இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, April 24, 2017

அனைத்து நூலகங்களிலும் ஆங்கில புத்தகம்


போட்டித் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில், கிளை நுாலகம் உட்பட அனைத்து நுாலகங்களுக்கும், ஆங்கிலப் புத்தகங்கள் வாங்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை செயலராக உதயசந்திரன் பொறுப்பேற்றது முதல், பல்வேறு சீரமைப்பு பணிகள் துவங்கி உள்ளன. இதற்கு, அமைச்சர் செங்கோட்டையனும் பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

அதனால், அண்ணா நுாலகம் மறு சீரமைப்பு, கிளை நுாலகங்கள் புதுப்பிப்பு, ஆசிரியர்கள் இடமாற்றத்தில் விதிகள் மாற்றம், ஆர்.டி.இ., சட்டத்தில், இலவச மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மை என, பல புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வரிசையில், 'அனைத்து நுாலகங்களுக்கும், ஆங்கிலப் புத்தகங்களும் கட்டாயம் வாங்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி மற்றும் பொது நுாலகத்துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:நுாலகங்களில், புத்தக தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிளை நுாலகங்கள் உட்பட அனைத்து நுாலகங்களிலும், புத்தகங்களை பராமரிக்கவும், புதிய புத்தகங்கள் வாங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 32 மைய நுாலகங்கள், 241 முழுநேர நுாலகங்கள், 320 கிளை நுாலகங்கள் ஆகியவற்றில், கூடுதலாக ஆங்கிலப் புத்தகங்கள், ஆங்கில வார, மாத இதழ்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது, போட்டித் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு உட்பட, பல தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பலனளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

ஊக்க ஊதியம்: அமலாகுமா அரசாணை?


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள, அரசின் சார்பில், ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே, 2005க்கு முன், ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்பட்டது. அதற்குப்பின் சேர்ந்தவர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், சம்பளத்தில், 6 சதவீதம் வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்த முரண்பாட்டால், 2005க்கு முன் சேர்ந்த சீனியர் ஆசிரியர்கள், 2005க்கு பின் பணியில் சேர்ந்தவர்களை விட, குறைந்த ஊக்க ஊதியம் பெறுகின்றனர். இந்த முரண்பாட்டைப் போக்க, 2009 ஜூன், 1ல், தமிழக அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.ஆசிரியர்களின் உயர்கல்வி ஊக்க ஊதியத்தின் முரண்பாடுகளை, தலைமை ஆசிரியர்களே சரிசெய்து, அதற்கு கல்வித் துறையில் அனுமதி பெறலாம் என, கூறப்பட்டது. ஆனால், இந்த உத்தரவு செயலுக்கு வரவில்லை.

இதனால், அரசாணை பிறப்பித்து, எட்டு ஆண்டுகள் தாண்டிய பின்னும், ஊக்க ஊதியக் குறைபாடு தீரவில்லை. மாநிலம் முழுவதும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிளஸ் 2 மதிப்பெண் கட்டாயம் : 'நீட்' தேர்வு குறித்து விளக்கம்


'எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வு தேர்ச்சியுடன், பிளஸ் 2 தேர்வில், 50 சதவீத மதிப்பெண் கட்டாயம் எடுக்க வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், வரும் கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' நுழைவுத்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு, மே, 7ல் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு, 11.37 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வு மதிப்பெண் மட்டும் போதுமா; பிளஸ் 2 மதிப்பெண் தேவையா என, பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அதற்கு, சி.பி.எஸ்.இ., அளித்துள்ள பதில்: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, பிளஸ் 2வில், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பவியலான, 'பயோ டெக்னாலஜி' மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில், குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், தலித், பழங்குடியின மாணவர்கள், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் மட்டும், 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்கலாம். பொது பிரிவு மாற்றுத்திறனாளி மாணவர்கள், 45 சதவீதம், மற்ற மாற்றுத் திறனாளிகள், 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.

இந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், நீட் தேர்வு தகுதி மதிப்பெண் பட்டியலில், இடம் பெற்றிருந்தால் மட்டுமே, மருத்துவம் படிக்கும் தகுதி பெறுகின்றனர். இவ்வாறு சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

Sunday, April 23, 2017

Transfer form new 2017-18

Click below

https://app.box.com/s/55z03j9aqskuu1o5jh6p1qcme3g8cew2

தொடக்கக்கல்வி இயக்குநரின் நான்காவது சுற்றறிக்கை

பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு 'விஷுவல்' பாடப்புத்தகம்!


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, 'வீடியோ' பதிவுடன் கூடிய, பாடங்கள் தயாரிக்கப்படுகின்றன. மாணவர்கள், பாடங்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், 'விஷுவல்' பாடப்புத்தகம் உருவாக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. ஏற்கனவே, முப்பரிமாண முறையில், பாடங்களை படத்துடன் படிக்கும், 'மொபைல் ஆப்' வசதியை, பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்தது.

இந்நிலையில், அனைத்து பாடங்களையும், வீடியோ வடிவில் கொண்டு வர, பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. மாவட்ட வாரியாக, பாடத்தில் ஆர்வமும், அதை வீடியோவாக மாற்றும் திறனும் உடைய ஆசிரியர்களின் விபரங்களை அனுப்பி வைக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இது குறித்து, மாநில கல்வியியல் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: மெல்ல கற்கும் மாணவர்களுக்கு, பாடப்புத்தகங்களை படித்து, அதை புரிந்து தேர்வு எழுதுவதில் சிரமம் உள்ளது; ஆசிரியர்களும் அனைத்து பாடங்களையும் நடத்துவதில்லை; நேரமின்மையால், சில பாடங்களை விட்டு விடுகின்றனர்.

அப்படிப்பட்ட நேரத்தில், மாணவர்கள், வீடியோ காட்சியுடன் பாடத்தை கற்கலாம். அத்தகைய மாணவர்களுக்கான, சிறப்பு புத்தகமாக, இந்த வீடியோ பதிவுகள் இருக்கும். கோடை விடுமுறைக்கு பின், வீடியோ தயாரிப்பு பணி துவங்கி, அடுத்த கல்வியாண்டுக்குள் சோதனை பாடத்திட்டம் தயாராகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, April 22, 2017

NEET exam hall ticket

Click below

http://164.100.108.61/cbseneet/Online/AdmitCardAuth.aspx

தமிழகத்தில் வரும் 25ம் தேதி முதல் 5 லட்சம் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்


அரசு ஊழியர்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.25ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். ஆளுங்கட்சியான அதிமுக உடைந்து குழப்பம் நிலவி வரும் நிலையில் அரசு ஊழியர் சங்கங்களின் அறிவிப்பால் அரசு நிர்வாகம் மொத்தமாக முடங்கும் நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் 5 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 3.25 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு நேரடி பேச்சுவார்த்தையின் மூலம் ஊதிய மாற்றம் செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 1.1.2016 முதல் 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியத்தை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி, அவுட்சோர்சிங் ஒப்பந்தக் கூலி நியமனங்களை ஒழித்து காலியிடங்களில் முறையான நியமனம் செய்ய வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.25 முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரசு ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இதற்காக 64 துறை வாரியான சங்கங்கள் இணைந்த அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு கடந்த பிப்.20ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம், மார்ச் 15ல் மாவட்ட தலைநகரங்களில் பேரணி, ஏப்.8ல் அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு, ஏப்.15ல் திருச்சியில் மாநில அளவிலான வேலை நிறுத்த ஆயத்த மாநாடு ஆகியவற்றை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நடத்தியுள்ளது. ஏப்.17ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மத்தியில் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நெல்லை மாவட்ட செயலாளர் துரைசிங் கூறுகையில், ஏப்.25ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறையிடம் வேலைநிறுத்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டு மொத்த அரசுத் துறைகளும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் அரசு அலுவலகங்கள் இயங்காது என்றார். தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுக இரு அணிகளாக உடைந்துள்ளது. அந்த கட்சிக்குள் நடக்கும் குழப்பத்தால், அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தமிழக அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

* அரசு ஊழியர்கள் கடந்த 2003ம் ஆண்டு தமிழக அரசுக்கு எதிராக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* அப்போது 1.75 லட்சம் அரசு ஊழியர்களை அப்போதைய முதல்வராக இருந்த ெஜயலலிதா டிஸ்மிஸ் செய்தார்.

* எஸ்மா, டெஸ்மா போன்ற சட்டங்கள் அரசு ஊழியர்கள் மீது பாய்ந்தது.

* பின்னர் கடந்த ஆண்டு 2016ல் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 10 நாட்கள் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் செய்தனர்.

தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை: அரசு இ-சேவை மையம் மூலம் பெற்றோர் விண்ணப்பிக்கலாம்


கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் விண்ணப்பிக்க விரும்புவோர், அரசு இ-சேவை (இணைய சேவை) மையங்களை நாடலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான கட்டணத்தைச் செலுத்தி உரிய முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் அளவுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும்போது, ஆன்-லைன் முறை பின்பற்றப்படுகிறது. என்னென்ன இணைப்பு: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது மாணவரின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், பெற்றோரின் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் ஆவணம் 400 கே.பி.,க்கு மிகாமல் இருப்பது அவசியம்.

இதனை கிராமப்புறங்களில் வசிக்கக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் வீட்டில் இருந்தபடியே செய்வது சிரமம். இந்த சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அரசு இ-சேவை மையங்களின் மூலமும் விண்ணப்பிக்கும் நடைமுறையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. என்ன செய்ய வேண்டும்: அரசு இ-சேவை மையத்துக்குச் சென்று விண்ணப்பிப்பதற்கு முன்பாக, நாம் தேர்ந்தெடுத்துள்ள பள்ளிகளின் பட்டியலை வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும்போது ஐந்து பள்ளிகள் வரை விருப்பம் தெரிவிக்கலாம். எனவே, இணைய சேவை மையத்துக்குச் சென்று பள்ளிகளைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக, வீட்டிலேயே பள்ளிகளைத் தேர்வு செய்து பட்டியலிடுவது சிரமத்தைத் தவிர்க்கும்.

இ-சேவை மையங்களுக்கு தேவையான சான்றிதழ்களை எடுத்துச் சென்றால் அங்கேயே ஸ்கேன் செய்து, நிர்ணயிக்கப்பட்ட அளவில் அதனை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும், அரசு இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கும்போது நாம் சரியான முறையில் தகவல்களைத் தெரிவித்து அவை உரிய வகையில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்த பிறகே விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும்.

தொடக்க கல்வி அலுவலரின் இரண்டாவது சுற்றரிக்கை


மாறுதல் படிவம் PDF

Click below

https://app.box.com/s/yx8ngny8kwgpg388jb9aapdq8gahn6rv

தொடக்கக் கல்வி இயக்ககம் -2017-2018 ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய /நகராட்சி /மாநகராட்சி /அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் /பட்டதாரி /இடைநிலை /உடற்கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் புதிய விண்ணப்பம்



Friday, April 21, 2017

புதிய குடும்ப அட்டைக்கு இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு


தமிழக அரசு இணைய சேவை மையங்கள் மூலம் புதிய குடும்ப அட்டை பெற வரும் 24-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், கிராம வறுமை ஒழிப்புக் குழுக்கள் மூலம் இப்போது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அரசு இணைய சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இச்சேவை மையங்கள் மூலம் வருமானம், ஜாதி, இருப்பிடம், இறப்புச் சான்றுகள் என பல்வேறு வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன.

இச்சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய மின் கட்டணம், பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, சென்னை பெருநகர குடிநீர் வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய குடிநீர் வரி ஆகியவற்றைச் செலுத்தவும் வழி செய்யப்பட்டுள்ளது. வரும் 24 முதல் சேவை: அரசு இணைய சேவை மையங்கள் மூலம் மாநில மற்றும் மத்திய அரசின் பல்வேறு சேவைகளைப் பொது மக்கள் தங்களது இல்லங்களின் அருகிலேயே பெற்று வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, வரும் 24-ஆம் தேதி முதல் அரசு இணைய சேவை மையங்கள் வாயிலாக புதிதாக குடும்ப அட்டை பெறவும் முகவரி மாற்றம், பெயர் நீக்கம், செல்லிடப்பேசி எண் மாற்றம் போன்ற சேவைகள் வழங்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.

டெட்' தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகள்!


'டெட் தேர்வில், வினாத்தாள் வெளியாகாமல், மாணவர்கள், 'காப்பி' அடிக்காமல், கண்காணிக்க வேண்டும்' என, இயக்குனர்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும், ஏப்., 29, 30ம் தேதிகளில், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. ஏப்., 29ல், 2.37 லட்சம் பேர்; 30ல், ஐந்து லட்சம் பேர் எழுதுகின்றனர். இதற்காக, தமிழகம் முழுவதும், 1,861 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களுக்கு, வினாத்தாள் கட்டுகள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன; துப்பாக்கி ஏந்திய போலீசாரும் நிறுத்தப்பட உள்ளனர். பள்ளிக்கல்வி செயலர் உதயச்சந்திரன் உத்தரவுப்படி, பள்ளிக்கல்வி இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன், டி.ஆர்.பி., என்ற, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் காகர்லா உஷா, நேற்று கூட்டம் நடத்தினார்.

அதில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்:

● டெட் தேர்வில் எந்த குளறு படியும்
இல்லாமல், தேர்வை நடத்த வேண்டும்

● யாரும் காப்பி அடிக்காமல், கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்

● வினாத்தாள், 'லீக்' ஆகாமல், தேர்வு துவங்கும் வரை பாதுகாப்பு வழங்க வேண்டும்

● தேர்வு அறைகளில், போதிய அளவுக்கு, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

● அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு என்றால், தனியார் பள்ளி ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும்

● தேர்வு மையங்களில் கடிகாரம், குடிநீர், மின் வசதி, மின் விசிறி வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
● தாமதமாக வரும் தேர்வர்களை, அறைக்குள் அனுமதிக்கக் கூடாது
● பறக்கும் படை அமைத்து, தேர்வு நாளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். பொதுத் தேர்வு போல், இந்த தேர்வை நடத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

Thursday, April 20, 2017

இன்ஜினியரிங் கவுன்சலிங் விண்ணப்பிப்பதற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை


இன்ஜினியரிங் கவுன்சலிங் விண்ணப்பிப்பதற்கு ஆதார் எண் கட்டாயமல்ல என அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.இன்ஜினியரிங் கவுன்சலிங் 2017க்கான அறிவிக்கை ஏப்ரல் 30ம் தேதி வெளியிடப்பட உள்ளது. மே 1ம் தேதி முதல் இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஜூன் 27ம் தேதி கவுன்சலிங்கை தொடங்க அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த கவுன்சலிங்கில் பங்கேற்க ஆதார் எண் கட்டாயமா என அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:கவுன்சலிங்கில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் தங்களின் சாதிச்சான்றிதழ், குடும்பத்தில் முதல்பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்றிதழ், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மாணவர்கள் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பிற மாநிலங்களில் படித்திருந்தால் அதற்கான இருப்பிடச் சான்றிதழ், ஏஐசிடிஇ உள்பட பிற உதவித்தொகை கோரும் மாணவர்கள் வருமான சான்றிதழை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

மே 1ம் தேதி முதல் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பித்து தனித்துவ எண் (யுசர் ஐடி), கடவுச் சொல் (பாஸ்வேர்ட்) பெறலாம். அதன்பின், பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளிவந்ததும் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழின் நகல்களை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கவுன்சலிங் விண்ணப்பிக்கவோ, பங்கேற்கவோ ஆதார் எண் கட்டாயமல்ல. இவ்வாறு அவர்கள் கூறினர்.

விடுபட்ட வாக்காளர்களுக்காக ஜூலை 1ல் சிறப்பு திருத்தப் பணி


கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் சேராமல் விடுபட்டோருக்காக, சிறப்பு சுருக்க திருத்தப் பணி ஜூலை 1ல் துவங்குகிறது. கடந்த ஆண்டு செப்.1 முதல் செப்.30 வரை வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணி நடந்தது. வாக்காளர்களின் இறுதி பட்டியல் ௨௦௧௭ ஜன.5 ல் வெளியிடப்பட்டது.

இதில், 18 மற்றும் 19 வயது பூர்த்தி அடைந்தோரில் பலர் சேர்க்கப்படாமல் விடு பட்டது தெரியவந்தது.இதனால் விடுபட்டோர்களுக்காக மீண்டும் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணியை ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும், வாக்குச்சாவடிகளில் 2 நாட்கள், சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன. 2017 ஜன.1ல் 18 மற்றும் 19 வயது பூர்த்தியடைந்தோர் வாக்காளர்களாக சேரலாம். மற்றவர்கள் செப்டம்பர் (அ) அக்டோபரில் நடக்கும் திருத்தப் பணியின்போது சேர்ந்து கொள்ளலாம்

உதவி தொடக்க கல்வி அலுவலர் 5 தேர்வுகளில் தேர்ச்சி வேண்டும்


'ஐந்து துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே, உதவி தொடக்க கல்வி அலுவலர் பணிமாறுதல் பெற முடியும்' என, தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் 'சீனியாரிட்டி' படி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணி மாறுதல் வழங்கப்படுகிறது.

தற்போது 2017 க்கான உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான மாநில சீனியாரிட்டி பட்டியலை கல்வித்துறை தயாரித்து வருகிறது. இதில், 2010 டிச.31 வரை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தோர் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான பரிந்துரைகளை அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் இயக்குனரகத்திற்கு அனுப்ப உள்ளனர். பட்டியலில் இடம் பெறுவோர் 2016 டிச.31க்குள் பள்ளி துணை ஆய்வாளர், சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு, மாவட்ட அலுவலக நடைமுறை உள்ளிட்ட 5 துறை மற்றும் சிறப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அன்றைய தேதியில் 57 வயது பூர்த்தி அடைந்தோராக இருக்க கூடாது. குற்றவழக்குகள், ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்க கூடாது என தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த 5 தேர்வுகளில் தேர்ச்சி பெறாதோரை பரிந்துரை செய்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

வியாபாரம் செய்தால் பள்ளி அங்கீகாரம் ரத்து


பாடம் கற்றுத் தருவதை விட்டு, புத்தகம், சீருடை, புத்தக பை விற்பனையில் ஈடுபட்டால், பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில், பாட புத்தகம், லேப் - டாப் மற்றும் சீருடை உள்ளிட்டவை, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

ஆனால், தனியார் பள்ளிகளில், இந்த பொருட்களை, பெற்றோர் விலை கொடுத்து வாங்க வேண்டும். இதில், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், மாணவர்களுக்கான புத்தகங்கள், நோட்டுகள், சீருடை, 'ஷூ' போன்றவற்றை விலைக்கு விற்கின்றன. இதில், ஒவ்வொரு பள்ளியும், பல லட்சம் லாபம் பார்ப்பதாக, பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின், அங்கீகார பிரிவு துணை செயலர், ஸ்ரீனிவாசன் வெளியிட்ட சுற்றறிக்கை: புத்தகம், எழுதுப் பொருட்கள், சீருடை, ஷூ, புத்தகப்பை போன்றவற்றை விற்கும், வணிக ரீதியிலான நடவடிக்கைகளில், பள்ளிகள் ஈடுபடக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், பல பள்ளிகள், வியாபாரத்தில் ஈடுபடுவதாக, தொடர்ந்து புகார்கள் வருகின்றன. பள்ளிகள், தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களுடன் மறைமுக ஒப்பந்தம் செய்து, வணிக பணிகளில் ஈடுபடுகின்றன. எனவே, மீண்டும் எச்சரிக்கிறோம்.

வணிக செயல்பாடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தால், அந்த பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., அங்கீகார விதிகளின் படி, அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.