Monday, September 17, 2018
Sunday, September 16, 2018
வீட்டுப் பாடம் தொடர்பான உத்தரவு மாநிலப் பாடத் திட்ட மாணவர்களுக்கும் பொருந்தும்: உயர் நீதிமன்றம்
சிபிஎஸ்இ பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் வழங்கக் கூடாது என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் புருஷோத்தமன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு என்சிஇஆர்டி விதிகளை மீறி 8 பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
மேலும் 1, 2 -ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தனியாரிடமிருந்து புத்தகங்களை வாங்க வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளிகள் குழந்தைகளிடம் இந்த பாடங்களை திணித்து வருகின்றனர்.
அதிகமான சுமையை சுமக்கும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே சிபிஎஸ்இ பள்ளிகள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், "சிபிஎஸ்இ பள்ளிகளில் 1, 2 -ஆம் வகுப்புகளுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது என்றும், என்சிஇஆர்டி பாடத் திட்டத்தை மட்டுமே கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டது. மேலும், இரண்டாம் வகுப்பு வரை இரண்டு பாடங்களும், 3 முதல் 5 -ஆம் வகுப்பு வரை நான்கு பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும்' என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த உத்தரவு தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை எந்த மாநில அரசும் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தார்.
மேலும் இந்த உத்தரவு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மட்டுமல்ல, மாநில பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும்.
இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் தமிழகத்தில் மாநில பாடத் திட்ட பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த சுற்றறிக்கையை அனுப்ப தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்து விசாரணையை ஒத்திவைத்தார்.
MORNING PRAYER-17-9-18
Morning prayer
17-9-18
திருக்குறள்:52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
உரை:
இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.
பழமொழி :
Better go to bed sleepless than rise in debt
கடனில்ல சோறு கால் வயிறு போதும்
பொன்மொழி:
நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை
-எமர்சன்
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1.ஒடிசா அரசின் கோனார்க் சம்மான் விருது பெற்ற தமிழ் கலைஞர்?
பத்மா சுப்ரமணியம்
2.ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்?
செப்டம்பர் 5
நீதிக்கதை
இரண்டு பாறைகள் - Two Rocks
ஒரு காட்டில் இரண்டு பெரிய பாறைகள் அருகருகே கிடந்தன.
பல வருடங்களாக ஒரே இடத்தில் மழையில் ஊறி, வெய்யிலில் வாடிக் கிடந்த அந்தக் கற்களுக்கு ரொம்பச் சலிப்பாக இருந்தது. ‘நாம் எப்போதாவது இங்கிருந்து நகர்வோமா?’ என்று மிகவும் ஏக்கத்தோடு பேசிக்கொண்டன.
அந்தக் காட்டுக்குப் பக்கத்தில் ஒரு நகரம். அங்கிருந்த மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு கோவில் கட்டத் தீர்மானித்தார்கள்.
புதுக் கோவிலுக்கு மூலவர், உற்சவர், மற்ற சிலைகள் எல்லாம் வேண்டுமல்லவா? அதற்காக ஏழெட்டு சிற்பிகள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் சிற்பங்களைச் செதுக்குவதற்கான கற்களைத் தேடிக் காட்டுக்குள் வந்தார்கள்.
அவர்களில் ஒரு சிற்பி இந்தப் பாறைகளைக் கவனித்தார். மற்றவர்களிடம் அவற்றைக் காண்பித்துச் சொன்னார். ‘இந்தப் பாறைங்க ரெண்டும் சரியான அளவில இருக்கறமாதிரி தெரியுது. நாளைக்கே ஆள் வெச்சுத் தூக்கிட்டுப் போயிடலாம்!’
சிற்பிகள் திரும்பிச் சென்றபிறகு முதல் பாறை பேசியது. ‘ஹையா ஜாலி ஜாலி! நம்ம பல நாள் கனவு நிறைவேறப் போகுது! நாளைக்கு நாம நகரத்துக்குப் போறோம்!’
இரண்டாவது பாறை கோபமாகச் சீறியது. ‘அட மக்குப் பயலே! அவங்க உனக்கு நகரத்தைச் சுத்திக்காட்டறதுக்கா கூட்டிகிட்டுப் போறாங்கன்னு நினைச்சே? உன்னை அடிச்சு உடைச்சு செதுக்கி, சிலையா மாத்திப்புடுவாங்க. தெரியுமா?’
‘அதுக்கு என்ன பண்றது? ஒண்ணைப் பெறணும்ன்னா இன்னொண்ணை இழந்துதானே ஆகணும்?’ என்றது முதல் பாறை. ‘நான் வலியைப் பொறுத்துக்குவேன். பிரச்னையில்லை!’
‘என்னால அது முடியாது!’ தீர்மானமாகச் சொன்னது இரண்டாவது பாறை.
‘நாளைக்கு அவங்க வரும்போது நான் இன்னும் ஆழமாப் போய் உட்கார்ந்துக்குவேன். அவங்க எல்லோரும் சேர்ந்து எவ்ளோ கஷ்டப்பட்டாலும் என்னைத் தூக்கமுடியாது.’
மறுநாள் அந்தச் சிற்பிகள் மீண்டும் வந்தார்கள். முதல் பாறையைக் கட்டித் தூக்கி வண்டியில் வைத்தார்கள். இரண்டாவது பாறையை அவர்களால் அசைக்கக்கூட முடியவில்லை.
‘சரி விடுங்க. அதான் ஒரு பாறை கிடைச்சுடுச்சே. அதுவே போதும்.’ அவர்கள் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள்.
இப்போது அந்த முதல் பாறை அற்புதமான கடவுள் சிலையாக எல்லோராலும் வணங்கப்படுகிறது. இரண்டாவது பாறை இன்னும் காட்டுக்குள்தான் கிடக்கிறது.
இன்றைய செய்தி துளிகள்:
1.வாரணாசியில் நாளை பள்ளி மாணவர்களுடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார் பிரதமர் மோடி
2.வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
3.கல்லூரி படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண்களே போதுமானது! பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
4.அமைச்சர் என்பதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்னை பாதிக்கவில்லை - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே
5.போலந்து குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை சரிதா தேவி வெண்கலம் வென்றார்.
Friday, September 14, 2018
பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு இன்று முதல் தடை
தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சனிக்கிழமை முதல் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 1 -ஆம் தேதி முதல், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவுப்படி, அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில், பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதற்கு ஜனவரி 1 முதல், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சனிக்கிழமை முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்திக் கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்துப் பள்ளிகளிலும், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். அதற்கு மாற்றாக உள்ள பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சனிக்கிழமை (செப்.15) முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பள்ளி வளாகம்' என்ற பெயர் பலகை வைக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, September 13, 2018
MORNing prayer
14-9-18
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:50
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
உரை:
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.
பழமொழி :
Better be alone than in bad company
ஒவ்வாக் கூட்டிலும் தனிமை அழகு
பொன்மொழி:
மனிதன் சுதந்திரமாகச் செயல்படுவதைக் காட்டிலும், மற்றவர்களைச் சார்ந்தே வாழ்கிறான்.
-பெர்னாட்ஷா
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1.தேசிய அறிவியல் தினம் கொணாடாடப்படும் நாள்?
பிப்ரவரி-28
2.அகிலனின் ஞானபீட விருது பெற்ற தமிழ் நூல்?
சித்திரப்பாவை
நீதிக்கதை :
உடைந்த பானை!
ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.
இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.
குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.
இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.
"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"
அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"
இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது
நீதி : அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.
இன்றைய செய்தி துளிகள்:
1.ராஜிவ் வழக்கு : 7 பேரின் விடுதலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர்
2.சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் 6 வழிப்பாதையாக மாற்றம் : திட்டத்தை முழுமையாக கைவிட பொதுமக்கள் வலியுறுத்தல்
3.எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித் தொகை: என்.எம்.எம்.எஸ். தேர்வுக்கு செப்.17 முதல் விண்ணப்பிக்கலாம்
4.சாரிடன் உள்ளிட்ட 327 வகையான மருந்து வகைகளின் உற்பத்தி, விற்பனைக்கு மத்திய அரசு தடை
5.ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தில் இந்திய அணி- கோலி தொடர்ந்து முதலிடம்
Wednesday, September 12, 2018
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித் தொகை: என்.எம்.எம்.எஸ். தேர்வுக்கு செப்.17 முதல் விண்ணப்பிக்கலாம்
அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மத்திய அரசின் உதவித் தொகை பெறுவதற்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வுக்கு (என்.எம்.எம்.எஸ்.) வரும் செப்.17-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித்தொகைத் திட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.
இதற்காக மாணவர்களுக்கு என்.எம்.எம்.எஸ். தேர்வு நடத்தப்படும். இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசு, அரசு உதவி பெறும், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 9- ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாதம் ரூபாய் 500 வீதம் ஆண்டு ஒன்றுக்கு உதவித் தொகையாக ரூ. 6,000 வழங்கப்படும். தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 6, 695 மாணவர்கள் உதவித் தொகை பெறத் தகுதி உள்ளவர்கள் ஆவர். நிகழாண்டு உதவித் தொகை பெற தகுதியுள்ள எட்டாம் மாணவர்களைத் தேர்வு செய்யும் வகையில் என்.எம்.எம்.எஸ். தேர்வு டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெறும்.
இதற்காக தமிழகத்தில் அனைத்து வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்களை செப்.17-ஆம் தேதி முதல் செப். 30-ஆம் தேதி வரை அரசுத் தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?: தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் (அரசு, மாநகராட்சி, நகராட்சி, அரசு உதவி பெறும் பள்ளிகள்) 2018- 2019-ஆம் ஆண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். 2018-2019-ஆம் கல்வியாண்டில் ஏழாம் வகுப்பு பயின்று முழு ஆண்டுத் தேர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களும், பிற சமுதாயப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்கள் அல்லது அதற்கு மேலும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: என்.எம்.எம். எஸ். தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தலைமையாசிரியர்கள் தேவையான விண்ணப்பங்களை செப்.17 முதல் செப்.30 வரை (www.dge.tn.gov.in) என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதைத் தொடர்ந்து நிகழ் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு படித்து வரும் தகுதியுடைய மாணவர்களிடம் விண்ணப்பத்தைக் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்தல் வேண்டும். இதையடுத்து புகைப்படத்தை ஒட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மாணவர்கள் தாம் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50 உடன் அக்.1-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்
Tuesday, September 11, 2018
Monday, September 10, 2018
MORNING PRAYER 11-9-18
11-9-18
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:49
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
உரை:
அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.
பழமொழி :
Beter pay the cook than the doctor
வைத்தியனுக்கு கொடுப்பதை விட வானிகனுக்கு கொடு
பொன்மொழி:
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
-ஐன்ஸ்டைன்
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1.மருதுபாண்டியர் தூக்கிலடப்பட்ட இடம் எது?
கொல்லங்குடி
2.ரமண மகரிஷி பிறந்த இடம்?
திருச்சுழி
நீதிக்கதை :
உப்பு வியாபாரியும் கழுதையின் தந்திரமும்:
முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும்.
ஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.
கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது.
எனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை.
கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.
மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது.
அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது.
கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்த வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான்.
ஒரு நாள் வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். செல்லும் வழியில் கழுதை கொண்டுவருகின்ற உப்பு எப்படி காணமல் போன்கின்றன என்று யோசித்துக்கொண்டே கழுதையின் நடவடிக்கைகளை கவனித்தான்.
கழுதை வேண்டுமென்றே ஆற்றுக்குள் விழுந்தது. அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான்.
அன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது.
மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே! கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.
தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.
நீதி: நாமும். நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.
இன்றைய செய்தி துளிகள்:
1.புதிய தகவல் தொழில் நுட்ப கொள்கை திட்டத்தை
2.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
3.ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வுசெய்ய நியமிக்கப்பட்ட குழுவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
4.சபரிமலை ஐயப்பன் கோவில் செப். 16-ம் தேதி திறப்பு
5.யு.எஸ். ஓபன் சாம்பியன்: 14-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார் ஜோகோவிச்!