இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, February 20, 2017

முதல்வரின் ஐந்து கையெழுத்து

முதலமைச்சர் ஆணை பிறப்பித்து கையொப்பமிட்ட  ஐந்து கோப்புகளின் விவரம்:

* மகளிர், பணியிடங்களுக்கும் பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் இருசக்கர வாகனங்கள் வாங்க, 50 சதவிகித மானியம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க 50 சதவிகித மானியம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 20ஆயிரம் வழங்கப்படும்.  மகளிரின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை வைத்திருந்த ஜெயலலிதா நினைவாக இந்தத் திட்டம், "அம்மா இரு சக்கர வாகனத் திட்டம்" என அழைக்கப்படும். ஆண்டொன்றுக்கு சுமார் 200 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும்.

*  ஏழை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி, 1.6.2011 முதல் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க ஜெயலலிதா ஆணையிட்டார். உலக நாடுகளின் நிலைக்கேற்ப, பேறு கால குறியீடுகளை தமிழ்நாடு அடையும் பொருட்டும், பேறு கால தாய் சேய் இறப்பு விகிதத்தினை மேலும் குறைக்கும் பொருட்டும், 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவியினை 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  அதனை நிறைவேற்றும் வகையில்  12 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணையிட்டு, அதற்கான கோப்பில் முதலமைச்சர் கையொப்பமிட்டார். இந்தத் திட்டத்தின்மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 6 லட்சம் தாய்மார்கள் பயனடைவர்.  ஆண்டொன்றுக்கு 360 கோடி ரூபாய் கூடுதல் செலவில் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும்.

*   தேர்தல் அறிக்கையில், மீனவர்களுக்கென தனியே வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து முனைப்பாகச் செயல்பட்டுவருகிறது.  இதன் தொடர்ச்சியாக,  தமிழ்நாட்டில் மீனவர்களுக்கான தனி வீட்டு வசதித் திட்டத்தைச் செயல்படுத்த ஆணையிட்டு, அதற்கான கோப்பில் முதலமைச்சர் கையொப்பமிட்டார். இந்தத் திட்டத்தின் கீழ் 5000 வீடுகள் கட்டப்படும். ஒரு வீட்டின் மதிப்பு 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகும்.  85 கோடி ரூபாய் செலவினத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டுவரும் மாதாந்திர உதவித்தொகை இரு மடங்காக அதிகரிக்கப்படும் என ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார். மேற்கண்ட தேர்தல் வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத இளைஞர்களுக்கு வழங்கிவரும் மாதாந்திர உதவித்தொகையை ரூபாய் 100-லிருந்து ரூபாய் 200 ஆக உயர்த்தியும், 10-ம் வகுப்பு தேர்ச்சிபெற்ற இளைஞர்களுக்கு வழங்கிவரும் மாதாந்திர உதவித்தொகையை ரூபாய் 150-லிருந்து ரூபாய் 300ஆக உயர்த்தியும், 12-ம் வகுப்பு தேர்ச்சிபெறாத இளைஞர்களுக்கு வழங்கிவரும் மாதாந்திர உதவித்தொகையை ரூபாய் 200-லிருந்து ரூபாய் 400 ஆக உயர்த்தியும், பட்டப்படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வழங்கிவரும் மாதாந்திர உதவித் தொகையை ரூபாய் 300-லிருந்து ரூபாய் 600 ஆக உயர்த்தியும் ஆணையிட்டு, அதற்குரிய கோப்பில் முதலமைச்சர் கையெழுத்திட்டார்.  இந்தத் திட்டத்தின்மூலம் தற்போது உதவித்தொகை பெற்றுவரும் 55,228 இளைஞர்கள் உயர்த்தப்பட்ட உதவித்தொகையைப் பெற்று பயன் பெறுவர்.  இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதனால், தமிழ் நாடு அரசுக்கு  ஆண்டொன்றுக்கு 31 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

* மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஜெயலலிதா, 500 மதுபானக் கடைகளை மூடியும், மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தைக் குறைத்தும் 24.5.2016 அன்று ஆணையிட்டார்.  மேற்கண்ட கொள்கையினை முன்னெடுத்துச்செல்லும் வகையில், தமிழ்நாட்டில் மேலும் 500 மதுபானக் கடைகள் மூடுவதற்கான ஆணையிட்டு, அதைச் செயல்படுத்தும் வகையில் அந்தக்கோப்பில் கையொப்பமிட்டார், முதல்வர் பழனிசாமி.

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்: அமைச்சர் செங்கோட்டையன்


ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கல்வி துறையில் சிறந்து விளங்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Sunday, February 19, 2017

பிப்ரவரி-21, தாய்மொழி தினம்


வருங்கால வைப்பு நிதியை பெறுவதில் புதிய திட்டம் | ஆன்லைன் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு


வருங்கால வைப்பு நிதியை எளிதில் திரும்ப பெறுவதற்கு வசதியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதியை திரும்ப பெறுதல், ஓய்வூதியம் இணைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நேரடியாக விண்ணப்பம் வழங்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.

இதனால் பணப்பலன்களை பெறுவதில் பயனாளிகளுக்கு கால தாமதம் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, வருங்கால வைப்புநிதியை திரும்ப பெறுதல், ஓய்வூதியம் இணைத்தல் உள்ளிட்டவைகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இ.பி.எப்.ஓ.வின் அனைத்து துறை அலுவலகங்களையும் இணையதளம் மூலம் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் அனைத்தும் இரண்டு மாதங்களில் முடிக்கப்பட்டு மே மாதம் முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் வருங்கால வைப்பு நிதியை கேட்டு ஆன்லைன் மூலம் வரும் விண்ணப்பங்களுக்கு மூன்று மணி நேரத்தில் தீர்வு காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, February 18, 2017

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடலாமா? வேண்டாமா?


தட்டம்மை மற்றும் ரூபெல்லாவை குழந்தைகளுக்கு வராமல் தடுக்கும் ரூபெல்லா தடுப்பூசி  தனியார் மருத்துவமனைகளில் மட்டும் போடப்பட்டு வந்தது. தற்போது அரசாங்கம் மூலம் அனைவருக்கும் இலவசமாக போடப்பட்டு வருகிறது. அம்மை நோய்களில் ஒரு வகைதான்  ரூபெல்லா நோயாகும். இந்த நோயால் இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் இறப்பதாக மருத்துவ ஆய்வுகள்  விவரம் வெளியிட்டுள்ளன. ரூபெல்லா நோயை ஒழிப்பதற்காக முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம், கோவா, லட்சத்தீவு ஆகிய 5 மாநிலங்களில் ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த 6ம் தேதி தொடங்கிய பணி வருகிற 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை முதல் கட்டமாக பள்ளிகளிலும், இரண்டாவது கட்டமாக  அங்கன்வாடி மையங்களிலும் , மூன்றாம் கட்டமாக பள்ளிக்கு வராத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதவற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் படிக்கும் 15 வயத்துக்குட்பட்ட குழந்தைகளுக்கு தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இந்த தடுப்பூசி மருந்து அளிக்கப்படும் குழந்தைகள், வாந்தி, மயக்கத்தால்  பாதிக்கப்படுவதாகவும், மரணம் அடைவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதன் காரணமாக ரூபெல்லா தடுப்பூசி அதிக அளவில்  பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தடுப்பூசி போட்டால் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயமே பல பெற்றோரையும் பதபதக்க வைத்துள்ளது . ஏனென்றால் தற்போது எந்த ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும் சரி, பிரச்னைக்குரியதாக இருந்தாலும்  இரு வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. இதில் எது உண்மை என்பதை பிரித்தறிந்து ஏற்பது என்பது பொதுமக்களுக்கு மிகவும் சிரமமான ஒன்றாக உள்ளது. இதனால் ஒரு சில குழந்தைகளுக்கு மட்டுமே ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பெற்றோர் அனுமதி தருகின்றனர். பெரும்பாலான பிள்ளைகளின் பெற்றோர் பள்ளிகளில் ஊசி போடத்தேவையில்லை என்று அனுமதி மறுத்துவிடுகின்றனர்.

ஊசி போடுவதாக அறிவிக்கப்படும் தேதியில் பலர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துக்கொள்கின்றனர். இதனால் அரசு திட்டமிட்ட இலக்கை எட்ட முடியுமா என்பது சந்தேகமே? பொதுமக்களிடம் நிலவும் அச்சத்தை போக்கும் வகையிலும், ரூபெல்லா தடுப்பூசி போடவேண்டிய கட்டாயம் குறித்தும்  அரசு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். இவற்றையெல்லாம்  செய்த பின்னர் நாடு முழுவதும் ஒரே நாளில் ரூபெல்லா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்தால் ஓரளவு பயன் தரும் என்பதே பல சாராரின் கருத்தாகும்.

ரூபெல்லா தடுப்பூசி போடாவிட்டால்?

போலியோவை தவிர மற்ற தடுப்பூசிகள் இதுவரை 100 சதவீதம் போடப்படவில்லை. ரூபெல்லா தடுப்பூசி போடவில்லையென்றால் வெளிநாடுகளில் இருந்து இந்த நோயால் பாதிக்கப்பட்டோர் வரும்போது அவர்கள் மூலம் நோய் பரவும். ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் அவர்கள் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு பரவும்.  இந்நோயின் அறிகுறியை கண்டுபிடிப்பதற்கு முன்பே, இது மற்றவர்களுக்கு பரவிவிடும்.

புதிது அல்ல

ரூபெல்லா தடுப்பூசி புதிதாக அறிமுகப்படுத்தப்படவில்லை. கடந்த 1985ம் ஆண்டில் இருந்தே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளாக இந்த தடுப்பூசியால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. தற்போது கொஞ்சம் மேம்பட்ட வகையில் இந்த தடுப்பூசி மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஊசியின் விலை ரூ.300

ரூபெல்லா ஊசியின் விலை தனியார் மருத்துவமனைகளில் ரூ.300 முதல் ரூ.500 ஆகும். இது தான் அரசு சார்பில் இலவசமாக தற்போது இலவசமாக போடப்பட்டு வருகிறது. குளிர்சாதனப்பெட்டியில் உரிய தட்பவெப்ப நிலையில் வீரியம் குறையாமல் பாதுகாக்கப்பட்டுத்தான் ஊசி பயன்படுத்தப்படுத்தப்படுகிது என அரசு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள் எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்


தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள் இந்த அறிவியல் பாட செய்முறை தேர்வுகளில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்படுகிறார்கள். இதற்காக தேர்வு நடைபெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரை அணுகும்படியும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண். வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவு


தேர்வுகள் துவங்கும் நிலையில், பள்ளியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த, ஆசிரியர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிகளில், மாணவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து, விரிவான ஆய்வு நடத்த வேண்டும்.

நீர்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவு நீர் தொட்டி மற்றும் நீர்த்தேக்க தொட்டிகளை ஆய்வு செய்து, அவை மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில், மாணவர்கள் குளிப்பதை தவிர்க்க, அறிவுரை வழங்க வேண்டும். பள்ளியை விட்டு செல்லும் போது, பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது அருகாமையில் செல்வதோ கூடாது என, எச்சரிக்க வேண்டும்.

பள்ளி வளாகத்தில், மரங்கள் விழும் நிலையில் இருந்தால், அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். பள்ளி கட்டிடங்கள் பாதுகாப்பாக உள்ளதாக என்பதை யும் ஆய்வு செய்ய வேண்டும். இதுபோன்று, பல, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பி.எப்., கணக்குடன்ஆதாரை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு


வருங்கால வைப்பு நிதி எனப்படும், பி.எப்., திட்ட கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக அளிக்கப்பட்டுள்ள காலக்கெடு, மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய திட்டமான, பி.எப்.,பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், தங்கள், பி.எப்., கணக்குடன், ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என, மத்திய தொழிலாளர் நலத்துறை கூறியிருந்தது.

இதற்கு, வரும், 28 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்தக் காலக்கெடு, மார்ச், 31 வரை நீட்டிக்கப்படுவதாக, நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பி.எப்., ஓய்வூதியம் பெறுவோர், தங்களுடைய, 'லைப் சர்டிபிகேட்' எனப்படும், உயிருடன் இருப்பதற்கான ஆதார சான்றை, மின்னணு முறையில் மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடுவும், மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஆதார் எண் கட்டாயம்:மத்திய அரசு


பள்ளி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற ஆதார் எண் கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு.

பள்ளி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் ஏழை மாணவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.
அதன்படி அதிக மதிப் பெண் பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.500 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் கடந்த 2015-16-ம் ஆண்டில் நாடு முழுவதும் 2.05 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தனர்.
இந்நிலையில் இந்த உதவித் தொகையை பெற ஆதார் எண்ணைச் சமர்ப்பிப்பது அவசியம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த 15-ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தில் உதவித் தொகையை பெற வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் மாணவர்கள் தங்களின் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.
இதுவரை ஆதார் எண் பெறாத மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளின் முதல்வர்கள் உதவி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சமூக நீதி மற்றும் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 12 கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கு ஆதார் எண் ஏற்கெனவே கட்டா யமாக்கப்பட்டிருப்பது குறிப் பிடத்தக்கது.

Friday, February 17, 2017

துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிக்கு நாளை குரூப் 1 தேர்வு: செல்போன், கால்குலேட்டருக்கு தடை


துணைக் கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 தேர்வு நாளை நடக்கிறது.தமிழக அரசு பணியில் காலியாக உள்ள துணை கலெக்டர்-29 இடங்கள், போலீஸ் டிஎஸ்பி- 34, வணிவரித்துறை உதவி ஆணையர்- 8, மாவட்ட பதிவாளர்-1, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்- 5, மாவட்ட தீயணைப்பு அலுவலர்- 8 ஆகிய குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 85 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை நடக்கிறது.

அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு மையத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக வர வேண்டும். தேர்வுக்கூடத்துக்கு செல்வோர் கால்குலேட்டர், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.தேர்வு மையத்தை கண்காணிக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வு முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக பிரதான தேர்வுக்கு அழைக்கப்படுவார். அதில் தேர்ச்சி பெறுவோர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு கட் ஆப் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் பணிகள் ஓதுக்கீடு செய்யப்படும்.

10ம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு பிப்., 20 முதல் செய்முறை தேர்வு


பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு, பிப்., 20 முதல் செய்முறை தேர்வு துவங்குகிறது.இது குறித்து, அரசு தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த, தனித் தேர்வர்களுக்கு, பள்ளிகளில், அறிவியல் செய்முறை தேர்வுக்கான, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில், பங்கேற்றவர்களுக்கு, பிப்., 20 முதல், 28 வரை, அறிவியல் செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது. அழைப்பு கிடைக்காவிட்டாலும், தனித் தேர்வர்கள், தாங்கள் பயிற்சி பெற்ற பள்ளிகளுக்கு சென்று, தேர்வில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில் 34 நகரங்களுக்கு பயணம்


நாடு முழுவதும், 34 முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக செல்லக் கூடிய, அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில் பயணத்தை, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு துவக்கி வைத்தார். அறிவியல் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 16 பெட்டிகள் அடங்கிய, அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில், 2007 முதல், ஒவ்வொரு ஆண்டும் இயக்கப்படுகிறது.

இந்த ஆண்டு, வடகிழக்கு மாநிலமான, திரிபுராவின் அகர்தலா உட்பட, 34 முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக, இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த ஆண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், இந்த ரயில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. டில்லியில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த ரயிலை, கொடியசைத்து துவக்கி வைத்த, மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியதாவது: சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இதில், ஒருவரை ஒருவர் குறை கூறாமல், சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளே, தற்போதைய தேவை. இதை அனைவரும் இணைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

4-3-17 CRC news

Thursday, February 16, 2017

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்றுடன் நிறைவு


சென்னை மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன. இதர மாவட்டங்களில் 23ம் தேதி ஒட்டுமொத்தமாக முடிகிறது. பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவு மாணவர்களுக்கு எழுத்து தேர்வில் 150 மதிப்பெண்களும், செய்முறை தேர்வில் 50 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. இதனால், அறிவியல் பிரிவு மாணவர்கள் செய்முறை தேர்வு எழுத வேண்டும்.

இவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி 23ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்தது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் சூழ்நிலைக்கு ஏற்ப பிப்ரவரி 2ம் தேதி முதல் செய்முறை தேர்வுகள் தொடங்கிவிட்டன. சென்னை மாவட்டத்தில் இரண்டு கட்டமாக செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. முதற்கட்ட தேர்வு 6ம் தேதி தொடங்கி 10ம் தேதி முடிந்தன. இரண்டாம் கட்டத் தேர்வுகள் 13ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிகின்றன.

சென்னை மாவட்டத்தில் 39 ஆயிரத்து 900 மாணவ மாணவியர் செய்முறை தேர்வில் பங்கேற்றனர். சில மாவட்டங்களில் 18ம் தேதி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் சில மாவட்டங்களில் 23ம் தேதியுடன் செய்முறை தேர்வு முடிகின்றன. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் மொத்தமாக 4 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவியருக்கு செய்முறை தேர்வு நடத்தப்பட்டது.

எழுத்துப்பிழை இருப்பதால் திருப்பி அனுப்ப உத்தரவு : ஆசிரியர் தகுதி தேர்வுக்கான 7 லட்சம் விண்ணப்பம் வீணானது


ஆசிரியர் தகுதி தேர்வுக்காக அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களில் எழுத்து பிழைகள் இருப்பதாக கூறி அவற்றை திருப்பி அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. தாள் 1 மற்றும் தாள் 2க்கான தனித்தனியான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் விநியோகம் செய்ய 7 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் ரூ.50. தேர்வு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.500. ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.250. வரும் 28ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் விண்ணப்ப விநியோகம் நடைபெறவில்லை. வரும் மார்ச் முதல் வாரத்தில் விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை தேர்வு செய்து அங்கு வைத்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப விநியோகம் மார்ச் முதல் வாரம் துவங்க உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப விநியோகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம் அச்சடிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களில் பிழைகள் இருப்பதுதான் என தெரியவந்துள்ளது. இதனால் இந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்றும், புதிய விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் அவற்றை விநியோகம் செய்தால் போதும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட 7 லட்சம் விண்ணப்பங்களும் வீணாகியுள்ளது.