இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, November 19, 2013

தரம் உயர்ந்தும் பணியிடங்கள் இல்லை: "கவுன்சிலிங்' கனவில் ஆசிரியர்கள்

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தரம் உயர்த்தப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில், புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படாமல், "பொறுப்பு' ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இத்துறைக்கு உட்பட்ட 5 பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்டன. அரசு உத்தரவுப்படி, தரம் உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 9 ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக உருவாக்க வேண்டும். இந்த உத்தரவை அதிகாரிகள் பின்பற்றாமல், "பொறுப்பு' ஆசிரியர்களை கூடுதலாக நியமித்து புதிய பணியிடங்கள் உருவாக்குவதை தள்ளிப்போடுகின்றனர்.

இதனால், பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் கனவில் உள்ள ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், தேனி மாவட்ட தலைவர் சுதாகர் கூறியதாவது: தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், 45 புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். மேல்நிலை முதுகலை ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வு வாய்ப்பு ஏற்படும். சிறப்பு "கவுன்சிலிங்' நடத்தப்பட்டால் வெளி மாவட்டங்களில் பணிபுரியும் பலருக்கு, பணிமூப்பு அடிப்படையில் உள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு மாறுதல் கிடைக்கும். "பொறுப்பு' ஆசிரியர் நியமித்து சமாளிப்பதால், ஒரே ஆசிரியர் இரு பள்ளிகளுக்கு சென்று பாடம் எடுக்கும் நிலையுள்ளது, என்றனர்.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை: கல்வி துறை செயலர் விளக்கம்

  முந்தைய தி.மு.க., ஆட்சியில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புகளில், 20 சதவீதம் ஒதுக்கீடு செய்து, உத்தரவிடப்பட்டது. எனினும், பெரும்பாலான அரசு பணிகளுக்கான கல்வி தகுதியை, தமிழ் வழியில், படிக்க முடியாத நிலைமை தான் உள்ளது. பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களில், பலர், தாங்கள் தமிழ் வழியில் படித்ததாக கூறி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்.

மேலும், தமிழ் வழி கல்வித்தகுதி குறித்து, பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இது தொடர்பாக, விண்ணப்பத்தாரர்கள் பலர், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் (டி.ஆர்.பி.,) வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர். தமிழ் வழியிலான கல்வித்தகுதி எனில், '10ம் வகுப்பில் துவங்கி, பணிக்கு உரிய கல்வித்தகுதி வரை, அனைத்திலும், தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்' என, முதலில், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், 'குறிப்பிட்ட பணிக்கு உரிய கல்வி தகுதியை மட்டும், தமிழ் வழியில் படித்திருந்தால் போதும்' என, பின்னர் தெரிவித்தனர். எனினும், இந்த விவகாரத்தில், தற்போது வரை, குழப்பம் நிலவி வருகிறது.

தேவையில்லாத குழப்பம்: இது குறித்து, பள்ளி கல்வித் துறை செயலர், சபிதா கூறியதாவது: தமிழ் வழியில் படித்தவர்கள், 20 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், அரசு வேலை பெறுவதற்கான வழி முறைகளில், தமிழக அரசு, தெளிவான அரசாணையை வெளியிட்டுள்ளது. ஆனாலும், தேவையில்லாமல், இதில், பலரும் குழம்பி வருகின்றனர். பட்டதாரி ஆசிரியர் பணி எனில், இளங்கலை பட்டப் படிப்பையும், பி.எட்., படிப்பையும், தமிழ் வழியில் படித்திருந்தால் போதும். 10ம் வகுப்பையும், பிளஸ் 2 படிப்பையும், ஆங்கில வழியில் படித்திருந்தாலும், கவலையில்லை.
அதேபோல், முதுகலை ஆசிரியர் பணி எனில், குறிப்பிட்ட பாடத்தில், முதுகலை பட்டப் படிப்பையும், பி.எட்., படிப்பையும், தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்; அவ்வளவு தான். மீடியம் தான் கணக்கு: பிளஸ் 2 கல்வித்தகுதி உடைய அரசு பணி எனில், பிளஸ் 2 படிப்பை, தமிழ் வழியில் படித்திருந்தாலே போதும். கல்லூரிகளில், ஆங்கில வழியில் சேர்ந்து படிக்கும் மாணவர், தேர்வை, தமிழ் வழியில் எழுதுகின்றனர். இதை வைத்து, 'தமிழ் வழியில் படித்திருக்கிறேன்' என, கூறுகின்றனர். எந்த, 'மீடியத்தில்' சேர்ந்திருக்கின்றனரோ, அது தான், கணக்கில் கொள்ளப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்

GO 1310 தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் 2014

Monday, November 18, 2013

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிய மனு தள்ளுபடி

அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எஸ்.அருளப்பன் உள்பட 129 ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக நாங்கள் பணிபுரிகிறோம்

. உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 10 முதல் 20 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் அவர்களுக்கு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கக் கூடிய ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு நிர்வாகத் தீர்ப்பாயம் கடந்த 1988-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14-ஆம் தேதி உறுதி செய்தது. இதன்படி, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியமும், அனைத்து பலன்களையும் எங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு விசாரணை நடந்தது. அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி இடைநிலை ஆசிரியர்கள் கோரும் ஊதியம் வழங்க முடியாது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் அனைவரும் பள்ளி கல்வி இயக்ககத்தின் உயர்கல்வி விதிகளின் கீழ் வருகின்றனர். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரும் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் வருகின்றனர். மனுதாரர்களை தொடக்கக் கல்வி இயக்ககத்தின் விதிகளுடன் ஒப்பிட முடியாது. உயர்நீதிமன்ற அமர்வு மற்றும் உச்சநீதிமன்றமும் பிறப்பித்த உத்தரவுகள் வேறுபட்டவை. அவை மனுதாரர்களுக்குப் பொருந்தாது. இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

1,093 உதவி பேராசிரியர் பணியிடம் : சான்றிதழ் சரிபார்ப்பு, 25ம் தேதி துவக்கம்

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்ககான சான்றிதழ் சரிபார்ப்பு, வரும், 25ம் தேதி முதல் துவங்குகிறது. இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், பல்வேறு பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள, 1093 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால், மே, 28ம் தேதி விளம்பரம் வெளியிடப்பட்டது. இதன்படி, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள், ஆகஸ்ட், 12ம் தேதி வரை பெறப்பட்டன.

இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, 25ம் தேதி முதல், பல்வேறு பாடப் பிரிவுகளுக்கு, சென்னை, நந்தனம், அரசு ஆடவர் கலைக் கல்லூரி; காமராஜர் சாலையில் உள்ள, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்; அண்ணாசாலையில் உள்ள, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி ஆகியவற்றில் நடக்கிறது. சான்றிதழ் சரிபார்த்தலுக்கான அழைப்புக் கடிதம், சுயவிவரப் படிவம், ஆளறி சான்று, சான்றிதழ் சரிபார்ப்பு படிவம் ஆகியவை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில், பதிவேற்றப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தாரர்கள், அதை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சான்றிதழ் சரிபார்ப்பின் போது சமர்ப்பிக்க வேண்டும். அழைப்புக் கடிதம், விண்ணப்பத்தாரர்களுக்கு தனியாக அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டாது. விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ததன் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுகின்றனர். விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்கள், விளம்பரம் செய்யப்பட்ட நாளுக்கு முன் அதாவது, மே, 27ம் தேதிக்கு முன் பெற்ற தகுதியே, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 19ஆம் தேதி தேசிய ஒருமைப்பாடு தினமாக கடைபிடிக்க உத்தரவு

DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012

சி.பி.எஸ்.இ. தேர்வு தேதி அறிவிப்பு

10,12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் முதல் தேதி நடைபெறும் என்றும்,தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் சி.பி.எஸ்.இ மண்டல இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Saturday, November 16, 2013

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பணிக்கான தேர்வு

   இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் கிரேடு–4 பணிக்கான காலியிடங்கள் தமிழ்நாடு தேர்வாணையம் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்புகள் கடந்த ஜூலை மாதம் 19–ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான மொத்த காலியிடங்கள் 23 ஆகும்.

இந்த பணிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 136 மையங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 36 ஆயிரத்து 250 பேர் எழுதினர். சென்னையில் எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட 12 மையங்களில் தேர்வு நடைபெற்றது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தாள்–1 பொதுத்தமிழும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தாள்–2 சைவமும், வைணமும் சம்பந்தப்பட்ட தேர்வும் நடைபெற்றது.

காலை, மாலை நடைபெற்ற தேர்வுகள் கொஞ்சம் கடினமாக இருந்ததாக தேர்வு முடித்துவிட்டு வந்த தேர்வாளர்கள் கூறினர்.

823 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பரில் 5 முறை 3 தினங்கள்

  இந்த ஆண்டின் டிசம்பர் மாதம், சிறப்பான மாதமாக அமைந்துள்ளது. மாத இறுதி நாட்களான, 29, 30, 31 ஆகிய, மூன்று நாட்களும், ஞாயிறு, திங்கள், செவ்வாய் கிழமைகளில் வருகிறது. அது போல், இந்த மாதத்தின், இந்த மூன்று கிழமைகளும், ஐந்து முறை வருகின்றன. இந்த அரிய அமைப்பு, 832 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டு உள்ளது.சிறப்பானது இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில், ஞாயிறு, திங்கள், செவ்வாய் கிழமைகள் ஐந்து முறை வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.

இது போல், வழக்கமாக அமைவதில்லை. டிசம்பர் மாத காலண்டரை, பிற மாத காலண்டர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த சிறப்பு தெரிய வரும். வல்லுனர்களின் கருத்துப்படி, டிசம்பர் மாதம், ஞாயிறு, திங்கள், செவ்வாய் கிழமைகள் ஐந்து முறை வருவது ஒரு அரிய நிகழ்ச்சியாகும்; இத்தகைய அரிய அமைப்பு, 823 ஆண்டுகளுக்கு முன், 1190ம் ஆண்டில் வந்துள்ளது. டிசம்பர் மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒன்றான, 8ம் தேதி, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படுகின்றன என்பது, இந்த நாளின் மற்றொரு சிறப்பாக கருதப்படுகிறது.

நல்லதல்ல ஒரு மாதத்தின் இறுதி நாட்கள், ஐந்து முறை வருவது நல்லதல்ல என்று, ஜோதிட நிபுணர்கள் சிலர் கூறியுள்ளனர். மேலும், ஞாயிற்றுக் கிழமை ஐந்து முறை வருவது கோப உணர்வுகளைத் தூண்டும்; திங்கள் கிழமை ஐந்து முறை வருவது நல்லது; செவ்வாய்க் கிழமை ஐந்து முறை வருவது செலவைத் தூண்டும் என்றும், ஒரு சில ஜோதிட அறிவியலில் கூறப்பட்டுள்ளது.

தேசியத் திறனறித் தேர்வு' அடுத்த ஞாயிற்றுக் கிழமை 24/11/2013 அன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படவிருந்த 'தேசியத் திறனறித் தேர்வு' அடுத்த ஞாயிற்றுக் கிழமை 24/11/2013 அன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் 60% மதிப்பெண் பெற வேண்டும் தகுதி தேர்வு நிபந்தனையை ரத்து செய்ய வழக்கு.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள்,தகுதி தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் சி.எம்.எஸ்.மான்கோமரி தொடக்கப்பள்ளி தாளாளர் கிப்சன் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:

சிறுபான்மை பள்ளியான இந்த பள்ளி நெல்லை சிஎஸ்ஐ டயோசிசன் கீழ் இயங்கி வருகிறது.கடந்த தேசிய ஆசிரியர் கல்விகவுன்சில் வெளியிட்ட அறிவிக்கை அடிப்படையில்,ஆசிரியர் பணி நியமனத்திற்குஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்க மறுத்துவிட்டது.

ஆசிரியர் தகுதி தேர்வில் அனைத்து தரப்பினரும் 60 சதவீத மதிப்பெண் பெற்றால் தான் ஆசிரியர் பணி பெற முடியும் என்ற நிலை உள்ளது. தகுதி தேர்வு தொடர்பாக தேசியஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில்,சிறுபான்மை பள்ளிகள், தங்களது பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகும் போது,அந்த பணியிடத்திற்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்பதை அந்தந்த பள்ளி நிர்வாகிகளே முடிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது

.அதன்படி,அரசு உதவி பெறும் பள்ளிகள்,சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள்,தகுதி தேர்வில் கண்டிப்பாக 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என அரசு நிர்பந்தம் செய்யக்கூடாது. தகுதி தேர்வில் 60 சதவீதத்திற்கும்குறைவாக மதிப்பெண் பெற்றவர்களை அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள்,சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்க உரிய அனுமதி வழங்க பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, :தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர்,பள்ளி கல்வித்துறை முதன்மை செயலா ளர்,ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிஉத்தரவிட்டார்.

Friday, November 15, 2013

துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம்

   அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வுக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளின் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், பதவி உயர்வு விரைந்து கிடைக்காமல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது

. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசு ஊழியர்களுக்காக துறைத் தேர்வுகளை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தி வருகிறது. மே மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். தேர்வுகளின் முடிவுகள் குறைந்தபட்சம் ஓரிரு மாதங்களுக்குள் வெளியிடப்பட்டு விடும். தேர்வு முடிவுகள் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்த விவரங்கள் தேர்வாணையத்தின் வெப்சைட்டில் வெளியிடப்படும். இந்த வெளியீட்டில் தேர்வு எழுதியவரின் பதிவெண், பெயர் மற்றும் அவரது வீட்டு முகவரி ஆகியன இடம்பெற்றிருக்கும். இந்த வெளியீட்டின் அடிப்படையிலேயே சம்பந்தப்பட்ட பணியாளர்களின் பணிப் பதிவேட்டில் (Service Record) தேர்ச்சி விவரங்கள் பதிவு செய்யப்பட்டு அதிகாரிகள் கையெழுத்திடுவர். இந்தப் பதிவுகளின் அடிப்படையிலேயே பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படும்.

ஆறு மாதங்கள் கடந்தும்: கடந்த மே மாதம் நடத்தப்பட்ட துறைத் தேர்வுகள் குறித்த முடிவுகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அந்தத் தேர்வில் வெற்றி பெற்ற அரசு ஊழியர்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை. இதற்குக் காரணம், தேர்வு முடிவுகளின் விவரங்கள் அனைத்தும் இன்றுவரை தேர்வாணைய வெளியீட்டில் வெளியிடப்படவில்லை. இதனால் துறைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த மே மாதத்துக்கான தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையில், டிசம்பர் மாதத்துக்கான தேர்வினை நடத்துவதற்கான நடவடிக்கைகளை டி.என்.பி.எஸ்.சி. தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய திறனாய்வு தேர்வில் (என்.டி.எஸ்.,), தமிழக அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கடந்த, 10 ஆண்டுகளாக கவலையளிக்கும் வகையில் உள்ளது,'

  தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் (என்.சி.இ.ஆர்.டி.,) சார்பில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பில், 60 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற, பத்தாம் வகுப்பு மாணவர்கள், இத்தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள்.முதல்நிலை தேர்வு, மாநில அரசால் (பள்ளி கல்வித் துறை) நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 2ம் நிலை தேர்வை, என்.சி.இ.ஆர்.டி., நடத்தி, தேசிய அளவில் ஆயிரம் மாணவர்களைத் தேர்வு செய்கின்றது

.இந்தாண்டு, இரண்டாம் நிலை தேர்வு, 2014 மே மாதம் நடக்கிறது. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், மாதம் ரூ.500ம், இளங்கலை பட்டப் படிப்பின் போது மாதம் ரூ.1,000ம், முதுகலை பட்டப் படிப்பில் மாதம் ரூ.2,000ம், எம்.பில்., பி.எச்டி., படிக்கும்போது மாதம் ரூ.3,000ம், கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.அரசு மற்றும் உதவி பெறும், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளும் இத்தேர்வில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு கணக்கு, அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம் பாடங்களிலும், "மனத்திறன்' தொடர்பாகவும் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

பெரும்பாலும், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டங்களுக்கு இணையாக கேள்விகள் இடம் பெறுவதால், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்கள் இதில் தேர்ச்சி பெறுவது "குதிரை கொம்பாக' உள்ளது. குறிப்பாக, "மனத்திறன்' பாடப்பகுதி கேள்விகளை அரசு பள்ளி மாணவர்கள் புரிந்துகொள்ளக்கூட முடியாததால், இதில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.இதனால், மாநில அளவில் இதன் தேர்ச்சி விகிதமும், 6 சதவிகித்திற்கு கீழ் தான் உள்ளது. இதில், அரசு பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் பங்கேற்பதில் ஆர்வம் காட்டாததால், தேர்ச்சி விகிதம் கடந்த, 10 ஆண்டுகளாக "ஜீரோ'வாக நீடிக்கிறது. இத்தேர்வு குறித்து, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, போதிய விழிப்புணர்வு இல்லை.

ஆசிரியர்களும் இதை பெரிதாக கண்டுகொள்ளாததால், மாணவர்களின் ஆர்வமும் குறைந்து விட்டது. இதனால், தேசிய அளவில், பள்ளிக் கல்வியில் தமிழகம் பின்தங்கியுள்ள நிலை ஏற்பட்டு உள்ளது. கல்வியாளர்கள் கூறியதாவது:இத்தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள் "காணாமல்' போய்விடுகின்றனர். கிராமப்புற மாணவர்களுக்கு, இத்தேர்வு குறித்தே எவ்வித விவரமும் தெரிவதில்லை. இதனால், கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் "ஜீரோ'வாக உள்ளது. நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு, தகுதியுள்ள ஆசிரியர்களால் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு, ஆரம்பத்தில் இருந்தே தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும். தேர்வு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். தொடர வேண்டும் இந்த ஆண்டைய முயற்சி! :

கல்வி துறையில் கடந்த பல ஆண்டுகளாக இல்லாத வகையில், செயலர் சபிதாவும், தேர்வுத் துறை இயக்குனரும், இந்தாண்டு சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளனர். தேசிய திறனாய்வு தேர்வில், ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும், 90 சதவிகிதம் மாணவர்கள் இத்தேர்வில் கட்டாயம் பங்கேற்க, மாவட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அறிவுறுத்தியுள்ளனர். இதன்படி, மதுரை உட்பட பல மாவட்டங்களில், இத்தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் மாணவர்களுக்கு எடுக்கப்படுகின்றன. இந்த முயற்சி ஒவ்வொரு ஆண்டும் தொடர வேண்டும் என, பெற்றோர், கல்வியாளர்கள் விரும்புகின்றனர்.

விடுமுறை உத்தரவை மதிங்க! பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

இயற்கை இடர்பாடுகளால், மாவட்ட நிர்வாகம் விடும் உள்ளூர் விடுமுறையில், பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை எச்சரித்து உள்ளது.வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் நாட்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு, உள்ளூர் விடுமுறை அளித்து, கலெக்டர் உத்தரவிடும் போது, கல்வி நிறுவனங்கள், கண்டிப்பாக, அவற்றை பின்பற்ற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கல்வித் துறையின் உத்தரவில், "மழைக்காலங்களில் பள்ளி கட்டடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். அசம்பாவிதம் ஏற்பட்டால், முதன்மைக் கல்வி அலுவலருக்கு தகவல் தர வேண்டும். இயற்கை இடர்பாடுகளுக்காக, மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும், உள்ளூர் விடுமுறை தினத்தில், பள்ளிகளை திறக்கக் கூடாது. மழைக்காலங்களில், மாணவர்கள், பாதுகாப்பாக வீடுகளுக்கு செல்வதை உறுதி செய்யவேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.

தனி தேர்வர்களுக்கு உதவ ஒருங்கிணைந்த மையங்கள்

   அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள மேல்நிலை மற்றும் இடைநிலை கல்வி பொதுத் தேர்வுகளுக்கு தனித் தேர்வர்களிடமிருந்து வரும், 18 ம் தேதி முதல், 29 ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனித் தேர்வர்கள் www.tndge.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.கடந்த செப்டம்பர் பொதுத் தேர்வின் போது, தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்த போது, பல தவறுகள் காணப்பட்டன.

பெயர், பிறந்த தேதி, பாடம், பயிற்று மொழி ஆகியவற்றில் தவறு இருந்ததால், 'ஹால் டிக்கெட்' வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.இந்த பணிகளை வெவ்வேறு இடங்களில் செய்ததால், தனித் தேர்வர்களுக்கு அலைச்சலும், பண விரயம், நேர விரயம் ஏற்பட்டது. இவற்றை தவிர்க்கும் பொருட்டும், பிழைகள் இல்லாமல் விண்ணப்பங்களை பதிவு செய்யவும், பயிற்சி அளிக்கப்பட்ட பணியாளர்களை கொண்ட ஒருங்கிணைப்பு மையங்கள் (நோடல் சென்டர்) அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களின் விவரங்கள் மேலே கண்ட இணைய தளத்தில் உள்ளது.

மேலும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் இந்த மைய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இம்மையங்கள் மூலமாகவே கட்டணங்களையும் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.கடந்த, 03.06.2013 முதல் 30.06.2013 வரை மற்றும் 01.10.2013 முதல் 15.10.2013 வரை அனுமதிக்கப்பட்ட தேதிகளில், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புக்கு பெயர் பதிவு செய்யத் தவறியவர்கள் வரும், 29ம் தேதிக்குள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.