி இல்லாத மாணவர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆன்லைன் என்ஜினீயரிங் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்கள் அனைத்தும் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் என அரசு கல்வி நிறுவனங்களில் மட்டுமே தொடங்கப்படும்.

சிறிய மாவட்டமாக இருந்தால் ஒரு என்ஜினீயரிங் சேர்க்கை உதவி மையமும், பெரிய மாவட்டமாக இருந்தால் 2 உதவி மையங்களும் தொடங்கப்படும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவைப்பட்டால் கூடுதல் உதவி மையங்கள் அமைக்கப்படும். எக்காரணத்தை கொண்டும் தனியார் கல்லூரிகளில் உதவி மையங்கள் தொடங்கப்படாது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்தவுடன் ஆன்லைன் கலந்தாய்வுக்கான தேதி விவரங்கள் அறிவிக்கப்படும். உதவி மையங்கள் என்ஜினீயரிங் சேர்க்கைக்கான காலஅட்டவணை வெளியிட்ட பின்னர் செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆன்லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு நடைபெறுவது எப்படி? என்பது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விண்ணப்பதாரர்கள் என்ஜினீயரிங் சேர்க்கைக்குரிய இணையதளத்தின் வாயிலாக விண்ணப்ப பதிவிற்கான கட்டணத்தை (ரூ.500, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ரூ.250) ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்பத்தை எங்கிருந்தும் பதிவு செய்யலாம். என்ஜினீயரிங் சேர்க்கை உதவி மையங்கள் மூலமாகவும் பதிவு செய்யலாம்.

தகுதி பட்டியல் தயார் செய்யும்போது ஏற்படும் சமநிலையை தவிர்க்க சமவாய்ப்பு எண் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒதுக்கப்படும். விண்ணப்ப படிவம், அசல் சான்றிதழ்கள் மற்றும் அசல் சான்றிதழ்களின் நகல்களுடன் என்ஜினீயரிங் சேர்க்கை உதவி மையத்தை நேரடியாக அணுகவேண்டும். அங்கு தகவல்கள் சரிபார்க்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பப்படி உதவி மையத்தை தேர்வு செய்துகொள்ளலாம்.

தகுதிபெற்றவர்களின் தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்பின் விண்ணப்பதாரர்கள் தங்களது குறைகளை சரிசெய்ய ஒரு வாரம் காலஅவகாசம் ஒதுக்கப்படும். அந்த சமயத்தில் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை செயலாளர் அலுவலகத்தை அணுகி குறைகளை சரி செய்துகொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் தகுதி மதிப்பெண்களின்படி பல குழுக்களாக பிரிக்கப்பட்டு கலந்தாய்வு சுற்றுகளில் அனுமதிக்கப்படுவார்கள். கலந்தாய்வுக்கான ரூ.5 ஆயிரம் (ஆதிதிராவிடர்-பழங்குடியினர் ரூ.1000) முன்வைப்பு தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தியபின் தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை வரிசைப்படி பதிவு செய்யலாம். இதற்காக 3 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தற்காலிக இடஒதுக்கீடு விண்ணப்பதாரர்கள் அளித்த விருப்ப வரிசை மற்றும் தரவரிசைப்படி ஒதுக்கப்படும். விண்ணப்பதாரர்கள் இதை தங்களின் ‘லாகின்’ வாயிலாக அடுத்த நாள் பார்த்துக்கொள்ளலாம். விருப்ப வரிசை மற்றும் தரவரிசை செய்யப்பட்ட இடஒதுக்கீட்டை 2 நாட்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் அல்லது கொடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு விருப்பத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

ஒரு சுற்றில் விண்ணப்பதாரரின் விருப்ப வரிசை மற்றும் தரவரிசைப்படி இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும். இடஒதுக்கீடு பெறாதவர்கள் அடுத்த சுற்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படும். மற்றவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப்பிரிவில் கொடுக்கப்பட்ட காலஅவகாசத்திற்குள் சேர்ந்துவிட வேண்டும்.

விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், தொழில்துறை படிப்பு, தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பால் நிரப்பப்படாத இடஒதுக்கீட்டை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக நடத்தப்படும் கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வு ஆகியவை நேர்முக கலந்தாய்வாக நடைபெறும்.

கலந்தாய்வின் ஒவ்வொரு கட்டமும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மற்றும் மின்னஞ்சல் அறிவிப்புகள் (இ-மெயில் அலெர்ட்) விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட இணையதள முகவரிக்கு அனுப்பப்படும்.

என்ஜினீயரிங் சேர்க்கை உதவி மையங்களில் கணினியை விண்ணப்பதாரர்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். கலந்தாய்வுக்கான விண்ணப்பம், பதிவு செய்தல், அசல் சான்றிதழ் சரிபார்த்தல், கல்லூரி தேர்ந்தெடுத்தல் மற்றும் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை பெறுதல் போன்ற வசதிகளை இந்த மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம்.