இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, April 02, 2017

வங்கி கணக்கில் இருப்புத்தொகை கணக்கீடு

வங்கிக் கணக்கில் தினமும் ரூ.5000 வைத்திருப்பது அவசியமா? அறிய வேண்டிய தகவல்

வங்கிக் கணக்கில் 'குறைந்த சராசரி இருப்புத்' தொகையாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1000 வரை வைத்திருக்க வேண்டியதை எஸ்பிஐ வங்கி கட்டாயமாக்கியுள்ளது.

இதே சில தனியார் வங்கிகள் உதாரணமாக ஐசிஐசிஐ வங்கியில் குறைந்த சராசரி இருப்புத் தொகையாக ரூ.10 ஆயிரம் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். தவறுவோருக்கு அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விதிமுறை பலரால் சரியாக புரிந்து கொள்ளப்பட்டாலும், கணக்கு வைத்திருக்கும் சிலருக்கு இது மிகுந்த குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது. அதாவது, வங்கிக் கணக்கில் எப்போதுமே 5 ஆயிரம் ரூபாய் இருப்பு இருக்க வேண்டுமா? ஒரு நாள் கூட 5 ஆயிரத்தில் இருந்து 1000 ரூபாய் எடுத்துவிட்டாலும் அபராதம் விதிக்கப்படுமா? குறைந்த மாத ஊதியம் பெறுவோர் இதனை எப்படி எதிர்கொள்வது என்ற ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

முதல் விஷயம் என்னவென்றால், குறைந்த சராசரி இருப்புத் தொகை ரூ.5000 என்பது சரியாக புரிந்து கொள்ளப்படாததே இதற்குக் காரணம்.

அதாவது குறைந்த சராசரி இருப்புத் தொகை என்றால், ஒரு மாதம் முழுவதும் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தின் சராசரி இருப்புத் தொகையாகும். வங்கிக் கணக்கில் ஒவ்வொரு நாளும் இருக்கும் பணத்தை அதாவது 30 நாளும் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைக் கூட்டி அதனை 30 அல்லது 31 ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவுத் தொகைதான் குறைந்த சராசரி இருப்புத் தொகையாகும். இந்த ஈவுத் தொகை ரூ.10,000 ஆக இருந்தால், மாதக் கடைசியில் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.2000 அல்லது அதற்கும் கீழ் இருப்பு குறைந்தாலும், எந்த அபராதமும் விதிக்கப்படாது.

உதாரணத்துக்கு...
உங்களது சம்பளம் 30 ஆயிரம் ரூபாயாக இருந்து, மாதத்தின் முதல் நாளில் இருந்து 5 நாட்களுக்கு அந்த 30 ஆயிரத்தை எடுக்காமல் விட்டுவிட்டால் ஒவ்வொரு நாளும் உங்கள் வங்கிக் கணக்கில் 30 ஆயிரம் ரூபாய் இருந்ததாகக் கணக்கில் எடுக்கப்படும். எனவே, 30 ஆயிரம் ரூபாய், 5 நாட்கள் வைத்திருந்ததால் 5 ஆல் பெருக்கப்படும். அது ரூ.1,50,000/-. இந்த தொகையை 30 ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவுத் தொகை ரூ.5000. எனவே, அந்த மாதத்தின் குறைந்தபட்ச சராசரி இருப்புத் முதல் 5 நாட்களிலேயே பூர்த்தியாகிவிடுகிறது. அதன்பிறகு நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.5000க்கும் குறைவாகப் பணம் வைத்திருந்தாலும் அதற்காக அபராதம் வசூலிக்கப்படாது.

இந்த அடிப்படையில் தான் குறைந்தபட்ச இருப்புத் தொகை கணக்கிடப்படுகிறது. எனவே, ஒவ்வொரு நாளும் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்பது புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சம்பளத்தின் அளவைப் பொருத்து ஓரிரு நாட்கள் கூடுதலாகவோ, குறைவாக பணத்தை வைத்திருந்தாலே அபராதத்தைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை.

அதோடு, மாநகராட்சிகளில் இயங்கும் வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே ரூ.5000 என்பது குறைந்த சராசரி இருப்புத்தொகை அவசியம். நகராட்சி மற்றும் கிராமப் புற வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 என்பதுதான் குறைந்த சராசரி இருப்புத் தொகையாகும்.

இது தவிர, வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கும் அதிகமாக இருப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சில சலுகைகள் வழங்கப்படுகிறது.

அதாவது, எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.10ம், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஆனால், வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருப்பு இருந்தால், அவர்கள் எஸ்பிஐயில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்காது. அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்தால், பிற வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் பிடிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன?

நீங்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், நிச்சயம் இந்த தகவல்களை அறிந்திருக்க வேண்டும்.

குறைந்த பண இருப்பு
பெரு நகரங்களில் இருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தது 5 ஆயிரம் ரூபாயை இருப்பாக வைத்திருக்க வேண்டும். ஊரக, பாதி ஊரக மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் முறையே ரூ.3,000, ரூ.2,000 மற்றும் ரூ.1,000 என இருப்பு வைக்க வேண்டியது அவசியம். இது குறித்து மேலே விரிவாகவே பார்த்துவிட்டோம்

குறைந்த பண இருப்பு இல்லாவிட்டால்?

எஸ்பிஐயின் மாற்றப்பட்ட கட்டணங்களின் அடிப்படையில், மாதாந்திர வங்கி இருப்பு சராசரித் தொகை குறைந்த இருப்புத் தொகையை விட குறைந்தால், ரூ.100 அபராதமும், சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.

மெட்ரோ வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.5000க்குக் கீழே இருப்பு வைத்தால் ரூ.100ம், 5 ஆயிரத்தில் பாதித் தொகை மட்டுமே இருந்தால் ரூ.50ம் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.

ஊரக, புறநகர்ப் பகுதிகளுக்கு ரூ.20 முதல் 50 வரை அபராதமும் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும். இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் இருந்து தகவல் அனுப்பப்படும்.

டெபாசிட் செய்யவும் கட்டுப்பாடு
சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் மாதத்துக்கு அதிகபட்சமாக 3 முறை மட்டுமே கட்டணமின்றி பணத்தை டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் செய்யும் ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் ரூ.50 கட்டணமும், சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.

ஏடிஎம்மில் பணம் எடுக்க
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.10ம், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருப்பு இருந்தால், அவர்கள் எஸ்பிஐயில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்காது. அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்தால், பிற வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் பிடிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.

எஸ்எம்எஸ் சேவைக் கட்டணம்
எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸ்-களுக்கு காலாண்டுக்கு ஒரு முறை ரூ.15ஐ கட்டணமாக பிடித்தம் செய்கிறது.

இந்த கட்டணங்கள், எஸ்பிஐ வங்கி மற்றும், அதனுடன் இணையும் ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், பட்டியாலா ஆகிய 6 வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.

எஸ்பிஐ வங்கியுடன் மகளிர் வங்கி உள்பட 6 வங்கிகள் இணைப்பு

பாரதிய மகளிர் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் உள்பட 6 வங்கிகளும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியுடன் சனிக்கிழமை முறைப்படி இணைந்தன. இதன்மூலம், உலகிலேயே சொத்துகள் அடிப்படையில் முதல் 50 இடத்தில் உள்ள வங்கிகளில் எஸ்பிஐயும் இடம்பெற்றுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அன்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகிய 5 வங்கிகளின் ஊழியர்களும் எஸ்பிஐயுடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

எனினும், முடிவில் எஸ்பிஐயுடன் பெண்களுக்காக தொடங்கப்பட்ட பாரதிய மகளிர் வங்கி உள்பட 6 எஸ்பிஐ சார்பு வங்கிகளும் எஸ்பிஐ வங்கியுடன் இணைந்தன.

இந்த வங்கிகளின் இணைப்பு மூலம் எஸ்பிஐயின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 37 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், எஸ்பிஐ வங்கிக் கிளைகள் மொத்தம் 24ஆயிரமாகவும், ஏடிஎம்களின் எண்ணிக்கை 59 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.

இன்றைய தினமலர்-பட்டம் இதழில் எம் வகுப்பு மாணவனின் கேள்வி பதில்

ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் 300 ஆசிரியர்கள்


ஒரே நேரத்தில் பட்டதாரி ஆசிரியர் பணி நியமன ஆணை பெற்ற 3,200 பேரில், 300 பேர் மட்டும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த 2011 டிசம்பரில் 3,200 பேருக்கு, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான நியமன ஆணை வழங்கப்பட்டது. இதற்காக 2011 மே மாதம் 2,900 பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும், அதே ஆண்டு நவம்பரில் 300 பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற்றது. மே மாதம் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 2,900 பேருக்கு, பணி வரன் முறை மற்றும் தகுதி காண் பருவம் முடிக்கப்பட்டு, நிரந்தரப் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.

ஆனால், நவம்பரில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 300 பேருக்கு இதுவரை பணி வரன் முறையும், தகுதி காண் பருவமும் வழங்கப்பட வில்லை. 2010-க்குப் பின்னர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டதால் 3,200-இல், 300 பேர் மட்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் பணி நியமன ஆணை பெற்ற போதிலும், அதில் 2,900 பேருக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 300 பேர் பணி வரன் முறை, தகுதிக் காண் பருவம் பெற, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த 300 பேரும், சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின், வரும் ஏப்ரல் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெறும் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அந்த 300 பேரும், முன்னுரிமை அடிப்படையில் (அதாவது மாற்றுத்திறனாளிகள், கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள், முன்னாள் ராணுவத்தினர், கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், அருந்ததியினர்) பணி வாய்ப்பு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சலுகைகள் இல்லை: தகுதிக் காண் பருவம் பெறாததால், தற்செயல் விடுப்பைத் தவிர, ஆண்டு ஊதிய உயர்வு, ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு, பொங்கல் போனஸ், மருத்துவ விடுப்பு போன்ற அரசின் பயன்களை பெற முடியாத நிலையில் 300 ஆசிரியர்களும் உள்ளனர். தற்போது 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுவதாலும், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டிய நிலை இருப்பதாலும், தகுதித் தேர்வுக்கு தயாராவதில் சிரமம் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியது: ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு என்பது வரவேற்க வேண்டிய ஒன்று தான். ஆனால், சமமான கல்வித் தகுதியுடன் ஒரே நேரத்தில் பணி வாய்ப்பு பெற்ற போதிலும், முன்னுரிமை அடிப்படையில் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அரசு உதவியுடன் செயல்பட்டு வரும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுவது ஏன்? கல்வி பெறும் உரிமை அனைவருக்கும் சமம் என்னும் போது, அதை கற்பிக்கும் ஆசிரியர்களிடையே இதுபோன்ற பாகுபாடு காட்டுவது நியாயமாகுமா? 2010-இல் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின்னர் மட்டும் சமார் 18,000 ஆசிரியர்கள் சிறுபான்மையினர் பள்ளிகள் மூலம் பணி நியமனம் பெற்றுள்ளனர் என்றார்.

மின்னணு குடும்ப அட்டையைப் பயன்படுத்துவது எப்படி?


கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் நவீன மின்னணு குடும்ப அட்டைகளைப் பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தமிழகம் முழுவதும் 1.89 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்தாள் இணைப்புடன் பயன்பாட்டில் இருந்து வந்தது. இதில், போலி குடும்ப அட்டைகள் இருப்பது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து போலி அட்டைகளை ஒழிக்கவும் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவைக் கட்டுப்படுத்தவும் நவீன கையடக்க அளவில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டத்தை சனிக்கிழமை (ஏப்.1) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பயன்படுத்துவது எப்படி: இந்த அட்டையை கூட்டுறவு நியாய விலைக்கடையில் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்து நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவு வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்த அட்டையை பெற்றதும் அருகில் உள்ள நியாய விலைக் கடையில் பொருத்தப்பட்டிருக்கும் சிறிய சதுர பெட்டி வடிவிலான நவீன இயந்திரம் மூலம் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். அந்த இயந்திரத்துடன் பில் போடுவதற்கும் தனியாக ஒரு சிறிய இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும். அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியவாசியப் பொருள்கள் வாங்க கடைக்கு சென்றதும் மின்னணு குடும்ப அட்டையை சிறிய சதுர பெட்டி வடிவ இயந்திரத்தின் மேலே உள்ள வெள்ளை நிற விளக்கு வெளிச்சத்தில் வைத்தால் போதுமானது. உடனே அந்த இயந்திரம் செயல்படத் தொடங்கும். மற்றொரு இயந்திரம் மூலம் அந்த அட்டைக்கான பொருள்கள் ஒதுக்கீடு அளவுக்கு விற்பனையாளர்கள் பில் போடுவார்.

அதைத் தொடர்ந்து நாம் வாங்கும் பொருள்களின் விவரம் அனைத்தும் மின்னணு குடும்ப அட்டையில் பதிவாகும். இது தொடர்பான விவரங்கள் செல்லிடப்பேசியிலும் குறுஞ்செய்தியாக அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் முறைகேடுகள் செய்வதற்கு வாய்ப்பின்றி தகுதியானவர்களுக்கு பொருள்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Saturday, April 01, 2017

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 25ம்தேதி முதல் வேலைநிறுத்தம்: தமிழக அரசு ஊழியர்கள் தகவல்


அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “ 7வது சம்பள கமிஷன் குறித்து குழு அமைப்பதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஒரு ஆண்டு கழித்து தற்போது குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இடைக்கால நிவாரணம் இதுவரை அறிவிக்கவில்லை. எனவே, 7வது சம்பள கமிஷன் அமலுக்கு வரும் வரை 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழக்காடு மன்றம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவு செய்து, இதற்கான நோட்டீசையும் தமிழக அரசிடம் வழங்கியுள்ளோம்” என்றனர்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் புத்தகங்களை செல்போனில் டவுன்லோடு செய்யலாம்: பள்ளி கல்வித்துறை ஏற்பாடு


பள்ளி கல்வி துறை சார்பில் நடைபெற்ற விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி அம்பத்தூரில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 9 துறைகள் தோற்றுவிக்கப்பட்டு, கூடுதலாக 36 கல்வியாளர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

கணினி யுகத்தின் டிஜிட்டல் தேவைகளை பூர்த்தி செய்ய மாணவர்களுக்கு தேவையான பாடப்பொருள் சார்ந்த 950 சிடிக்கள் உருவாக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 10ம் வகுப்பு மாணவர்கள் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்கள் மூலம் தங்களது பாடங்களை டவுன்லோட் செய்து படிக்கும் வசதியும் இந்த ஆண்டு பள்ளி கல்வித்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மாணவர்களுக்கு மார்க் போட உதவும் புதிய தொழில்நுட்பம்


தமிழ்நாட்டில், எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு (ESLC) மதிப்பெண்கள், முதன் முறையாக, புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில், இந்த ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பணிகளிலும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில், எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள், புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஓ.எல்.ஐ.சி.ஆர்., எனப்படும் தொழில்நுட்பத்தை, ஓரியான் இண்டியா சிஸ்டம்ஸ் எனும் தனியார் நிறுவனம் வழங்கி இருக்கிறது.

ஓரியான் இண்டியா சிஸ்டம்ஸ் நிறுவனம், கடந்த 24 ஆண்டுகளாக, பள்ளி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு தேவையான மென்பொருள் சேவைகளை வழங்கி வருகிறது. ஓ.எல்.ஐ.சி.ஆர்., தொழில்நுட்பத்தின் மூலமாக, ஆசிரியர்கள் மாணவர்களின் விடைத்தாள்களை மிக எளிதாக மதிப்பீடு செய்ய முடியும். ஆசிரியர்கள் மதிப்பெண்களை வழங்கும்போதே, அந்த மதிப்பெண்கள், டிஜிட்டலாக்கம் செய்யப்பட்டுவிடும்.

அதனால் தேர்வு துறை, உடனடியாக மாணவர்களின் மதிப்பெண்களை அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, இந்த தொழில்நுட்பத்தால் மாணவர்கள் குறித்த தகவல்கள், 100 சதவீதம் மறைக்கப்பட்டு விடும். கோவா கல்வி துறையும், இந்த ஆண்டு, ஓ.எல்.ஐ.சி.ஆர்., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாணவர்களின் தேர்வுத் தாள்களை மதிப்பீடு செய்கிறது.

ரூ.10 நாணயங்கள் பயன்பாடு: அரசு புது உத்தரவு


அரசு பஸ்கள், ரேஷன் கடைகள் மற்றும் மின் கட்டண வசூல் மையங்களில், 10 ரூபாய் நாணயங்களை, பொதுமக்களிடம் இருந்து வாங்க மறுக்கக் கூடாது' என்று, தமிழக அரசின் நிதித்துறை திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் மோடி, கடந்த நவம்பர் மாதம் அறிவித்தார். வதந்தி இதையடுத்து, அந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது.

பின், புதிய, 2,000 மற்றும் 500 நோட்டுகளை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என, வதந்தி கிளம்பியது. வாங்க மறுப்புபொதுமக்கள் அதிகம் புழங்கும் மார்க்கெட், பஸ், ஓட்டல்களில், 10 ரூபாய் நாணயங்களை பெற மறுக்கப்பட்டது. 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி பலமுறை அறிவித்தும், இந்த குழப்பம் தீர்ந்தபாடில்லை. குறிப்பாக, அரசு பஸ்கள் மற்றும் வங்கிகளில், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்ததால், மக்களும் வாங்க மறுத்தனர். இது குறித்து, சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தபோது, நாணயங்களை எண்ண காலதாமதம் ஏற்படுவதால், அதை வாங்க மறுத்தது தெரியவந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் நிதித்துறை செயலர் சண்முகம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

பொதுமக்கள் புழங்கும் அனைத்து அரசு தொடர்பான அலுவல்களுக்கும், 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்ளுமாறு, ரிசர்வ் வங்கியின் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மண்டல இயக்குனர் கேட்டுக் கொண்டு உள்ளார். முற்றுப்புள்ளி எனவே, பொதுமக்கள் அதிகம் பயன்பாட்டில் உள்ள அரசு துறைகள், அதாவது அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணம், மின் கட்டணங்கள் வசூல், ரேஷன் கடைகள் ஆகியவற்றில், பொதுமக்கள் தரும், 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம், பொதுமக்கள் மத்தியில் உள்ள அச்சம் நீங்குவதுடன், அது தொடர்பான வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

1-1-2017 ன் படி பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க இயக்குநரின் செயல்முறைகள்

Click below

https://app.box.com/s/3j1t6m71e2hxnq1d8ewt7eanewmefyj1

Friday, March 31, 2017

எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தம் இன்று துவக்கம்


எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கி, ஏப்.12ம் தேதிக்குள் முடியுமென கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்கி, நேற்று முன்தினம் (மார்ச் 30) முடிவடைந்தது. இதேபோல, பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.

பிளஸ் 2 மற்றும் எஸ்எஸ்எல்சி விடைத்தாள்களை திருத்துவதற்கு, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும், தலா ஒரு திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று மொழி விடைத்தாள் திருத்தப்படும். 4ம் தேதி பிற பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும். எஸ்எஸ்எல்சி விடைத்தாள்களை ஏப்.12ம் தேதிக்குள்ளும், பிளஸ் 2 விடைத்தாள்களை ஏப்.24ம் தேதிக்குள்ளும் திருத்தி முடிக்க, பள்ளி தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இத்தகவலை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்: மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிப்பு


ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 24 -ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்கேற்ப 1:5 விகிதாச்சாரப்படி, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தெரிவு பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் சனிக்கிழமை (ஏப்ரல் 1) அன்று வெளியிடப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணைக் கடிதம் அனுப்பப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் வரும் ஏப்ரல் 9, 10, 11 ஆகிய தேதிகளில், கீளே குறிப்பிடப்பட்டுள்ள மையங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, விண்ணப்பத்தில் தெரிவித்திருந்த விவரங்களுக்குரிய சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் பள்ளிகளின் விவரம்: சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு நாளுக்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களைக் கொண்டு, அவர்கள் பெற்ற எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் (ஙங்ழ்ண்ற் கண்ள்ற்) தயார் செய்யப்படும். அந்தத் தகுதிபட்டியலின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள இனசுழற்சி, இதர உள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில், காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தெரிவு செய்யப்பட்டு, தெரிவுப்பட்டியல் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் உடனடியாக வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் உரிய பணி நியமன ஆணை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களால் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நிதியாண்டு


500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு காலக்கெடு நிறைவு , பட்ஜெட்டில் வருமான வரி விகிதம், வங்கி வைப்புத்தொகையில் மாற்றம் மற்றும் பல்வேறு கட்டணங்கள், வரி விகிதங்களில் மாற்றத்துடன் புதிய நிதியாண்டு துவங்கியது.

அதன் விவரம் வருமாறு:

*கணக்கில் காட்டாத வருமானத்திற்கு இன்று முதல் வருமான வரி 77.2 சதவீதம் வரை வசூலிக்கப்படும்.

* ஆண்டு வருமானம் ரூ. 2..5 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சம் இருந்தால் வருமான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

*இன்று முதல் வாகன காப்பீட்டு பிரீமியம் தொகை 41 சதவீதம் உயர்கிறது.

* பி.பி.எப். உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி வகிதம் 0.1 சதவீதம் குறைக்கப்படுகிறது.

* பெருநகர எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள் வைப்புத்தொகை ரூ.5000 வைத்திருக்க வேண்டும்.

* நகரவாழ் எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள் வைப்புத்தொகை, ரூ.3000 வைத்திருக்க வேண்டும்.

* சிறுநகர எஸ்.பி.ஐ., வாடிக்கை வாடிக்கையாளர்கள் ரூ.2000 வைத்திருக்க வேண்டும்.

* கிராமப்பகுதி எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்கள் வைப்பத்தொகை ரூ.1000 வைத்திருக்க வேண்டும்.
மேற்கண்ட வைப்பு தொகை குறைவாக இருந்தால் வாடிக்கையாளர்களிடம் அபராதம் விதிக்கப்படும்.

* காற்று மாசை குறைக்க பி.எஸ்., 4 வகை வாகனங்கள் விற்கும் உத்தரவு இன்று முதல் அமல்படுத்தப்படுள்ளது..

* தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள 394 சுங்கச்சாவடிகளில் வாகன கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

Thursday, March 30, 2017

ஆய்வக உதவியாளர் நியமனத்தில் அதிகாரிகள் தவறு செய்தால் நடவடிக்கை; பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை


சான்றிதழ் சரிபார்த்தல்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 4 ஆயிரத்து 362 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து கடந்த 2015–ம் வருடம் மே மாதம் 31–ந்தேதி எழுத்து தேர்வை நடத்தியது. 1900 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 7 லட்சத்து 32 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்கள் அனைவரும் எடுத்த மதிப்பெண்கள் விவரம் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டது. அதை அரசு தேர்வுகள் இணைய தளத்தில் காணலாம்.

மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒருவர் நியமனத்திற்கு 5 பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அழைக்கப்படுபவர்கள் பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக இணையதளத்தில் வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்த்தல் ஏப்ரல் 9, 10 மற்றும் 11–ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறியதாவது:– கடும் நடவடிக்கை ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வக உதவியாளர் பணி நியமனம் வெளிப்படையாக செய்யப்பட உள்ளது.

ஆய்வக உதவியாளர் வேலை வாங்கித்தருகிறேன் என்று கூறி யாராவது பணம் கேட்டால் கொடுக்கவேண்டாம். அவ்வாறு மோசடி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வக உதவியாளர் நியமனத்தில் முதன்மை கல்வி அதிகாரி அல்லது யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

பிளஸ் 2 தேர்வு இன்றுடன் முடிகிறது: 6ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தம்


கடந்த 2ம் தேதி ெதாடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்றுடன் முடிகிறது. வரும் 6ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகின்றன. கடந்த 2ம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கின. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 6,737 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 837 பேர் மாணவியர். 4 லட்சத்து 17 ஆயிரத்து 994 பேர் மாணவர்கள். ஒரே ஒரு நபர் திருநங்கை. மாணவர்களை விட கூடுதலாக 62 ஆயிரத்து 843 மாணவியர் இந்த ஆண்டு தேர்வு எழுதியுள்ளனர்.

அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் 5 லட்சத்து 97 ஆயிரத்து 738 பேரும், வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் 2 லட்சத்து 23 ஆயிரத்து 977 பேரும், கலைப் பிரிவு பாடத் தொகுதியின் கீழ் 13 ஆயிரத்து 354 பேரும் தேர்வு எழுதியுள்ளனர். மேற்கண்ட பள்ளி மாணவ, மாணவியரை தவிர தனித் தேர்வர்கள் 34 ஆயிரத்து 868 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களுக்காக, தமிழகம் முழுவதும் 2,434 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், இன்றுடன் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவடைகின்றன. இறுதி நாளான இன்று உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. இதையடுத்து, வரும் 6ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 44 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ளன.