இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, May 04, 2015

சட்டப்படிப்புக்கான விண்ணப்பம் மே 8முதல்

tnptfmani.blogspot.com
தமிழகத்தில் சட்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரும் மே 8-ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என, அம்பேத்கார் சட்டப்பல்கலைகழக துணைவேந்தர் வணங்காமுடி அறிவித்துள்ளார்.
மேலும் வரும் கல்வியாண்டு முதல், பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரைக்கேற்ப பி.எல்.பட்டத்திற்கு பதிலாக எல்.எல்.பி. பட்டம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
பி.சி.ஏ.எல்.எல்.பி. மற்றும் பி.பி.ஏ.எல்.எல்.பி ஆகிய இரண்டு புதிய பாடப்பிரிவுகளை அம்பேத்கார் சட்டப் பல்கலைகழகம் தற்போது அறிமுகப் படுத்தியுள்ளது. அதன்படி மாணவர்கள் சேர்க்கைக்கான எண்ணிக்கையும் 660 வரை உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Sunday, May 03, 2015

இந்த ஆண்டும் ஸ்மார்ட் கார்ட் வழங்குவது சந்தேகமே

பல்வேறு "சர்வர்'களை இணைக்க வேண்டியுள்ளதால் "ஸ்மார்ட் கார்டு' வரும் ஆண்டிலும் சாத்தியமில்லை
"கல்வி மேலாண்மை தகவல் முறை இணையதளமும், மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு' திட்டமும், வரும் கல்வியாண்டிலும் நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை' என, கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

மாணவர்கள் குறித்த முழு விவரங்கள், தேவையான பாடத்திட்டங்கள், அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை, கல்வித்துறை செயல்பாடு, அதிகாரிகள் விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், "ஆன்-லைன்' மூலம் அறிந்து கொள்ள ஏதுவாக, கல்வி மேலாண்மை தகவல் முறை (இ.எம்.ஐ.எஸ்.,) என்ற இணையதளம் செயல்படுத்த, மாநில அரசு திட்டமிட்டது. 2012ல், இதற்கான பணிகள் துவங்கின.கடந்த, 2013ல், அனைத்து தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட்ட போதும், அதிகாரப்பூர்வமாக இயங்காமல், முன்னோட்டமாக மட்டுமே, இந்த இணையதளம் செயல்பட்டது. இதுதவிர, மாணவர்களின் பெயர், போட்டோ, பெற்றோர் பெயர், பள்ளியின் பெயர் உள்ளிட்டவற்றையும் "ஆன்-லைனில்' பதிவு செய்து, மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு" வழங்கும் பணிகளும் துவங்கின. நடப்பாண்டில் இப்பணி முடிவடைய வாய்ப்பில்லை என்று கூறும் கல்வித்துறை அதிகாரிகள், வரும் கல்வியாண்டிலும் நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை என்கின்றனர்.

அதிகாரிகளிடம் கேட்டபோது, "கல்வி மேலாண்மை தகவல் முறை இணையதள திட்டம் என்பது, மிகப்பெரிய திட்டம். ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முறை, மாணவர் குறித்த முழு விவரம் உள்ளிட்ட பல தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன."பல்வேறு "சர்வர்'களை இணைக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பான பல்வேறு பணிகள் முழுமை பெறாமல் உள்ளன. எனவே, வரும் கல்வியாண்டிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வருவது சந்தேகமே. மாணவர்களுக்கான "ஸ்மார்ட் கார்டு' திட்டமும், தாமதமாகும்,' என்றனர்.

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இரண்டு வாரங்களுக்குள் வழங்க உத்தரவு

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, தேர்வு முடிவு வெளியான, இரண்டு வாரங்களுக்குள் பதிவிறக்கம் செய்து, மாணவர்களிடம் வழங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5ல் துவங்கி, மார்ச் 31ம் தேதி முடிவடைந்தது. வரும், 7ம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

கடந்த கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 9ம் தேதி வெளியானது. இந்த ஆண்டு, மதிப்பெண் பட்டியலை தாமதமாக வழங்கும் பிரச்னையை தவிர்க்க, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிமுகமாகிறது.இதுதொடர்பாக, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்து, பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு:

* தற்காலிக மதிப்பெண் சான்றிதழை கொண்டு, உயர்கல்வி படிப்புகளில் மாணவர்களை சேர்க்கலாம்.

* சான்றிதழை, பள்ளிகளில் பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

* இதற்காக பள்ளிகளில், கணினி, பிரின்டர் மற்றும் இணையதள இணைப்பு வசதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

* பள்ளி அலுவலக ஊழியர்கள் மற்றும் விடுமுறையில் உள்ள ஆசிரியர்களைக் கொண்டு, மதிப்பெண் சான்றிதழை நகல் எடுத்து, தலைமை ஆசிரியர் கையொப்பமுடன், மாணவர்களுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும்.

* தேர்வு முடிவு வெளியானதும், இரண்டு வாரங்களுக்குள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து வழங்க வேண்டும். * இந்த சான்றிதழ், 90 நாட்களுக்கு மட்டுமே செல்லத்தக்கது.இவ்வாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1250 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் ஆய்வக வசதி இல்லை

கடந்த ஆறு ஆண்டுகளாக, தரம் உயர்த்தப்பட்ட, 1,250 உயர்நிலைப் பள்ளிகளில், வகுப்பறைகள், ஆய்வகம் மற்றும் கழிப்பறைகள் கட்ட நிதியின்றி, மாணவ, மாணவியர் திறந்தவெளியில் பாடம் படித்து வருகின்றனர்.

தமிழகத்தில், ஆண்டுதோறும், பட்ஜெட்டின் போது பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகின்றன. இப்படி, கடந்த ஆறு ஆண்டுகளில், தரம் உயர்த்தப்பட்ட, 1,250 பள்ளிகள், பெயரளவில் உயர்நிலைப் பள்ளிகளாக செயல்படுவதால், மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டும், போதுமான வகுப்பறைகள் உள்ளன. ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு புதிய கட்டடங்கள், வகுப்பறை மற்றும் கழிப்பறை வசதி இல்லை. கடந்த 2009 - 10ல், தரம் உயர்த்தப்பட்ட, 710 உயர்நிலைப் பள்ளிகளுக்கு, புதிய கட்டடம் கட்ட, மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் மூலம், தலா, 49 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

நேரடி அதிகாரம் : இந்த நிதியில், 11 வகுப்பறைகள் மற்றும் ஆய்வகம் கட்டும்படி, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு நேரடி அதிகாரம் வழங்கப்பட்டது.ஆனால், இந்த நிதி போதாது என, தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு துறைகள் மூலம் கட்டுமான பணிகளை நடத்த கோரிக்கை விடுத்தனர். அதனால், புதிய கட்டடம் கட்டும் பணியை, பொதுப்பணித் துறைக்கு வழங்க முடிவானது.அ.தி.மு.க., ஆட்சி வந்தபின், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், மத்திய அரசிடம் இருந்து போதிய நிதி கிடைக்கவில்லை எனக் கூறி, புதிய கட்டட பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

ஒதுக்கப்பட்ட நிதியும் இலவச திட்டங்களுக்கு சென்றதால், புதிய கட்டடம் என்பது, உயர்நிலைப் பள்ளிகளுக்கு கனவாகவே மாறி விட்டது. இதனால், ஆறு முதல், 10 வரையிலான வகுப்புகளுக்கு, 1,250 பள்ளிகளில் திறந்தவெளி, மரத்தடி மற்றும் கூடாரங்கள் மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன; ஆய்வக வசதியும் இல்லை. ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு, பாதுகாப்பான தண்ணீர் வசதியுடன் கூடிய, கழிப்பறைகள் கட்டாயம் தேவை என்ற நிலையில், இந்த பள்ளிகளில் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் இன்றி, மாணவியர் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க, மாநில பொதுச் செயலர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில், வகுப்பறைக்கான புதிய கட்டடங்கள், ஆய்வகம் மற்றும் கழிப்பறை வசதி செய்து தரக்கோரி, ஆறு ஆண்டுகளாக, கல்வித் துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். கிணற்றில் போட்ட கல்: ஆனால், இக்கோரிக்கை கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது. மாணவர்களின் நலன் கருதி, விரைவில் புதிய கட்டடம் கட்ட, கல்வித் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

பள்ளி ஆய்வக உதவியாளர் பணி., 4.80 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வுக்கு இதுவரை 4.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி மே 6 ஆகும். அடுத்த மூன்று நாள்களில் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தொடுவதற்கு வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 4,362 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு மே 31-ஆம் தேதி போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சிறப்பு மையங்களில் ஆன்-லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 10 நாள்களில் 4.80 லட்சம் பேர் இந்தப் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.

பத்தாம் வகுப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ், உயர் கல்வித் தகுதிச் சான்றிதழ், பணி முன் அனுபவச் சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களின் அசல், நகல்களை எடுத்துச் செல்ல வேண்டும். இந்தப் பணி நியமனம் ஒவ்வொரு மாவட்ட அளவிலும் நடைபெறுகிறது. போட்டித் தேர்வில் வெற்றி பெறுபவர்களில் இருந்து 1:5 என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உள்ளிட்டோர் நேர்முகத் தேர்வு நடத்தும் குழுவில் இடம்பெற்றிருப்பர். நேர்முகத் தேர்வு மொத்தம் 25 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட உள்ளது. இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு பணி நியமனம் வழங்கப்படும்.

கலை அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பம்

கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (மே 4) முதல் தொடங்குகிறது. விண்ணப்பக் கட்டணம் ரூ. 25, பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 27 செலுத்தி விண்ணப்பத்தை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் பதிவுக் கட்டணமாக ரூ. 2 மட்டும் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

முன்கூட்டியே மாணவர் சேர்க்கை... பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கக் கூடிய மாணவர்களை ஈர்க்கும் வகையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இம்முறை முன்கூட்டியே மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு கல்லூரி முதல்வர்கள் கூறியது: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் தலைசிறந்த பேராசிரியர்கள் பலர் உள்ளனர். உள்கட்டமைப்பு வசதிகளும் பெருமளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முன்கூட்டியே ஆரம்பித்துவிடுவதால், பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களும், படிப்பில் மிகுந்த ஆர்வமுள்ள மாணவர்களும் பிரபல தனியார் கல்லூரிகளில் சேர்ந்து விடுகின்றனர்.

இந்த நிலை காரணமாக அரசு கல்லூரிகளில் உள்ள முழுமையான திறன், வெளிப்படாமலே போய்விடுகிறது. இந்த நிலையை மாற்றும் வகையில், தனியார் கல்லூரிகளைப் போல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே நடத்த இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், திங்கள்கிழமை விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட்டு, மே இறுதி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்துக்குள் மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விடும் என்றனர். விண்ணப்பக் கட்டணம் முறைப்படுத்தப்படுமா? இதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான அரசு உதவி பெறும் கலை,அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளிலும் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்குகிறது. சில கல்லூரிகள் புதன்கிழமை (மே 6) விண்ணப்பங்களை விநியோகிக்க உள்ளன. இந்தக் கல்லூரிகளில் பெரும்பாலானவை விண்ணப்பக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி வசூலிப்பதை ஒவ்வோர் ஆண்டும் வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

அரசு உதவி பெறும் கல்லூரிகள், அரசு கல்லூரிகளில் உள்ளது போன்றே விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், இந்தக் கல்லூரிகள் விண்ணப்பத்துக்கான கட்டணத்தை ரூ. 250 முதல் ரூ. 500 வரை நிர்ணயிக்கின்றன. இந்த நிலையில், இந்த ஆண்டிலும் பல கல்லூரிகள் விண்ணப்பக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி நிர்ணயித்திருப்பது தொலைபேசித் தகவல் மூலம் தெரியவந்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். விண்ணப்பக் கட்டணத்தை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தினர்.

உலகை வியக்க வைத்த கணக்கு

சிங்கப்பூரில் நடைபெற்ற பரீட்சையில் இடம் பெற்ற அந்த வியப்பூட்டும் கேள்வி இது தான்:–

ஆல்பர்ட் என்ற மாணவரும் பெர்னார்ட் என்ற மாணவரும், செரில் என்ற மாணவியுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

அவர்கள் இருவருக்கும், செரில் பிறந்த நாள் என்ன என்று தெரிந்துகொள்ள ஆவல்.

அவர்கள், மாணவி செரிலை சந்தித்து, உனது பிறந்த நாள் என்ன என்று கேட்கிறார்கள்.

இதற்கு அந்த மாணவி நேரடியாக பதில் கூறாமல், ஒரு புதிரைச் சொல்லி, தனது பிறந்த தேதி என்ன என்பதைக் கண்டுபிடிக்கும்படி சவால்விடுகிறார்.

மாணவி செரில், 10 தேதிகளைக் கூறி, இவற்றில் எது தனது பிறந்த நாள் என்பதை சரியாகக் கூற வேண்டும் என்கிறார்.

மாணவி செரில் கொடுத்த 10 தேதிகள் வருமாறு:–

மே15, மே16, மே19, ஜூன்17, ஜூன்18, ஜூலை14, ஜூலை16, ஆகஸ்டு14, ஆகஸ்டு15, ஆகஸ்டு17.

இந்த 10 தேதிகளைக் கூறிய செரில், மாணவர் ஆல்பர்ட்டை தனியாக அழைத்து தனது பிறந்த மாதம் எது என்பதை மட்டும் கூறுகிறார்.

இதே போல மாணவர் பெர்னார்டிடம் தனது பிறந்த நாள் தேதியை மட்டும் ரகசியமாகக் கூறுகிறார்.

பின்னர் இருவரிடமும், தனது பிறந்த மாதத்தையும், தேதியையும் சரியாகக் கூறும்படி கேட்கிறார்.

இப்போது ஆல்பர்ட் கூறுகிறார் – செரில் பிறந்த நாள் எது என்பது எனக்குத் தெரியாது. அதே போல பெர்னார்ட்டுக்கும் தெரியாது என்பது எனக்குத் தெரியும்.

பெர்னார்ட் கூறுகிறார் – செரில் பிறந்த நாள் எது என்பது எனக்கு முதலில் தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது தெரிந்துவிட்டது.

இதைத் தொடர்ந்து ஆல்பர்ட் கூறுகிறார் – அப்படியானால் செரில் பிறந்த நாள் எது என்பது எனக்கும் தெரிந்துவிட்டது.

இவர்கள் இருவரும் இவ்வாறு கூறி இருப்பதால், செரில் பிறந்த நாள் என்ன?

இதுதான் அந்த கணக்குக்கான கேள்வி.

இதற்கு பதில் என்ன? அந்த பதிலை எப்படி கண்டுபிடிப்பது?

பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கான கேள்விதானே என்று அலட்சியப்படுத்த வேண்டாம்.

பதிலை நீங்களாகக் கண்டுபிடியுங்கள்.

முடியவில்லைதானே?

தலையை  சுற்றவைக்கும்  அந்த  கணக்குக்கான  விடை  இதோ...

மாணவி செரில் கொடுத்த மொத்த மாதங்கள் எண்ணிக்கை 4.

அதே போல அவர் கொடுத்த மொத்த நாட்களின் எண்ணிக்கை 10.

அவற்றை இவ்வாறு எளிமையாக வரிசைப்படுத்தி வைத்துக் கொள்வோம்.

மே 15, 16, 19. ஜூன் 17, 18. ஜூலை 14, 16. ஆகஸ்டு 14, 15, 17.

இவற்றில் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத தேதிகளை கழித்துக் கொண்டே வந்தால் விடையை நெருங்கலாம்.

ஆல்பர்ட்டிடம் செரில் கூறிய 4 மாதங்களில் ஏதாவது ஒன்று தான் சரியாக இருக்கவேண்டும்.

அதேபோல பெர்னார்ட்டிடம் கூறிய 10 நாட்களில் ஏதோ ஒன்று தான் சரியாக இருக்கமுடியும்.

அப்படிப்பார்க்கும்போது 14, 15, 16, 17 ஆகிய நாட்கள் மட்டும் தலா இரண்டு மாதங்களில் இடம் பெற்று இருக்கின்றன.

18, 19 ஆகிய நாட்கள் தலா ஒரு மாதத்தில் மட்டும் வருகிறது.

ஒருவேளை செரில் தனது பிறந்த மாதம் ஜூலை அல்லது ஆகஸ்டு என்று கூறி இருந்தால் 18, 19 ஆகிய நாட்கள் தவறாகத்தான் இருக்கும். காரணம், இந்த மாதங்களில் 18, 19 ஆகிய தேதிகளை அவர் குறிப்பிடவில்லை.

இதை வைத்துப் பார்க்கும்போது, செரில் பிறந்த நாள் 18 அல்லது 19 ஆக இருக்க முடியாது என்பது உறுதியாகிவிடுகிறது.

எனவே, இந்த நாட்கள் இடம் பெற்ற மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களும் செரில் பிறந்த மாதமாக இருக்க வாய்ப்பு இல்லை.

மேலே உள்ள பட்டியலில் இருந்து மே 15,16,19 மற்றும் ஜூன்17,18 ஆகியவற்றை நீக்கிவிட்டால் மீதம் இருப்பது ஜூலை 14,16 மற்றும் ஆகஸ்டு 14, 15, 17 ஆகிய தேதிகள் தான்.

ஜூலை ஆகஸ்டு ஆகிய மாதங்களில் எது சரியான மாதம் என்பது ஆல்பர்ட்டுக்குத் தெரியும்.

அதேபோல 14, 15, 16, 17 ஆகிய தேதிகளில் எது சரியான தேதி என்பது பெர்னார்டுக்குத் தெரியும்.

இவற்றில் 14 என்ற தேதி இரண்டு மாதங்களில் இடம் பெற்று இருக்கிறது.

14 தான் பிறந்த நாள் என்று கூறினால் அது, ஜூலை மாதமா அல்லது ஆகஸ்டு மாதமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்திவிடும்.

எனவே 14 என்பது சரியான பிறந்த நாளாக இருக்க வாய்ப்பு இல்லை.

இந்த தேதியையும் கழித்துவிட்டால் மீதம் இருப்பது ஜூலை 16, ஆகஸ்டு 15, 17 ஆகிய நாட்கள் தான்.

அதாவது ஜூலையில் ஒரு நாளும் ஆகஸ்டில் இரண்டு நாட்களும் உள்ளன.

ஒருவேளை செரில் தனது பிறந்த மாதம் ஆகஸ்டு என்று கூறி இருந்தால், தேதி 15ஆ அல்லது 17 ஆ என்று தெரியாத நிலை ராபர்ட்டுக்கு ஏற்பட்டு இருக்கும்.

எனவே ஆகஸ்டு 15 மற்றும் ஆகஸ்டு 17 ஆகிய தேதிகளையும் பட்டியலில் இருந்து நீக்கிவிடவேண்டும்.

இறுதியாக மிஞ்சி இருப்பது ஜூலை 16 மட்டுமே.

இதுதான் மாணவி செரில் பிறந்த உண்மையான தேதி ஆகும்.

Saturday, May 02, 2015

பொதுமாறுதல் விண்ணப்பம் தொடங்கவில்லை.ஆசிரியர்கள் ஏமாற்றம்

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் வெளியாகும். மே மாதம் கலந்தாய்வுக்கான கால அட்டவணை வகுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை.

இதனால் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கலந்தாய்வு முன்கூட்டியே நடைபெற்றால் ஆசிரியர்கள் இடம் மாறி செல்கின்ற பகுதிகளில் கல்வியாண்டு தொடக்கத்திலேயே ஒரே பள்ளியில் பணிபுரிவதுடன் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க செய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் இதுவரை விண்ணப்ப விநியோகமே நடைபெறாததுடன் காலி பணியிடங்களை மறைத்து பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திவிட்டு மறைமுகமாக இதர ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் கல்வித்துறையால் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

கடந்த ஆண்டும் இதுபோன்று ஆசிரியர் பணி நியமனங்கள் அதிக அளவு நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக ஆசிரியர் இயக்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘கல்வித்துறை சார்பில் இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு தொடர்பான பணிகளை உடனே தொடங்க வேண்டும். இடமாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பம் பெற வேண்டும். ஒளிவு மறைவற்ற முறையில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். ஆசிரியர் பணி ஒட்டுமொத்த காலி இடங்கள், விபரங்களை கல்வித்துறை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மாவட்ட வாரியாக, பாட வாரியாக இணையதளத்திலும் காலியிட விபரங்களை வெளியிட வேண்டும்’ என்றார்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இயக்குநர் வேண்டுகோள்

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அவர் சனிக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், புத்தகப் பை, சீருடை, வண்ண பென்சில்கள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, போதிய ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. தேவையின் அடிப்படையில் ஆங்கில வழி இணைப் பிரிவுகளைத் தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்கவும் வேண்டியது தலைமையாசிரியர்களின் கடமை ஆகும். பள்ளி மாணவர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும். சேரும் மாணவர்கள் தரமான கல்வியைப் பெற்று முன்னேறும் நிலையை உறுதி செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கூட்டங்களை நடத்த வேண்டும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுடன் ஒருங்கிணைந்து தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களின் பட்டியலைப் பெற்று அவர்களை தங்களது பள்ளியில் சேர்க்க முனைப்புடன் செயல்பட வேண்டும்.

அதேபோன்று, நடுநிலைப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் தங்களது பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடப் புத்தகங்கள்.... பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கு ஏற்கெனவே பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான புத்தகங்களை பள்ளி திறக்கும் ஜூன் 1-ஆம் தேதியே வழங்க வேண்டும். இதற்காக புத்தகங்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள சிறப்பு மையங்களிலிருந்து பெற்று பள்ளிகளில் விநியோகிக்க வேண்டும். ஆன்-லைனில் வேலைவாய்ப்புக்குப் பதிவு: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி, மதிப்பெண் சான்றிதழ்கள் பெறப்பட்டதும், வேலைவாய்ப்புக்காக மாணவர்களின் கல்வித் தகுதியை பள்ளிகளின் மூலம் ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.